தமிழ்ப் புலவர் மாயமாய் மறைந்தது எப்படி?

yaha1

ஆராய்ச்சிக் கட்டுரை : லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:— 1219; தேதி 7 ஆகஸ்ட் 2014

சங்க இலக்கிய நூலான பதிற்றுப் பத்தில் ஒரு அதிசய நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அதிசயத்தை சிலப்பதிகாரத்தில் இளங்கோவும் இரண்டு இடங்களில் சொல்லிச் சொல்லி வியப்படைகிறார்.

யவனர்களைப் பிடித்து, கைகளைப் பின்புறம் கட்டி, (மொட்டை அடித்து) தலையில் நெய்யை ஊற்றி அவமானப் படுத்தியவன் இமயம் வரை சென்று விற்கொடி நாட்டிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவனுடைய தம்பி பல்யானை செல்கெழுகுட்டுவன். இவன் மீது கவிபாடியவர் பாலைக் கௌதமனார். அவன் 25 ஆண்டுகள் அரசாட்சி செய்தான்.

பல்யானை செல்கெழுகுட்டுவன் பற்றிப் பதிற்றுப் பத்து சொல்கிறது:

ati rudra
Sri Sathya Sai Baba performing Ati Rudra Maha Yajna

அரபிக்கடல் முதல் வங்காள விரிகுடா வரை வரிசையாக யானைகளை நிறுத்தி வைத்து இரு கடல் நீரையும் ஒரு பகலில் நீராடியவன். அகப்பா என்னும் கோட்டையைப் பிடித்து ஒரே பகலில் தீயிட்டுக் கொளுத்தியவன். அயிரை மலையில் உள்ள துர்க்கையை அனுதினமும் வழிபட்டவன். அவனுடைய புரோகிதர் நெடும்பாரதாயனார் என்பவர் வானப் ப்ரஸ்தம் செய்யக் காட்டுக்குச் சென்றார். உடனே இவனும் அரச பதவியை விட்டு காட்டுக்குத் தவம் செய்யப் போய்விட்டான்.

இதை எல்லாம் விடப் பெரிய அதிசயம்!!! பாலைக் கவுதமனார் என்ற பிராமணப் புலவன், அவர் மீது கவி பாடினான் —(காண்க பதிற்றுப்பத்து—மூன்றாம் பத்து). —–புலவரே! உமக்கு என்ன வேண்டும், கேளும், கொடுக்கிறேன் ——– (நீர் வேண்டியது கொண்மின்) ——– என்றான் மன்னர் மன்னன்.

பிராமணப் புலவன் பாலைக் கௌதமன் சொன்னான்: “யானும்என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்”

மன்னன் அசந்தே போனான். உடனே பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்கப் பத்தாம் பெருவெள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினர் ——- என்று பதிற்றுப் பத்து பதிகம் பகரும்.
elijahchariot
Elijah going by Fire Chariot

அதாவது பெரிய பிராமண அறிஞர்களைக் கலந்தாலோசித்து பத்து யாக யக்ஞங்களுக்கு மன்னன் ஏற்பாடு செய்தான். ஒன்பது வேள்வி முடிந்தது. பத்தாவது வேள்வியில் பார்ப்பனப் புலவன் கௌத்தமன், அவனுடைய மனைவியுடன் மாயமாய் மறைந்து விட்டான். 2000 ஆண்டுக்கு முன் எழுந்த சங்க இலக்கியம் தரும் தகவல் இது.

( ஒரே பகலில் நான்கு கடல்களின் நீரைக் கொண்டு குளிப்பது தமிழ் மன்னர்களுக்குப் பிடித்த விளையாட்டு —- இது சாத்தியமா?——– இது பற்றி முன்னரே நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி இருக்கிறேன். மாயா இன மக்கள் எப்படி ஓடி, ஓடி செய்தி பரப்பினர், மாரத்தன் வீரன் எப்படி 26 மைல் ஓடிவந்து செய்தி சொன்னான், வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி திருச்செந்துரில் தீவாரதனை ஆனவுடன் சாப்பிட்டான் என்பனவற்றை ஏற்கனவே விளக்கி இருக்கிறேன். வானப் பிரஸ்தம் என்பது இந்துக்களின் மூன்றாவது கட்ட வாழ்க்கை என்பதையும் வேறு ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன். கண்டு மகிழ்க!)

