‘பாரதியார் – வரலாறும் கவிதையும்’ -பாரதி நூல்கள் – Part 46 (Post 4604)

((எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால்தமிழ் வாழ வேண்டுமானால்இந்து மதம் வாழ வேண்டுமானால்எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக் கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்நீயே கவனித்துக்கொள்!))

 

 

 

Date: 11 JANUARY 2018

 

Time uploaded in London- 6-32 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4604

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 46

ப.மீ.சுந்தரம் எழுதியுள்ள ‘பாரதியார் – வரலாறும் கவிதையும்

 

ச.நாகராஜன்

1

1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் நாள் சிகந்திராபாத்தில் தென்னிந்திய கழகத்தின் சார்பில் பாரதித் திருவிழா, முதல் மந்திரியின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் உஸ்மானியா சர்வகலாசாலையின் தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் .மீ.சுந்தரம் கலந்து கொண்டார்.

அவரைச் சந்தித்த பல பாரதி அன்பர்கள் அவரிடம் பாரதியின் பாடல்களைப் பற்றிய ஆய்வு நூல் ஒன்றை எழுதுமாறு வேண்டினர். அதன் விளைவாக எழுந்தது இந்த நூல். முதற்பதிப்பு 1954ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 133 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் பாரதியாரின் வரலாறு சுருக்கமாகச் சொல்லப்படுகிறது.

அவரது கவிதைகள் பற்றிய ஆய்வு திறம்படச்  செய்யப்பட்டுள்ளது.

நூலின் சில பகுதிகளைப் பார்த்தால் அதன் சிறப்பு விளங்கும்.

சில நல்ல பகுதிகளை இங்கு காணலாம்.

 

2

பாரதியார் நிவேதிதா தேவியைச் சந்தித்த சம்பவத்தை நூலாசிரியர் தருவதில் ஒரு பகுதி:-

1906ஆம் ஆண்டில் காசிமாநகரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் சபைக்குச் சென்றிருந்த பாரதியார் புத்துணர்ச்சி பெற்று மீண்டார் என்றே கூறல் வேண்டும்….

கூட்டங் கலைந்து திரும்புங்கால் கல்கத்தாவிற்குச் சென்று அம்மாநகரின் காட்சிகளைக் கண்ட பாரதியார் டம்டம் என்ற ஊரில் வசித்து வந்த ஸ்ரீமத் விவேகானந்தரின் சிஷ்யையான ஸ்ரீமதி நிவேதா தேவியைக் காணச் சென்றார்தன் மனைவியை வெளியூர்களுக்கு அழைத்து வராத குற்றத்திற்குத் தன் குலவொழுக்கமே காரணம் எனக் கூற, ஸ்ரீமதி நிவேதா தேவி கோபங் கொண்டு பெண்மை பெருமையுடையதென்றும், பெண்களே நாட்டிற்கும் சமூகத்திற்கும் மணி விளக்காகத் திகழக் கூடியவர்களென்றும், பரஞான முத்தி இயல்புகளுக்கும் அப்பெண்களே துணையாவார்கள் என்றும் சொல்லி நிகழ்த்திய சொற்பொழிவானது பாரதியார் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிந்தது.

 

3

பாரதியார் முத்தையா பாகவதர் சந்தித்த ஒரு அரிய சம்பவத்தைப் பற்றி நூலாசிரியர் விளக்குவது:

