
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Written by London swaminathan
Date: 17th September 2015
Post No: 2166
Time uploaded in London :– 12-45
(Thanks for the pictures)
கடவுள் துதிகள், தோத்திரங்கள், பாடல்களைப் படிப்போரைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம் உருவாகிறது. இதை நாம் அறிய மாட்டோம். யோகிகளும், ஞானிகளும் அறிவர். நம்மைச் சுற்றி ஒரு ஒளிவட்டமும் இருக்கிறது என்று ஆன்றோர் சொல்லுவர். இதே போல நம்முடைய பூர்வ ஜன்ம பாப புண்ணியங்களும் நம்மைத் தொடர்ந்தே வருவதை அவர்கள் காண முடியும். சில சொந்த அனுபவங்களைக் கொண்டு நான் இதைச் சொல்கிறேன்.
மதுரை தினமணி பத்திரிகையில் என் தந்தை திரு.வெ.சந்தானம் செய்தி ஆசிரியராக வேலை பார்த்த காலத்தில் மதிப்புரைக்கு என்று வாரம் தோறும் நிறைய புத்தகங்கள் வரும். அதில் ஒன்று தஞ்சை மாவட்டம், கருப்பக்கிளர், பைந்தமிழ்ப் பண்ணை, சு.அ.இராமசாமிப்புலவர் 20-11-1962-ல் வெளியிட்ட “செல்வத் திறவுகோல்” என்று தலைப்பிட்ட, கவசங்களின் தொகுப்பு ஆகும். அதில் விநாயக கவசத்தால் ஏற்படும் பலன்களை முன்னுரையில் எழுதிவிட்டு இதைப் படிப்பவர்கள் நகைப்பார்கள் என்று தெரியும், ஆயினும் இதை வெளியிடுகிறேன் என்று அவர் எழுதியுள்ளார். அதில், சிலர் சிறையிலிருந்து விடுதலை பெற தான் படித்துப் பல கிடைத்ததையும், இந்தியாவைத் தாக்கிய சீனப் படைகள் பின்வாங்க வேண்டுமென்று தான் படித்துப் பலன் பெற்றதையும் சொல்கிறார். அந்தப் புத்தகம் என் கைக்கு வந்த காலத்திலிருந்து நானும் கவசம் சொல்லி வருகிறேன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இருக்கலாம்.

கொஞ்சம் சுய புராணம்! மன்னிக்கவும்.
லண்டனில் நான் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் உடையவன். எல்லோரும் கிறிஸ்துமஸ் ஹாலிடே, ஈஸ்டர் ஹாலிடே என்று எட்டு மணி வரை தூங்கினாலும் எனக்கு காலை ஐந்து மணிக்குப்பின் படுக்கையில் இருக்க முடியாது. வேலையில் கொஞ்சம் தூக்கம் வரத்தான் செய்யும். நைஸாக யாருக்கும் தெரியாமல் ஒரு நிமிடமாவது கண் அயர்ந்தால் புத்தெழுச்சி கிடைத்துவிடும். ஒரு நாள் அதிகாலையில் மாடியிலிருந்து எழுந்து கீழே வருகையில் ‘லைட்’ போடாமல், அட நமக்குப் பழக்கமான படிகள் தானே, என்று எண்ணி இறங்கினேன். மேல் படியிலிருந்து அப்படியே சறுக்கி கீழே வந்துவிட்டேன்!! எல்லாப் படிகளையும் என் முதுகெலும்பு மட்டும் தொட்டு வந்தது! பெரிய சப்தம்! வீட்டிலுள்ள எல்லோரும் லண்டனில் ஏதோ பூகம்பம் நிகழ்ந்துவிட்டதோ என்று எழுந்து ‘லைட்’டைப் போட்டுக் கொண்டு ஓடிவந்தனர். எனக்கோ ஒரு காயமும் ஆகாததில் மகிழ்ச்சி. ஆகையால் சிரித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் என்னைப் பார்த்து என்ன ஆயிற்று? அதிகாலை வேலையில் எதைக் கீழே போட்டீர்கள் என்று கேட்டனர். நான் என் உடம்பைத்தான் கீழே போட்டேன். ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னேன். அவர்கள் எல்லோரும் அரைத் தூக்க கலக்கத்தில் இருந்ததால், புரிந்ததோ, புரியவில்லையோ மீண்டும் சுகமாகத் தூங்கப் போய்விட்டார்கள்.
நான் அந்த சம்பவத்தை எண்ணி எண்ணி வியக்கிறேன். ஊமைக் காயம் கூடப் படவில்லை! கடவுள் காப்பாற்றினார். பின்னர் இதை எல்லோரிடமும் சொல்லி, விநாயக கவசம் படித்ததன் பலனே இது என்று சொல்லி எல்லோரையும் கவசம் படிக்கச் சொன்னேன். மகன்களுக்குத் தமிழ் படிக்கத் தெரியாதாகையால் (பேச மட்டுமே தெரியும்) கந்த சஷ்டி கவசத்தை ‘ஐபேடி’ல் கேட்பர். அதே போல ஹனுமான் சாலிசாவையும் கேட்பார்கள்.
இது ஒரு சம்பவம் மட்டுமிருந்தால் “கோஇன்ஸிடென்ஸ்” (தன்னிச்சையாக ஒரே நேரத்தில் நடந்த இரு செயல்கள்), ஒன்றிரண்டு “ரேர் இன்ஸிடெண்ட்ஸ்” (அபூர்வ சம்பவங்கள்) என்று விட்டு விடலாம். இன்னொரு விஷயத்தைக் கேளுங்கள்.

