Written by S NAGARAJAN
Date: 23 July 2017
Time uploaded in London:- 5-31 am
Post No.4106
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
புத்த போதனை
சந்தோஷம் அடைய உதவும் நான்கு விஷயங்கள்!
ச.நாகராஜன்
புத்த மதத்தின் கொள்கைகளை உள்ளது உள்ளபடியும் புத்தரின் போதனைகளை விளக்கமாகவும் சொல்ல மலேசியாவில் 1964இல் புத்த தர்ம பிரசாரகர் ஸ்ரீ கே. ஸ்ரீ தம்மானந்தா அருமையான சொற்பொழிவுகளை ஆற்றினார். ஏராளமானோர் அவற்றில் பங்கு கொண்டு தங்கள் சந்தேகங்களைக் கேட்டு விளக்கமும் பெற்றனர்.
சந்தோஷம அடைய உதவும் வழிகளைப் பற்றி புத்த பகவான் கூறியதைப் பற்றி அவர் ஒரு உபந்யாசத்தில் கூறியதன் சாராம்சத்தை இங்கே பார்க்கலாம்.
ஒரு சமயம் திக்ஹஜானு என்ற ஒருவன் புத்தரைத் தரிசித்தான். “ஐயனே!நாங்கள் எல்லாம் சாமானியர்கள். குடும்பம், மனைவி, மக்கள் என்று வாழ்ந்து வருபவர்கள். எங்களைப் போன்றோருக்கு இந்த உலகத்திலும் அதற்குப் பின்னரும் சந்தோஷத்தைத் தரும் விஷயங்கள் என்னென்ன என்பதைச் சொல்லி அருள வேண்டுகிறேன்” என்று இறைஞ்சினான்.
புத்தர் கருணை கூர்ந்து அவனை நோக்கி இப்படி அருளினார்:
“இந்த உலகத்தில் சந்தோஷத்தை அடைவதற்கு நான்கு விஷயங்கள் உள்ளன.
முதலாவது உத்தான சம்பதம்.
ஒரு மனிதனானவன் திறமை வாய்ந்தவனாகவும், தொழில் நேர்த்தி கொண்டவனாகவும் ஆர்வம் உடையவனாகவும், மிகுந்த சக்தி வாய்ந்தவனாகவும் இருக்க வேண்டும். இது தான் உத்தான சம்பதம்.
இரண்டாவது அர்த்த சம்பதம்.
தர்மமான வழியில் தான் சம்பாதித்த பணத்தை அவன் நன்கு நெற்றியில் வியர்வை சிந்த அதைப் பாதுகாக்க வேண்டும். இது தான் அர்த்த சம்பதம்.
மூன்றாவ்து கல்யாண மித்தம்.
அவன் நல்ல நண்பர்களைக் கொண்டிருத்தல் வேண்டும். நல்ல விசுவாசமான, சம்பாதிக்கின்ற, நல்ல காரியங்களைச் செய்யும், தாராள மனதைக் கொண்டிருக்கும் புத்தி கூர்மை மிக்க நண்பர்களை அவன் கொண்டிருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட நண்பர்கள் தீமையான வழியில் அவனைச் செல்ல விடாமல் நல்ல வழியில் நடத்திச் செல்பவர்களாக இருத்தல் வேண்டும்.
நான்காவது சம ஜீவிகதம்.
அவன் தனது வருவாய்க்குத் தக்க விதத்தில் நியாயமான வழியில் செலவழிக்க வேண்டும்.அதிகமாகவும் செலவழிக்கக் கூடாது; குறைவாகவும் செலவழிக்கக் கூடாது. பேராசையுடன் செல்வத்தைச் சேமித்து வைக்கக் கூடாது; ஊதாரியாக இஷ்டப்படி செலவழிக்கவும் கூடாது. அதாவது தன் வருவாய்க்குத் தக்க விதத்தில் வாழ வேண்டும். இதுவே சம ஜீவிகதம்.
இந்த நான்குமே சந்தோஷத்தை அடைவதறகான விஷயங்கள்.
இதன் படி நடந்தால் சந்தோஷமே நீடித்து நிலைக்கும்.
புத்தரின் அருளுரை திக்ஹஜானுக்கு மட்டும் கூறப்படவில்லை. மனித குலத்தில் சந்தோஷம் அடைய விரும்பும் அனைவருக்காகவுமே உபதேசிக்கப்பட்டது.
அத்துடன் இந்த உலகத்திற்குப் பின்னாலும் சந்தோஷமாக இருக்க நான்கு விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் புத்த பிரான் அருளினார்.
முதலாவது சிரத்தை.
