பிளாஸ்டிக் பொருள்களினால் உடலில் ஏற்படும் அபாயங்கள்! (Post No.6225

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 4 April 2019


British Summer Time uploaded in London – 9-14 am

Post No. 6225

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

by      ச.நாகராஜன்

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 1-3-2019 அன்று காலை சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை

நாம் அறிந்தோ அறியாமலோ விரும்பியோ விரும்பாமலோ நமது அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் புகுந்து விட்டது.

அன்றாடம் அலுவலகத்திற்கு மதிய உணவைக் கொண்டு செல்வதற்கான பாக்ஸ், நாம் பருகும் நீரை வைத்திருக்கும் பாட்டில், அன்றாட தானியம் மற்றும் இதர பொருள்களை பாக்கிங் செய்ய உபயோகப்படுத்தப்படும் பைகள், பழங்கள், பூ மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை வைக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஷீட்டுகள் என இப்படி பட்டியலிட்டால் பிளாஸ்டிக் எப்படி நமது வாழ்க்கையில் ஊடுருவி இருக்கிறது என்பது புரியும்.

இந்த பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதில் மதம், நாடு, இனம், பால், அந்தஸ்து, வயது என்ற பேதமே இல்லை. எங்கும் பிளாஸ்டிக். எதிலும் பிளாஸ்டிக். ஆனால் இதனால் நமது உடல்நிலை பாதிக்கப்படுகிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம், நமது உடல்நலம் இந்த பிளாஸ்டிக்கால் பாதிக்கப்படுகிறது என்பதை ஆய்வாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்.

டாக்டர் சௌம்யா பிரசாத் (Dr Soumya Prasad) என்னும் Ecologist – சுற்றுப்புறச் சூழல் வல்லுநர் நமது உடலில் 3 விழுக்காடு பிளாஸ்டிக் இப்போதே கலந்து விட்டது என்று கூறுகிறார்.

எல்லா பிளாஸ்டிக் பொருள்களும் பிபிஏ- BPA, தாலேட் – Phthalates போன்ற நச்சுப்பொருள்கள் அடங்கிய அடிடிவ்ஸ் (Additives) எனப்படும் கூட்டுப்பொருள்களைக் கொண்டுள்ளன. இந்தக் கூட்டுப்பொருள்கள் பல்வேறு வண்ணங்களுக்காகவும், மிருதுத் தன்மை மற்றும் வலு அடையவும், transparency எனப்படும் ஒளிபுகும் தன்மைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

மிகவும் பளிச்சென்ற வண்ணத்துடன் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் இருக்கிறது என்றால் அதில் அதிக நச்சுடைய கூட்டுப்பொருள் கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். அது மட்டுமல்ல, பிஸ்கட், ஜூஸ், பருகும் நீர் ஆகியவை சிறிய அளவில் சிறிய பாக்கிங் வடிவத்தில் வருகிறது எனில் அதில் அதிக நச்சுத்தன்மை அடங்கி இருக்கிறது என்று பொருள். தாலேட் என்னும் இரசாயனப் பொருள் உடலில் டெஸ்டோஸ்டெரோன் அளவைக்(testosterone levels) குறைக்கும்; இதன் விளவாக விந்து எண்ணிக்கையும் (sperm count) குறையும்.

ஆகவே பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்போம். கடைகளுக்குச் செல்லும் போது   பேப்பரினால் ஆன அல்லது துணிகளினால் ஆன நமது பைகளைக் கூடவே கொண்டு செல்வோம்.

உடல் நலம் காப்போம்; அத்துடன் சுற்றுப்புறச் சூழலையும் காப்போமாக!


