பிரேதக் கடத்தல்

கனடா நாடு ஆண்டுதோறும் பேய்கள் பற்றிய தபால்தலைகளை வெளியிடுகிறது

Written by S NAGARAJAN

Post No.2224

Date: 8   October 2015

Time uploaded in London:  16-17

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

பாக்யா வார இதழில் கடந்த நாலரை ஆண்டுகளாக வெளி வந்து கொண்டிருக்கும் அறிவியல் துளிகள் தொடரில் 25-9-2015 இதழில் 240வது அத்தியாயமாக வந்த கட்டுரை

பிரேதக் கடத்தல்

.நாகராஜன்

சுவர்க்கத்திற்குப் போக விரும்புபவர்கள் கூட இறக்க விரும்புவதில்லை.” –  ஸ்டீவ் ஜாப்ஸ்

மனிதன் இறக்கும் போதும் கூடத் தன்னை நல்ல விதமாக “அனுப்பி வைப்பதையே” விரும்புகிறான். எரித்தாலும் சரி, புதைத்தாலும் சரி, கௌரவமாக அனுப்புங்கள் என்பதே ஒவ்வொருவரின் வேண்டுதலும்!

ஆகவே, கடத்தல்களில் மோசமான கடத்தல் பிரேதக் கடத்தல் தான் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். மிகவும் பிரபலமானவர்களின் உடல்களைப் புதைத்தால் அபாயத்தையும் கூடவே புதைப்பது போலத் தான்.

சமீபத்தில், லைவ் ஸயின்ஸ் ஜூலை 2015 இதழில் ஸ்டீபனி பப்பாஸ் என்ற அறிவியல் ஆய்வாளர் தந்திருக்கும் தகவல் நம்மை பரபரப்படைய வைக்கிறது.

ஜெர்மனியில் உள்ள கல்லறை ஒன்றிலிருந்து பிரபல டைரக்டரான எஃப்.டபிள்யூ.மர்னாவ் என்பவரின் உடலைக் கடத்தப் பலமுறைகள் முயற்சிகள் நடந்திருக்கின்றன. இவர் 1922ஆம் ஆண்டு அந்தக் கால  மௌனப் படமான ‘நொஸ்பெராடு’ என்ற படத்தில் பேய்களைப் பற்றிச் சித்தரித்திருந்தார்.

இவர் 1931ஆம் ஆண்டு மரணமடைந்தார். ஜெர்மனியின் தென்மேற்கில் உள்ள ஸ்டான்டார்ஃப் கல்லறையில் இவரது உடல் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.ஆனால் இன்றோ?

இவரது தலையை, அதாவது மண்டைஓட்டைக் காணோம் என்ற தகவலை பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் தருகிறது. அவரது கல்லறையில் மெழுகுவர்த்தி ஒன்று எரிந்து கொண்டிருந்தததாம்.

நிச்சயமாக பிசாசுப் பேர்வழிகளின் கைவரிசை தான் இது என்று அனைவரும் வருத்தத்துடன் கூறுகின்றனர். சில சமயம் கொள்ளைக்காரர்கள் இதற்கு ஒரு விலையை வைத்து சவத்தை வாங்க விரும்புவர்களிடம் அதை ஒப்படைப்பதும் உண்டு.

பிரபல நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளின் 1977இல் இறந்தார். அவரது உடலை அடுத்த ஆண்டே திருட முயற்சித்தனர். அமைதிக்குப் பெயர் பெற்ற ஸ்விட்சர்லாந்தில் அமைதியாக மீளா உறக்கத்தில் இருந்த அவருக்கா இந்த கதி என்று உலகமே அல்லோலகல்லோலப் பட்டது. 2014இல் இண்டிபெண்டண்ட் பத்திரிகைக்குப் பேட்டி அளித்த அவரது மகன் உலகின் மோசமான சம்பவம் இது என்று விமரிசித்தார்.

உடலைத் திருப்பித் தர பெரும் தொகையை சவத் திருடர்கள் கேட்ட போது சார்லி சாப்ளினின் மனைவி பணம் தர மறுத்து விட்டார். செத்த உடலுக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்ற அவரது பதிலைக் கேட்டத் திருடர்கள் அதிர்ந்து போனார்கள்.

