WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,333
Date uploaded in London – – 14 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) 11-11-2021 முதல் ஒலிபரப்பாகி வருகிறது. நேரம் தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்). இதை ஆன்லைன் வாயிலாகவும் கேட்டு மகிழலாம்.
இணையதளம் : https://onlineradiofm.in/tamil-nadu/chennai/all-india-air-chennai-pc
13-11-2021 காலை ஒலிபரப்பான மூன்றாவது உரை கீழே தரப்படுகிறது.
பிளாஸ்டிக் அபாயம் : புவியைக் காக்க உத்வேகமூட்டும் புதிய வழிகள்!
ச.நாகராஜன்
பிளாஸ்டிக் அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சி நமது நாட்டில் நாளுக்கு நாள் அதிகமாகி வருவது மகிழ்ச்சியூட்டும் ஒரு செய்தியாகும். தொழில் துறையினர், ஆட்டோ ஓட்டுநர்கள், பள்ளி ஆசிரியைகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முனைப்புடன் புதிய புதிய வழிகளைக் கடைப் பிடித்து அனைவருக்கும் எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றனர்.
மங்களூரு உள்ளிட்ட ஏராளமான நகர்களில் கழிவாக தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தி கைவினைக் கலைப் பொருள்களை இயற்கை ஆர்வலர்களும் கைவினைக் கலைஞர்களும் உருவாக்கிக் காட்சிப்படுத்துகின்றனர். இதைப் பார்க்கும் அனைவரும் பிளாஸ்டிக் அபாயத்தை நன்கு உணர்ந்து விழிப்புணர்ச்சி பெறுகின்றனர்.
ஜாம்ஷெட்பூர், சென்னை, இந்தூர் ஆகிய நகரங்களில் மேம்பாட்டு மையங்கள், சாலை அமைக்கும் போது, பிளாஸ்டிக் கழிவுகளை அதற்கெனப் பயன்படுத்துகின்றன. இதைப் பார்த்து லக்னௌ நகரிலும் இது போலவே சாலை அமைக்க பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. எளிதில் அழிக்க முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் அழிக்கப்படுவதோடு நல்ல சாலைகளும் உருவாகின்றன.
சிக்கிமில் உள்ள ஒரு சிறு நகரம் லசுங் (Lachung). அந்த நகரைச் சேர்ந்த மக்கள் தாமாகவே ஒன்று கூடி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை நகருக்குள் கொண்டு வரக் கூடாது என்ற தடையை ஏற்படுத்தியுள்ளனர். அந்த நகருக்கு உல்லாசப் பயணமாக வரும் பயணிகளிடம் ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்கள், இது பற்றிக் கூறி மினரல் குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் நகருக்குள் வருவதை அறவே தடுத்து விட்டனர்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது பழமொழி. இதை மனதில் கொண்டு உலகில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் ஒவ்வொரு புது வழியைக் கடைபிடித்துக் காண்பித்து வழிகாட்டிகளாகத் திகழ்கின்றனர்.
நியூஜிலாந்தில் ஒரு பெண்மணி பிளாஸ்டிக் கழிவு பாட்டில்களை வைத்து காலணிகளைச் செய்து மலிவு விலையில் விற்கிறார். 10 டன் எடையுள்ள 30000 பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து ஒரு படகு அமைக்கப்பட்டு கடலில் செல்கிறது.
தொழில்துறை வடிவமைப்பில் விற்பன்னராக உள்ள ஒருவர் நண்டு போன்ற கடலில் செல்லும் ரொபாட்டை வடிவமைத்திருக்கிறார். அது கடலின் உள்ளே சென்று அங்கு இருக்கும் பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களை சேகரித்து விடுகிறது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகளை ஜெல்லி மீன்கள் என நினைத்து சாப்பிட்டு உயிரிழக்கும் திமிங்கிலம் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் ஏராளம் பிழைக்கின்றன.
இப்படி எண்ணற்ற வழிகள் ஏராளம் உள்ளன என்பதை அறியும் போது மகிழ்ச்சி பெறும் அனைவரும், தனது வழியில் ஒரு புதிய வழியை அறிமுகப்படுத்திச் சுற்றுப்புறச் சூழலைக் காக்கலாமே!
***