என் எதிரி நீலாம்பரி!
சென்னையிலுள்ள எனது அண்ணன் சீனிவாசனுக்கு யாரைப் பார்த்தாலும் எதிர்காலத்தைச் சொல்லும் சக்தி (பேஸ் ரீடிங் பவர்) உண்டு. 1990- ஆம் ஆண்டில் லண்டனுக்கு வந்தபோது, பொதுவான முறையில், மரியாதையின் நிமித்தமாக, நான் வேலை பார்க்கும் இடத்திலுள்ள, என் பரம விரோதிக்கு அவரை அறிமுகப்படுத்தி வைத்தேன். பேஸ் ரீடிங் சக்தி பற்றியும் சொன்னேன். அவர் விடுவதாக இல்லை. எங்கே பார்க்கலாம், என்னைப் பற்றிச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று ஆரம்பித்தார். எனக்கு முன்னாலேயே அவரைப் புகழ்ந்து, அவரை யாராலும் அசைக்கமுடியாது என்று என் அண்ணன் சொல்லிவிட்டார்.
பின்னர் அறையிலிருந்து வெளியே வந்தபின்னர், “என்ன இது அநியாயம்? என் பரம விரோதிக்குப் போய் இப்படி நல்லதாகச் சொல்லிவிட்டாய்? என்று வியப்புடன் கேட்டேன். அவரைச் சுற்றி முருகன் அருள் வளையம் இருப்பதாகவும் அதைத் தான் கண்டவுடன் பார்த்த நிகழ்ச்சிகளை அப்படியே சொன்னதாகவும் கூறினார். எனக்கும் அந்தப் பெண்மணி, சிறுவயதிலிருந்தே, அவர் கந்த சஷ்டிக் கவசம் படிப்பதைப் பேச்சுவாக்கில் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அவர் அம்மா கற்பித்தது அது. ஆனால் வெளியே பேசும்போதெல்லாம் தான் ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்று “பெருமையாக”ச் சொல்லிக் கொள்வார்! அவர் சிறு வயதிலிருந்து படித்த, அவர் அம்மா, காலில் செருப்புகூட இல்லாமல் கப்பலில், வெளிநாடு சென்ற தன் பெண்ணைக் காப்பாற்று என்று நாள்தோறும் கதறிப்படித்த, அந்தக் கவசமே அவரைச் சுற்றிக் காத்து நின்றது என்று எனக்குப் புரிந்தது. நீங்கள் மற்றவர் நலனுக்காகக் கவசம் படித்தாலும் பலன் உண்டு என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