****

சுற்றுப்புறம் காக்க வழிமுறைகள்! – 2 (Post No.5305)

Plastic Pollution in Delhi, Deccan Herald picture

Date: 10 August 2018

Written by S Nagarajan

Time uploaded in London – 6-19 AM  (British Summer Time)

 

Post No. 5305

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சென்னை வானொலி நிலையம் 21-7-18 முதல் 31-7-18 முடிய தினமும் காலை ஒலி பரப்பிய சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளில் ஆறாவது உரை

 

சுற்றுப்புறம் காக்க தனிமனிதனின் வழிமுறைகள்! – 2

 

அலுவலகத்திலும் பொதுவாக நடக்கும் விருந்துகளிலும் பிளாஸ்டிக் கப்களை உபயோகிக்காமல் தங்களுக்கென்று தனியாக செராமிக் கப் அல்லது டம்ளரைக் கொண்டு சென்று பயன்படுத்தலாம். தூக்கி எறியப்படும் காப்பி கப்களில் தேனீக்கள் அமர்ந்து இறக்கும் பரிதாப நிலை இதனால் தவிர்க்கப்படும் என்பது கூடுதல் நன்மையாகும்.

புதிய பொருள்களை கடையில் வாங்கும்போது அவற்றை பாக் செய்யப்படும் பொருளைக் கவனித்து வாங்க வேண்டும். மறு சுழற்சிக்கு உள்ளாகும் பொருளால் பேக்கிங் இருப்பது சாலச் சிறந்தது. பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக்கினால் ஆன பேக்கிங் பொருள்களை மாற்றச் சொல்லி கடைக்காரருக்கும் அறிவுரை வழங்கலாம். வீட்டிலிருந்து துணிப்பைகளைக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டால் ஏராளமான அளவு பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தவிர்க்கப்படும்; செலவும் குறையும்.

அலுவலகத்திற்கோ அல்லது வெளியிலோ செல்லும் போது மறுசுழற்சிக்கு உள்ளாகும் கண்டெய்னரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கண்டெய்னரின் பயன்பாட்டை வீட்டில் உள்ள குடும்பத்தினர் அனைவரும் தவிர்க்கும்படி ஆலோசனை கூறி அதை நடைமுறைப் படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் ஃபோர்க்குகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள், பிளாஸ்டிக் பெட்டிகள் ஆகியவற்றை உணவிற்காக எடுத்துச் செல்வதைத் தவிர்த்தால் பெருமளவு பிளாஸ்டிக்கை ஒழித்தவராவோம்.

மறு சுழற்சி என்றால் என்ன என்பதை முதலில் குடும்பத்தினருக்கும் பின்னர் நாம் வாழும் சமுதாய அங்கத்தினர்களுக்கும் தெரியப்படுத்தி அதை நம்மால் ஆன அளவு அமுல் படுத்திக் காட்டிச் சிறந்த வழிகாட்டியாக அமையலாம்.

மாதம் தோறும் கட்ட வேண்டிய பில் பணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி கம்பெனிகளிடம் பேப்பரில் பிரிண்ட் செய்யப்படும் பில்களை அனுப்ப வேண்டாம் என்று ஆலோசனை கூறினால் ஆயிரக்கணக்கான டன் அளவு பேப்பர் சேமிக்கப்படும். இதனால் காடுகளின் வளம் காக்கப்படும்.

பேப்பர்களில் ஒரு புறம் மட்டுமே எழுதுவதை விட்டு விட்டு இரு புறமும் எழுதுவதால் பேப்பர் செலவு பாதியாகக் குறையும். நமக்குத் தெரியாமலேயே ஏராளமான மரங்களையும் நாம் காத்தவர்கள் ஆவோம்.

Rubbish Pollution in Mumbai, Deccan Herald newspaper picture

பயன்பாட்டிற்கு லாயக்கில்லாத மின்னணுப் பொருள்களை கண்டபடி தூக்கி எறியாமல் அதற்குரிய முறைப்படி அவற்றை அகற்ற வேண்டும். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவை சிதைந்து போகாது என்ற அடிப்படை அறிவை நாம் கொள்வதோடு மற்றவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

நமது பகுதியில் உள்ள மறுசுழற்சி செய்யும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு பயனற்ற கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக் சாதனங்களை அகற்ற வருமாறு அவர்களை வேண்டிக் கொள்ளலாம்.

***

பாட்டில் குடிநீரில் பிளாஸ்டிக் துகள் அபாயம்! (Post No.5257)

Written by S NAGARAJAN

 

Date: 25 JULY 2018

 

Time uploaded in London –   16-04 (British Summer Time)

 

Post No. 5257

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

 

சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 21-7-2018 முதல் 31-7-2018 முடிய தினமும் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் இடம் பெறும் உரைகளில் முதலாவது உரை கீழே தரப்படுகிறது.