ஒழுக்கம், ஆன்மீகம் மற்றும் அறிவு ஆகியவற்றில் அவன் நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டிருக்க வேண்டும். இதுவே சிரத்தை.
அடுத்தது சீலம்.
வாழ்க்கையைக் கெடுக்கும் பேரபாயங்களான திருடுதல், ஏமாற்றுதல்,அடுத்தவன் மனைவி மீது ஆசை வைப்பது, தவறான வழிகளில் இறங்குவது, மதியைக் கெடுக்கும் குடி போதையில் இறங்குவது ஆகியவற்றிலிருந்து அவன் விலகி இருக்க வேண்டும். இதுவே சீலம் எனும் நல்லொழுக்கம்.
அடுத்து மூன்றாவது ககா.
அவன் தர்ம சிந்தையுடன் இருத்தல் வேண்டும். பணத்தின் மீது பற்று வைக்காமல் தயாள மனதுடன் நடந்து கொள்ள வேண்டும். இதுவே ககா.
அடுத்து நான்காவது பன்னா.
துன்பத்தை ஒரேயடியாக ஒழிக்கும் ஞானத்தை அவன் விருத்தி செய்து கொள்ள வேண்டும். அதுவே நிர்வாணத்திற்கு வழி வகுக்கும்.
இதுவே பன்னா.
ஆக சிரத்தா, சீலம், ககா, பன்னா ஆகிய நான்கையும் கடைப்பிடித்தால் இந்த வாழ்விற்குப் பின்னாலும் சந்தோஷம் கிடைக்கும் என்று புத்தர் அருளினார்.
வருவாயை எந்த விதத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற நுணுக்கமான விவரங்களைக் கூட அவர் விளக்கினார்.
சிகலா என்ற பெயருடைய வணிகன் புத்தரிடம் இது பற்றிக் கேட்க புத்த பகவான், வருவாயில் நான்கில் ஒரு பங்கை அன்றாட வாழ்விற்கும், நான்கில் இரண்டு பங்கை அவன் வணிக முதலீட்டிற்காகவும், நான்கில் ஒரு பங்கை ஆபத்துக் காலத் தேவைக்கான சேமிப்பிற்காகவும் பயன்படுத்த வேண்டும் என்று அருளினார்.
அனதபிண்டிகா என்ற ஒரு சீடர் புத்தரின் மீது பக்தி கொண்ட அணுக்க பக்தர். அவர் தான் சவத்தி என்ற இடத்தில் ஜேதவான மடாலயம் என்ற மடாலயத்தை அமைத்தவர். பெரும் வணிகரான அவரிடம் ஒரு சமயம் புத்த பிரான் கூறினார்: “சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஒரு சாமானியனுக்கு இந்த உலகத்தில் நான்கு விதமான சுகங்கள் உள்ளன.
முதலாவது ஆர்த்தி சுகம்.
நியாயமான வழியில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு பொருளாதார ரீதியில் கஷ்டமில்லாமல் பணம் இருக்கும் பாதுகாப்பினால் வரும் சுகம்.
இரண்டாவது போக சுகம்
தான் சம்பாதித்த பணத்தை தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும், தனது உறவினர் மற்றும் நண்பர்களுக்காகவும் அத்துடன் பல நல்ல காரியங்களுக்காகவும் செலவழிப்பதனல் வரும் சுகம் போக சுகம் ஆகும்.
அடுத்து மூன்றாவது அனான சுகம்.
எந்த வித கடனும் இல்லாமல் கடன் தொல்லையின்றி இருப்பது அனான சுகம்.
நான்காவது அனாவஜ்ஜ சுகம்.
ஒரு வித தப்பும் இல்லாத, எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் தீமையைக் கொண்டிராத, தூய்மையான வாழ்க்கையை வாழ்வதினால் வரும் சுகம் அனாவஜ்ஜ சுகம்.
புத்தரின் அருளுரையில் அவர் கூறிய முதல் மூன்று சுகங்கள் பொருளாதார மற்றும் உலோகாயத ரீதியிலான சுகங்கள்.
நான்காவது சுகமோ தூய்மையான வாழ்வினால் கிடைக்கும் ஆன்மீக சுகம் ஆகும்.
புத்தரின் போதனைகள் இப்படித் தெளிவாயும் சுருக்கமாயும், அமைந்திருந்தன. அவரை அண்டியோர் புத்த வ்ட்டத்திற்குள் இழுக்கப்பட்டு நல் வாழ்வை மேற்கொண்டு சுகத்தையும் சந்தோஷத்தையும் அடைந்தனர்.
காலம் காலமாக நிரூபிக்கப்பட்ட இந்த போதனைகள் இன்றைக்கும் என்றைக்கும் பொருந்தும்!
***