என் அம்மா “கடித்த” வேலைக்காரி!
சென்னை அடையாறில் உள்ள எனது தம்பியின் பங்களாவில் என் அம்மா வசித்துவந்த காலம். அங்கே ஒரு வேலைக்கார பெண்மணி இருந்தார். என் அம்மாவுக்கு வயது எழுபதுக்கு மேல். அவருக்கு கூனும் விழுந்துவிட்டது. ஆனால் தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தோத்திரங்களை வாசித்துக் கொண்டிருப்பார். வீட்டில் என் அம்மா மட்டும் இருப்பதை அறிந்து ஒரு முகமூடியை மூஞ்சியில் போட்டுக்கொண்டு வந்து என் அம்மாவைத் தாக்கி கழுத்திலிருந்த தங்க நகைகளைப் பறித்தார். என் அம்மா, ஒரே கடியாக அவரைக் கடிக்கவே அந்தப் பெண் அலறிய வாறு ஓடிவிட்டார். அவர் குரல், நடை, உடை, பாவனைகளை வைத்து அடையாளம் காணவே அவரைப் போலீஸார் வந்து பிடித்தனர். சென்னைப் பத்திரிக்கைகளில் இச்செய்தி அப்போது வெளியாகியது. இது பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி. அவரை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லி, என் அம்மா போலீஸில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிவிட்டார்.
“அம்மா, உனக்கோ உடலில் கொஞ்சமும் தெம்பு கிடையாது. எப்படிக் கீழேவிழாமல் கடித்தாய்? அதுவும் கடிப்பது என்பது பிராமண குலத்தில் மிகவூம் அபூர்வமே” என்று நாங்கள் கேட்டோம். அவர் தினமும் படிக்கும் நரசிம்ம ஸ்த்தோத்திரமே இப்படி அவரைச் சிங்கமாக மாற்றியது. ஆதிசங்கரரைப் பலியிட காபாலிகர் அழைத்துச் சென்றபோது அவரது சீடரே நரசிம்மாவதாரம் எடுத்து அந்தக் காப்பாலிகனைக் கிழித்தெறிந்தது உடனே நினைவுக்கு வந்தது. துதிப்பாடல்களுக்கு அவ்வளவு சக்தி! இப்படி நூற்றுக் கணக்கான சம்பவங்களை நான் சொல்லலாம். ஆனால் அது சுயபுராணமாக, என் “ஆட்டோபையோகிராபியாக” மாறிவிடும் என்று அஞ்சி இத்துடன் நிறுத்துகிறேன்.
நம்பிக்கையுள்ளவர்கள் விருப்பமான கவசத்தைப் படியுங்கள். பலன் உண்டு. குற்றாலம் அருவியின் பின்னாலுள்ள குகையில் தவறி விழுந்த ஒரு பிராமண இளைஞன், பல நாட்களுக்கு காயத்ரீ ஜபம் செய்துகொண்டிருக்க, இடையர்களும் வேடர்களுமே அறிந்த அந்த இடத்துக்கு வந்த, ஆட்டிடையர்கள் அவரைக் காப்பாற்றிய செய்தி முன்னர் தினமணியில் வந்தது.
மந்திரம் என்பதன் பொருளே மனனம் செய்பவரைக் காப்பாற்றும் என்பதுதானே!

விநாயக கவசமும் அதன் பலனும்:–
வளர் சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க!
வாய்ந்தசென்னி அளவுபடா அதிக சவுந்தர தேகம்
மதோற்கடர்தாம் அமர்ந்து காக்க! விளரற
நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க!
புருவந் தம்மைத் தளர்வில் மகோதரர் காக்க!
தடவிழிகள் பாலசந்திரனார் காக்க!
கவின்வளர் அதரம் கசமுகர் காக்க!
தால் அங்கணக்கீரிடர் காக்க!
நவில்சிபுகம் கிரிசை சுதர் காக்க!
நனி வாக்கை விநாயகர்தாம் காக்க!
அவிர்நகை துன்முகர் காக்க!
அள் எழிற் செஞ்செவி பாசபாணி காக்க!
தவிர்தலுறாது இளங்கொடிபோல் வளர்மணி
நாசியைக் சித்திதார்த்தர் காக்க! காமருபூ
முகந்தன்னைக் குணேசர் நனி காக்க!
களம் கணேசர் காக்க!
வாமமுறும் இருதோளும் வயங்கு கந்தபூர்வசர்
தாம் மகிழ்ந்து காக்க! ஏமமுறு மணிமுலை
விக்கின விநாசர் காக்க! இதயந் தன்னைத்
தோமகலுங் கணநாதர் காக்க!
அகட்டினைத் துலங்கு ஏரம்பர் காக்க!
பக்கம் இரண்டையும் தராதரர் காக்க!
பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க!
விளங்கிலிங்கம் வியாளபூடணர்தாம் காக்க!
தக்க குய்யந்தன்னை வக்கிரதுண்டர் காக்க!
சகனத்தை அல்லல் உக்க கணபன் காக்க!
ஊருவை மங்களமூர்த்தி உவந்து காக்க!
தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க!
இருபதம் ஏகதந்தர் காக்க! வாழ்கரம்
க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க! முன்கையை
வணங்குவார் நோய் ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க!