ஓர் தினம் காயக சிகாமணி முத்தையா பாகவதர் ஸ்ரீ ராம நவமியின் காரணமாக அரி கதை செய்தார். அன்னார் கதையைத் தமிழகத்திலே அனுபவியாதவர் இல்லை என்றே சொல்லலாம். கதை முடிந்த பிறகு பாரதியாரும் அவரைச் சந்தித்துப் பேசினார். தான் பாடியஜெயபேரிகை கொட்டடா! கொட்டடா! என்ற பாடலைத் தான் பாகவதரிடம் பாடிக் காட்டினாராம். முத்தையா பாகவதர் பாரதியாரின் அருமை பெருமைகளை அறிந்தவராதலின் அப்பாடலை நன்கு சுவைத்ததோடு பாரதியாரையும் பலபடப் புகழ்ந்தார். செத்தாரைப் போல திரிகின்ற ஜீவன் முக்தர் நிலை, உலக மக்களில் பலருக்குத் தெரியாதாகையால் பாரதியாரைப் பைத்தியக்காரன் என்று நினைத்து அங்கு வந்தவர்கள் யாவரும் அன்றைய தினம் பாரதியார் யார் என்பதை உணர்ந்து வெட்கித்தனர்.

4

பாரதியாரின் கவிதா நயத்தை நூலாசிரியர் பல்வேறு தலைப்புகளில் ஆராய்ந்து விளக்குகிறார்.

பாரதியார் கடவுட் பண்பு, பாரதியார் பெண்மை, பாரதியார் தேசீயம், பாரதியார் உயிர்நேயம், பாரதியார் பெரியார் வழிபாடு, பாரதியார் நூன்மரபு, பாரதியார் பிரபந்தங்கள், பாரதியார் வாழ்த்தும் சீட்டும், பாரதியார் கவிதாசக்தி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பாரதியாரின் கவிதை அருமையை நூலாசிரியர் சிறப்பாக விளக்குகிறார்.

நூலாசிரியரின் திறனாய்வு தரும் முடிவுகள் இவை:-

 

  • நன்னூலாசிரியர் “பல்வகைத் தாதுவின் என்பதற்கிணங்க, பாரதியாரின் பல பாடல்கள் யாப்பிலக்கண முறைக்குள் அடக்க முடியாத நிலையிலிருப்பினும் அறவே தள்ளுமாறு இல்லை. புறனடைச் சூத்திரத்தில் உதவியால் அவைகளைக் கொள்ளுதலே மேன்மையுடத்து. கால தேச மாறுதல்களால் இலக்கண அமைப்புகள் மாறுதலடைதலே மொழி முன்னேற்றத்திற்கும் செய்யுளிலக்கிய முன்னேற்றத்திற்கும் துணை புரியுமாறு காண்க.
  • இரண்டாவதாக, பாரதியார் பாடல்களில் முதன்மையாகக் காணப்பெறும் அழகுசுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் என்பது.
  • மூன்றாவதாக, பாடல்களைப் படிக்கின்ற காலத்துப் படிப்போர் உள்ளக் கிளர்ச்சியுடனும், முகமலர்ச்சியுடனும் தோன்றுவரல்லாது கூம்பும் தன்மை பெறுமாறில்லை.
  • நான்காவதாக, பாரதியார் செய்யுள் நடை தனித்தன்மை வாய்ந்தது.
  • ஐந்தாவதாக கம்பன் கூறியஅவ்வியத் துறைகள் தாங்கி என்பதைப் பார்க்குமிடத்து, பாரதியார் பாடல்களாகியதிருத்தசாங்கம், ‘விநாயகர் நான்மணி மாலை, ‘திருப்பள்ளியெழுச்சி, ‘பெண்கள் விடுதலைக் கும்மி, ‘நவராத்திரிப் பாட்டு முதலானவைகளில் பாக்களும், பாவினங்களும் நன்கு கையாளப்பட்டுள்ளன.
  • ஆறாவதாக, “ஐந்திணை நெறியளாவி என்று கூறுமிடத்து திணையை ஒழுக்கமாக கொள்ளின், அகப்பொருளும் ஒழுக்கத்திற்கே திணை பொருந்துவதன்னியில் புறவொழுக்கங்களுக்கும் பொருந்துவதாகும். .. பாரதியார் பாடல்களை அகவொழுக்கம் ஐந்திற்கும், புறவொழுக்கம் ஐந்திற்கும் நல்ல முறையில் அமைத்துக் கொள்ளலாம்.
  • ஏழாவதாக, “செவியுறத் தெளிந்து என்னுமிடத்து தெளிவே பாரதியின் பாடல்களில் தெளிந்து நிற்பது என்பதாம்.
  • எட்டாவதாக, எடுத்துச் சொல்லப்படுவதுதண்ணென்றொழுக்கம் தழுவி என்பது. தண்ணிய ஒழுக்கமும், செப்பமாகச் செல்லும் நடையொழுக்கமும், மரபு ஒழுக்கமும், சொல்லொழுக்கமும், கருத்தொழுக்கமும் மூதுரைகளை எடுத்தாளும் எளிய ஒழுக்கமும், உணர்வும் போற்றத் தக்கன.
  • ஒன்பதாவதாகக் கூறப்படுவதுசான்றோர் கவி கிடந்தவாறு கிடத்தல்: என்பதினால் பாரதியாரின் கவிதைகள் கிடந்த முறையிலேயே உள்ளன.

