மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 21 (Post No.3676)

Written by S NAGARAJAN

 

Date: 28 February 2017

 

Time uploaded in London:-  8-23 am

 

 

Post No.3676

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

 

 

ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 6

 

ச.நாகராஜன்

 

ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்

 

குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்

 

 

 • தராசு என்னும் நூலிலிருந்து ஸி.ஆர் ஸ்ரீநிவாஸன் (1939) எழுதிய கட்டுரை ஒன்றை குமரி மலரில் காண்கிறோம்.

 

அந்தக் கட்டுரை:

 

     எந்த தேசக் கவியுடனும், எந்த முறையில் சோதித்தாலும் பாரதி சளைக்க மாட்டார் என்பது உறுதி. ஆனால் அவர் செய்த சேவையில் சிறு பகுதியையே அது குறிக்கும். பாஷைக்குப் பெர்ருமையைத் தேடியதே அவர் செய்த அரிய சேவை.

 

 

 

     தமிழ் நாட்டிலே தாய் பாஷையின் மாற்று மங்கியிருந்தது; அன்னிய ஆட்சியில். அன்னிய பாஷைக்கு அளவு கடந்த மதிப்புக் கொடுத்து, ஆணவத்தை இழந்து விட்டனர் தமிழ் மக்கள். பதவியும் பொறுப்பும் படைத்த பெரியோர் சுயபாஷையில் பேசக் கூச்சப்பட்டனர்; குறைவென்றும் நினைத்தனர்.; பாஷையின் மீது பழியைச் சுமத்தினர். பாரதி தோன்று முன் இருந்த நிலைமையை இன்றைய நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

 

      மாறுதலுக்கு முக்கிய காரணம் பாரதி என்பது என் சித்தாந்தம். தமிழை உயிர்ப்பித்தவர் அவர்; ஊட்டம் அளித்தவர் அவர்; பாஷையின் லாகவத்தை மெய்ப்பித்தவர் அவர்; பாஷைக்கு மேனி அளித்தவர் அவர்.

 

 

       பாரதி வாழ்ந்தது சுதேசி இயக்கம் தோன்றிய காலம்; விடுதலை வேட்கை பிறந்த காலம்; வெற்றி முரசு கொட்டினார் பாரதி. உறக்கம் தெளிய, வீரம் சொரியப் பாடினார் பாரதி. அன்று தாயகத்திற்கு அவர் செய்த ஸேவை அளவிடற்பாலதன்று.

 

 

41) இதே குமரி மலர் இதழில் பாரதியார் பாமணம் என்ற தலைப்பில் பண்டித ஜனாப் K. அப்துல் சுகூர் (1933) எழுதிய கவிதையும் வெளியிடப்பட்டிருக்கிறது.

 • கண்ணிகள் கொண்ட இந்தப் பாடல் பாரதி என்ற மாதப் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

 

பாரதியார் பாமணம்

 

தேனிருக்குது தினையிருக்குது தென்பழனியில் என்ற மெட்டு

 