ஆனால் நல்ல வேளையாக இந்தப் பேச்சை ஒட்டுக் கேட்ட போலீஸார் கிழக்கு ஐரோப்பாவில் பதுங்கி இருந்த இரண்டு பிரேதத் திருடர்களைப் பிடித்தனர். ஒரிஜினல் கல்லறையிலிருந்து சற்று தூரத்தில் சவத்தைப் புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் ஆப்ரஹாம் லிங்கனுக்கே ஆபத்து என்பதைத் தான் யாராலும் ஜீரணிக்க முடியவில்லை! 1876இல் அவரது உடலுக்கு பெரும் தொகை பிணையாகக் கேட்கப்பட இருந்த ஒரு முயற்சியை ஆரம்பத்திலேயே ரகசிய போலீஸார் தகர்த்தனர். அவரது மகன் ராபர்ட் அறிவியல் ரீதியில் தன் தந்தையின் உடலைக் காப்பாற்றி விட்டார்.

சவப்பெட்டியை கெட்டியான எளிதில் தகர்க்க முடியாத கான்க்ரீட் சுவர் ஒன்றை அமைத்து அதன் கீழ் புதைத்து விட்டார் அவர்.

அதனால் அதை யாராலும் தோண்டி எடுக்க முடியாது, அப்போதும், இப்போதும், எப்போதும்!

அர்ஜெண்டினாவின் ஜனாதிபதியான ஜுவான் பெரானுக்கு 1955இல் மகத்தான சோதனை ஒன்று ஏற்பட்டது. பதனிடப்பட்டு இருந்த அவரது அன்பு மனைவி ஈவா பெரானின் உடலை ராணுவ அதிகாரிகள் கடத்திக் கொண்டு சென்று விட்டனர். அர்ஜெண்டினாவில் இடம் விட்டு இடமாக அந்தப் பிரேதம் “பயணம்” செய்து கொண்டிருந்தது. ஒருவழியாக பெரும் முயற்சியின் பேரில் ஸ்பெயினில் தஞ்சமாகப் புகலிடம் கொண்டிருந்த பெரான் 1971இல் அதைத் திரும்பப் பெற்றார். போனஸ் அயர்ஸில், நல்ல ஒரு கோட்டை போல அரண் செய்யப்பட்ட இடத்தில் அவர் தன் மனைவியை மீண்டும் நல்லடக்கம் செய்தார்.

சமீபத்தில் 2009 டிசம்பர் 11ஆம் தேதி சைப்ரஸ் ஜனாதிபதியான டஸாஸ் பபடோபௌலஸ் என்பவரின் கல்லறையைக் காணச் சென்ற அவரது முன்னாள் மெய்காப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். அங்கு ஒரு பெரும் பள்ளம் தான் இருந்தது. அலறி அடித்துக் கொண்டு தேட ஆரம்பித்த போலீஸார் அவரது உடல் இன்னொரு கல்லறையில் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்தனர். விசாரணையில் சகோதரர்கள் இருவரின் வேலை இது என்பது தெரிய வந்தது. அவர்களில் ஒருவன் ஆயுள் கைதியாக இருந்தான்.  அவனை சிறையிலிருந்து விடுவிக்க வெளியில் இருந்த ‘புத்திசாலியான’ அவனது சகோதரன் பிணையாக இந்த உடலைப் பயன்படுத்த திட்டமிட்டான். கடைசியில் பிடிபட்டான்.

திருடு போகும் பிரேதங்கள் ஒருபுறம் இருக்க, இறந்த பின்னர் உடலைத் தானம் செய்வோரின் எண்ணிக்கை அமெரிக்கா, பிரிட்டன், இந்தியாவில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

ஆராய்ச்சிக்காகவும் மருத்துவ மாணவர்களின் கல்விக்காகவும் பலரும் தங்களின் உடலைத் தானமாகத் தருகின்றனர். இப்படி உடலைத் தானமாகத் தருவதில் சட்ட சிக்கல்கள் நிறையவே உள்ளன. முறைப்படி தனது விருப்பத்தைத் தெரிவித்தவரின் உடலே தானமாகப் பெறப்படும். அவரது நெருங்கிய உறவினர் மட்டுமே அந்த உடலைத் தானமாகத் தர முடியும்.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சி காரணமாக உடல் அங்கங்களைத் தானமாகக் கொடுப்போரின் எண்ணிக்கைம் சமீப காலத்தில் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்த அங்கங்களைப் பெறுவோர் மறுவாழ்வு பெறுவதும் இதனால் அதிகரிக்கிறது. பத்திரிகைகளின் சரியான ஆதரவும் சமூக ஆர்வலர்களின் ஊக்கமும் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

‘இறந்த பின்னும் நீங்கள் ஃபேஸ்புக்கை பார்க்கலாம் இன்னொருவர் முகத்தில் உங்கள் கண்களைப் பொருத்துவதன் மூலம்’ என்ற ஈமெயிலைப் பெறாதவர் இன்று அநேகமாக இருக்கவே முடியாது.

