பிருந்தாவனம் திருத்தலம்! (Post No.10,033)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,033

Date uploaded in London – –   30 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 29-8-2021 அன்று ஒளிபரப்பான உரை!

பிருந்தாவனம் திருத்தலம்!

அனைவருக்கும் ஜன்மாஷ்டமி நல் வாழ்த்துக்கள்!

கண்ணன் திருவடி எண்ணுக மனமே, திண்ணம் அழியா வண்ணம் தருமே

தருமே நிதியும் பெருமை புகழும், கருமா மேனிப் பெருமான் இங்கே!

மகாகவி பாரதியார் வாழ்க!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது இந்து மக்கள் அனைவரும் போற்றிக் கொண்டாடும் திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாக அமைகின்ற பிருந்தாவனம் ஆகும். இந்தத் தலமானது உத்தரபிரதேசத்தில் உள்ள மதுராவிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

விருந்தா என்றால் துளஸி என்று பொருள் விருந்தாவனம் என்றால் துளஸிச் செடிகள் அதிகமுள்ள வனம் என்று பொருள். பத்து அவதாரங்களில் எட்டாவது அவதாரமாக அமையும் கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணரின் இளமைக் காலம் கழிந்த இடம் இதுவே. இங்கே தான் கோகுலம் கோவர்த்தனம் ஆகிய புராண பிரசித்தி பெற்ற இடங்கள் உள்ளன. கிருஷ்ண பக்தையான ராதாவின் திருத்தலம் என்பதோடு இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட கோவில்களும் ராதாதேவியுடன் தொடர்பு படுத்தப்படும் அழகிய இடங்களும் உள்ளன.

இங்கு ஓடும் அழகிய யமுனை ஆற்றில் அமைந்துள்ள ஏதேனும் ஒரு துறையில் ஸ்நானத்தைச் செய்து பக்தர்கள் இங்குள்ள கோவில்களைத் தரிசிக்கச் செல்வது மரபாக இருக்கிறது. மாலை நேரங்களிலோ வர்ணிக்க முடியாதபடி அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு யமுனை ஆறும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் ஜெகஜோதியாக அன்றாடம் காட்சி தரும் அழகே

அழகு!

    கேசி காட் துறை முக்கியமான துறையாகும். இங்கு தான் கிருஷ்ணர் கேசி என்ற அசுரனை மாய்த்தபின் வந்து ஸ்நானம் செய்தார். இங்கு தான் மதன்மோகன் ஆலயம் உள்ளது. இங்கு வழிபாட்டுடன் அழகிய இந்தத் தலத்தைக் காணும் வகையில் படகிலும் செல்ல முடியும்.

    மிகப் பழம் பெரும் ஆலயமான ஸ்ரீராதா மதன் மோகன் ஆலயம் காலிதா கட் அருகே உள்ளது இந்த ஆலயம் சைதன்ய மஹாபிரபுவுடன் தொடர்பு கொண்ட ஆலயமாகும்.

விருந்தாவன் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிந்த தேவ் ஆலயம் 1590ஆம் ஆண்டில் அம்பரை ஆண்ட ராஜா மான் சிங்கினால் கட்டப்பட்ட ஒன்றாகும். கொடுங்கோலன் அவுரங்கசீப்பினால் இந்த ஆலயம் சேதப்படுத்தப்பட்டதால் இது மூன்றடுக்குடன் மட்டுமே இன்று காட்சி அளிக்கிறது. இதற்குப் பின்னால் உள்ள ஒரு சிறு கோவிலிலேயே இன்றைய பூஜைகளும் வழிபாடும் நடக்கின்றன. கர்பக்ருஹமானது வெள்ளியாலும் சலவைக் கற்களாலும் அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர்   பிறந்த ஜன்மாஷ்டமி அன்றும் ஹோலிப் பண்டிகையின் போதும் மக்கள் இங்கு திரளாகக் கூடுகின்றனர்.

விருந்தாவனத்தில் பெரிய ஆலயமாகத் திகழ்வது 54 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள பிரேம் மந்திர் ஆகும்.

