
GREECE – CIRCA 1998: A postage stamp printed in the Greece shows bust of ancient Greek Tragedian Sophocles, circa 1998
Article No.1985
Compiled by London swaminathan
Date 10th July 2015
Time uploaded in London: காலை 8-21
((தமிழன்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்: மற்றவர் கட்டுரைகளை எடுக்கையில் அவர்தம் பெயரையும், அவருடைய பிளாக்–கின் பெயரையும் அப்படியே வெளியிடுங்கள். என் கட்டுரைகளில், படங்கள் என்னுடையதல்ல. அதைப் பயன்படுத்துவோர் சட்டபூர்வ வழக்குகளைச் சந்திக்க நேரிடும்.))
சாக்ரடீஸ் என்பவர் புகழ்பெற்ற கிரேக்க ஞானி; தத்துவ வித்தகர். அவருக்கு வாய்த்த மனைவியோ சரியான அடங்காபிடாரி; ராக்ஷஸி. அவ்வையார் புகழ்பெற்ற தமிழ் கவிஞர், அறிஞர், இறையன்பர். சங்க காலம் முதல் தற்காலம் வரை ஆறு அவ்வையார்கள் இருந்தனர்; சிலர் மூவர் என்பர். மொழியியல் அடிப்படையில் கட்டாயம் முவர் அல்லது அதற்கு மேலும் இருந்திருக்கலாம் என்பது எனது கணிப்பு. ஆனால் எந்த அவ்வையார் படியதாக இருந்தாலும் சரி அவை அத்தனையும் ஆனி முத்து; தமிழர்களின் சொத்து. ஆத்திச் சூடி பாடிய கடைசி அவ்வையாரா, அதியமானைக் கண்ட சங்க கால அவ்வையாரா என்று ஆராய வேண்டிய அவசியமில்லை.
அதிசயம் என்னவென்றால் அவ்வையாரும் சாக்ரடீசும் ஒரே கருத்தைச் சொல்லியுள்ளனர்.
ஒருமுறை சாக்ரடீஸ் தத்துவச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவரது மனைவியோ ஞான சூன்யம். மேல் மாடியில் இருந்து எட்டிப் பார்த்து, பேச்சை நிறுத்தச் சொல்லி இடி முழக்கம் செய்தார். சாக்ரடீஸோ நிறுத்தவில்லை. ஒரு வாளி தண்ணீரை மேலேயிருந்து கொட்டினார். யார் தலையில்? சாக்ரடீஸ் தலையில்! அவர் அசரவில்லை; அவர் சொன்னார்:
“அன்பர்களே! இவ்வளவு நேரம் இடிமுழங்கியது; இப்பொழுது மழை பெய்கிறது!”
சாக்ரடீஸின் மனைவியை பற்றி நன்கு அறிந்தவர் ஒருவர் சாக்ரடீஸிடம் சென்று திருமணம் செய்துகொள்வது பற்றி தங்கள் கருத்து என்னவோ? என்று கேட்டார்.
அவர் சொன்னார்:
எந்த முடிவு எடுத்தாலும் இறுதியில் வருத்தப்படுவாய்!
இன்னொரு முறை அவர் சொன்னார்:
“நல்ல மனைவி கிடைத்தால் நன்கு மகிழ்ச்சியாக வாழலாம்; கெட்ட மனைவி கிடைத்தாலோ தத்துவ வித்தகர் ஆகலாம்.”
Avvaiyar with Athiyaman; picture from wikipedia
அவ்வையாரும் இதையே சொல்கிறார்:
பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி வாழலாம்; — சற்றேனும் ஏறுமாறாக
இருப்பாளே யாமாகில்
கூறாமல் சந்யாசம் கொள்
பொருள்: கணவனுக்கேற்ற பதிவிரதையாக இருந்தால், எவ்வளவு கஷ்டம் வந்தலும் அவளை விட்டு விடாதே. அவள் பிடாரியாக இருந்தாலோ, அவளிடம் போகிறேன் என்று சொல்லக்கூட வேண்டாம். பேசாமல் போய் சந்யாசம் வாங்கிக் கொள்.
பழைய முறத்தால் அடி!
சாக்ரடீஸ் மனைவி போலவே ஒரு கொடுமைக்காரியை மனைவியாகப் பெற்ற ஒரு சாதுவின் வீட்டுக்கு அவ்வையார் போனார். பாவம், அவர்தான் அவ்வையாரை சாப்பிட அழைத்தார். அவ்வையை வாசல் திண்ணையில் அமரவைத்துவிட்டு உள்ளே சென்று மனைவியின் முகத்தை நன்கு துடைத்து, பொட்டு வைத்து அலங்கரித்து, தலையில் உள்ள ஈரும் பேனும் எடுத்துவிட்டு, தலைவாரிவிட்டு, மெதுவாக அவ்வையாருக்கு அமுது இடும்படி கொஞ்சும் மொழியில் கெஞ்சினார். அவளோ எடுத்தால் அருகிலிருந்த பழைய முறத்தை! புடைத்தாள் நைய அவனை. பேயாட்டம் ஆடினாள்; வசை மொழிகளை வாரி இரைத்தாள். அவன் வெளியே ஓடிவந்தான்; அப்பொழுதும் அந்த நீலாம்பரி முறத்தைக் கையில் ஓங்கியவாறு ஓடி வந்தாள்: அவ்வையாருக்கு ஒரு புறம் சிரிப்பு; மறுபுறம் அனுதாபம். அவனுக்கோ ஒரே பதைபதைப்பு.
அவ்வையார் பாடினார்:
இருந்து முகம் திருத்தி, ஈரோடு பேன் வாங்கி
விருந்து வந்தது என்று விளம்ப – வருந்திமிக
ஆடினாள், பாடினாள்; ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத்தான்.
அவ்வையாருக்கு பிரம்மா மீதே கோபம் வந்து விட்டது. இப்படி நல்ல சாதுவுக்கு இவ்வளவு மோசமான மனைவியா என்று. இது பெண்ணா? பேயா? வறண்ட மரம் போன்ற பெண்ணை இந்த மகனை முடிச்சுப்போடச் செய்தானே என்று நினைத்து பிரம்மா மட்டும் என் முன்னே வரட்டும் நான்கு தலைகளையும் திருகிவிடுகிறேன் என்றார்.
உடனே பாடினார்:
அற்றதலை போக அறாத தலை நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ? – வற்றும்
மரம் அனையாட்கு இந்த மகனை வகுத்த
பிரமனையான் காணப்பெறின்.
அற்றதலை= ஏற்கனவே பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை சிவன் கிள்ளி எறிந்த கதை புராணத்தில் உள்ளது.
-சுபம்-
swami_48@yahoo.com
You must be logged in to post a comment.