பிருகதீஸ்வர மாஹாத்மியம் நூல் தரும் 16 சோழ மன்னர் விவரம் (Post.9855)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9855

Date uploaded in London – 16 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிருகதீஸ்வர மாஹாத்மியம் நூல் தரும் 16 சோழ மன்னர்கள் பற்றிய விவரமும் ஐம்பதினாயிரத்து நூறு க்ஷேத்ர விவரங்களும்!

ச.நாகராஜன்

பிருகதீஸ்வர மாஹாத்மியம் ஒரு அரிய நூல். தஞ்சாவூர் மஹாராஜா சரபோஜியின் சரஸ்வதி மஹால்- இன் அரிய வெளியீடாக இது 1985ஆம் ஆண்டு வெளியானது. (நூல் வேண்டுவோர் சரஸ்வதி மஹால், தஞ்சாவூரைத் தொடர்பு கொள்ளலாம்). அரிய இந்த நூலைத் தயாரிக்க ஒரே ஒரு சுவடிக் கட்டு மட்டுமே இருந்தது. அதை வைத்து இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.

பிருகதீஸ்வரரின் மாஹாத்மியம் பற்றி அரிய பல தகவல்களை இந்த நூல் தருகிறது. மொத்த அத்தியாயங்கள் 30.

நூலின் இறுதியில், இருபத்தொன்பதாவது அத்தியாயத்தில் சூத முனிவர் 16 சோழ மன்னர்களைப் பற்றிய தகவல்களைக் கூறுகிறார். கடைசி, 30ஆம்- அத்தியாயத்தில் ஐம்பதினாயிரம் க்ஷேத்திரங்களைப் பற்றிய ஒரு அரிய குறிப்பு கிடைக்கிறது.

16 சோழ மன்னர்களைப் பற்றியும் ஐம்பதினாயிரம் க்ஷேத்ரம் பற்றிய குறிப்பையும் மட்டும் இந்தக் கட்டுரை வாயிலாக அனைவருடனும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

16 சோழ மன்னர்களைப் பற்றிய விவரங்கள் :

சூத முனிவர் கூறுகிறார்:

 1. குலோத்துங்கனுக்கு இறைவன் சோழ  மன்னன் என்ற பட்டம் கட்டி அவனுக்கு செல்வம் நல்கினான். இவன் மைந்தன் தேவ சோழன்.
 2. தேவ சோழன் பல சிவாலயங்களைக் கட்டினான். இதனால் சிவப்பேற்றையடைந்தான். இவன் மைந்தன் சசிசேகர சோழன்.
 3. சசிசேகர சோழன் : இவன் காவிரியின் இரு மருங்கிலும் கரையை திடமாக எழுப்பினான். மேலும் காவிரியின் குறுக்கே அணை எழுப்பினான். இவன் மகன் சிவலிங்க சோழன்.
 4. சிவலிங்க சோழன் : பல சிவாலயங்களை எழுப்பினான். நீதி வழுவாது பசுங்கன்றினுக்கு தனது மகனைத் தேர்க்காலிட்டு நீதி காத்தவன். இவன் மைந்தன் வீர சோழன்.
 5. வீர சோழன் : காவிரிக்கரையில் பல ஆலயங்களைக் கட்டியவன். இவன் மகன் கரிகால சோழன்.
 6. கரிகால சோழன் : பெருங்கோயிலைக் கட்டியவன். இவன் மகன் பீம சோழன்.
 7. பீம சோழன் : இவன் தஞ்சையில் சங்கரநாராயணர் கோவிலையும் மற்றும் பல ஆலயங்களையும் எழுப்பியவன். இவன் மகன் ராஜேந்திரன்.
 8. ராஜேந்திர சோழன் : இவன் புயவலிமையால் பாண்டியர், சேரர்களை வென்றவன். இவன் மகன் வீரமார்த்தாண்டன்.
 9. வீரமார்த்தாண்ட சோழன் : இவன் பல சிவாலயங்களையும், வைஷ்ணவ ஆலயங்களையும் கட்டுவித்தான். கொங்கணேசர் ஆலயத்தைக் கட்டினான். இவனுக்குப் புகழ்ச்சோழன் பிறந்தான்.
 10. புகழ்ச்சோழன் : இவன் முருக பக்தன். (மேல வீதியில் உள்ள) முருகன் ஆலயத்தைக் கட்டினான். மற்றும் எட்டு சக்திகளின் ஆலயங்களையும் கட்டினான். இவன் மகன் ஜய சோழன்.
 11. ஜய சோழன் : இவன் தனது முன்னோரைப் போல பல ஆலயங்களைக் கட்டினான். இவன் மகன் கனக சோழன்.
 12. கனக சோழன் : இவனது ஆட்சிக் காலத்தில் திருவலஞ்சுழியில் காவிரி நீர் பாதாளத்தில் ஓடி மறைந்தது. இதனால் மக்கள் வருந்தினர். அதற்குரிய பரிகாரங்களைச் செய்தான். திருவலஞ்சுழி விநாயகர் ஆலயம் கட்டுவித்தான். இவன் மகன் சுந்தர சோழன்.
 13. சுந்தர சோழன் : மறையோனைக் கொன்றதால் ஏற்பட்ட “பிர்மஹத்தி” தோஷத்தை திருவிடைமருதூர் என்னும் பதியில் போக்கிக் கொண்டான். இடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ஆலயம், திருபுவனம் பயஹரேசர் ஆலயம் முதலிய பல ஆலயங்களை எடுத்தான். இவன் மகன் கால காலன்.
 14. கால கால சோழன் : திருப்பனந்தாளில் குனிந்திருந்த லிங்கத்தை நிமிர்த்தியவன். பல ஆலயங்களுக்குத் திருப்பணி செய்தவன். இவன் மகன் கல்யாண சோழன்.
 15. கல்யாண சோழன் : சிதம்பரத்திலுள்ள கோபுரத்தையும், ஆயிரங்கால் மண்டபத்தையும் கட்டியவன். இவன் மகன் பத்ர சோழன்.
 16. பத்ர சோழன் : இவன் தனது முன்னோர்களைப் போலவே பல ஆலயங்களைக் கட்டினான்.

