தேங்காய்க்குள் இளநீர் எப்படி வந்தது?

ilaneer (2)

Written by S NAGARAJAN

Article No.1762;  Dated 31 March 2015.

Uploaded at London time 11-04 (GMT 10-04)

 

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

27. தேங்காய்க்குள் இளநீர் எப்படி வந்தது?

.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

नारीकेलफलांबुन्यायः

narikelaphalambu nyayah

நாரிகேள பலாம்பு நியாயம்

இளநீர் பற்றிய நியாயம் இது.

தேங்காய்க்குள் இளநீர் எப்படி புகுந்தது என்பதை யாராலும் விளக்க முடியாது அல்லவா! இறைவனின் சித்தமும் அவனது வழிமுறைகளும் சாதாரணமாக யாருக்கும் புரியாது; அவற்றை விளக்கவும் முடியாது. இது தெய்வசித்தத்தையும் அதன் வழிகளையும் பற்றி விளக்க வந்த எளிமையான நியாயம்.

water_milk_021

नीरक्षीरविवेकन्यायः

niraksira viveka nyayah

நீர க்ஷீர விவேக நியாயம்

க்ஷீரம் – பால்

நீரில் கலந்த பால் பற்றிய நியாயம் இது.

அன்னத்திடம் நீரையும் பாலையும் கலந்து வைத்தால் அது நீரைப் பிரித்து பாலை மட்டுமே குடிக்கும்.  நல்ல புத்திசாலியான ஒருவர் இன்னொருவரை மதிப்பிடும் போது அவரது நற்குணங்களை மனதில் எடுத்துக் கொள்வர். சிறு சிறு குறைகளைப் பெரிது படுத்த மாட்டார்.

பெரியோரின் மதிப்பீட்டு முறைகளை அன்னத்தின் அரிய குணத்துடன் ஒப்பிடும் நியாயம் இது.

roadside barber

नृपनापितन्यायः

nrpanapitaputra nyayah

ந்ருபநாபித புத்ர நியாயம்

அரசரும் அவரது நாவிதரும் பற்றிய நியாயம் இது.

ஒருவனது சொந்த உறவின் மீது, அந்த உறவுக்காரர் எவ்வளவு அவலட்சணமாக மற்றவருக்குத் தோன்றினாலும் சரி, ஒருவனுக்குள்ள பற்றைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற பழமொழியை இந்த நியாயம் நினைவு படுத்தும்.

இது தோன்றியதற்கு கதை ஒன்று உண்டு.

ஒரு அரசன் தனது நாவிதரை அழைத்து தனது ராஜ்யத்தில் உள்ள அழகிய சிறுவனைக் கண்டுபிடித்து அழைத்து வருமாறு கூறினான். நாவிதனும் ராஜ்யத்தின் எல்லா பகுதிகளிலும் அலைந்து திரிந்தான். ஆனால் அரசன் கேட்டுக் கொண்டபடி அழகிய சிறுவன் யாருமே அவன் கண்களுக்குத் தென்படவில்லை. பெரிதும் ஏமாற்றத்துடன் அவன் வீடு திரும்பினான். என்ன ஆச்சரியம், அவனது மகனைப் பார்த்தான். அழகு சொட்டும் முகமாக அவனுக்குத் தோன்றியது! ஆனால் உண்மையில் அவன் அஷ்டகோணலான உருவை உடையவன்! மிகவும் அவலட்சணமானவன்!

தன் மகனை அழைத்துக் கொண்டு அரசனிடம் சென்ற அவன் தன் மகனைக் காட்டி இவனே இந்த ராஜ்யத்தில் மிகவும் அழகான சிறுவன் என்றான்.

சிறுவனைப் பார்த்த அரசன் பெரும் கோபம் அடைந்தான். தன்னை நாவிதன் ஏமாற்றி விட்டான் என்று முதலில் அவனுக்கு கோபம் வந்தாலும் சற்று ஆலோசித்துப் பார்த்த பின்னர் அது தணிந்தது. அவனை அரசன் மன்னித்து விட்டான். தனது சொந்த மகனை ராஜ்யத்தில் உள்ள மற்ற சிறுவர்களைக் காட்டிலும் சிறந்த அழகன் என்று அவன் கூறுவது மனித மனத்தின் இயல்பே என அரசன் தெளிந்தான்.

அதிலிருந்து மனித மனத்தின் போக்கைச் சுட்டிக் காட்டும் இந்த நியாயம் எழுந்தது!

shadow

पराह्नछायान्यायः

parahnacchaya nyayah

பராஹ்னசாயா  நியாயம்

மத்தியான நிழல் பற்றிய நியாயம் இது.

மத்தியான நேரத்தில் ஒரு மரத்தின் நிழல் சிறிது நேரமே நீடித்திருப்பதைப் போல

அதிகாரமும் செல்வாக்கும் வாழ்க்கையின் இறுதி நாட்கள்

வரும் போது சிறிது காலமே நீடித்திருக்கும். இதைச் சுட்டிக்காட்டும் நியாயம் இது.

granite  bricks

पाषाणेष्टिकान्यायः

pasanestika nyayah

பாஷானேஷ்டிகா நியாயம்

கருங்கல்லையும் செங்கலையும் பற்றிய நியாயம் இது.

பெரிதான கருங்கல்லையும் சிறிதான செங்கலையும் வைத்து வீடு கட்டி முடிப்பதைப் போல ஒரு விஷயத்தை பெரிய மனிதர்கள் மற்றும் சிறிய மனிதர்கள் ஆகிய அனைவரின் ஒன்றுபட்ட முயற்சியால் முடிப்பதை இந்த நியாயம் சுட்டிக் காட்டுகிறது. அனைவரது முயற்சியும் ஒரு காரியத்தை முடிக்கத் தேவை!

*****************