பாலை கௌதமனார் பாடிய மூன்றாம் பத்து:

இமையவரம்பன் தம்பி அமைவர
உம்பற்காட்டை தன்கோல் நிறீ இ
அகப்பா எறிந்து பகல் தீ வேட்டு
மதியுறழ் மரபின் முதியரைத் தழீ இக்
கண்ணகன் வைப்பின் மண்வகுத்து ஈத்துக்
கருங்களிற்று யானைப் புணர் நிரை நீட்டி
இருகடல் நீரும் ஒரு பகல் ஆடி
அயிரை பரை இ ஆற்றல் சால் முன்போடு
ஒடுங்கா நல்லிசை உயர்ந்த கேள்வி
நெடும் பாரதாயனார் முந்துறக் காடு போந்த
–பதிற்றுப் பத்து பதிகம்

சிலப்பதிகாரச் செய்தி

பிற்காலத்தில் யாரும் இதை பொய் என்றோ இடைச் செருகல் என்றோ சொல்லிவிடக் கூடாது என்பதற்காக இளங்கோவும் இதை கட்டுரைக் காதையிலும் நடுகற் காதையிலும் பாடிவைத்தார்:

நான்மறையாளன் செய்யுட்கொண்டு
மேல்நிலை உலகம் விடுத்தோன் ஆயினும்
(—வரிகள் 137-137, நடுகற் காதை)

வண்டமிழ் மறையோர்க்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலன் காண்கு
(—வரிகள் 63-64, கட்டுரைக் காதை)

elijah
Elijah fed by Ravens!

கோவலனும் கண்ணகியும் விசேஷ விண்கலத்தில் சுவர்க்கம் சென்றதையும் சிலப்பதிகாரம் கூறும். ராமன், விமானி இல்லாத விசேஷ விமானத்தில் இலங்கையில் இருந்து உத்தரப் பிரதேசம் வந்தது எப்படி என்பதற்கான விஞ்ஞானப் பத்திரிக்கைச் செய்தி ஆதாரத்தை முன்னரே எழுதி இருக்கிறேன். அதே போல விமானி இல்லாத விமானம், பெரியோர்களை அழைத்துச் செல்ல, சுவர்க்கத்தில் இருந்து வரும் செய்தியை புற நானூற்றுப் புலவன் முதுகண்ணன் சாத்தனார் பாடிய பாட்டில் இருந்து நாம் அறிகிறோம் (புற. 27).

இதே போல பைபிளிலும் ஒரு கதை உண்டு.

பைபிளில் விமானம்
பைபிளில் வரும் ஒரு கதை: எலிஜா என்பார் ஒரு தீர்க்கதரிசி. அவர் விக்கிரக ஆராதனையை எதிர்த்தும் ஜெஹோவாவை ஆதரித்தும் பிரசாரம் செய்தவர். அவருக்கு வறட்சிக் காலத்தில், அண்டங் காக்கைகள் உணவு கொண்டு வந்தன. திரவுபதி வைத்திருந்த அட்சய பாத்திரம் போல, ஒரு விதவைப் பெண்ணிடம் இருந்த பாத்திரத்தில் இருந்து ரொட்டிக்கான பொருட்களை வரவழைத்தார். அவளுடைய இறந்துபட்ட குழந்தையை அப்பர், பெருமான, திருஞான சம்பந்தர் ஆகியோர் குழந்தைகளை உயிர்ப்பித்துத் தந்தது போல உயிர்ப்பிக்கிறார். அவருக்கு சொர்கத்துக்குப் போவதற்கு தீ கக்கும் ஒரு ரதம் வருகிறது. அதை இழுக்கும் குதிரைகளும் ஜோதி ரூபத்தில் இருந்தன. அவர் ஒரு சூறாவளியால் தூக்கப்பட்டு அந்த ரதத்தில் சென்று மறைந்தார்.

elijah ascent to heaven
Place where Elijah ascended in Jordan

ஆக, யாகத் தீயில் மாயமாய் மறைந்த பார்ப்பனன், பார்ப்பனி, ஜோதி ரதத்தில் மறைந்த எலிஜா ஆகியோர் கதைகள் சுவையான பல விஷயங்களைத் தருகின்றன. இன்றுவரை அவைகளை உண்மையே என்று நம்புவோர் இருப்பதையும் காண்கிறோம்.

வாழ்க வண்டமிழ் மறையோர் = தமிழ் பிராமணர்கள்!!

–சுபம்–