Written by London swaminathan
Date: 11 December 2015
Post No. 2381
Time uploaded in London :–8-24 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Subramanya Bharati- born on 11 December 1882
Died on 11 September 1921
டிசம்பர் 11 – பாரதி பிறந்த நாள்
பாரதியை நாம் எல்லோரும் புகழ்கிறோம். பாரதியால் புகழப்பட்டோர் யார்? எவர்? என்று பார்த்தோமானால் அது மிக நீண்ட பட்டியலாகிவிடும். இவ்வளவு பேரைப் பாரதி பாடினார் என்பதை அறியும் போது அவரது பரந்த மனப்பான்மை நமக்கு விளங்கும்.
பேஸ்புக்—கில் ஒரு ‘லைக்’ போடக் கஷ்டப்படும் நமக்கு, பாரதி எத்தனை பேருக்கு ‘லைக்’ (பிடிக்கும் என்று) போட்டிருக்கிறார் என்பதை அறிகையில் அவரது கனிவும் பணிவும் புரியும். நாம் பாராட்டினால் அவை நீர் மேல் எழுத்தாக மறைந்துவிடுகிறது. பாரதி போன்ற “மந்திரம்போல் சொல்லின்பம்” உடைய கவிஞன் பாராட்டினாலோ அது கல் மேல் எழுத்தாகி காலத்தால் அழியாததாகிவிடுகிறது.
பாரதி பாடாத கடவுள் இல்லை. போற்றாத புராண இதிஹாச புருஷர்கள் இல்லை. கர்ணனும் பார்த்தனும், சகுந்தலையும் பரதனும், வீமனும் தர்மனும் அவரால் பாடப்பட்டனர். இந்தப் பட்டியலைத் தராமல் அவர் பாடிய தலைவர்களை யும், சாதனையாளர்களையும், கவிஞர்களையும் மட்டும் காண்போம்.
உலக மகா இலக்கிய வித்தகன் பாணினி, இந்துமதத்தைப் புனருத்தாரணம் செய்த, ஷண்மத ஸ்தாபர் ஆதிசங்கரர், உலக மஹா கவிஞன் காளிதாசன், தமிழ்ப் புலவர்கள் கம்பன், இளங்கோ, வள்ளுவன், அவ்வை, இந்துமதத்தை முஸ்லீம் தாக்குதலிலிருந்து காப்பாற்றிய வீர புருஷர்களான வீர சிவாஜி, குருகோவிந்த சிம்மன், மதத்தலைவர்களான ஏசு, புத்தன், தயானந்தர், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், சுதந்திரப் போராட்டத் தலைவர்களான காந்திஜி, கோகலே, திலகர், தாதாபாய் நவுரோஜி, லாலா லஜபதி ராய், வ.உ.சி. முதலானோர் அவரால் பாடப்பட்டனர்.
வான சாஸ்திர மேதை பாஸ்கராசார்யார், மாமன்னன் அசோகன், கொடை வள்ளல் பாரி, சுவாமி விவேகாநந்தர், அவரது சீடர் நிவேதிதா, ஓவியர் ரவிவர்மா, தாயுமானவர், சுவாமி அபேதாநந்தா, வேல்ஸ் இளவரசர், குவளைக்கண்ணன்,வெங்கடேசு ரெட்டப்ப பூபதி, நாம் அறியாத பல சாமியார்கள்:– சித்தாந்த சாமி, கோவிந்த சாமி, யாழ்ப்பாணத்துச் சாமி, மாங்கொட்டைச்சாமி, குள்ளச் சாமி, சுப்பராம தீட்சிதர் என்று பலரையும் போற்றிப் பாடியுள்ளார்.
இதாலிய தலைவர் மாஜினியையும் பாடினார். தாகூர்,தாமஸ் மூர், பங்கிம் சந்திர சாட்டர்ஜி மற்றும் பலரின் பாடல்களை தமிழில் மொழி பெயர்த்தார். ஆண்டாள், நம்மாழ்வார் பாசுரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதனால் இவரையும் பாடாமல் பாடினார்.
ரஷிய மன்னன் ஜார், ஆங்கில விஞ்ச் துரை முதலியோரை வசை பாடியுள்ளார்!
பாரதியின் போற்றுதலுக்குள்ளானோர் பட்டியலில் இன்னும் பலருமுண்டு. என் பட்டியல் முழுமையான பட்டியலன்று. அகத்தியர் — வேத, புராண, இதிஹாசத்தில் அடிபடும் ரிஷியின் பெயராகும். அவரையும் இரண்டு இடங்களில் பாடியுள்ளார்.
இதோ, பாரதி பாடிய சில புகழ்மிகு வரிகள்:
பாடல் 1
கம்பனென்றொரு மானிடன் வாழ்ந்ததும்
காளிதாசன் கவிதை புனைந்ததும்
உம்பர் வனத்து கோளையும் மீனையும்
ஓர்ந்ததளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்
நம்பருந்திறலோடொரு பாணினி
ஞாலமீதில் இலக்கணம் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதிகண்டுண்மையின்
இயல்புணர்த்திய சங்கரன் ஏற்றமும்
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பாரளித்து தர்மம் வளர்த்ததும்
பேரருட்சுடர் வாள் கொண்டு அசோகனார்
பிழைபடாது புவித்தலம் காத்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்
வீழ்த்திவென்ற சிவாஜியின் வெற்றியும்
அன்னர் யாவும் அறிந்திலர் பாரதத்து
ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்
பாடல் 2
வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் – மணி
யாரம்படைத்த தமிழ்நாடு
பாடல் 3
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததிலை
உண்மை இது வெறும் புகழ்ச்சி இல்லை
பாடல் 4
அகத்தியன் பற்றி தமிழ்த் தாய் சொல்வது:——
ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணம் செய்துகொடுத்தான்
பாடல் 5
அன்பு சிவம் உலகத்துயர் யாவையும்
அன்பினிற் போகுமென்றே – இங்கு
முன்பு மொழிந்துலகாண்ட புத்தன்
மொழி எங்கள் அன்னை மொழி
பாடல் 6
உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவள் என்று அறியீரோ? உணர்ச்சி கெட்டீர்!
பண்டாய்ச்சி அவ்வை அன்னையும் பிதாவும்
பாரிடை முன்னறி தெய்வம் என்றாள் அன்றோ
பாடல் 7
வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறி கெட்டுப்
பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க! வாழ்க!
பாடல் 8 (உ.வே.சா. பற்றி)
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய், அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்குவாயே
பாடல் 9
தாயுமானவர் பற்றி
இறவாய் தமிழோடிருப்பாய் நீ
பாடல் 10
நிவேதிதா பற்றி
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
பெரும்பொருளாய் புன்பைத் தாகச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்
நிவேதியைத் தொழுது நிற்பேன்.
இடம் கருதி இத்தோடு நிறுத்துகிறேன் ஏனைய கவிதைகளை பாரதியார் கவிதைத் தொகுப்பில் காண்க.
பாரதி வாழ்க! பாரதி வளர்த்த தமிழ் வாழ்க!!
–சுபம் —
You must be logged in to post a comment.