பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் அபாயம்!

plasticproducts

Article Written by S NAGARAJAN

Date: 6 November 2015

Post No:2305

Time uploaded in London :– 8-51  AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT !  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

 

  1. பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் அபாயம்!

Yuenkong-ltd-plastic-injection-material

பிளாஸ்டிக் பொருள்களினால் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சுற்றுப்புறச் சூழல் கேட்டினை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்வது அவசியம். சுமார் 250 டன்கள் வரை இந்திய நகரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் தினமும் ஏற்படுகிறது என்பது மலைக்க வைக்கும் ஒரு உண்மை. இவற்றில் 50 விழுக்காடு பிளாஸ்டிக் பைகள் என்பதை நாம் உணர்ந்தால் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதில் நமது பொறுப்பு எத்தகையது என்பதை அறிய முடியும்.

பிளாஸ்டிக் பைகள் சுமார் ஆயிரம் வருடங்கள் வரை மட்காது அப்படியே இருக்கும் என்பதால் இது ஆயிரம் வருடம் நீடிக்கும் அபாயம் என்று கூறி விடலாம். கிழிந்த துணிகளும் காகிதங்களும் வெறும் ஐந்தே மாதங்களில் மட்கி விடும் போது குழந்தைகளுக்காக நாம் பயன்படுத்தும் டயபர்கள் 500 முதல் 800 வருடங்கள் வரை மட்காது என்பதையும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அழியவே அழியாது என்பதையும் நாம் உணர வேண்டும்.

மறு சுழற்சிக்கு உட்படும் பிளாஸ்டிக் பொருள்கள் வெறும் 7 சதவிகிதம் தான் என்பதால் இது பெரிய மாற்றத்தை சுற்றுப்புறச் சூழலில் ஏற்படுத்தி விட முடியாது என்பதையும் உணரலாம்.

இந்தப் பெரும் அபாயத்திற்கு ஒரே தீர்வு பிளாஸ்டிக் பைகளை முற்றிலுமாக தவிர்ப்பது தான்!

இதற்கு முன் உதாரணமாக கன்யாகுமரி மாவட்டம் திகழ்கிறது. அங்குள்ள மக்கள் தாங்களாகவே முன் வந்து கடைகளுக்கு துணிப்பைகளையும் சணல் பைகளையும் கொண்டு சென்று தேவையான பொருள்களை வாங்கி வருகின்றனர்.

இதன் மூலம் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அறவே குறைந்து சுற்றுப்புறச் சூழலில் அற்புதமான பெரும் நல்ல விளைவை ஏற்படுத்துகிறது.

நிலத்தில் மட்டுமின்றி நீரிலும் பிளாஸ்டிக் பொருள்கள் கழிவாக தூக்கி எறியப்படுகின்றன. கடலில் மிதக்கும் குப்பைகளில் 90 சதவிகிதம் பிளாஸ்டிக் கழிவுப் பொருள்கள் தான்! இவற்றை உணவுப் பொருள் என நினைத்து உண்ணும் ஜெல்லி மீன்கள் உள்ளிட்ட மீன்களும், ஆமைகளும் இதர கடல் வாழ் உயிரினங்களும் அழிந்து படுகின்றன என்பது வருத்தமூட்டும் ஒரு செய்தி!

சுற்றுலா தலங்கள், கடற்கரைகள் ஆகியவற்றில் பிளாஸ்டிக்கை ஒரு போதும் பயன்படுத்த மாட்டோம் என்று ஒவ்வொருவரும் சபதம் ஏற்க வேண்டும்.கடைகளுக்கு துணிப்பை அல்லது சணல் பையை நிச்சயம் கொண்டு செல்வேன் என்று உறுதி பூண வேண்டும். இந்த நல்ல பழக்கத்தை நம் குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் சொல்லி இதை அவர்கள் மேற்கொள்ளுமாறு செய்தால் வருங்கால சந்ததியினர்க்கு வளமான பூமியை விட்டுச் செல்லும் நன்மையைச் செய்தவர்கள் ஆவோம்!

to be continued……………………..