Picture posted by Manion cgs; Isaikkavi Ramanan acting as Bharati
Date:14 FEBRUARY 2018
Time uploaded in London- 6-28 am
Compiled by S NAGARAJAN
Post No. 4740
PICTURES ARE TAKEN from various sources.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
பாடல்கள் 333 முதல் 350
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்
மகாகவி பாரதி அந்தாதி
பாரதிக்கு சிறப்பு என்ற அத்தியாயத்தில் உள்ள பதினெட்டு பாடல்கள்
பாரதிக்கு சிறப்பு
முதல்வர் தமிழக முதன்மையவர் – ஓ.பி.
இராம சாமி ரெட்டியாரே!
இதமாய்ப் பாரதி படைத்தவற்றி – விசுவ
இளவலி டமிருந் துபெற்றாரே!
பதிப்பு உரிமை அச்சேற்றி – பாரதி
படைப்பை வெளியிடும் தொண்டேற்றார்
உதித்த புரட்சிக் கவிஞர்சீர் – மத்தியில்
ஓங்கச் செய்தார் பெருந்தலைவர்!
பெருந்த லைவர் காமராசர் – ஆவடி
பெருவிழா மகாசபை நடத்தினார்காண்
திருவுடன் பாரதி நவின்றபாடல் – அதுவே
“தனியொரு வனுக்குநல் உணவிலையேல்
கருதிய செகத்தினை அழிப்போமே” – இதனைக்
கூறி முழங்கினார் காமராசர்!
ஒருங்கிணை சமூகம் சமதர்மம் – அமைக்க
ஏகினார் ரஷியா சோவியத்து!
சோவியத் ரஷியா சென்றாரே – அங்கண்
பிரதமர் கோஜிஸன் வரவேற்றார்!
மேவிய ரஷியப் புரட்சிபற்றி – பாரதி
பாடிய பாடலைக் காமராசர்
கூவியே ஒலித்தார் ரஷியாவில் – சபையோர்
கொண்டனர் மகிழ்வு! போற்றினர்காண்
ஏவிய காமராஜர் தூண்டுதலால் – பாரதி
அஞ்சல் தலையும் எளிதேற்றோம்
எளிய கவியால் பாரதியை – கலைஞர்
கருணா நிதியும் போற்றினார்காண்!
தெளிந்த அரிமாக் கவிஞனவன் – பாரதி
தீரன் பெரிய மருதுபோன்றோன்!
ஒளிமிகு கவியணி இரசவாதி – பாரதி
யாப்பு அணியின் போர்க்கவிஞன்!
பளிங்குசால் பாரதியின் கவித்திறத்தான் – அவனே
அடலே றுகவியின் மன்னவனாம்.
மன்னவன் பாட்டின் தலைவனவன் – பாரதி
மகிமை வழியில் கவியியற்றி
நின்றவன் பாரதி தாசனென்போன் – என்றே
இருவரைப் போற்றினார் கலைஞருமே!
ஒன்றிய இருவர் வாழ்வாலே – நாமும்
வளமும் வாழ்வும் பெற்றோமே!
நன்றே பாரதி சிறப்போங்க – நடந்தது
உலகத் தமிழர் மாநாடு!
மகாநா டோங்க மாண்புமிகு – அறிஞர்
முதல்வர் அண்ணா பணியேற்றார்
மகாநாட் டையொட்டி சென்னைகடற் – கரையிலே
தமிழ்மகான் பலர்க்கு சிலைவைத்து
மகோற்சவம் சிறப்பாய் நடத்தினாரே! – அதிலே
மகாகவி பாரதி சிலையேற்றார்!
மகாகவி பாரதிமுழு உருவச் – சிலையை
மாண்புடன் காண்கிறோம் என்றென்றும்!
என்றும் பாரதி நினைவோங்க – எட்டய
புரத்தில் உள்ள அவர்வீட்டை
ஒன்றிய அரசு உடைமையாக்கி – பாரதி
நினைவு இல்லமாய்ச் செய்ததுகாண்!
இன்னிசை யோடு திறப்பு விழாவும் – நடத்தி
ஏற்புறு கூடமாய் அமைந்தது காண்!
நன்றே பின்னர் சீர்திருத்தி – பொற்புறு
விழாவும் நடந்தது நூற்றாண்டில்
நூற்றாண் டுவிழா பாரதிக்கு – இனிதே
எட்டய புரத்திலே நடந்ததுகாண்
ஏற்ற முடனே மூன்றுநாட்கள் – நினைவு
இல்லம் முன்னே நடந்ததுகாண்!
ஆற்றிய அரசு பணிகண்டு – மக்கள்
அலைக டலெனத் திரண்டனர்காண்!
ஆற்றல் மிக்க கவிஞர்கள் – பாரதி
கவிதா வேள்வி இசைத்தனர்காண்
இசைத்து பாரதி கீர்த்தியோங்க – பாரதி
மணிமண் டபமும் விரும்பியதே!
மிசைந்த தனிக்குழு வசமிருந்து – அதனை
அரசு தனது உடைமையாக்கி
நசையுறு அமைப்புடன் வளர்த்ததுகாண் – நளின
காட்சி யகமும் அமைத்ததுகாண்
இசைபட விழாக்கள் நடத்துவதற்கு – முன்புறம்
அரங்கம் எழிலுறப் பெற்றதுகாண்!
