புத்த பிரானே! எனக்கு அந்த லட்டைக் கொடுங்கள் (Post.9447)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9447

Date uploaded in London – –  –2 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புத்த பிரானே! எனக்கு அந்த லட்டைக் கொடுங்கள்! : கர்ம சதகம்!   

ச.நாகராஜன்

‘கர்ம சதகம் என்பது புத்த மதத்தின் பிரதானமான கர்ம பலன் சம்பந்தமான நூல். இதில் 120 அவதானங்கள் உள்ளன. ஒவ்வொரு அவதானத்திற்கும் ஒரு குட்டிக் கதை உண்டு. அது அற்புதமாக கர்ம பலன்களைப் பற்றி விளக்கும்.

ஒரு குட்டிக் கதை இங்கே தரப்படுகிறது.

கதையின் பெயர் : ‘அதை எனக்குக் கொடுங்கள்!

ஒரு அந்தணச் சிறுவன் புத்தரிடம் வந்தான். அப்போது ஒருவர் புத்தரின் திருவோட்டில் ஒரு லட்டை இட்டார். அதைப் பார்த்த அந்த அந்தணச் சிறுவன், “புத்த பிரானே! அந்த லட்டை எனக்குக் கொடுங்கள் என்று கூவினான்.

கருணையே திரு உருவமான புத்த பிரான் அந்தச் சிறுவனுக்கு உடனடியாக லட்டைத் தருவதாகச் சொன்னார் – ஒரு நிபந்தனையின் பேரில்!

என்ன அந்த நிபந்தனை?

புத்தர் கூறினார் : “குழந்தாய்! ‘இந்த லட்டு எனக்கு வேண்டாம் என்று நீ சொன்னால் உனக்கு இந்த லட்டை நான் தந்து விடுகிறேன்.

உடனே அந்தப் பையன், “புத்தரே, எனக்கு அந்த லட்டு வேண்டாம் என்றான்.

தான் வாக்களித்தபடியே புத்தர் உடனடியாக அந்த லட்டை அந்தப் பையன் கையில் கொடுத்தார்.

பல சீடர்களும், பொது மக்களும் இந்தச் சம்பவத்தைப் பார்த்த வண்ணம் இருந்தனர். புத்தரின் அணுக்கத் தொண்டரான அனதபிந்ததரும் இதைப் பார்த்தார். அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. அன்று புத்தருக்கு பிக்ஷையாகக் கிடைத்தது அந்த ஒரு லட்டு தான். அதையும் அந்தப் பையன் கேட்டு வாங்கிக் கொண்டான். புத்தர் அன்று பட்டினி அல்லவா கிடப்பார்!

அனத்பிந்ததர் அந்தப் பையனை நோக்கி, “ பையா! உனக்கு ஐநூறு பொன் நாணயங்களைத் தருகிறேன். அந்த லட்டை புத்தருக்குத் திருப்பித் தந்து விடு என்றார்.

பையன் இணங்கினான். லட்டை புத்தரிடமே திருப்பித் தந்தான்.

அனைத்து சீடர்கள் மனதிலும் ஒரு கேள்வி ஓடியது. ஏன் புத்த பிரான் அந்தப் பையனிடம், “எனக்கு இந்த லட்டு வேண்டாம் என்று சொல்லச் சொன்னார்?

ஒருவர் புத்தரிடமே இந்தக் கேள்வியைக் கேட்டு விட்டார்.

உடனடியாக புத்தர் பதில் அளித்தார். அதில் தான் கர்ம பலன் விளக்கம் கிடைத்தது.

“சீடர்களே! இதோ இந்த அந்தணச் சிறுவன் எனக்கு இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று பல்லாயிரம் ஜென்மங்களாகத் தன் தேவைக்கு  ஒரு அடிமையாக ஆகி விட்டான். ஆகவே தான் அவனிடம் ‘அந்த லட்டு எனக்கு வேண்டாம் என்று சொல்லச் சொன்னேன். அது அவனுக்கு அந்தப் பழக்கத்தை விட ஒரு வழி காட்டியாக அமையட்டும் என்றே அப்படிச் சொன்னேன். அவன் ஆசையை விடுத்து உயரிய நிலைக்கு உயர வேண்டும் அல்லவா, அதற்காக இதைச் செய்தேன்.

