பாரதி பாடலில் மிருகங்கள்!

bharati boat

Written by London swaminathan

Date : 10 September  2015

Post No. 2144

Time uploaded in London: –  காலை 8-38

சின்னஞ் சிறு குருவி போலே – நீ

திரிந்து பறந்து வா பாப்பா!

வன்னப் பறவைகளைக் கண்டு – நீ

மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா

kuruvi

கொத்தித் திரியும் அந்தக் கோழி – அதைக்

கூட்டி விளையாடு பாப்பா

எத்தித் திருடும் அந்த காக்காய் – அதற்கு

இரக்கப்பட வேணும் பாப்பா!

பாலைப் பொழிந்து தரும், பாப்பா- அந்தப்

பசுமிக நல்லதடி பாப்பா

வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது

மனிதர்க்குத் தோழனடி பாப்பா!

pasuvum kandrum, fb

வண்டி இழுக்கும் நல்ல குதிரை – நெல்லு

வயலில் உழுதுவரும் மாடு

அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு – இவை

ஆதரிக்க வேணுமடி பாப்பா!

என்று பாடி, சின்னக் குழந்தைகளிடம் எடுத்த எடுப்பிலேயே அன்பை, அஹிம்சையைப் போதிக்கிறான். இப்படிச் சின்ன வயதில் கற்றுக் கொடுத்துவிட்டால் உலகம் முழுதும் அஹிம்சை, கொல்லாமை பரவும் என்பது அவ்னது கணிப்பு.

இயற்கையைப் பாடாத கவிஞன் இல்லை. நேரடியாக இயற்கையை ரசித்துப் பாடுவது ஒரு வகை. அந்த இயற்கை மூலம் மனிதன் கற்க வேண்டியது என்ன என்பதை உணர்த்தும்வகையில் பாடுவது இன்னொரு முறை. இந்த இரண்டு வகைப் பாடல்களையும் பாரதி பாடல்களில் காணலாம்.

ஓடி விளையாடு பாப்பா என்ற பாப்பா பாட்டில் பிரணிகளிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்று போதிக்கும் பாரதி, காக்கைச் சிறகினிலே நந்த லாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதையா நந்தலாலா என்ற பாடலில் பெரிய தத்துவத்தின் உச்சிக்குப் போய்விடுகிறான்.

eagle-and-seagull

குயில் பாட்டு, குருவிப்பாட்டு, கிளிக்கண்ணி என்று அவன் பாடாதே பறவையே இல்லை. விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவியைப் போலே என்று பாடி ஆன்மீக விடுதலை, நாட்டு விடுதலை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை என்ற எல்லா வகை விடுதலை உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறான்.

ஈயைக் கருட நிலைக்கு ஏற்றுவேன் என்ற குரு கோவிந்த சிம்ம்ன் பாடல் வரிகள் மூலம் எதையும் சாதிக்கும் குணத்தை, பாஸிட்டிவ் வைப்ரேஷனைப் பரப்புகிறான்.

திட்ட வேண்டிய இடங்களில் நரியின் சிறுமைக் குணத்தைப் பாடுகிறான். நாயை ஒப்பிடுகிறான்.

நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று ஏசுகிறான். சகுந்தலை பெற்ற பிள்ளை ஓர் சிங்கத்தினை தட்டி விளையாடி என்ற வரிகள்மூலம் இந்தியாவுக்கு பாரதம் என்ற பெயரை ஈந்த பரதனைப் பாடுகிறான்.

