பாரதி போற்றி ஆயிரம் – 52 (Post No.4745)

Date: 15 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-21 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4745

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

  பாடல்கள் 351 முதல் 357

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி இறுதி அத்தியாயம் மற்றும் தமிழ் எழுத்தாளர் சங்கத் தொண்டு பற்றிய பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி

விடுதலைக் குயில் என்ற அத்தியாயத்தில் உள்ள நான்கு பாடல்கள்

 

 

விடுதலைக் குயில்

 

நடத்தினார் வாழ்க்கை பாரதியார் – அவரும்

   வாழ்வாங் குவாழ யாம்கண்டோம்!

அடர்ந்த தாய்மொழிப் பார்வையொன்று – தேசிய

   ஒருமைப் பாடு இரண்டாகும்!

படர்ந்த சமூகப் பார்வைமூன்றாம் – தெளிந்த

   உலகப் பார்வை நான்காகும்!

தொடர்ந்து நான்கின் அடிப்படையில் – கவிதை

   தொகுப்புந் தந்தார் பாரதியார்

 

பாரதி தமிழால் உயர்ந்தார்காண் – தமிழும்

   பாரதி யாலே உயர்ந்ததுகாண்!

சீருறு தொனியால் கவியியற்ற – அதனால்

   செந்தமிழ் இசையும் ஓங்குதுகாண்!

பாரதி பாடிய இசைகேட்டு – மகிழ்ந்து

   பாரத மணிக்கொடி பறக்குதுகாண்

பாரதம் பெற்ற மாக்கவிஞர் – புவிக்கு

   பரப்பினர் பார்வை அறிவியலை

 

அறிவியல் ஆக்கக் கூட்டமைப்பை – நல்கி

   புதுநெறி காட்டிய கவிஞானி!

தறியில் நெய்த ஆடைபோலப் – புதிய

   தமிழகம் அமைத்த முன்னோடி!

பொறியியல் நோக்கின் பரந்தமனம் – பாரதி

   பல்துறை தத்துவ மெய்ஞ்ஞானி!

நறிய தேனின் சுவைத் தொகுப்பு – பாரதி

   நல்கிய கவிதை புசித்திடுவோம்!

 

புசிப்போம் தீஞ்சுவை காவியத்தை – ஏற்போம்

   நாட்டு உணர்வும் மொழிப்பற்றும்!

நசித்து அடிமை அகற்றிடவே – புதிய

   உணர்ச்சி வெள்ளப் பெருக்கேற்போம்!

உசித மனதுடன் வாழ்வோங்கப் – பாரதி

   வழிநடைப் பயணம் உவந்தேற்போம்!

மசியலாய் விடுதலைக் குயாம்பெற்ற – விருந்தே

   பாஞ்சா லிசென்ற அரசவையாம்.

 

 

மகாகவி பாரதி அந்தாதி முற்றும்

 

மகாகவி பாரதி பிறந்த நாளில் அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்தொண்டு

(மூன்று பாடல்கள்)

இயற்றியவர் அருட்கவிஞர் அ.காசி

அனைத்திந் தியத்தமிழ் எழுத்தாளர் – சங்கம்

   ஆண்டுதோறும் ஒருங்குகூடி

மனையகம் பாரதி வீடுசென்று – சற்றே

   மகிழ்ந்து கலந்து உறவாடி

புனைந்த பாரதி ஓவியங்கள் – பாரதி

   பெட்புறு வாழ்க்கைச் சம்பவங்கள்

அனைத்துங் கண்டு அஞ்சலித்து – பாரதி

   அவர்புகழ் பாடித் திளைப்பதுகாண்.

 

பேரறி வாளர் விக்கிரமன் – அணிக்கு

   பீடுறு தலைமை தாமேற்கப்

பாரதி பிறந்த நன்னாளில் – கூடிய

   பாவலர் கவிஞர் அனைவருமே

பூரண சுதந்திரம் வேண்டிநின்ற – பாரதி

    பாடிய பாக்களை முழக்கமிட்டு

ஊரகம் எட்டய புரத்தினிலே – தெருவெலாம்

   உலாவரும் காட்சி யாம்கண்டோம்

 

ஆன்ற உரிமை இராமலிங்கா – ஈடிலா

   அன்புத் தினகரன் தலைமையிலே

தேன்சுவைக் கவிஞர் எழுத்தாளர் – யாவரும்

   தீரன் பாரதி திறம்போற்றி

ஓங்கிய புகழ்மணி மண்டபத்தில் – பாரதி

   உருவத் திருவடிக் கீழமர்ந்து

பாங்குடன் இசைந்து அஞ்சலிக்கும் – காட்சி

   ஆண்டு ஓர்நாள் காணுகின்றோம்

 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி’ என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி’ பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

 

தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.

அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும். மகாகவி பாரதி அந்தாதி காப்பு மற்றும் 100 செய்யுள்களைக் கொண்டது. அந்தாதி விடுதலைக் குயில் அத்தியாயத்துடன் முற்றுப் பெற்றது.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.

****