பழங்கால இலக்கியங்களில் பாராசூட், மலை ஏறும் கருவிகள்

para7

Compiled by London Swaminathan

Article No.1898; Dated 30 May 2015.

Uploaded at London time 7-16 am

 

ஆல்பர்ட் ரைட், வில்பர் ரைட் ஆகிய இருவரும் அமெரிக்காவில் விமானத்தைப் பறக்க விடுவதற்கு முன்னால் நம்மவர் பம்பாயிலிருந்து விமானங்களைப் பறக்கவிட்டது பற்றி இந்த பிளாக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ச.நாகராஜன் எழுதிய கட்டுரை வெளியானது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒருவர் விஞ்ஞான மாநாட்டு துவக்க உரையில் அதைக் குறிப்பிட்டவுடன் எல்லாப் பத்திரிக்கைகளிலும் அது ஏதோ புதிய செய்தி போல வெளியானது.

இது போல ராமன் விமானம் அயோத்திக்குப் பறந்தது எப்படி? என்பதை நான் லண்டன் விஞ்ஞான சஞ்சிகைக் கட்டுரை அடிப்படையில் எழுதினேன். இதுவும் ஒரு காலத்தில் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக வரலாம். பிரம்மாஸ்திரம் என்பது அணு ஆயுதம் என்று 2005 ஆம் ஆண்டில் லண்டன் சவுத் இந்தியன் சொசைட்டி (south Indian Society)  மலரில் எழுதி, பின்னர் இந்த பிளாக்கில் 2011ல் வெளியான கட்டுரையையும் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மிக்க மகிழ்ச்சி.

இங்கே, ஆரிய தரங்கிணி (Arya Tarangini by A Kalyanaraman) என்ற ஆராய்ச்சி நூலை எழுதிய ஏ.கல்யாணராமன் கண்டுபிடித்த ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. இப்பொழுது மிகவும் சர்வ சாதாரணமாகிவிட்ட பாராசூட், மலையேறும் கருவிகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டதை சம்ஸ்கிருத ,பாலி மொழி நுல்களில் காண முடியும்.

அந்தக் காலத்தில் கதைகள் எழுதுவதிலும் நம்மவரே முதலில் நின்றனர். இப்பொழுது சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், ஹாரி பாட்டர், (Superman, Spiderman, Harry potter) இதற்கும் முந்தைய அராபிய இரவுக் கதைகள், கல்லிவரின் லில்லிபுட் பயணம், பேய்க்கதைகள், ஈசாப் கதைகள், ஏசு சொன்ன உபமானக் கதைகள் ஆகியன எல்லாம் நம்மவர் எழுதிய நூல்களில் இருந்து சென்றவையே என்றும் முன்னரே காட்டியுள்ளேன்.

பாணினி என்பவர் உலகின் முதலாவது இலக்கணப் புத்தகத்தை 2700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார். அவருக்கு 200 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த காத்தியாயனர் என்பவர் வார்த்திகா என்ற விளக்க உரை எழுதினார். அதில் பலவகையான பாதைகள் குறிப்பிடப்படுகின்றன:-

elephant ride

வாரிபத= கடல் வழி (கப்பல் போக்குவரத்து)

கரிபத= யானைப் பாதை

அஜபத=ஆட்டுப் பாதை (ஆடு செல்லும் ஒற்றையடி பாதை)

சங்குபத=மலை ஏறுதல் (மலை ஏறும் கருவிகளைப் பயன்படுத்தி)

ஹம்சபத= வான் வழி (உ.ம். ராமர், குபேரர், ராவணன், உபரிசாரன்)

தேவபத= விண்வெளிப் பயணம் (உ.ம்.நாரதர், மாதலி).

சம்ஸ்கிருதச் சொல்லான ‘பத’ என்பதில் இருந்தே ஆங்கிலச் சொல்லான Path பாத், தமிழ்ச் சொல்லான பாதை என்பன வந்தன.

