இந்து கலைக்களஞ்சியம்: பிருஹத் சம்ஹிதா!

Brhat1

ஆய்வுக் கட்டுரை எண்: 1637; தேதி : 9 பிப்ரவரி 2015

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்

இந்துக்களின் விஞ்ஞான நம்பிக்கைகள், ஜோதிட நம்பிக்கைகள் அடங்கிய நூலின் பெயர் பிருஹத் சம்ஹிதை. சம்ஹிதை என்றால் தொகுப்பு என்று அர்த்தம். வராஹமிகிரர் என்ற பேரறிஞர், அவருக்கு முன் இருந்த காலத்திய செய்திகளை எல்லாம் தொகுத்தார். அதை பெரிய தொகுப்பு (பிருஹத் சம்ஹிதை) என்ற பெயரில் சம்ஸ்கிருதத்தில் எழுதினார். இதில் 106 தலைப்புகளில் அவர் தொகுத்துள்ள விஷயங்களைப் பார்த்தலேயே அவர் எவ்வளவு பெரிய அறிஞர் என்பது விளங்கும்.

வராகமிகிரர் ஜோதிடம் பற்றி பிருஹத் ஜாதகம் என்ற வேறு ஒரு நூலையும் எழுதியுள்ளார்.

இதைப் பார்த்தவுடன் சம்ஸ்கிருதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்துவிடும். ராமகிருஷ்ண பட் என்பவரும் வேறு பலரும் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளபோதிலும், பல இடங்களில் சொற்களின், ஸ்லோகங்களின் வியாக்கியானத்தில் மாறுபட்ட கருத்துக்களைக் காணலாம். உண்மையில் சம்ஸ்கிருதம் படித்தால் இதை ஒப்பிட்டு புதிய பொருளையும் காணலாம்.

domestic

தமிழ் படித்தவர்கள் சம்ஸ்கிருதமும் கற்றால் வேறு எவரும் செய்ய முடியாத செயற்கரிய செயல்களைச் செய்யலாம். எடுத்துக் காட்டாக வெள்ளி (வீனஸ்) கிரகத்துக்கும் மழைக்கும் உள்ள தொடர்பு பற்றிப் புறநானூற்றில் பல பாடல்கள் உள்ளது பற்றி நான் ஏற்கனவே ஆய்வுக் கட்டுரை எழுதினேன். இது மேல் நாட்டினரும் அறியாத விஷயம். வராகமிகிரருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே – சங்க இலக்கியத்தில் – இக்கருத்து உள்ளது. இவற்றை எல்லாம் ஒப்பிட்டு ஆராயலாம். ஏனெனில் தமிழில் உரை எழுதியவர்களும் பல செய்திகளைக் கூறுகின்றனர்.

வராகமிகிரர் தனக்கு முன் இருந்த பல அறிஞர்கள் பெயர்களை ஆங்காங்கே எடுத்துரைத்து அவர்களது கருத்தை ஒட்டியும் வெட்டியும் வாதாடுகிறார். எடுத்துக் காட்டாக பெண்கள் வைரங்களை அணியலாமா, கூடாதா? என்பது பற்றி அவர்  கூறுவதை அடுத்த கட்டுரையில் தருகிறேன். 22 ரத்தினக் கற்களின் பெயர்களைப் பட்டியலிட்டுவிட்டு, வைரம்- முத்து – மரகதம் – மாணிக்கம் ஆகிய நாலு கற்களுக்கு ஒவ்வொரு அத்தியாயம் ஒதுக்கி அற்புதமான விஷயங்களைச் சொல்லுகிறார். 1500 ஆண்டுகளுக்கு முன் அவற்றின் விலை என்ன என்ற பட்டியலையும் சொல்லுகிறார். அவர் சொல்லும் கார்சா பணத்தின் இன்றைய மதிப்பு நமக்குத் தெரியாவிடினும், பல ரத்தினக் கற்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது பயன் தரும்- இன்பம் பயக்கும்!!

விவசாயம், மற்றும் மரங்களுக்கு வரும் வியாதிகள், நிலத்தடி நீர் கண்டுபிடிப்பது, கோவில் கட்டுவது, விக்ரகம் வைப்பது, சகுன சாஸ்திரம், கட்டிடம் கட்டுவது, வீடுகளின் வகைகள், மலர்கள், யானை, குதிரை, பசுமாடுகள் தொடர்பான சாஸ்திரங்கள், மழை –வானிலை- மேகம் தொடர்பான சாத்திரங்கள், மன்னர்களின் சின்னங்கள் இப்படி அவர் தொட்டுக் காட்டாத விஷயமே இல்லை. இவர் சொல்லக் கூடிய அத்தனை நூல்களும் நமக்குக் கிடைத்தால் அது புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கலாம். அழிந்து போன நூல்களை எண்ணி வருந்துவதை விட, இருக்கும் நூல்களை, இன்றைய விஞ்ஞான பிண்ணனியில் ஆராய்வது பலன் தரும்.

gems

இவர் சொன்ன 106 விஷயங்களையும், அவர் மேற்கோள் காட்டும் அறிஞர் பெருமக்களின் பட்டியலையும் இக்கட்டுரையின் ஆங்கில வடிவில் காண்க. அடுத்த சில கட்டுரைகளில் வராஹ மிகிரர் சொல்லும் அற்புத தகவல்களைத் தருவேன்.

இவர் வேதங்களைக் கற்று அறிந்தவர் என்பது ஆங்காங்கே குறிப்பிடும் மந்திரங்களில் இருந்து தெரிகிறது. இவர் ஒரு கணித மேதை- கவிஞரும் கூட. சாதாரண சோதிட விஞ்ஞான விஷயங்களை விளம்ப வந்தவர் திடீரென்று கவிதை மழை பொழிகிறார். இதை சம்ஸ்கிருதம் படித்தவர்களே ரசிக்க முடியும்.

அவர் இற்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார். அந்தக் காலத்திலேயே – கலைக் களஞ்சியம் என்னும் – என்சைக்ளோபீடியா போல — இவர் எழுதியதை எண்ணி எண்ணி இறும்பூது எய்தலாம். நமக்கு முன்னால், கிரேக்கர்கள் இப்படிப்பட்ட நூல்கள் எழுதி உள்ளனர். நம்மிடம் இருந்த பல்லாயிரக் கணக்கான நூல்கள் முஸ்லீம் படை எடுப்புகளில் தீக்கிரையாக்கப் பட்டுவிட்டன. அது போக எஞ்சியதைக் கொண்டு பார்க்கையில் கிரேக்கர்கள், இத்துறையில் முன்னால் இருக்கலாம்.

வராகமிகிரர் எழுதியதை ஆல்பிரூனி (கிபி1000) என்ற அராபியர் அவரது அராபிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.