ஷ்ரோடிங்கரின் பூனை விளக்கும் பிரம்ம ரகசியம்!

 

யாராலும் விளக்க முடியாத பிரம்ம ரகசியத்தை வியன்னா விஞ்ஞானி ஷ்ரோடிங்கரின் மாயப் பூனை விளக்குவது ஒரு விஞ்ஞான – மெய்ஞான விந்தை அல்லவா! பிரம்ம ரகசியத்தை விளங்கிக் கொள்ள கட்டுரையைப் படியுங்கள்!

விஞ்ஞானம் விளக்கும் மெய்ஞானம்!

 

ஷ்ரோடிங்கரின் பூனை விளக்கும் பிரம்ம ரகசியம்!

——————————————————————— 

ச.நாகராஜன்

காலம் காலமாக ஹிந்து மதத்தின் வேத உபநிடதங்கள் கூறும் பிரம்மம் பற்றிய உண்மையை அறிந்து கொள்ள மாபெரும் அறிஞர்களே சிரமப்படுகின்றனர்.

 

ஆதி சங்கரர் பிரம்மம் மட்டுமே சத்யம் மற்றது மாயை (ஜகம் மித்யா) என்று கூறுகின்ற போது அதை உணர்ந்து கொள்ள சிரமப்படுகிறோம். நாம் காண்கின்ற அனைத்துமே பொய்யா என்ற கேள்வி, மகாகவி பாரதியார் உள்ளிட்ட நம் அனைவருக்குமே எழுவது இயல்பு.(நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?-பாரதியார் -பொய்யோ மெய்யோ கவிதையில்)

 

அது மட்டுமின்றி அணோரணீயான் மஹதோ மஹீயான் – அது பெரிதுக்கும் பெரிது; அணுவுக்கும் அணு; மிக மிக தூரத்தில் உள்ளது; மிக மிக அருகிலேயே உள்ளது என்று விளக்கப்படும் போது இரண்டு நேர் எதிர் துருவங்கள் எப்படி ஒன்றாக இணைக்கப்பட்டு விளக்கப்பட முடிகிறது என்று அதிசயிக்கிறோம்;புரியாமல் தவிக்கிறோம்.

அர்ஜுனனக்கு கிருஷ்ணன் பகவத்கீதையில்,” சாஸ்வதமாயுள்ள சத்யத்தில் நிலைத்திரு;புவியில் காணும் எதிர்நிலைகளுக்கு அப்பால்!” என்று கூறும் போதும் இதைச் சரியாகப்புரிந்து கொள்ள முடியாமல் வியப்பும் வேதனையும் தான் மிஞ்சுகிறது.

 

இந்த வியப்பும் வேதனையும் விஞ்ஞானிகளுக்கும் ஹிந்து தத்துவத்தைப் பொருத்த மட்டில் உண்டு. அளக்க முடியாத அதன் ஆழத்தை அளந்தவர்கள் வெகு சிலரே!

 

வியன்னாவைச் சேர்ந்த எட்வின் ஷ்ரோடிங்கர் (Austrian Physicist Schrodinger) நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி (பிறப்பு 12-8-1987 மரணம் 4-1-1961). ஹிந்து தத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்டு அதன் கருத்துகளோடு ஒன்றியவர்!  ஐன்ஸ்டீனுடன் தன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டே இருந்த ஷ்ரோடிங்கர் 1935ம் ஆண்டு சிந்தனை சோதனை (Thought experiment) ஒன்றை அறிவித்தார். அவரது சிந்தனையில் இடம் பெற்றது ஒரு பூனை!

 

அந்தப் பூனை பிரம்ம ரகசியத்தை விஞ்ஞானபூர்வமாக விளக்கி உலகை பிரமிக்க வைத்தது!

 

அவரது சிந்தனை சோதனை இது தான்:-

இரு பகுதிகள் உள்ள ஒரு இரும்புக் கூண்டிற்குள் ஒரு பகுதியில் ஒரு உயிருள்ள பூனை இருக்கிறது.அதன் அடுத்த பகுதியை இரும்புக் கூண்டில் இருக்கும் பூனையால் ஒன்றும் செய்ய முடியாது.அந்த அடுத்த பகுதியில் ஒரு ரேடியோஆக்டிவ் பொருள் உள்ளது.இந்த ரேடியோ ஆக்டிவ் பொருள் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் செயல்படலாம் அல்லது செயல்படாமலும் போகலாம் ஐம்பதுக்கு ஐம்பது என்ற விகிதத்தில் அதில் உள்ள ஒரு அணு அழிந்து போகலாம் அல்லது அழியாமலும் இருக்கலாம். அந்த கூண்டில் இருக்கும் ஒரு குழாய் அணு அழிவு ஏற்பட்டால் செயல்பட்டு ஒரு சுத்தியலை செயல்பட வைக்கும். இந்த சுத்தியல் ஒரு சிறிய குடுவையில் உள்ள ஹைட்ரோசியானிக் அமிலத்தைக் கசிய வைக்கும். அவ்வளவு தான், பூனை அணுமயமாக ஆகி விடும்.

 

ஒரு மணி நேரத்திற்கு இந்த அமைப்பு அப்படியே இருப்பதாக வைத்துக் கொள்வோம். அணு அழிவு இல்லை என்றால் பூனை உயிருடன் அப்படியே இருக்கும். அணு அழிவு ஏற்பட்டால் பூனை இறந்து சிதறுண்டு அணுமயமாக ஆகியிருக்கும்.

 

இப்போது நம் முன் உள்ள கேள்வி பூனை உயிருடன் இருக்கிறதா அல்லது இறந்து பட்டதா!