 1. பூ மணக்குது புகழ் மணக்குது

     புண்ணியர் பாடலிலே                               \           

   பாமணக்குது பயன் மணக்குது

     பாரதி பாட்டுள்ளே

 1. இனிமை மொழி இனிசையிலங்குது

      இன்பப் பாடலிலே

   பனிமொழிச்சியர் கலை மணக்குது

      பாரதி பாட்டுளே

 1. காவியக்கனி  கனிந்திருக்குது

       காமர்ப் பாடலிலே

   பாவியலணி பரந்திருக்குது

       பாரதி பாட்டுளே

 1. புண்ணிய நெறி பொலிந்திருக்குது

       புதுமைப் பாடலிலே

   பண்ணியல்களின் நடை நடக்குது

       பாரதி பாட்டுளே

 1. தகைமை தத்துவந் தவழ்ந்திருக்குது

        தண்ணார் பாடலிலே

    பகைமை குன்றிய வாழ்க்கை தங்குவது

         பாரதி பாட்டுளே

 1. தேஞ்சார்ம் பசுந் தேறலிருக்குது

         தேசப் பாட்லிலே

   பாஞ்சாலி நிறை படர்ந்திருக்குது

         பாரதி பாட்டுளே

 1. ஜெயந்தொனிக்குது திறனொலிக்குது

       திவ்யப் பாடலிலே

   ப்யந்தொதுங்குது தீண்டாமைப் பேய்

        பாரதி பாட்டுளே

 1. சாதிக் கொடுமைகள் தகர்ந்தழியுது

       சங்குப் பாடலிலே
பாதகர் செயும் மோசமோடுது

       பாரதி பாட்டுளே

 1. சேவை முறைகள் சேர்ந்திருக்குது

       தேசப் பாடலிலே

   பாவையர் சுதந்திரமிலங்குது

        பாரதி பாட்டுளே

 1. விடுத்லையெனும் வீணையொலிக்குது

        வித்தகப் பாடலிலே

   படுப்வத் தொழில் பறந்திரியுது

        பாரதி பாட்டுளே

 1. அச்சமென்ற சொலகன்றிருக்குது

          அன்புப் பாடலிலே

      பச்சமென்ற சொல் பரவி நிற்குது

          பாரதி பாட்டுளே

 1. கொஞ்சுங்காதல் திறந்தொனிக்குது

        குயிலின் பாடலிலே

   பஞ்சமோடிட வழியிருக்குது

        பாரதி பாட்டுளே

 1. அடிமையென்ற சொலகன்றிருக்குது

        அமுதப் பாடலிலே

   படிதலென்ற சொல பழுதுபட்டது

         பாரதி பாட்டுளே

 1. முத்தமிழெனும் வெற்றிமுழங்குது

        முரசுப் பாடலிலே

   பத்தழகுகள் பரவி நிற்குது

       பாரதி பாட்டுளே

 1. அண்டத்தை வெல்லும்

       ஆண்மை தங்குது அழகுப் பாட்லைலே

   பண்டைத் தமிழர் வீறிலங்குது

       பாரதி பாட்டுளே

 1. பாரதியென்றிட சக்தி ஜெனிக்குது

      பாப்பாப் பாடலிலே

  “பாரதி” மாளிகை தன்னிலுலாவுது

      பாரதி பாடல்களிலே

 • “பாரதி”

மாதப் பத்திரிகை

உத்தமபாளையம் 1933 ஆகஸ்டு

அடுத்து சில சுவையான கட்டுரைகள் உள்ளன.

 

இதைத் தொகுக்க திருஏ.கே. செட்டியார் அவர்கள் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார் என்பதை நினைத்துப் பார்த்தால் அவரின் அருமை தெரியும்.

 

                   -தொடரும்

***

 

பாரதியார் போற்றும் ஒரு மகமதிய ஸாது: கம்பளி ஸ்வாமி!

bharati

தேசீய கவி சுப்ரமண்ய பாரதி

Article No. 2067

Written by S NAGARAJAN

Date : 13 August  2015

Time uploaded in London :–  9-05

By ச.நாகராஜன்

கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்துமுஸ்லீம் ஒற்றுமை

ஸ்வாமி விவேகானந்தர் போற்றிய மகான். இமயமலையின் ஒரு சிகரத்திலிருந்து இன்னொரு சிகரத்திற்குப் போக ஒரு இரும்புப் பாலம் கட்டியவர். அதற்கென தான் பிரயாசைப்பட்டுச் சேர்த்த கொஞ்சம் பணத்தையும் செலவழித்தவர். பெயர் – கம்பளி ஸ்வாமி!

இவரைப் பற்றி மஹாகவி பாரதியார் போற்றக் காரணம் இவர் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காகப் பாடுபடும் ஒரு ஸாது என்பதால் தான்.