5

பாரதியாரின் கவிதா சக்தியைப் பற்றி நூலின் இறுதியில் ப.மீ.சுந்தரம் விளக்கும் பான்மை அற்புதமாக அமைந்துள்ளது.

நூலின் கடைசி இரு பாராக்களில் பாரதியாரின் கவிதா சக்தியை அவர் இப்படிக் கூறுகிறார்:-

வரகவி பாரதியாரின் கவிதாசக்தியைத் தொகுத்துக் கூற வேண்டுமாயின் பின்வருமாறு கூறலாம்: ‘ஆன்ம இயல்புகள், என்பதைப் ‘பாரத சமுதாயம், ‘சுதந்திரப் பெருமை, ‘தாயின் மணிக்கொடி பாரீர் என்ற பாடல்களிலும், எழுவகைத் தாதுக்களால் “உயிர்க்குடல் போல் என்பதைப் பாடல்கள் எல்லாவற்றிலும், “ஆன்ற பொருள் தந்து என்பதை வேதாந்தப் பாடல்களிலும், “புலத்திற்றாகி என்பதைப் ‘பாஞ்சாலி சபதத்திலும், “துறைகள் தாங்கி என்பதைக் ‘கண்ணன், ‘கண்ணம்மா, பாடல்களிலும், “தெளிந்த என்பதைச் சிறப்பாகப் ‘பாரதி – அறுபத்தாறு, ‘தமிழ் மொழி, ‘பாரத நாடு என்ற பாடல்களிலும், “ஒழுக்கம் என்பதைப் ‘பரசிவ வெள்ளம் என்ற பாடலிலும் காணப்பெருவது தமிழ் அன்னையின் தவப் புதல்வனாம் பாரதநாட்டுக் கவிஞன் பாரதியாரின் கவிதாசக்தியைத் தெற்றென விளக்குமன்றோ!

ஆகவே, நம் பாரதியார், உயரிய ஒழுக்கத்தினாலும், அரிய சேவையினாலும், ஆன்ம ஜெயத்தினாலும், தவமிக்கத் தண்ணளியினாலும், கவிதைப் பெருக்கின் கண்ணியத்தினாலும், இறவாப் புகழ் பெற்றதுமன்றி, இந்திய நாட்டுக் கவிஞர்கள் கொலுவீற்றிருக்கும் மணிமண்டபத்தில் தானும் வீற்றிருந்து நம்மனோர்க்கு இனிய காட்சியளிக்கும் பெற்றியைப் பெற்றார் என்று கூறுவதே இந்நூலின் முடிவுரையாகும்.

 

அருமையான இந்த நூலை பாரதி அன்பர்கள் படித்து இன்புற வேண்டும்; பாரதியாரின் கவிதா சக்தியை அறிந்து கொள்ள இந்த நூல் உற்ற துணை!

***