கேழ்கிளறும் நகங்கள் விநாயகர் காக்க!
கிழக்கினிற் புத்தீசர் காக்க!
அக்கினியிற் சித்தீசர் காக்க!
உமாபுத்திரர் தென்னாசை காக்க!
மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க!
விக்கினவர்த்தனர் மேற்கென்னுந் திக்கதனிற் காக்க!
வாயுவிற் கசகன்னர் காக்க!
திகழ் உதீசி தக்க நிதிபன் காக்க!
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க!
ஏகதந்தர்பகல் முழுதுங் காக்க! இரவினும் சந்தி
இரண்டன் மாட்டும் ஒகையின் விக்கினகிருது காக்க!
இராக்கதர் பூதம் உறு வேதாளம் மோகினி பேய்
இவையாதி உயிர்த்திறத்தால் வருந்துயரும்
முடிவிலாத வேகமுறு பிணிபலவும் விலக்குபு
பாசாங்குசர்தாம் விரைந்து காக்க!
மதி,ஞானம், தவம், தானம், மானம், ஒளி, புகழ்,
குலம், வண்சரீரம், முற்றும் பதிவான தனம்,
தானியம், கிர
கம், மனைவி, மைந்தர், பயில்
நட்பாதிக் கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க!
காமர் பவுத்திரர் முன்னான விதியாரும்
சுற்றமெலாம் மயூரேசர் எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க!
வென்றி,சீவிதம் கபிலர் காக்க!
கரியாதியெலாம் விகடர் காக்க!
என்றிவ்வாறிது தனை முக்காலுமும் ஓதிடின்,
நும்பால் இடையூறென்றும் ஒன்றுறா, முனிவரர்காள்,
அறிமின்கள், யாரொருவர் ஓதினாலும் மன்ற ஆங்கவர்
தேகம் பிணியற வச்சிர தேகமாகி மின்னும்!

விநாயக கவசப் பலன்
யாத்திரையில் தோத்திரம் செய்தால் சகல
விக்கினமும் இரியல் போக
மூத்த பயன் கைகூடும் சமரின் மொழிந்
திடில் விசயம் முற்றும் நாளும்
ஏத்தியிரு முறை இருபத் தொருநாள் வந்
தித்டின் மாரணம் ஈண்டேதம்
பனமாதி நிலை பேறெய்தும்.
நித்தலு மூவேழுமுறை செபித்திடில்கா
ராக்கிருகநீங்கு மன்னர்
பொத்துமுளநிட்டூரம் போம் அரையன்
தனைக் காணும்போது முக்கால்
பத்தியின் ஓதிடின் அவன் தான் வசப்படுவன்
இதைத் தாளிப் பனைமெல்லேட்டில்
வைத்தெழுதிப் படிப்பினும் கேட்பினும் பூசை
வயக்கினும் வல் இடரும் தீரும்.
அன்பு, உறுதி, ஆசாரம் உடையார்க்கு இக்
கவசத்தை அறைக! அல்லார்க்கு
என்பெறினும் உரையற்க! எனக்கிளந்து
மரீசி தனது இருக்கை உற்றான்.
–சுபம்–

You must be logged in to post a comment.