Date: 15 JANUARY 2018
Time uploaded in London- 6-23 am
Compiled by S NAGARAJAN
Post No. 4617
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாரதி போற்றி ஆயிரம் – 26
பாடல்கள் 153 முதல் 156
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
பாரதிதாசன் பாடல்கள்
பாரதியார் முன் இரு பிரசங்கங்கள்
சமரச சன்மார்க்கக் கட்டிடத்தில்
தகு திரு வி கலியாணசுந்தரர் தாம்,
அமைவுடைய இளங்கோவின் கவி நயத்தி
அமுதம் போல் எடுத்துரைத்தார் பிரசங்கத்தில்!
தமை மீறிப் பொங்கி யெழும் சந்தோசத்தால்
தட தட எனக் கரகோசம் செய்தார் ஐயர்!
நமது தமிழ் இனிமைதனைக் கண்டு கொள்க
நானிலமே என்றன தல்விழியும் மார்பும்!
அடுத்தபடி வேறொருவர் பிரசங்கித்தார்
அவர் கோணிக் குரங்கு போல் ஆடி ஆடி
எடுத்தெடுத்துப் பாடினார் தாயுமானார்
எழிற்பாட்டை அழுகுரலில்! அவர் சனத்தைப்
படுத்தாத பாடில்லை! கோபத்தாலே
பாரதியார் “யாரடா இவன்” என்றார், நான்
தடுத்து விட்டேன் எழுந்திரு என்றார் ததாஸ்து சொன்னேன்
சபைத் தலைவர், பிரசங்கி சபையில் மீந்தார்!
பாரதியாரும் நாடகமும்
நற்சரிதை நற்கவிதை நல்நடிப்பு
நாடகத்தில் பாரதியார், அமைக்க எண்ணி
முற்காலம் காளிதாசன் புகன்ற
“சாகுந்தலம்” நடத்த முடிவு செய்தார்
உற்ற நண்பர் சீனிவா சாச்சாரிக்குச்
சகுந்தலையின் வேடந்தான் உரியதென்றார்
பற்றறு விசுவா மித்திரர் வா வே சுக்காம்
பகரறிய துஷ்யந்தன் நான் தான் என்றார்
தொண்டு செயப் பல நண்பர் காத்திருந்தோம்
துடை நடுங்கும் தமிழ்நாடு, தேச பக்தர்
அண்டுமந்தக் காரியத்தில் அண்டவில்லை
அருங்கவியின் நாடகத்தை இழந்தார் மக்கள்
வண்டி வண்டியாய்க் குப்பை கூளமெல்லாம்
வாரிப் போய் பாரதியார் போட்டிருப்பார்
கொண்டு வந்து சேர்த்திருப்பார் நாடகத்தில்
குளிர் நிலவை; ஒளி நிலவை; அற்புதத்தை!
கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.
***