‘ஒரு மகமதிய ஸாது’ என்ற தலைப்பில் மஹாகவியின் கட்டுரை விஜயா இதழில் 1910ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கம்பளி ஸ்வாமியைப் பற்றிய பாதியாரின் வார்த்தைகள் இதோ:-

“கம்பளி ஸ்வாமி என்று இமயமலைப் பக்கங்களில் ஒரு ஸ்வாமி இருப்பதை நம் நேயர்கள் அநேகர் கேட்டிருக்கலாம். அவர் சில காலமாகத் தென் இந்தியாவிற்கு வந்து அநேக இடங்களில் உபன்னியாசம் செய்து கொண்டிருக்கிறார்.

இப்போது பெங்களூரில் உபன்னியாசம் செய்தார்.அதில் ஹிந்துக்களுக்கும் மகமதியர்களுக்கும் ஒற்றுமை இருக்கவேண்டுமென்றும், இருவர்களின் மதமும் ஒன்றையே குறிக்கிறதென்றும், நம் மதக் கொள்கையைச் சரியாக அனுசரிக்க வேண்டுமானால் எல்லோரையும் சகோதரர்களாகக் கொண்டாலொழிய முடியாதென்றும் பேசினார். இவருடைய உபன்னியாசத்தைக் கேழ்க்க அநேக ஹிந்துக்களும் மகமதியர்களும் கணக்கில்லாமல் வந்திருந்தார்கள். இவர் பேசிய ஒவ்வொரு பேச்சும் கேட்பவர்களுக்கு வெகு ஆனந்தத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது.”

kabir_stamp

இந்தப் பாராவைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் குடுகொண்ட என்ற இடத்தில் பிறந்த இவர் அமரகோசம்,கீதை ஆகியவற்றை மனப்பாடமாகக் கற்றதையும் கபீர், நானக், கனகா முதலானோரின் கீதங்களைக் கற்றதையும் மஹாகவி குறிப்பிடுகிறார்.

கம்பளி ஒன்றைப் போர்த்திக் கொண்டு மலைச் சிகரங்களில் எல்லாம் சுற்றித் திரிவதால் இவர் பெயர் கம்பளி ஸ்வாமி ஆயிற்று.

இப்படிப்பட்ட மகானை நன்கு விவரித்துப் புகழும் பாரதியார் தன் ஆழ்ந்த கருத்து ஒன்றை இப்படிக் கூறுகிறார்:-

இப்படிப்பட்ட மகான்கள் ஹிந்து முஸ்லீம்களுக்குள் ஐக்கியத்தை உண்டாக்கக் கருதினால் அது அதி சீக்கிரத்தில் நடைபெறும்.”

 

இதற்கான காரணத்தையும் அவரே கூறி விடுகிறார்:;” இந்தியாவில் மதக் கோட்பாடுகளை நன்றாயறிந்த ஸாதுக்கள் வந்து ஒரு சீர்திருத்தம் செய்ய வேண்டுமானால் அதைத்தான் ஹிந்துக்களும் மகமதியர்களும் அக்கரையோடு கேட்டு அனுசரிக்க எத்தனிப்பார்கள்.”

இப்படிக் கூறிய மஹாகவி தனக்கே உரித்தான நையாண்டி நடையில் இதை விட்டு விட்டு ஆங்கிலேயர்களின் நடவடிக்கையைப் புத்தகத்தில் படித்து விட்டு அதை இங்கு கொண்டு வர நினைக்கும் போலிச் சீர்திருத்தக்காரர்கள் என்ன தான் கூட்டம் கூட்டினாலும் ஒன்றும் நடக்காது என்று தெளிவுபடக் கூறுகிறார்.

தேசம் ஒன்றே சிந்தனையில்

பாரதியாரின் சொல் செயல் சிந்தனை அனைத்தும் தேச விடுதலை தேச ஒற்றுமை தேச முன்னேற்றம் ஆகியவற்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததையும் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவரது பல கட்டுரைகள் நன்கு விளக்குகின்றன.