பையனைப் பார்த்தவுடன் அவனது கர்ம சரித்திரத்தை பல்லாயிரம் ஜென்மங்கள் ஊடுருவி புத்தர் கண்டார். அந்தப் பையனுக்கு தன் கர்மம் பற்றி ஒன்றும் தெரியாது; அதிலிருந்து தப்பிக்க வழியும் தெரியாது.

“வேண்டும், இன்னும் வேண்டும்” – அது தான் அவனுக்குத் தெரியும்.

எல்லையற்ற கருணை கொண்ட புத்தர் இதைக் கருணையினால் செய்தார்;தண்டிப்பதற்காக அல்ல.

அவனது கர்மங்களின் சரித்திரத்தை நன்கு அறிந்த அவர் அதில் தலையிட்டு அவன் விடுதலை பெற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கித் தந்தார்.

நமது அன்றாட வாழ்க்கையில் தீய பழக்கம் ஒன்றிற்கு அடிமையான ஒருவன் தன் மீட்சிக்கான எண்ணத்தைத் திருப்பித் திருப்பி எண்ணியவாறே இருந்தால் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முடியும். புத்தரின் இந்தச் செய்கை, ஒரு கர்ம பலனின் எல்லையற்ற தீமையிலிருந்து விடுபட வழி காட்டுகிறது. வாயிலிருந்து வெளி வரும் ஒரு சின்ன வார்த்தை கூட வாழ்க்கையையே மாற்றி விட முடியும் என்பதை புத்தர் எடுத்துக் காட்டுகிறார், இதனால்!

இந்தச் சம்பவம் நமக்கு ஒரு பெரும் உத்வேகத்தைத் தருகிறது. ஒரு சின்ன நல்ல செயல் அல்லது எண்ணம் கூட நம்மை மாபெரும் தீங்கிலிருந்து விடுவிக்க வழி வகுக்கும் என்பதை இது காட்டுகிறது.

இப்படி 120 கதைகள் கர்ம சதகத்தில் உள்ளன. கர்ம  பலனைப் பற்றி அறிய விரும்பும் ஒருவர் கர்ம சதகத்தை அவசியம் படிக்க வேண்டும்!

***

tags-   கர்ம சதகம், லட்டு, புத்தர்

புத்தர் வழியில் …..! (Post No.8679)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8679

Date uploaded in London – – 14 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

புத்தர் வழியில் …..!

ச.நாகராஜன்

புத்த பிரான் தனது வாழ்நாள் காலத்தில் ஏராளமான இடங்களுக்குச் சென்று உபதேச நல்லுரை அருளினார்.

அவரது சீடர்கள் பல்லாயிரக்கணக்கில் பெருகினர். அவர் பரி நிர்வாண நிலையை அடைந்த பிறகு இந்த எண்ணிக்கை பல லட்சமாக மாறி பல கோடிகளாகப் பெருகியது.

புத்தரின் தலையாய சீடர்களாகக் கருதப்படுபவர் பத்துப் பேர்.

1)சரிபுத்ரா 2) மொகல்லனா 3) மஹா கஸ்யபர் 4) சபூதி 5) பூர்ண மைத்ராயணி புத்ரா 6) காத்யாயனர் 7) அனுராதா 8) உபாலி 9) ராகுலர் 10) ஆனந்தா (இந்த வரிசை மாற்றியமைக்கப்பட்டும் இருக்கிறது; சில சீடர்களின் பெயரும் மாற்றி உரைக்கப்படுவதும் உண்டு)

புத்தரின் உரைகளை அப்படியே நமக்கு நல்கியவர் ஆனந்தா.

அவரைப் பற்றி முதலில் பார்ப்போம்.

ஆனந்தா

புத்தரின் 10 முக்கிய சீடர்களுள் முதன்மையானவர் ஆனந்தா. புத்தரின் வாழ்நாள் காலத்தில் கடைசி 25 வருட காலம் அவருடனேயே இருந்தவர் அவர்; புத்தரின் தந்தை வழியில் அவருக்கு நெருங்கிய உறவினரும் கூட!

ஆனந்தருக்கு அபாரமான ஞாபக சக்தி உண்டு.

ஒரு முறை கேட்டதை அப்படியே கிரகித்து மனதில் ஏற்றி விடுவார். மறுபடியும் அதை எப்போது கேட்டாலும் அப்படியே சொல்வார்.

புத்தர் எப்போதெல்லாம் உபதேச நல்லுரைகளை அருளினாரோ அப்போதெல்லாம் ஆனந்தர் உடனிருந்தார். ஆகவே புத்தரின் உபதேசங்களை அப்படியே அவர் மனதில் ஏற்றி விட்டார்.