பழங்காலத்தில் நம்மவர்கள் போக்குவரத்தில் மிகவும் முன்னேறி இருந்ததை பல நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. கிருஷ்ணனும் பலராமனும் அடிக்கடி உத்தரப் பிரதேச மதுரா நகரிலிருந்து குஜராத் கடற்கரை ஓரமுள்ள துவாரகாவுக்கு வந்து சென்றார்கள். பரதன் கேகய (Afghan) நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்து போனான். ராவணனும் அவனது உறவினர்களும் கோதாவரி பிராந்தியத்தில் வந்து விளையாடிச் சென்றார்கள், இமயமலை வரை சென்று அவன் கயிலாயத்தையே ஆட்டப் பார்த்தான்.

பருவக் காற்று ரகசியங்கள் இந்துக்களுக்குத் தெரியுமாதலால் ஒரே வாரத்தில் இலங்கையிலிருந்து மேற்கு வங்க மாநிலத்துக்கு வந்து கங்கை நதி வழியாக இமய மலை வரை சென்றனர். இதை ருசுப்பிக்கும் செய்திகள் மஹாவம்சத்தில் உள்ளன. மேலும் கரிகால் சோழனின் முன்னோர்கள் பருவக் காற்றைப் பயன்படுத்தியதைப் புறநனூறு குறிப்பிட்டுச் சொல்கிறது. இந்தப் பின்னணியில் பார்த்தால் எந்தச் செய்தியும் வியப்பை ஏற்படுத்தாது.

பாலி மொழி “நித்தேச”, சம்ஸ்கிருத பிருஹத் கதா, புத்த ஜாதகக் கதைகள் முதலியன பல வீர தீரக் கதைகளைச் சொல்லுகின்றன. சௌதாச என்பவன் அசேர என்னும் மன்னனுடன் கடல் வழிப் பயணம் மேற்கொள்கிறான். சுவர்ணபூமிக்குச் சென்று தங்கம் கொண்டுவர அவர்கள் புறப்பட்டனர். அவர்கள் போன பாதைகள் பின்வருமாறு:–

chola-flag-2

வாரி பத; கடல் பயணம்

வேத்ர பத: டார்ஜான் படத்தில் பார்ப்பது போல மரத்தில் இருந்து தொங்கும் ராட்சதக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு பாறைக்குப் பாறை அல்லது மரத்துக்கு மரம் தாவிச்சென்றனர்.

வம்ச பத: காட்டுவழியில் மூங்கில் கழிகளைப் பயன் படுத்திச் செல்லுதல்

சங்கு பத: மலை ஏறுதல். ஒரு தோலில் ஆன கயிற்றில் கொக்கியை மாட்டி மலை மேல் வீசுதல். அது மாட்டிக் கொண்டவுடன் அதைப் பிடித்து மலை ஏறுதல். அங்கு வைர ஊசியால் துளை செய்து ஒரு ஈட்டியை நட்டு மீண்டும் தோல் கயிற்றை மேலே எறிந்து மேலும் மேலும் சென்றனர்.

பாராசூட் (சாத்ர பத)

அஜ பத:- மலையில் கிராதர்கள் எனப்படும் வேட்டுவ இன மக்களிடம் ஆடுகலை விலைக்கு வாங்கி அதன் மீது மலைகளில் ஒற்றையடிப் பாதையில் பயணம் செய்தனர்.

பின்னர் பள்ளத்தாக்குகளைக் கடப்பதற்காக அந்த ஆடுகளைக் கொன்று ரத்தம் படிந்த தோலை மேலே போர்த்திக் கொண்டனர்.

சகுனபத (பறவைப் பாத): உடனே ராட்சதக் கழுகுகள், ஆட்டுத்தோல் போர்த்திய மனிதர்களை மாமிச பிண்டம் என்று கருதி கொத்திச் செல்லும். அது மாமிசம் அல்ல , மனிதன் என்று தெரிந்தவுடன் பள்ளத்தாக்கில் போட்டுவிடும். அவர்கள் அங்கேயுள்ள தங்கத்தை எடுத்துக் கொண்டு வேறு வழிகளில் திரும்புவர்.