அவற்றில் ஒன்று இது! முழுக் கட்டுரையும் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.

*************

ஶ்ரீ சிவாஜி உத்ஸவம்

shivaji,fb

Article No. 2058

Written by S NAGARAJAN

Swami_48@yahoo.com

Date : 10  August  2015

Time uploaded in London :–7-48 AM

BY ச.நாகராஜன்

பாரதியாரின் முக்கியமான கட்டுரை

‘ஶ்ரீ சிவாஜி உத்ஸவமும் ஆங்கிலோ இந்தியர்களும்’ என்ற தலைப்பிட்ட மகாகவி பாரதியாரின் கட்டுரை அருமையான ஒன்று.

பரவலாகப் படிக்கப்படாத இந்த கட்டுரை அபூர்வமான ஒன்று. 1910 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியிட்ட விஜயா இதழில் இது வெளி வந்துள்ளது.

மிக நீண்ட கட்டுரையான இதில் நல்ல பல கருத்துக்களை அள்ளித் தந்துள்ளார் மாபெரும் கவிஞர்.

ஆங்கிலேயருக்கு பதில்

ஶ்ரீ சிவாஜி உத்ஸவத்தினால் அராஜகம்  விருத்தியாகிறதாம் என்ற ஆங்கிலேயர்களின் கூற்றைச் சொல்லி பாரதியார் தரும் மறுமொழி இது:-

“ஶ்ரீ சிவாஜி உத்ஸவத்தினால் நாடெங்கும் அராஜகம் எப்படிப் பரவும்? இவருடைய ஜன்ம தினத்தன்று இவருடைய ஜீவ சரித்திரம் ஒவ்வொரு கூட்டத்திலும் நன்றாக விளக்கப்படுகிறது.இவருடைய அந்தரங்கக் கருத்தை ஒரு சிறிது கூட மறைக்காமல் வெளியிடுகிறார்கள். இவர் முதல் முதலில் சிறு கூட்டம் கூட்டமாக மராட்டியர்களைச் சேர்த்துக் கொண்டு மகமதிய அதிகாரிகளைத் தாக்கினதையும், அவருடைய சேனை மெல்ல மெல்ல அதிகரித்ததையும், அவருக்கு நேர்ந்த தோல்விகளையும் கஷ்டங்களையும் வெளிப்படையாகத் தான் சொல்கிறார்கள். அவர் அப்சல்கான் என்னும் மகமதிய அதிகாரியைக் கொன்றதையும் அவர் தனித் தனி மகமதியர்களுக்குச் செய்த உதவியையும் ஒத்திட்டுப் பார்த்தால் அவருடைய செய்கை சுயநலத்தின் பொருட்டல்லவென்றும், மகமதியர்களின் பேரில் வீணான துவேஷத்தால் செய்யவில்லையென்றும் விளங்குகிறது. அவர் விடாமுயற்சியோடு போர் செய்தது கொடுங்கோன்மையோடு தான் என்பது அவர் ஆட்சிக்குள்ளிருந்த மகமதிய குடிகளின் காபந்து ஒன்றினாலேயே விளங்கும்.”

இப்படி சிவாஜி மத சமரஸத்துடன் தன் கீழ் வாழ்ந்த முஸ்லீம்களை நல்ல முறையில் நடத்தினார் என்பதை பாரதியார் வலியுறுத்துகிறார்.

sivaji afsal

ஆரிய பூமியாகிய இந்தியாவில் ஆரிய தர்மம் தழைக்கட்டும்!

