வாழ்க்கையில் வெற்றி பெற பாரதி ‘அட்வைஸ்’

bharati color

Post No. 741dated 10th December 2013 (11th December is Bharati’s Birth Day)

டிசம்பர் 11 தேசிய கவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாள்; அவனை சிரம் தாழ்த்தி வணங்குவோம்.

லண்டன் சுவாமிநாதன்

“அமிழ்தம் அமிழ்தம் என்று கூவுவோம் – நித்தம்
அனலைப் பணிந்து மலர் தூவுவோம்;
தமிழில் பழ மறையைப் பாடுவோம் – என்றும்
தலைமை பெருமை கூடுவோம்”– பாரதி

நான் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி மாணவன். எங்கள் ஆசிரியர் வி.ஜி. சீனிவாசன், மஹா கவி பாரதியின் பரம பக்தர். பாரதியாரும் எங்கள் பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்ததால், முன்னனியில் நின்று பாரதியின் சிலையையும் நிறுவினார் விஜி.எஸ். “பாரதியின் சிலையைச் சுற்றுங்கள் நீங்கள் பரீட்சையில் பாஸ் ஆவீர்கள், பாரதி பாடல்களைப் படியுங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்” என்று வகுப்புக்கு வகுப்பு புலம்பித் தீர்ப்பார்.

மாணவர்களாகிய நாங்கள் எல்லாம் பின் ‘பெஞ்ச்’சில் உட்கார்ந்துகொண்டு , வாத்தியாருக்கு பாரதி பைத்தியம் முத்திவிட்டது, கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று ‘காமென் ட்’ அடிப்போம். ஆனால் தனிப்பட்ட முறையில் எங்கள் குடும்ப நண்பர் என்பதால் அவர் மீது அளவுகடந்த மரியாதையும் உண்டு. இப்போது பாரதி பாடல்களைப் படிக்கும்போதெல்லாம் அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பது தெளிவாகிறது.

வேத மந்திரங்கங்களைப் போலவே பாரதி பாட்டிலும் சோகச் சுவை என்பதே இருக்காது. எல்லாம் ‘பாசிட்டிவ் திங்கிங்’– POSITIVE THINKING– பாடல்களாகவே இருக்கும். பாரதியும் தமிழை எத்தனை புகழ்ந்தானோ அத்தனை வேதங்களையும் புகழ்ந்திருக்கிறான். வேதத்தைச் சொன்னாலும் கேட்டாலும் எத்தனை சக்தி பிறக்குமோ அத்தனை சக்தி பாரதி பாட்டிலும் பிறக்கும். பாரதி ஒரு பெரும் தமிழ்க் கடல். அவனை ஆழம் காணும் அறிவோ சக்தியோ எனக்கில்லை. இதோ சில பாடல்களைப் படித்தால் நீங்களே அவன் பெருமையை எடை போடலாம்.

வெற்றி முழக்கம்

(இன் டெர்வியூ முதலிய போட்டிகளுக்குச் செல்லுகையில் இதைச் சொல்லிக் கொண்டே போகவேண்டும்):
“ எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி
வேண்டினேன் எனக்கு அருளினள் காளி;
தடுத்து நிற்பது தெய்வமதேனும்
சாரும் மானுடம் ஆயினும் அஃதைப்
படுத்து மாய்ப்பள் அருட்பெருங் காளி
பாரில் வெற்றி எனக்குறுமாறே

நல்ல சிந்தனை

(கீழ்கண்ட இந்தப் பாடலை தினமும் காலையில் சொல்லுங்கள்; நல்ல எண்ணங்கள் பெருகும்):
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவம் எல்லாம்
பரிதி முன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்

ஒளிபடைத்த கண்கள்
(கண்ணாடிக்கு முன் உங்கள் உருவத்தைப் பார்த்வாறே சொல்ல வேண்டிய பாடல்):

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறுபோல் நடையினாய் வா வா வா

சிறுவர்களுக்கு சொல்லித் தரவேண்டியது
துன்பம் நெருங்கி வந்த போதும்—நாம்
சோர்ந்துவிடல் ஆகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வம் உண்டு—துன்பம்
அத்தனையும்போக்கிவிடும் பாப்பா!

பாதகம் செய்பவரைக் கண்டால்—நாம்
பயம் கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

மனக் கஷ்டம் நீங்க
(மனதில் கஷடம் ஏற்பட்டால் படிக்க வேண்டிய பாரதி பாடல்)
ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு – கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு;
சக்தி சக்தி சக்தி என்று சொல்லி – அவள்
சந்நிதியிலே தொழுது நில்லு.

ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு – ஒரு
சங்கடம் வந்தால் இரண்டு கூறு;
சக்தி சில சோதனைகள் செய்தால் – அவள்
தன் அருளே என்று மனது தேறு.

இறைவா ! எனக்கு நீ தர வேண்டியது
செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்
சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும்
கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும்
கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்
தொல்லை தரும் அகப்பேயைத் தொலைக்கவேண்டும்
துணை என்று நின்னருளைத் தொடரச் செய்தே
நல்வழி சேர்ப்பித்துக் காக்கவேண்டும்
நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நன்றே!

அச்சமில்லை

(பயம் நீங்க பின்வரும் பாடலைப் படியுங்கள்)
‘நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்’ என்று இடி முழக்கம் செய்தார் அப்பர் பெருமான். ‘நாள் என் செய்யும் வினை தான்’ என் செய்யும் என்று முழங்கினார் அருணகிரிநாதர். ‘ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன் வியாழன்,வெள்ளி, சனி பாம்பு இரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே’ என்று கோளறு பதிகம் பாடினார் சம்பந்தர்.
பாரதி சொல்கிறான்:

அச்சமில்லை அமுங்குதல் இல்லை
நடுங்குதல் இல்லை நாணுதல் இல்லை
பாவம் இல்லை பதுங்குதல் இல்லை
ஏது நேரினும் இடர்ப்படமாட்டோம்
அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம்
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்”

“ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு
அச்சமுண்டோடா? – மனமே
தேன் மடை இங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா!”

பாரதி வாழ்க ! தமிழ் வெல்க !!

My earlier articles on Bharati:
1.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!
2.பாரதியின் பேராசை
3.பாரதியுடன் 60 வினாடி பேட்டி
4.பயமே இல்லாத பாரதி
5.பாரதி பாட்டில் பகவத் கீதை
6.பாரதி வாழ்க
7.பாரதி நினைவுகள்
8.பாரதி பாட்டில் பழமொழிகள்
(9) பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர்
(10) சிட்டுக் குருவியிடம் பாரதி கற்ற பாடம்
Contact swami_48@yahoo.com