இந்த பாத, பத என்ற சொற்கள் ரிக் வேதத்திலேயே உள்ளன. மேலும் கழுகு மூலம் சோமலதா என்படும் கொடியைக் கொண்டு வருதல் முதலியன ரிக் வேதத்திலும், மரகதக் கற்களை எடுப்பது சம்ஸ்கிருத நூல்களிலும் உள்ளன.

இதற்குப் பின்னர் ஊர்ந்து செல்லும் ஜானு பத, மலையில் குகை ஏற்படுத்தி, சுரங்கம் தோண்டி வெளியே வரும் தாரிபத, மூஷிகபத (எலி வழி) முதலியனவும் உள்ளன.

சாத்ர பத என்பது குடை போன்ற ஒரு கருவியில் மெல்லிய தோலைப் போர்த்தி அதைப் பிடித்துக் கொண்டு மலை உச்சியிலிருந்து இறங்குதல். இதை இன்று பாரச்சுட் என்று அழைக்கிறோம். இதை விமானத்தில் இருந்து அவசரமாக இறங்க அல்லது குதிக்க இன்று பயன்படுத்துகிறோம்.

Paracommander2

வணிக பத, வாரி பத

எப்படி பத (பாதை) என்பதை எல்லா இந்திய மொழிகளும் பயன்படுத்துகின்றனவோ, அதே போல ரிக் வேதச் சொல்லான வணிக (வியாபாரம்) என்பதையும் எல்லோரும் பயன்படுத்து கிறோம்.வேதத்தில் வாரி பத, வணிக பத என்ற வழிகள் பாடப்படுகின்றன. பல்வேறு வழிகளை தோண்டிக் கொடுத்ததற்காக, பாதைகளை வகுத்துக் கொடுத்ததற்காக இந்திரனைப் பாராட்டும் துதிகளும் உண்டு. பூஜ்யு (Bhujyu) என்பவரை நடுக்கடலில் இருந்து அஸ்வினி தேவர்கள் காப்பாற்றிய பாடல்களும் உண்டு.

முப்பது நதிகளைப் பற்றிய ஏராளமான துதிகளும் அவர்களுக்கு நீர்ப் போக்குவரத்தின் (Water Transport) மீதான ஆர்வத்தைக் காட்டும். உலகில் வேறு எந்த நாட்டுப் பழங்கால இலக்கியத்திலும் ஒரே புத்தகத்தில் இவ்வளவு பாடல்களைக் காண முடியாது.

நீர் என்ற சொல் ரிக் வேதத்தில் வருகிறது. இதைத் தமிழ்ச் சொல் என்று பலரும் எண்ணினர். ஆனால் இதுவும் வடமொழிச் சொல்லே. ஏனெனில் நீர்த் தேவதைகளான நீரெய்ட்ஸ் (Nereids) பற்றி கிரேக்க மொழியிலும் மிகப் பழங்காலத்தில் வழங்கி வருவதால் இது தமிழ்ச் சொல் இல்லை என்பது தெரிகிறது. நாராயண என்பவருக்கு நீரின் மேல் மிதப்பதால் அப்பெயர் வந்ததையும் புராணங்கள் எடுத்துக் காட்டும்.

para2

எல்லாவற்றிற்கும் மேலாக மனுவின் (Floods) பிரளயம்- கப்பல் கதை உலகில் எல்லா பழைய இலக்கியங்களிலும் பேசப்படுகின்றன. பைபிளில் இக்கதையில் வரும் நோவா (Nova) என்பதும் சம்ஸ்கிருதச் சொல்லாக இருப்பதால் இந்தக் கதை இந்தியாவில் சென்றது கண்கூடு. நோவா என்றால் கப்பல் (நாவ்). நவ என்றால் புதிய — இந்த இரண்டு அர்த்தங்களுமே அந்தக் கதையில் பொருந்தும். கப்பல் சம்பந்தமான நேவி ( Navy கடற்படை) முதலிய சொற்கள் இன்று ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் புழங்குகின்றன.