2012இல் திறக்கப்பட்ட இந்த இரண்டு அடுக்கு சலவைக் கல்லினால் ஆன ஆலயத்தில் ராதா கிருஷ்ணரைச் சித்தரிக்கும் எண்பதிற்கும் மேற்பட்ட வண்ண ஓவியங்களை சுவரில் கண்டு மகிழலாம். முதல் தளத்தில் ராதையும் கிருஷ்ணரும் கோவில் கொண்டு அருள் பாலிக்க மேல் தளத்தில் ராமரும் சீதையும் குடி கொண்டு அருள் பாலிக்கின்றனர். அழகிய மலர்ச் செடிகளும் நீரூற்றுகளும் சுற்றி இருக்க ஒளி விளக்குகள் இரவு நேரங்களில் ஒளிர்ந்து கண் கொள்ளாக் காட்சியை அளிக்கிறது. ராஸ லீலையைச் சித்தரிக்கும் சிற்பங்கள் இந்தத் தோட்டங்களில் உள்ளன.

இங்குள்ள இன்னொரு ஆலயம் பங்கே பிஹாரி ஆலயமாகும். பங்கே என்றால் வளைந்திருப்பது என்று பொருள். ராஜஸ்தானிய அமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் கிருஷ்ணர் பால பருவத்தில் திரிபங்க கோலத்தில் அதாவது மூன்று இடங்களில் வளைந்து அமைந்துள்ள திருவுருவில் காட்சி அளிக்கிறார்.

சேவா குஞ்ஜ் அல்லது நிதி வன் என்று அழைக்கப்படும் அழகிய பெரிய தோட்டம் அனைவராலும் விரும்பிச் செல்லும் ஒரு இடம். ஏனெனில் இங்கு தான் ராஸ லீலை நடைபெற்றதாக புராண வரலாறு கூறுகிறது. இங்கு இன்றும், தினமும், ராதையும் கிருஷ்ணரும் வருகை புரிவதாக பக்தர்கள் திடமாக நம்புகின்றனர். இதற்கு மிக அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ ராதா தாமோதர் ஆலயம். 1542ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது இந்த ஆலயம். கிருஷ்ணரின் காலடித் தடங்கள் பதிக்கப்பட்ட கோவர்த்தன மலைப் பாறை ஒன்று இங்கு பக்தர்களைப் பெரிதும் ஈர்க்கிறது. இன்னொரு முக்கிய ஆலயம் ரங்காஜி ஆலயம் ஆகும். 1851ஆம் ஆண்டு இது நிறுவப்பட்டது. ரங்கநாதர் குடிகொண்டிருக்கும் இந்த ஆலயம் ஆறு நிலை கோபுரத்தையும் 50 அடி உயரமுள்ள த்வஜ ஸ்தம்பத்தையும் கொண்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் கொண்டாடப்படும் ரத மேளாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து ரதத்தை இழுத்துச் செல்கின்றனர்.    

                                           மிகப் பெரும் ஆசார்யரான வல்லபாசாரியர் தனது 11ஆம் வயதிலே இங்கு வந்து இதன் அழகில் லயித்தார். 84 இடங்களில் அவர் கீதை பேருரைகளை ஆற்றினார். ஆனால் ஒவ்வொரு வருடமும் நான்கு மாதங்கள் பிருந்தாவனத்தில் தங்குவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.                                                 300 கோடி ரூபாய் செலவில் 1975ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இஸ்கான் ஆலயமும் இங்கு முக்கிய ஆலயமாகத் திகழ்கிறது.  

                     பக்தர்கள் பார்த்து அனுபவிக்கும் இன்னும் ஒரு இடம் கோவர்த்தனம் ஆகும் இது விருந்தாவனத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.. கிருஷ்ணர் எப்படி கோவர்த்தனமலையை தனது ஒரு விரலால் தூக்கினார் என்பதை இங்குள்ள மக்கள் ஆனந்தமாக இன்றும் விவரிக்கின்றனர்.      காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீ கிருஷ்ணரும் ராதாதேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.  மகாகவி பாரதியாரின் அருள் வேண்டுதல் இது:     

                                                      வருவாய் வருவாய் வருவாய் கண்ணா, வருவாய் வருவாய் வருவாய்! உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா, உயிரின் அமுதாய்ப் பொழிவாய் கண்ணா!   நன்றி வணக்கம்!          

                             

       

***

Tags- பிருந்தாவனம் , திருத்தலம்,