கார்ல் மார்க்ஸை விஞ்சிய பாரத மகான்கள்! (Post No.4171)

Written by S.NAGARAJAN

 

Date: 29 August 2017

 

Time uploaded in London- 5-40 am

 

Post No. 4171

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சிந்திக்க வேண்டும் தோழர்களே!

கார்ல் மார்க்ஸை விஞ்சிய பாரத மகான்கள்!

 

ச.நாகராஜன்

 

கார்ல்மார்க்ஸ் ஒரு புது வித தத்துவத்தைத் தந்து விட்டார் எனவும் அது உலகத்தையே உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்றும் சொல்லும் கம்யூனிஸ்டுகளை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது.

 

பாரத தேசத்தின் பழம் பெரும் அறிவுக் கருவூலங்களைப் படித்தவர்கள் அனைவருக்கும அந்தச் சிரிப்பு வரும்.

உன் சக்திக்குத் தக உழை; உன் தேவைக்குத் தக எடுத்துக் கொள்; உலகத் தொழிலாள வர்க்கமே ஒன்று படு

என்று இப்படியெல்லாம் கோஷம் எழுப்பி இது ஒரு புதிய கண்டு பிடிப்பு போல கம்யூனிஸ்டுகள் “அபூர்வக் காட்சியைத்” தருவது அவர்கள் சம்ஸ்கிருத செல்வத்தையோ அல்லது குறைந்த பட்சம் வள்ளலாரின் திரு அருட்பாவையோ கூடப் படிக்காததால் தான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம்.

 

“அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே  நினதருட்புகழை

இயம்பியிடல் வேண்டும்”

 

 

என்று அவர் கூறும் போது அந்த மனம் எவ்வளவு விசாலமானது; இதை விட ஒரு பெரிய கருத்தையா கார்ல் மார்க்ஸ் சொல்லி விட்டார் என்று கேட்கத்த் தோன்றும்.

கம்யூனிஸத்திற்கும் அருட்பா கொள்கைக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.

 

கம்யூனிஸம் அடிதடி, வன்முறை, கொள்ளை, பணக்காரனை ஒழி; அழி என்று கூறும். ஆனால் அருட்பாவோ அனைவரும் நன்றாக வாழட்டும்; அன்பு பொங்க வாழட்டும் என்கிறது.

எது உயர்ந்தது? யார் வேண்டுமானாலும் சிந்தித்துத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்!

 

 

அடுத்து காலத்தாற் முற்பட்ட பாகவத ஸ்லோகம் ஒன்றைப் பார்ப்போம்:

“ஒரு மனிதன் அவன் உயிர் வாழ எவ்வளவு தேவையோ அவ்வளவை மட்டுமே கொள்ள அவனுக்குத் தகுதி உண்டு;  அதை விட மேலாக ஒருவன் அடைய முற்படுவானேயானால் அவன் ஒரு திருடனாகக் கருதப்பட வேண்டும்; அவன் தண்டனைக்கு உரியவனே” என்கிறது பாகவதம்.

 

“யாவத் ப்ரீயேத ஜாதரம் தாவத் ஸ்வத்வம் ஹி தேஹினாம் I

அதிகம் யோபிமான்யேத ச ஸ்தனோ தண்டமார்ஹதி” II

 

ஈஸாவாஸ்ய உபநிடதத்தின் முதல் ஸ்லோகமும் கூட அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டது. இதில் அடுத்தவன் தனத்திற்கு ஆசைப்படாதே என்று அருளுரை பகர்கிறது.

 

மனுவைத் திட்டும் திராவிடப் பிசாசுகளும் கம்யூனிஸ சைத்தான்களும் மனுவைச் சரியாகப் படிக்கவில்லை என்று அடித்துக் கூறலாம்.

 

ஏனெனில் அவர்கள் கூறும் தத்துவத்தை விட அழகாக அவர் கூறுவது:

 

“உழுபவனுக்கே நிலம் சொந்தம்”

ஆச்சரியமாக இருக்கிறதா? மனுவைப் படிக்க வேண்டும்!

ஸ்தாணுச்சேதஸ்ய கேதாரமாஹு சல்யவதோ ம்ருஹம்

என்கிறார் மனு.இது தான் மனு நீதி!

மனு நீதி பாரதம் முழுவதற்கும் பொது;

க்ருண்வந்தோ விஸ்வம் ஆர்யம்

உலகம் முழுவதையும் பண்பாடுள்ளதாக மாற்றுவோம் என்பது வேத முழக்கம்.

 

 

ஆகவே மனு நீதி உலகம் முழுமைக்கும் பொது!

வேதம் என்பது தனி மனிதனின் சொத்து அல்ல; அது பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நான்கு வருணத்திற்கும் உரியது. பொது.

 

 

ரஷியாவிலும் கூட, ஏன் சீனாவிலும் கூட கொள்கை வகுக்கும் அறிவு சால் மக்கள் அல்லது தலைவர்கள் அல்லது அனைவருக்கும் இதத்தைத் தர உழைப்பவர்கள்- பிராமணர்கள் – உள்ளனர்.

 

அங்கும் நாட்டைப் பாதுகாக்க ராணுவத்தினர் – க்ஷத்ரியர் – உள்ளனர்.

அங்கும் வணிகம் புரியும் வணிகர் – வைசியர் – உள்ளனர்.

அங்கும் அன்றாட இதரப் பணிகளைப் புரிவோர் – சூத்ரர் – உள்ளனர்.

 

 

இந்த நான்கு வகுப்பில் உயர்வு தாழ்வு இல்லை.

ஒரு சமூகத்திற்குத் தேவையானது இந்த அமைப்பு; அவ்வளவு தான்.

 

வேதமறிந்தவன் பார்ப்பான், பல

  வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதி நிலை தவறாமல்  – தண்ட

   நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி – பிறர்

    பட்டினி தீர்ப்பவன் செட்டி

 

தொண்டரென்றோர் வகுப்பில்லை – தொழில்

    சோம்பலைப் போல் இழிவில்லை

நாலு வகுப்பும் இங்கொன்றே – இந்த

      நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே செத்து

    வீழ்ந்திடும் மானிடச் சாதி

 

என்ற பாரதியின் வார்த்தைகளை விட வேறு எந்த வார்த்தைகளால் இந்த நான்கு வருண தத்துவத்தைக் கூற முடியும்?

 

பண்டைய ரிஷிகளும் தொடர்ந்து தோன்றி வரும் பாரத மகான்களும் – வியாசர் முதல் வள்ளலார் வரை அனைவரும் -வலியுறுத்தும் கருத்து ஒன்றே தான்!

 

ஆருயிர் அனைத்தும் ஒரே நிறை; ஒரே எடை; ஆருயிர்க்கெல்லாம் அனைவரும் அன்பு செய்தல் வேண்டும்

 

கார்ல் மார்க்ஸ் தத்துவத்தை விட பாரத மகான்கள் வலியுறுத்தும் தத்துவம் மிக மேலானதா, இல்லையா?

தோழர்கள் சிந்திக்க வேண்டும்!

***