Written by London swaminathan
Date: 23 FEBRUARY 2017
Time uploaded in London:- 6-27 am
Post No. 3662
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
சிலப்பதிகாரத்தில் பெரிதும் புகழப்படும் சேரன் செங்குட்டுவன், பெரிய சிவபக்தன். கண்ணகிக்கு சிலை எழுப்புவதற்கு இமயமலை நோக்கி அவன் புறப்பட்டபோது என்ன நடந்தது என்பதை சேரன் தம்பி இசைத்த சிலப்பதிகாரம் செப்புவதைக் காண்போம்:-
ஞாலங்காவலர் நாள்திறை பயிரும்
காலைமுரசம் கடைமுகத்து எழுதலும்
நிலவுக் கதிர் முடித்த நீளிருஞ் சென்னி,
உலகுபொதி உருவத்து, உயர்ந்தோன் சேவடி
மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து
இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங் கொண்டு,
மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை
நறைகெழு மாலையின் நல்லகம் வருத்த,
கடக்களி யானை பிடர்த்தலை ஏறினன்
–கால்கோட்காதை, சிலப்பதிகாரம்
பொருள்:-
நாட்டினைக் காவல் செய்யும் பிற மன்னர்கள் கப்பம் (திறை) செலுத்த வருக என்று காலை முரசம் வஞ்சி மாநகரின் கடை வாசலில் ஒலித்தது. நிலவுக் கதிரினை முடித்த நீண்ட பெரிய சடை முடியும், உலகனைத்தும் ஒருங்கே தன் கைப்படுத்தும் உருவமும் உடைய உயர்ந்தோனான சிவபெருமானின், செவ்வையான திருவடிகளை (காலணி) வெற்றி பொருந்திய வஞ்சி மாலையுடன் தன் தலையில் சூட்டிக்கொண்டான். யாருக்கும் வணங்காத தன் தலையில் சிவன் திருவடிகளை வைத்து வலம் வந்தான் பிராமணர்கள் , அப்போது கொண்டுவந்த ஆகுதிப் புகையானது தேன் நிறைந்த செங்குட்டுவன் மலர்மாலையை வாடுமாறு செய்தது. மதக் களிப்பினுடைய யானையின் தலையில் செங்குட்டுவன் அமர்ந்தான்.
அந்த நேரத்தில் ஆடக மாடத்திலுள்ள (திருவனந்ததபுரம்) பெருமாள் கோவில் பிரசாதத்தை அர்ச்சகர்கள் கொடுத்தனர். தலை மீது சிவன் பிரசாதத்தை வைத்திருப்பதனால், திருமால் பிரசாதத்தை தோள்மீது வைத்துக்கொண்டான்.
செங்குட்டுவன் சிவபக்தன் என்பதை மாடல மரையோன் என்ற பிராமணனும் சுட்டிக்காட்டுகிறான்:-
நற்றிறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்
அற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்
அறப்பயன் விளைதலும், மறப்பயன் விளைதலும்,
பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும்,
புதுவதன்றே; தொன்றியல் வாழ்க்கை
ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளில் தோன்றி
மாநிலம் விலக்கிய மன்னவன் ஆதலின்
செய்தவப் பயன்களும், சிறந்தோர் படிவமும்
கையகத்தன்போற், கண்டனையன்றே!
ஊழிதோறு ஊழி உலகங்காத்து
நீடுவாழியரோ நெடுந்தகை! என்ற
மாடல மறையோன் தன்னொடு மகிழ்ந்து
–வரந்தரு காதை
பொருள்:-
நல்ல செயல்களைச் செய்தோர் சுவர்க்கத்துக்குச் செல்லுதலும் அன்புள்ளம் மிக்கவர், பற்றின் காரணமாக மீண்டும் பிறத்தலும் அறத்துக்கான பயன் தப்பாது சம்பவித்தலும், பிறந்தவர் இறப்பதும், இறந்தவர் பிறப்பதும் புதுமையானவை அல்ல. தொன்றுதொட்டு நடந்துவரும் வாழ்க்கை நியதி இது. ரிஷப வாஹனத்தில் பவனிவரும் சிவனின் அருளினால் வஞ்சியிலே தோன்றி, உலகம் சிறப்புறுமாறு செய்த மன்னன் நீயாதலின், செய்த தவப் பயன்களையும் உயர்ந்தோரின் உருவையும் நின் கைஅகத்தே உள்ளது போலத் தெளிவாகக் கண்டனை. ஊழிதோறு ஊழி உலகம் காத்து நீ நீடூழி வாழ்வாயாக! நெடுந்தகையே, நீ வாழ்வாயாக.
இவ்வாறு மாடல மறையோன் வாழ்த்திய பிறகு செங்குட்டுவனும் அவன்பால பெரிதும் மகிழ்ச்சியுடைவன் ஆனான்.
முந்தைய காதைகளில் கோவில்கள் பற்றிச் சொல்லும்போது சிவபெருமானின் கோவிலை பிறவா யாக்கைப் பெரியோன் கோவில் என்று பாராட்டியுள்ளார் இளங்கோ அடிகள்.
என்னுடைய பழைய கட்டுரைகள்:—
சிலப்பதிகார கோவில்கள் | Tamil and Vedas
https://tamilandvedas.com/…/சிலப்பதிகார-கோவி…
சிலப்பதிகாரக் கோவில்கள். ஆராய்ச்சிக் கட்டுரை: லண்டன் சுவாமிநாதன் கட்டுரை எண்: 1215; தேதி 5 ஆகஸ்ட் 2014.சிலப்பதிகாரம் என்னும் தமிழ் …
2.சீனா, ஜப்பான், தமிழ் சிலப்பதிகாரம் அதிசய ஒற்றுமை! (ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1318; தேதி:– 30 September 2014.)
3. கோவில்கள் பற்றி அப்பர் தரும் அதிசயத் தகவல் (Research Article No.1765; Dated 1April 2015.)
The Wonder that is Madurai Meenakshi Temple | Swami’s Indology Blog
swamiindology.blogspot.com/2011/…/wonder-that-is-madurai-meenakshi-temple.htm…
14 Oct 2011 – How did the Houston (USA) Meenakshi temple receive a Madurai idol even after the … Madurai Meenakshi Temple is an architectural wonder.
—SUBHAM—