உடும்பின் படம் (varanus exanthematicus, garden lizard)
நான் சொல்லுவது பழந்தமிழகப் பிராமணர்களைப் பற்றியது. இப்பொழுதுள்ள பிராமணர்களைப் பற்றி அல்ல!!
புலன் அழுக்கற்ற அந்தணாளன் என்று கற்றோராலும் மற்றோராலும் புகழப்படும் கபிலர் பாடிய சில பாடல்களில் (புறம் 113, புறம் 14) மாமிச உணவு பற்றிய செய்திகள் வருகின்றன. இதனால் பழைய தமிழ் நாட்டில் பார்ப்பனர்கள் மாமிசம் (இறைச்சி) உண்டனரா என்ற கேள்விகள் எழுந்தன. உலகப் புகழ் காளிதாசனும் விதூஷகன் வாயிலாக வரும் வசனத்தில் மாமிசம் பற்றிப் பேசுவான். இதற்கெல்லாம் நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் ஆன்றோர்களும் சான்றோர்களும் பதில் கூறிவிட்டனர்.
அதாவது ஒருவன் இறைச்சி உணவு பற்றிப் பாடியதால் அவர்கள் உண்டதாகாது என்றும் பல தமிழ்ப் புலவர்கள் தங்களையே பாணர்கள் போல உருவகித்துப் பாடியபோதிலும் அவர்கள் பாணர் சாதியினர் அல்ல, அந்தணரே என்றும் விடை கூறி, எடுத்துக் காட்டுகள் தந்து சமாதானப் படுத்திவிட்டனர்.
பத்துப் பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப் படையில் பார்ப்பார் வீட்டை கோழியும் நாயும் கூட நெருங்காது என்று அவர்கள் தூய்மை பெரிதும் போற்றப்படுகிறது. அதே நூல் வரிகள் 302-310 ஐயர் வீட்டில் என்ன என்ன கிடைக்கும் என்ற “மெனு” வையும் கொடுக்கிறது:
இராசன்னம் (அரிசிச் சோறு)
வெண்ணெயில் வெந்த கொம்மட்டி மாதுளைத் துண்டு
(மிளகு பொடியும் கருவேப்பிலையும் கலந்தது)
மாவடு
இதைப் பாடிய உருதிரங்கண்ணானார் ஒரு அந்தணரே.
இது இப்படி இருக்க, நீண்ட நாட்களாக எல்லா உரைகளிலும் வரும் பழமொழிப் பாட்டின் ஒரு வரி புதிராகவே இருக்கிறது:
கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுறையைத்—தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலை நாட ! நாய் கொண்டால்
பார்ப்பாரும் திண்பர் உடும்பு (பழமொழி நானூறு)
பொருள்: அருவி உடைய மலைநாடனே! பார்ப்பனரும் நாய் கவ்வியதாயினும் உடும்பின் தசையை அதன் உயர்வை எண்ணித் தின்பர். அதுபோல கள்ளியிடம் தோன்றும் அகிலையும் கரிய காக்கையின் சொல்லையும் அவை தோன்றிய இடத்தை எண்ணி இகழாது உயர்வாய்க் கருத வேண்டும்.
உடும்பு என்னும் பல்லி இனப் பிராணியை எந்த எந்த இனத்தினர் சாப்பிடுவர்? உடும்புக் கறிக்கு ஏதேனும் மருத்துவ சக்தி இருப்பதால் இப்படிச் சொன்னார்களா? அல்லது இதை அப்படியே பொருள் கொள்ளாது வேறு வகையில் பொருள் கொள்ள வேண்டுமா?
இது நீண்ட காலமாக விடை காணப்படாத ஒரு கேள்வி. விடை தெரிந்தால் எழுதுங்கள்.contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.