இருந்தாலும் இறந்தாலும் பிறருக்கு உதவி செய்பவரே மேலோர்!

அறிவியல் அறிஞர் வாழ்வில்

பிரபல விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிஸன் தன்னை ஒரு விஞ்ஞானி என்று சொல்லிக் கொண்டதேயில்லை. தன்னை ஒரு வியாபாரி என்று சொல்லிக் கொள்வதில் தான் அவருக்கு விருப்பம் அதிகம். ‘எதிலும் லாபம் எப்போதும் லாபம்என்பதே அவரது முக்கியக் குறிக்கோள். ஒரு சமயம் அவரை ஒரு விஞ்ஞானி என்று குறிப்பிட்டிருந்த ஒரு பத்திரிகை கட்டுரையைக் காண்பித்து அவர் தனது நண்பர் ஒருவரிடம் கூறினார் இப்படி:-“இதோ பார், தப்பாகப் போட்டிருக்கிறார்கள். நான் ஒரு விஞ்ஞானி இல்லை. நான் ஒரு கண்டுபிடிப்பாளன் (Inventor). ஃபாரடேயை எடுத்துக் கொள். அவர் ஒரு விஞ்ஞானி. அவர் பணத்திற்காக உழைக்கவில்லை. அவர் அதற்கு நேரமே இல்லை என்று சொல்லி விட்டார். ஆனால் நானோ அதற்காகத் தான் உழைக்கிறேன். நான் ஒவ்வொன்றையும் வெள்ளி டாலரின் அளவை வைத்தே தான் மதிப்பிடுகிறேன். அந்த அளவுக்கு அது வரவில்லை எனில், அது சரிப்படாது என்பதை அறிந்து கொள்வேன்”.

 

அவர் ஒரு பிரம்மாண்டமான கோடைகால வாசஸ்தல மாளிகை ஒன்றைக் கட்டியிருந்தார். அதைப் பற்றி அவருக்கு ஏகப்பட்ட கர்வம். அந்த மாளிகையில் அதிக உடலுழைப்பின்றி காரியங்களை ஆற்றவல்ல ஏராளமான இயந்திர சாதனங்களை அவர் அமைத்திருந்தார். ஒரு சமயம் அவர், அவற்றை ஒவ்வொன்றாகத் தன் நண்பர்களுக்குக் காண்பித்தவாறே மாளிகையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.செல்லும் வழியில் திருப்பம் ஒன்றில் சுழல் குகை போன்ற ஒரு வழியில் செல்ல வேண்டியிருந்தது. அந்தச் சுழல் குகையைக் கடக்க பெரும் பிரயத்தனம் செய்தவாறே அனைவரும் கடந்தனர்.

 

அவர்களின் ஒருவர் கேட்டார்:” மிஸ்டர் எடிஸன், இப்படிப்பட்ட அருமையான சாதனங்களை நீங்கள் அமைத்துள்ளீர்கள். இந்த குகை மட்டும் ஏன் இப்படி அமைக்கப்பட்டிருக்கிறது? இந்த வழியைச் சுழற்றிச் சுழற்றி நாங்கள் நொந்து போனோம்

இதைக் கேட்ட எடிஸன் ஹாஹாஹா என்று சிரித்தார். “நண்பரே! இந்த சுழல் வழியை நீங்கள் ஒவ்வொருவரும் தள்ளும் போதும் எனக்கு மேலே மாடியில் உள்ள தொட்டியில் எட்டு காலன் தண்ணீர் நிரம்புகிறது. நீங்கள் வழியையா கடக்கிறீர்கள்? எனக்குத் தண்ணீர் நிரப்புகிறீர்கள்என்றார் அவர்.

 

நண்பர்கள் வியப்பு மேலிட விழுந்து விழுந்து சிரித்தனர்.

எதிலும் லாபம் எப்போதும் லாபம்; இப்படி ஒரு அபூர்வ விஞ்ஞானி!

*****************