ஹிந்து நாட்டில் ஹிந்துக்கள் வாழ முடியாவிடில் அவர்கள் எங்கு தான் போவார்கள்? இந்தக் கவலையை அடுத்து வரும் பாராவில் அவர் சுட்டிக் காட்டுகிறார் இப்படி:-

மகமதிய தர்மம் அபிவிருத்தியடைய எப்படி துருக்கி, அராபியாபாரசீகம் முதலியவை இருக்கின்றனவோ அதே மாதிரி ஆரிய தர்மம் அபிவிருத்தியடைய உலகத்தில் ஒரு இடம் வேண்டாமா என்னும் சர்ச்சை தான் அவர் மனதை வாட்டிக் கொண்டிருந்தது. ஆரிய தர்மம் தழைத்தோங்க ஆரிய பூமியாகிய இந்தியாவை விட வேறு எந்த இடம் சிலாக்கியமானது?

 

 

 இந்தியாவில் ஆரிய தர்மம் வளர வேண்டுமானால் ஹிந்துக்கள் சுதந்திரமடைவது முக்கியமல்லவா? இதுதான் மஹாராஜாவாகிய சத்திரபதி சிவாஜியை ஸ்வராஜ்யம் ஸ்தாபிக்க முயலும்படி செய்தது

மிக அருமையாக சிவாஜியின் நோக்கத்தை இப்படிக் கூறும் மகாகவி சுதந்திர இந்தியா பற்றிய தன் கற்பனையையும் தெளிவாக்கி விட்டார்.

 

ஶ்ரீ சிவாஜி உத்ஸவம் ஏன் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கான காரணத்தையும் அவர் நியாயப் படுத்துகிறார். ஆங்கிலேயர்கள், 1) இதனால் அராஜகம் விருத்தியாகிறது 2) ஶ்ரீ சிவாஜி மஹாராஜாவின் ஜன்ம தினத்தைக் கொண்டாடுவதினால் தேசபக்த கட்சிக்காரர்கள் அதிகமாகிறார்கள் என்ற இரு காரணங்களை முன் வைத்ததைச் சுட்டிக் காட்டிய மகாகவி முதல் குற்றச்சாட்டை காரணம் காட்டி ஏற்க மறுத்து விட்டார்.

அடுத்ததைப் பற்றி அவர் கூறுவது இது:- “இதில் ஒன்று வாஸ்தவம் தான். ஶ்ரீ சிவாஜி உத்ஸவத்தினால் தேசபக்தர்கள் அதிகமாகிறார்கள். இந்த உத்ஸவமே அதற்காகத் தான் ஏற்பட்டது. நமக்குள் தேசபக்தியில்லையென்பது ஒரு குறைவாக ஆங்கிலேயர்களே சொல்லியிருக்கிறார்கள். அதை நம்மில் நிலைநாட்டுவதற்காகத் தான் நம் தேச சரித்திரங்களை நமக்குச் சொல்வதாக பெருமை சொல்லிக் கொண்டு வந்தார்கள். இந்த தேசபக்தி ஆங்கிலேயர்கள் நமக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்ல்லை. நம் முன்னோர்களின் சரித்திரத்திலேயே இருக்கிறதை நம் ஜனங்களுக்கு தெளிவாக எடுத்துக்காட்ட ஶ்ரீ சிவாஜி உத்ஸவம் நடத்தினால் இவர்களால் பொறுக்க முடியவில்லை. ஆகையால் தான் தேசபக்தர்களிளினின்று அராஜகர்கள் உண்டாகிறார்கள் என்கிறார்கள்.”

இளம் வயது மேதையின் தீர்க்கதரிசனம்

1882ஆம் ஆண்டு பிறந்த மகாகவிக்கு இந்தக் கட்டுரை எழுதும் போது வயது 28 தான்!

ஆனால் தெளிவான சிந்தனையையும் தீர்க்கதரிசன நோக்கையும் அவரது கட்டுரைகள் அனைத்தும் கொண்டிருப்பது நமக்கு பிரமிப்பை ஊட்டுகிறது.

