Written by London Swaminathan
Date: 15 NOVEMBER 2017
Time uploaded in London- 12-28
Post No. 4399
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
ஊர்வசியே வந்து ஆடினாலும் போக மாட்டேன்- ஆழ்வார் உறுதி (Post No.4399)
குலசேகர ஆழ்வார், பன்னிரு ஆழ்வார்களில் தனித்து நிற்கிறார். அவர் ஒரு விநோதமான பேர்வழிதான்; யாரும் விடுக்காத கோரிக்கைகளை விடுக்கிறார். ஒரு லட்சம் பவுன் தா, தங்கக் கட்டிகளாக மழை பொழி, உலக மஹா அழகிகள் எனக்கு சேவை செய்ய வேண்டும் என்றெல்லாம் கேட்கவில்லை. ஆயினும் பெருமாள்– திருவேங்கடத்தான் ஏற்க முடியாத கோரிக்கைகளாக முன் வைக்கிறார். யாருக்கும் தோன்றாத அற்புத எண்ணங்கள் அவருக்குத் தோன்றுகின்றன. ஏன்?
திருப்பதி மலை மீது– திரு மலையில் – குடிகொண்டிருக்கும் திரு வேங்கடத்தானை — திருப்பதி பெருமாளை- வேங்கடமலையானை- வெங்கடாசலபதியை (வேங்கடம்+அசலம்+பதி)– தரிசிப்பது எவ்வளவு கடினமென்று நமக்கு எல்லோருக்கும் தெரியும். இலவச தரிசனத்துக்கு நின்றால் 14 மணி நேரம் க்யூ வரிசை; காசு கொடுத்து ஸ்பெஷல் வரிசையில் நின்றாலோ மந்திரி வருகிறார் என்று திடீர் தடை; இதற்கெல்லாம் மேலாக அற்புதமாக அவர் முன் விரைவில் போய் நின்று விட்டாலோ நம் கழுத்தைப் பிடித்துத் தள்ளும் கோவில் சேவகர்கள் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால் இதே நிலைதான் போலும்! ஏனெனில் விஜய நகரப் பேரரசன் கிருஷ்ணதேவ மஹா ராயர்
மட்டும் திருப்பதிக்கு 30 தடவைக்கு மேல் வந்துள்ளதாக வரலாறு பேசுகிறது; இது போல எத்தனையோ அரசர்கள் அந்தக் காலத்திலும் வந்திருப்பர். ஆகையால் குல சேகர ஆழழ்வார் ஒரு புது வழி– குறுக்கு வழி– கண்டுபிடித்தார். இவ்வளவுக்கும் அவரே சேர நாட்டு அரசர்.
அவருக்கே இந்த கதி என்றால் நமக்கெல்லாம்?
அவர் 10 அம்ச திட்டத்தை வெங்கடாசலபதியிடம் சமர்ப்பிக்கிறார்.
1.என்னை மீனாகப் பிறக்கச் செய்
2.என்னை நாரையாக ஆக்கிவிடு
3.என்னை காட்டாறு (wild stream) ஆக்கிவிடு
4.ஒரு மலைச் சிகரமாகவாவது ஆக்கிவிடு
5.பூவாக மாற்றிவிடு
6.புதாராக வளர்த்து விடு
7.எச்சில் (வெற்றிலைச் சக்கை) துப்பும் பொன்வட்டில் பிடிக்கும் சேவகனாய் மாற்று
8.பாதையாக மாற்று
- அல்லது படியாக மாற்று
10.ஐயா, இதெல்லாம் முடியாதா? ஏதாவது ஒரு
பொருளாக ஆக்கப்பா!
(எங்கே என்றால்? திருப்பதி மலையானைத் தரிசிக்கச் செல்லும் ஏழு மலைப் பாதையில்)
இதையேல்லாம் விட்டு விட்டுவிட்டு எல்லா அரம்பையர்களையும் (அப்ஸரஸ் பேரழகிகள்) — அதிலும் பெரிய பேரழகி ஊர்வசி– அவளையே அனுப்பி – அவள் என்னை வா, வா என்று அழைத்தாலும் எனக்கு வேண்டாம்; இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் ( அரங்கமா நகருள்ளானே) திருவேங்கடத்தானே—என்கிறார்.
என்ன மன உறுதி! திட சித்தம்!!
ஏன் இப்படிச் செய்தார்?
பக்தர்களின் பாத தூளிகளுக்கு அவ்வளவு மதிப்பு! இறைவனை விட பக்தர்களுக்கு மதிப்பு அதிகம்; பக்தர்களுக்குத் தீங்கிழைத்தால் கடவுளும் கூடத் தலையிடமாட்டார். பக்தனிடமே சென்று மன்னிப்புக் கேள் என்று ஆண்டவனே சொல்லி விடுவான்; இதை அறிந்த குல சேகரர் பக்தர்களின் பாதத் தூசு படட்டும் அல்லது அவர்கள் கோவிந்தா, கோவிந்தா என்றும் ஏழுமலை வாசா என்றும் போடும் கோஷமாவது கேட்டுக்கொண்டே இருக்கட்டும் என்று இப்படி வேண்டுகிறார்.
இதோ அவரது அற்புத வரிகள் அடங்கிய பாசுரம்; இதை மாணிக்க வாசகரின் திருவாசகத்தைப் பாடும் மோஹன ராகத்தில் பாடினால் , பாடிக்கேட்டால், புல்லரிக்கும்; மெய்சிலிர்க்கும்; ஆனந்தக் கண்ணீர் துளிர்க்கும்.
திருவேங்கடமுடையான்
ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான்வேண்டேன்*
ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்*
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து*
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே. 1
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ*
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்*
தேனார்பூஞ் சோலைத் திருவேங்கடச் சுனையில்*
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே. 2
பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்*
துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்*
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்*
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே. 3
ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்*
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு*
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து*
செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே. 4
கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து*
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்*
எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல்*
தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே. 5
மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்*
அன்னவர்தம் பாடலொடும் ஆடலவை ஆதரியேன்*
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்*
அன்னனைய பொற்குடவாம் அருந்தவத்த னானவனே. 6
வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ்* மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்*
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்*
கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே. 7
பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்*
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்*
வெறியார் தண்சோலைத் திருவேங் கடமலைமேல்*
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே. 8
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!*
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்*
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்*
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே. 9
உம்பர் உலகாண்டு ஒருகுடைக்கீழ்* உருப்பசிதன்
அம்பொற் கலையல்குல் பெற்றாலும் ஆதரியேன்*
செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்*
எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனு மாவேனே. 10
மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்தன்*
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி*
கொன்னவிலும் கூர்வேல் குலசே கரன்சொன்ன*
பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே. 11
வாழ்க குலசேகர ஆழ்வார்! வளர்க அவர்தம் அடியார்கள் !!
–Subham, Subham–