இப்படியாக பதினாறு சோழ மன்னர்கள் சிவாலயத் திருப்பணியைச் செய்தார்கள். இதனால் இவர்கள் அனைவரும் சிவ கணங்களாக என்றும் திகழ்கின்றனர். அந்த சிவ கணங்களின் சரித்திரமே மேலே கூறியவை. இவர்களின் சரித்திரத்தைக் கேட்டவர்கள் இகத்தில் பல சுகங்களையும் பரத்தில் சிவப்பேற்றையும் அடைவார்கள்.

அடுத்து முப்பதாவது அத்தியாயம் க்ஷேத்திரங்களைப் பற்றி விவரிக்கிறது.

அந்த அத்தியாயம் இதோ:-

சூத முனிவர், ஏனைய முனிவர்களுக்கு காவிரி தென்கரை ஸ்தலங்களையும், சிவ க்ஷேத்திரங்களைப் பற்றியும், புகழ் வாய்ந்த தீர்த்தங்களைப் பற்றியும், முனிவர்களால் பிரதிஷ்டை செய்த ஸ்தலங்களைப் பற்றியும், சுயம்பு ஸ்தலங்களைப் பற்றியும் விரிவாகக் கூறுகிறார்.

ஒரு சமயம் பார்வதி தேவி சிவபெருமானிடம் மேற்படி ஸ்தலம், தீர்த்தம், யாவை என்று கேட்க, சிவபெருமான் காவிரிக்கும் சேதுக்கரைக்கும் இடையில் உள்ள ஸ்தலங்களைப் பற்றிக் கூறினார் :

சிவ க்ஷேத்ரம்       –  23,000

விஷ்ணு க்ஷேத்ரம்   –   1,000

முருகன் க்ஷேத்ரம்   –   6,000

விநாயகர் க்ஷேத்ரம்  –   5,000

காளி க்ஷேத்ரம்      –    1,000

நடராஜர் க்ஷேத்ரம்   –     100

துர்கை க்ஷேத்ரம்    –    3,000

சாஸ்தா க்ஷேத்ரம்   –   11,000

ஆயின் இவை அனைத்திலும் நான் வாஸம் செய்கிறேன் என்றும், முக்தி க்ஷேத்திரங்களைப் பற்றியும், தீர்த்தங்களைப் பற்றியும் சிவ பெருமான் பார்வதிக்கு விரிவாகக் கூறுகிறார்.

ஆக இந்தப் பட்டியலில் ஐம்பதினாயிரத்து நூறு க்ஷேத்ரங்களைப் பற்றி அறிகிறோம்.

இந்த நூலைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இன்னொரு கட்டுரை வாயிலாகக் காண்போம்.

***

Index

பிருகதீஸ்வர மாஹாத்மியம்

சரஸ்வதி மஹால் வெளியீடு, 1985

முப்பது அத்தியாயங்கள்

16 சோழ மன்னர் பற்றிய விவரங்கள், அத்தியாயம் 29

ஐம்பதினாயிரத்து நூறு க்ஷேத்ரங்கள் பற்றி சிவன் பார்வதிக்குக் கூறுவது, அத்தியாயம் 30

tags- பிருகதீஸ்வர மாஹாத்மியம், 16 சோழ மன்னர்