பாரதி போற்றி ஆயிரம் – 42 (Post No.4694)

Date: 3 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-21 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4694

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 42

  பாடல்கள் 250 முதல் 254

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

திருமதி சௌந்தரா கைலாசம் பாடல்கள்

தொழுகின்றோம் அருள்க நீயே!

அமரர் கல்கி நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்

முதல் நாள் : (5-4-1982) சொற்பொழிவு

தொழுகின்றோம் அருள்க நீயே!

 

எழுதுகின்ற எழுத்தாலே என்னென்ன

     என்னென்ன செய்து விட்டாய்!

தொழுதுநின்ற ஏழைதனை, துள்ளுகின்ற

     காளைகளாய் மாற்றி, துன்பம்

உழுதுநின்ற நெஞ்சுகளில் உவகையெனும்

     தேனூற்றி, அச்ச மென்னும்

பழுதுநின்ற இடத்தினிலே, பாரதியே!

      வீரத்தைப் பயிர் செய்தாயே!

 

விட்டவழி கடவுள்நமக் கென்றுநிதம்

     விழிதிறந்து தூங்கும் போக்கை,

கெட்டவழி என்றிடித்துக் கேண்மையினால்

     மனத்தினிலே நல்லதென்று

பட்டவழி, நீசொல்லிப் பாரதத்தைத்

     துயிலெழுப்பி, பரங்கி, மூட்டை

கட்டவழி செய்தாயே, கவலையினைக்

    கொன்றழிக்கப் புறப்பட் டாயே!

 

மண்ணுக்குள் எங்கேயோ மறைந்துதவம்

     செய்கின்ற வேர்தான் – அந்த

விண்ணுக்கும் மணமுதவும்; விதவிதமாய்ப்

     பூப்பூக்க வழிவ குக்கும்!

புண்ணுக்கு மருந்து தர, புதுவாழ்வொன்

     றரும்பிவர புரட்சி என்னும்

பண்ணுக்குச் சுதிசேர்க்கப் பலகாலம்

    புதுவையில்நீ தவஞ்செய் தாயே!

 

உடல்கொண்டு நெடுங்காலம் உலகத்தில்

      வாழ்ந்தாலும் பலரை, காலக்

கடல்கொண்டு மறைத்துவிடும்; கவனத்தின்

      நீக்கிவிடும்; கவிஞன் நீயோ

இடங்கொண்டு மண்மீதில் இருந்ததெலாம்

      சிலகாலம் எனினும், நெஞ்சில்

நடங்கொண்டு காலத்தின் பிடிகளுக்குச்

      சிக்காமல் நழுவி னாயே!

 

பித்தனென நினைத்துன்னை, பிதற்றினர் உண்

     டென்றாலும் பெருமை மிக்க

புத்தனென ஏசுவெனப் புதுவாழ்வு

      மலர்விக்கப் போந்தாய், ஞான

சித்தனென யாமுன்னைச் சிறிதுசிறி

      தாய்த்தெளிந்து, சிரமே தாழ்த்தி,

அத்தனென, அன்னையென அகமுருகித்

      தொழுகின்றோம் அருள்க நீயே!

 

கவிஞர்  திருமதி சௌந்தரா கைலாசம் பிரபலமான தமிழ்க் கவிஞர். ஏராளமான கவிதைகளைப் புனைந்தவர். குமுதம், கல்கி உள்ளிட்ட இதழ்களிலும் கவியரங்கங்களிலும் இவரது கவிதைகள் இடம் பெற்றன. சிறந்த சொற்பொழிவாளர்.

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதியார் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி அமரர் கல்கி நினைவு அறக்கட்டளை சார்பில் சொற்பொழிவை சென்னைப் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.  சென்னைப் பல்கலைக் கழகநூற்றாண்டு வெள்ளி விழா வெளியீடாக மலர்ந்த ‘பாரதி
என்ற நூலில் உள்ள கவிதை இது. வெளியிட்ட ஆண்டு – 1985.

நன்றி: சென்னை பல்கலைக் கழகம் நன்றி: திருமதி சௌந்தரா கைலாசம்

 

***