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் மலையும் கடலும் எங்கள் கூட்டம் என்று பாடி தாவர ஜங்கமப் பொருட்கள் அனைத்தும் நாமே—இறைவனின் வடிவமே – என்ற பகவத் கீதை விபூதி யோக கருத்துக்களை உரைக்கிறான்.

kakak close up

வேள்வித்தீ பாட்டில் காட்டில் மேயுங் காளை, வெங்கடேசு ரெட்டப்ப பூபதி பாட்டில் எல்லினைக் காணப் பாயும் இடபம் போல் முற்படாயோ? என்று இடபம் (ரிஷபம்=காளை), கிளிப்பாட்டில் துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் அன்பில் அழியுமடீ – கிளியே – அன்புக்கு அழிவில்லை காண் என்ற உயர்ந்த கருத்துரை – இப்பை பட்டியல் நீளும்

குயில் பாட்டு என்று சிறிய கவிதை நூலே எழுதி குயிலுக்கு அழியாத இடம் தருகிறான்.

நரிவகுத்த வலையினிலே சிங்கம் நழுவி

விழும், சிற்றெறும்பால் யானை சாகும்;

Snakes-

வரிவகுத்த உடற்புலியைப் புழுவும் கொல்லும் – என்று பாஞ்சாலி சபதம் பாடி விதியின் வலிமையைக் காட்டுகிறான்.

பக்தி எனும் பாட்டில் பொய்ப் பாம்பு மடியும் என்று பாம்பையும் பாடுகிறான்.ஜயபேரிகை பாட்டிலும் பயம் எனும் பேய்தனை அடித்தோம் – பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம் என்று முழக்கம் இடுகிறான்.

அன்பு என்று வந்துவிட்டால் சந்யாசியைப் போல தின்ன வரும் புலியிடத்திலும் அன்பைக் காட்டசொல்கிறான்:-

தின்னவரும் புலி தன்னையும் அன்பொடு

சிந்தயிற் போற்றிடுவாய் நன்னெஞ்சே என்பான்

கடலில் வாழும் முத்துச் சிப்பிகளும் , பவளமும் அவன் பாட்டில் இடம்பெறுகின்றன.

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ – நன்னெஞ்சே – என்று பகைவனூகருள்வாய் பாட்டில் பாடுகிறான்

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்………………….

வெள்ளை நிறத்தொரு பூனை- எங்கள்

வீட்டில் வளருது கண்டீர்;

பிள்ளைகள் பெற்றதப் பூனை – அவை

பேருக்கொரு நிறமாகும்

என்று பல வண்ணப் பூனைகளைச் சொல்லி

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில்

மானுடர் வேற்றுமை இல்லை

cats

என்ற அரிய- பெரிய நிற வேற்றுமை எதிர்ப்புக் கொள்கையை பிரசாரம் செய்கிறான். தென் ஆப்பிரிக்க மண்டேலாவுக்கும் முன்னதாக, ஐநா. சபைக்கும் முன்னதாக நிற வேற்றுமை எதிர்ப்புப் பிராசரத்தைப் பூணைகள் மூலம் விளக்கிவீட்டவன் பாரதி!

பாரதி பாடிய அளவுக்கு ஒரு கவிஞன் இத்தனை பறவைகள், மிருகங்களைப் பாடி ஒரு தத்துவத்தைக் கற்பித்து இருப்பானா என்பது சந்தேகமே. வால்மீகியும், காளிதாசனும் எத்தனையோ இயற்கை வருணனைகளில் எத்தனையோ பறவைகள், மிருகங்களைக் குறிப்பிடுகிறார்கள்; அவை எல்லாம் இயற்கை ரசனை. ஆனால் பாரதியோ ஒவ்வொன்றிலும் ஒரு குனத்தை, தத்துவத்தைக் காண்கிறான்!

முருகன் பாடல்களில் மான், மயில் ஆகியவற்றையும், விநாயகர் பால்களில் யானையையும் பாடத் தவறவில்லை.

mayil2yanai nama srirangam

பாரதி பாடிய எறும்பு முதல் யானை வரை, எலி முதல் – புலி வரை அத்தனை வைகலையும் ஆராய்ந்தால் அது பிஎச். டி. ஆய்வுரை போல ஆகிவிடும். பாரதியின் பரந்த மனப்பான்மையைத் தொட்டுக் காடுவதே இக்கட்டுரையின் நோக்கம். அது இனிதே நிறைவேறுக!

dog,monkey3

—சுபம்–