 

பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரில் பிளாஸ்டிக் துகள்களின் அபாயம்!

ச.நாகராஜன்

 

நமது உடல் 60 சதவிகித நீரைக் கொண்டுள்ளதாக இருக்கிறது. உடலில் உள்ள திரவங்களை சமனப்படுத்துவது, ஜீரணத்திற்கு உதவுவது, உடல் உஷ்ணநிலையைச் சீராக வைத்திருப்பது உள்ளிட்ட ஏராளமான பயன்களை நாம் அருந்தும் நீரே தருகிறது.

 

 

இன்றைய நாட்களில் பயணத்தின் போதும், வெளியிடங்களுக்குச் சாதாரணமாகச் செல்லும் போதும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை எடுத்துச் செல்வது வாடிக்கையாக இருக்கிறது.

 

 

இவை சுத்திகரிக்கப்பட்டவை என்ற எண்ணத்துடன் எடுத்துச் செல்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இதில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதாக இதைப் பயன்படுத்துவோர் உலக சுகாதார நிறுவனம் எனப்படும் World Health Organization இடம் தெரிவித்துள்ளனர்.

 

 

இதைப் பற்றி அக்கறை கொண்ட உலக சுகாதார நிறுவனம், பாட்டிலில் அடைத்து விநியோகிக்கப்படும் குடி நீரில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கும் அபாயம் பற்றி ஒரு மதிப்பீட்டைச் செய்யப் பணித்திருக்கிறது.

 

 

மைக்ரோபிளாஸ்டிக் எனப்படும் நுண் பிளாஸ்டிக் துகள்கள் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரில் கலந்து உட்கொள்கையில் உடலில் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை அது ஆய்வு செய்ய முடிவெடுத்திருக்கிறது.

 

வாழ்நாள் முழுவதும் இப்படிப்பட்ட பாட்டில் நீரை அருந்தி வருவதால் ஏதேனும் தீய விளைவுகள் ஏற்படுமா என்பதை ஆராய்வது அவசியம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் குடிநீர் சுத்தம் பற்றிய ஒருங்கிணைப்பாளரான ப்ரூஸ் கார்டன் (Bruce Gordon) கூறியுள்ளார்.

பிளாஸ்டிக்கில் உள்ள நச்சுப்பொருள்கள் எந்த அளவுக்கு தீமை பயக்கும், உடலுக்கென்று ஒரு பாதுகாப்பு அளவு இருந்தாலும் கூட இப்படிப்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் எந்த அளவுக்கு அபாயகரமானவை என்பது அறிவது அவசியம் என்பது நிபுணர்களின் கருத்து.

 

உலக சுகாதார நிறுவனம் 9 நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட 11 வெவ்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் 250 பாட்டில்களில் ஆய்வைச் செய்துள்ளது.

இந்தச் சோதனைகள் அனைத்தும் ஸ்டேட் யுனிவர்ஸிடி ஆஃப்  நியூயார்க்கில் நடத்தப்பட்டுள்ளன.

 

ஆய்வின் முடிவில் ஒரு லிட்டர் குடிநீரில் சராசரியாக 10 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மிக நுண்ணிய துகள்கள் பிளாஸ்டிக் என்று கருதப்படுபவை ஒரு லிட்டருக்கு சராசரியாக 314 இருக்கிறது.

 

உடலிலிருந்து வெளியேறும் கழிவுகளுடன் இந்த நுண்ணிய துகள்கள் வெளியேற வாய்ப்பு உண்டென்றாலும் பிளாஸ்டிக், சிதைவுறாத அபாயகரமான மாசு என்பது குறிப்பிடத்தக்கது  காய்ச்சி ஆறிய நீர் எப்போதுமே நலம் பயக்கும் என்ற பண்டைய பழக்கம் இன்று அர்த்தமுள்ளதாக ஆகிறதல்லவா!

 

***

சுற்றுப்புறம் காப்போம்; எதிர்கால சந்ததியினரைக் காப்போம்!