நடை, உடை, பாவனை மாறாத நிலையில இன்றும் இருக்கும் முஸ்லீம்களை பூர்வத்தில் ஹிந்துக்களாய் இருந்தவர்கள் என்பதைச் சொன்னவர் ஒரு தாய் வயிற்றினராக ஒருங்கிணைந்து வாழ்வதை வற்புறுத்துகிறார்; ஆனால் அதே சமயம் அவர்களை மதம் மாறுமாறு தூண்டவில்லை. தேசத்தை நேசி என்கிறார்.

பாரதியாரின் ஹிந்து தேசீயம் பற்றிய கட்டுரைகள் பரவலாக அறியப்படவில்லை.

இவற்றைப் படிப்பதும் பரப்புவதும் பாரதி ஆர்வலர்களின் பணியாக அமைதல் வேண்டும். வலிமை வாய்ந்த இந்தியா உருவாக வேண்டும்!

(படங்கள், பிற வெப்சைட்டுகளிலிருந்து, எடுக்கப்பட்டவை; நன்றி)

**************

வாழ்க்கையில் வெற்றி பெற பாரதி ‘அட்வைஸ்’

bharati color

Post No. 741dated 10th December 2013 (11th December is Bharati’s Birth Day)

டிசம்பர் 11 தேசிய கவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாள்; அவனை சிரம் தாழ்த்தி வணங்குவோம்.

லண்டன் சுவாமிநாதன்

“அமிழ்தம் அமிழ்தம் என்று கூவுவோம் – நித்தம்
அனலைப் பணிந்து மலர் தூவுவோம்;
தமிழில் பழ மறையைப் பாடுவோம் – என்றும்
தலைமை பெருமை கூடுவோம்”– பாரதி

நான் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி மாணவன். எங்கள் ஆசிரியர் வி.ஜி. சீனிவாசன், மஹா கவி பாரதியின் பரம பக்தர். பாரதியாரும் எங்கள் பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்ததால், முன்னனியில் நின்று பாரதியின் சிலையையும் நிறுவினார் விஜி.எஸ். “பாரதியின் சிலையைச் சுற்றுங்கள் நீங்கள் பரீட்சையில் பாஸ் ஆவீர்கள், பாரதி பாடல்களைப் படியுங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்” என்று வகுப்புக்கு வகுப்பு புலம்பித் தீர்ப்பார்.

மாணவர்களாகிய நாங்கள் எல்லாம் பின் ‘பெஞ்ச்’சில் உட்கார்ந்துகொண்டு , வாத்தியாருக்கு பாரதி பைத்தியம் முத்திவிட்டது, கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று ‘காமென் ட்’ அடிப்போம். ஆனால் தனிப்பட்ட முறையில் எங்கள் குடும்ப நண்பர் என்பதால் அவர் மீது அளவுகடந்த மரியாதையும் உண்டு. இப்போது பாரதி பாடல்களைப் படிக்கும்போதெல்லாம் அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பது தெளிவாகிறது.

வேத மந்திரங்கங்களைப் போலவே பாரதி பாட்டிலும் சோகச் சுவை என்பதே இருக்காது. எல்லாம் ‘பாசிட்டிவ் திங்கிங்’– POSITIVE THINKING– பாடல்களாகவே இருக்கும். பாரதியும் தமிழை எத்தனை புகழ்ந்தானோ அத்தனை வேதங்களையும் புகழ்ந்திருக்கிறான். வேதத்தைச் சொன்னாலும் கேட்டாலும் எத்தனை சக்தி பிறக்குமோ அத்தனை சக்தி பாரதி பாட்டிலும் பிறக்கும். பாரதி ஒரு பெரும் தமிழ்க் கடல். அவனை ஆழம் காணும் அறிவோ சக்தியோ எனக்கில்லை. இதோ சில பாடல்களைப் படித்தால் நீங்களே அவன் பெருமையை எடை போடலாம்.