 

ஷ்ரோடிங்கர் முரண்பாடு என்ற இந்த ‘சிந்தனை சோதனை சித்தாந்தம்’ ஒரு பெரிய உண்மையை விளக்குகிறது.

ஐம்பதுக்கு ஐம்பது என்ற விகிதத்தில் வாய்ப்பு இருப்பதால் பூனை இறந்தது என்று சொல்லவும் சொல்லலாம்; அது இறக்கவில்லை என்றும் சொல்லலாம்.

 

எல்லாம் பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது.

பிரம்மமும் அப்படித்தான். நோக்குபவர் எண்ணத்தில் தான் அது இருக்கிறது.

 

மாயையைக் கடந்த நிலையில் பிரம்மம் சத்யம்; ஜகம் மித்! மாயை இருக்கும் சூழ்நிலையில் கண் எதிரே ஜகம் உள்ளிட்ட அனைத்தும் நிஜம்!

 

க்வாண்டம் பிஸிக்ஸ்(quantum physics) என்றைய இன்றைய நவீன இயற்பியல் சப்-அடாமிக் (Sub atomic) மட்டத்தில் மேட்டர் (matter) எனப்படும் பொருளை இரு நிலைகளைலும் கூறலாம் என்று அதிசயக்கவைக்கும் வண்ணம் அறிவிக்கிறது. அதாவது பொருளானது அழிக்கப்படக் கூடியது ; அழிக்கப்பட முடியாதது! அது தொடர்ந்து இருப்பது, தொடராமல் விட்டு விட்டு இருப்பது! அது துகளாக இருக்கக் கூடியது, அலையாக இருக்கக் கூடியது!

 

(Matter is both destructible and indestructible, both continuous and also discontinuous, matter is both particle and also wave)

 

ஒரு இடத்தில் அணுத்துகள் இருக்குமா இருக்காதா என்பதை விளக்கப் புகுந்த ராபர்ட் ஓப்பன்ஹீமர் (இவர் அணுகுண்டு விஞ்ஞானி என்பதை அனைவரும் அறிவர்), “அணுத்துகள் ஒரே இடத்தில் இருக்குமா என்று கேட்டால் இல்லை என்றே நாம் சொல்ல வேண்டும்; எலக்ட்ரானின் நிலையானது, நேரம் மாறுபடும் போது மாறுமா என்று  கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும்; எலக்ட்ரான் ஒரே இடத்தில் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும்; எலக்ட்ரான் சலனத்துடன் இயங்குகிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்” என்கிறார்

 

(‘If we ask whether the position of the particle remains the same, we must say no, if we ask whether the electron’s position change with time, we must say no, if we ask whether the electron is at rest, we must say no, if we ask whether it is in motion, we must say no.’ – Robert Oppenheimer)

 

இதே வார்த்தைகளை ஈஸாவாஸ்ய உபநிடதம் (ஐந்தாம் செய்யுள்) கூறுகிறது!!

 

“தத் தூரே; தத் அந்திகே; தத் அந்தரஸ்ய சர்வஸ்ய; தத் சர்வஸ்ய பாஹ்யதே”

 

பிரம்மத்தின் நிலையை இந்த விளக்கங்ளால் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா, இப்போது!

 

அது எங்கும் பரவி உள்ளது. அண்டத்தில் உள்ளது; பிண்டத்திலும் உள்ளது. அனைத்திலும் உள்ளது. உலகம் பிரம்மத்தின் பிரதிபலிப்பு!

“பார்ப்பவர் அதை உணர்வர்”! பார்ப்பவர் பார்வையைப் பொறுத்து அது இருப்பதும் இல்லாததும்- சத்யமும் மாயையும் – அமைகிறது.

இதையே ஆதி சங்கரர் மிக அழகாக விளக்கி அருளியுள்ளார். நான் மற்றும் நான் இல்லை என்ற இரு நிலைகளும் ஒன்றுக்கொன்று எதிரான நிலைகள். பார்ப்பவர் மற்றும் பார்க்கப்படும் பொருள் (subject and object) ஆகிய இரு நிலைகளும் வெளிச்சமும் இருளும் போன்றவை. வெளிச்சத்தை எடுத்துக் கொண்டு போய் யாராலாவது இருளை விளக்க முடியுமா? ஒரு விளக்கை எரிய விடும் போதே இருள் அகல்கிறது அல்லவா? பிரம்மத்தையும் இப்படித் தான் மனித நிலையில் இருந்து கொண்டு விளக்க முடியாது. அதை முற்றிலும் விளங்கிக் கொள்ளும் நிலையின் போது நாம் பிரம்மமாக ஆகி விடுகிறோம். ஆகவே தான் கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!

 

ஐன்ஸ்டீனுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ஷ்ரோடிங்கர் கிறிஸ்தவம் காட்டும் தந்தை மற்றும் ஏசு கிறிஸ்து அவரது புதல்வர் என்ற கருத்தைத் தன்னால் ஏற்க முடியவில்லை என்று எழுதினார். ஆனால் வேதாந்தம் விளக்கும் ஒரே பிரம்மம் தான் சத்யம் என்பதையும் அது எல்லோருக்குள்ளும் பிரகாசிக்கும் ஐக்கியத்தன்மையையும் தன்னால் ஏற்க முடிகிறது என்றார்.

 

ஒரே ஆன்மா எல்லோருக்குள்ளும் பிரகாசிக்கும் தன்மையை விளக்கும் வேதாந்தத்தை ஷ்ரோடிங்கராலும் நவீன க்வாண்டம் இயற்பியலாலும் நம்மால் நன்கு விளங்கிக் கொள்ள முடிகிறது!

மாயையை விளக்கும் ஷ்ரோடிங்கரின் பூனை உண்மையில் ஒரு மாயப் பூனை தான்!

This article was written by my brother S Nagarajan.

******************