பெற்ற தவத்தின் பயனாக – எட்டய
புரத்தில் மிளிர்ந்தது தொழிற்கல்வி!
உற்ற பாரதி நூற்றாண்டு – நினைவாய்
எழுந்தது கல்வி தொழிற்கூடம்
பொற்புறு நாற்பது ஏக்கரிலே – உருவம்
பெற்றது மகளிர் பாலிடெக்னிக்!
கற்றுத் தொழிலில் உயர்வேற்ல – பெண்கள்
கண்டநற் பயன்தொழிற் சாலைஎன்போம்!
சாலையும் தவப்பயன் பெற்றதுகாண் – பாரதி
சாலையை சென்னை ஏற்றதுகாண்!
ஓலைபோல் நீண்ட பைக்ராஃப்ட்ஸ் – வீதி
அண்ணல் பாரதி பெயரேற்று
மாலை மதிபோல் ஒளிவீசி – சென்னை
மாநகர் தன்னில் ஒளிர்வதுகாண்!
சாலை பாரதிசாலை என்போம் – பாரதி
தாசன் பாரதி பெயரேற்றார்!
பெயர்சீர் பாரதி பெயரெங்கும் – நாட்டில்
பெட்புடன் ஒலிக்கக் கேட்கின்றோம்!
இயல்பாய யாவரும் கற்றுயர – பாரதி
ஞானப் பெயரை உவந்துவைப்போம்
உயர்ந்த தொழிலகம் அனைத்திற்கும் – பாரதி
உன்னதப் பெயரை பொருந்தவைப்போம்
இயன்ற பள்ளிகள் பாரதியின் – பெயரால்
இயங்கக் காண்போம் நேயமுடன்
நேய முடனே அரசாங்கம் – பாரதி
பெயரால் நிறுவனம் அமைத்துகாண்
கோயம் புத்தூர் பாரதியார் – பல்கலைக்
கழகம் செயல்பட யாம்கண்டோம்!
ஆய கலைகளைத் தருபவளே – பாரதி
அவள்தரு செல்வமே கல்வியாகும்!
தேய சுதந்தர தமிழுணர்வை – சாற்றப்
பாரதி பிறவி எடுத்தாரே!
எடுப்பா யமைந்த பாரதியின் வெண்கல
உருவச் சிலையைத் தமிழரசு
கொடுக்க அதனைப் பெற்றாரே – மேற்கு
வங்க முதல்வர் ஜோதிபாசு!
தொடுத்த தலைமை ஜோதிபாசு – ஏற்கத்
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.
உடன்மகிழ் வுற்றுப் பாரதியின் – வெண்கலச்
சிலையைத் திறந்து வாழ்த்தினர்காண்!
வாழ்த்தினார் புரட்சிக் கவிஞரையே – புரட்சி
நடிகர் முதல்வர் எம்.ஜி.ஆர்.
தாழ்ந்து பணிந்து பாரதியின் – சிலைக்கு
வணக்கம் செய்தார் மகிழ்வுடனே!
ஆழ்ந்த உணர்வுடன் பாரதியின் – வேடம்
ஏற்று நடித்தார் சிவாஜிகணேசன்
வாழ்ந்து காட்டிய பாரதிக்கு – சிறப்பு
வளமை தந்தனர் மத்தியிலே
மத்தியிலுள்ள புதுடில்லி – ஆங்கண்
மாண்புறு பாரதி நகர்கண்டோம்!
பத்தடி உயர பாரதியின் – சிலையை
வடித்தது அங்கு தமிழரசு!
வித்தகர் இந்தியப் பிரதமராம் – ராஜீவ்
காந்தி அதனைத் திறந்து வைத்தார்!
உத்தம முன்னிலை வகித்தவரே – முதல்வர்
எம்.ஜி. இராமச் சந்திரனார்.
சந்திர வதனங் கொண்டவராம் – குடியர
சின்துணைத் தலைவர் மாண்புமிகு
வெங்கட் ராமன் தலைமையேற்றார்! – அவரும்
சிங்கக் கவிஞனைப் போற்றினார்காண்!
சிந்து கங்கை நதிபோற்றிப் – பாடிய
சிந்து கவிஞரை வாழ்த்தினாரே!
வந்தே மாதரம் இசைத்தவரே – பாரதி
நன்மகன் பாரத அன்னைக்கு
அன்னை முதல்வர் ஜெயலலிதா – பாரதி
அவர்புகழ் ஓங்கத் தொண்டேற்றார்!
சென்னை திருவல் லிக்கேணி – பாரதி
வாழ்ந்த வீட்டை விலைக்குவாங்கி
ஒன்றிய அரசு உடைமையாக்கிப் – பாரதி
நினைவு இல்லமாய்ச் செய்தார்காண்!
நன்றே திறப்பு விழாநடத்தி – பாரதி
நினைவு நாளும் நடத்தினார்காண்!
(மகாகவி பாரதி அந்தாதி அடுத்த அத்தியாயத்துடன் முடியும்)
கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி’ என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி’ பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.
தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.
அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.
நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.
****