வெற்றி முழக்கம்

(இன் டெர்வியூ முதலிய போட்டிகளுக்குச் செல்லுகையில் இதைச் சொல்லிக் கொண்டே போகவேண்டும்):
“ எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி
வேண்டினேன் எனக்கு அருளினள் காளி;
தடுத்து நிற்பது தெய்வமதேனும்
சாரும் மானுடம் ஆயினும் அஃதைப்
படுத்து மாய்ப்பள் அருட்பெருங் காளி
பாரில் வெற்றி எனக்குறுமாறே

நல்ல சிந்தனை

(கீழ்கண்ட இந்தப் பாடலை தினமும் காலையில் சொல்லுங்கள்; நல்ல எண்ணங்கள் பெருகும்):
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவம் எல்லாம்
பரிதி முன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்

ஒளிபடைத்த கண்கள்
(கண்ணாடிக்கு முன் உங்கள் உருவத்தைப் பார்த்வாறே சொல்ல வேண்டிய பாடல்):

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறுபோல் நடையினாய் வா வா வா

சிறுவர்களுக்கு சொல்லித் தரவேண்டியது
துன்பம் நெருங்கி வந்த போதும்—நாம்
சோர்ந்துவிடல் ஆகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வம் உண்டு—துன்பம்
அத்தனையும்போக்கிவிடும் பாப்பா!

பாதகம் செய்பவரைக் கண்டால்—நாம்
பயம் கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

மனக் கஷ்டம் நீங்க
(மனதில் கஷடம் ஏற்பட்டால் படிக்க வேண்டிய பாரதி பாடல்)
ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு – கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு;
சக்தி சக்தி சக்தி என்று சொல்லி – அவள்
சந்நிதியிலே தொழுது நில்லு.

ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு – ஒரு
சங்கடம் வந்தால் இரண்டு கூறு;
சக்தி சில சோதனைகள் செய்தால் – அவள்
தன் அருளே என்று மனது தேறு.

இறைவா ! எனக்கு நீ தர வேண்டியது
செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்
சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும்
கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும்
கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்
தொல்லை தரும் அகப்பேயைத் தொலைக்கவேண்டும்
துணை என்று நின்னருளைத் தொடரச் செய்தே
நல்வழி சேர்ப்பித்துக் காக்கவேண்டும்
நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நன்றே!

அச்சமில்லை

(பயம் நீங்க பின்வரும் பாடலைப் படியுங்கள்)
‘நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்’ என்று இடி முழக்கம் செய்தார் அப்பர் பெருமான். ‘நாள் என் செய்யும் வினை தான்’ என் செய்யும் என்று முழங்கினார் அருணகிரிநாதர். ‘ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன் வியாழன்,வெள்ளி, சனி பாம்பு இரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே’ என்று கோளறு பதிகம் பாடினார் சம்பந்தர்.
பாரதி சொல்கிறான்:

அச்சமில்லை அமுங்குதல் இல்லை
நடுங்குதல் இல்லை நாணுதல் இல்லை
பாவம் இல்லை பதுங்குதல் இல்லை
ஏது நேரினும் இடர்ப்படமாட்டோம்
அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம்
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்”

“ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு
அச்சமுண்டோடா? – மனமே
தேன் மடை இங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா!”

பாரதி வாழ்க ! தமிழ் வெல்க !!

My earlier articles on Bharati:
1.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!
2.பாரதியின் பேராசை
3.பாரதியுடன் 60 வினாடி பேட்டி
4.பயமே இல்லாத பாரதி
5.பாரதி பாட்டில் பகவத் கீதை
6.பாரதி வாழ்க
7.பாரதி நினைவுகள்
8.பாரதி பாட்டில் பழமொழிகள்
(9) பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர்
(10) சிட்டுக் குருவியிடம் பாரதி கற்ற பாடம்
Contact swami_48@yahoo.com