புத்தபிரானின் மறைவுக்குப் பின்னர் – பரிநிர்வாணத்திற்குப் பின்னர் –  அவரது 500 சீடர்கள் – பிக்குகள் அடங்கிய முதல் மஹாசபையில் ஆனந்தர் முக்கிய பங்கை வகித்தார்.

புத்தரின் உபதேச உரைகளைச் சொல்லுமாறு அனைவரும் அவரைக் கேட்க அப்படியே வார்த்தை மாறாமல் புத்தபிரானின் அருளுரைகளை அவர் கூறினார்.

அந்த உரைகள் உடனடியாக அனைவராலும் மனதில் கிரகிக்கப்பட்டன; நூல் வடிவில் உருவாயின!

பெண் பிட்சுணிகளை சங்கத்தில் சேர்க்குமாறு புத்தரை வற்புறுத்தி வேண்டிக் கொண்டவரும் ஆனந்தரே. அவரால் தான் பிக்ஷுணிகள் சங்கத்தில் சேர முடிந்தது.

போதி தர்மர் (காலம்: வருடம் 528)

போதிதர்மரின் வரலாறு பல அதிசய நிகழ்வுகள் அடங்கிய ஒன்று. பாரதத்திலிருந்து தனியாக சீனாவிற்குச் சென்றார் அவர். தியானம் எப்படிச் செய்வது என்பதை அவர் அங்கு கற்பித்தார். அவரது வழிமுறை பிரபலமானது. அதுவே சான் புத்தப் பிரிவிற்கு (Chan Buddism) வழி கோலியது. ஆகவே சான் பிரிவின் நிறுவனராக உலகினரால் அவர் கொண்டாடப்படுகிறார். அவர் எழுத்து வடிவில் சில அருளுரைகளை நல்கியுள்ளார். என்ற போதிலும் அவரது Two Entries and Four Practices என்ற விரிவுரையே சான் பிரிவின் முக்கிய நூலாக அமைந்து விட்டது.

த்யானம் என்ற சம்ஸ்கிருத வார்த்தையே சீன மொழியில் சன்னா என்று அழைக்கப்பட்டது. அது மருவி சான் ஆனது. மனதை வழிப்படுத்தி அதன் உண்மையான ஸ்வரூபத்தை – புத்தா மனத்தை – அறிய வழி வகுப்பதே சான் தியான முறையாகும்.

லிஞ்ஜி ஜுவான் (Linji Yixuan) (காலம் : வருடம் 866)

சான் பிரிவில் லிஞ்ஜி எனப்படும் முறையை நிறுவியவர் லிஞ்சி ஜுவான். இது ஜப்பானிய மொழியில் ரிஞ்ஜாய் (Rinzai) என அழைக்கப்படுகிறது. டாங் வமிசம் (Tang Dynasty) ஆண்ட போது தோன்றியது இது. இவர் சற்றுக் கடுமையான நடைமுறைகளைக் கையாண்டவர். தனது சீடர்களைத் தீவிரப் பயிற்சி செய்யுமாறு அவர் கூறுவார். உரத்த குரலில் கடுமையாகப் பேசுவார். சீடர்களை அடிப்பதும் உண்டு.

மாஜு டாவோய் ( Mazu Daoyi) (காலம் : 709-788)

சான் பிரிவில் பிரபலமான மாஸ்டர் மாஜு. புத்த நிலையை எப்படி அடைவது, அதற்கு மனதிற்கு என்ன பயிற்சிகள் தர வேண்டும் என்பதை அற்புதமாக இவர் சொல்லிக் கொடுப்பார். திடீரென்று க்ஷண நேரத்தில் ஞான நிலையை எய்தும் கடினமான வழிகளை இவர் உபதேசித்தார்.

இப்படி புத்த தர்மத்தில் நூற்றுக் கணக்கான தலைமை ஆசார்யர்கள் தோன்றி பிக்ஷுக்களை வழி நடத்தினர்.

tags- மாஜு டாவோய், போதி தர்மர், ஆனந்தா, புத்தர்

மேடையில் அழகி , ‘கிழவி’ ஆக மாறிய விந்தை (Post No.7680)

Written by LONDON SWAMINATHAN

Post No.7680

Date uploaded in London – 11 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

2600 ஆண்டுகளுக்கு முன்னர் மகத சாம்ராஜ்யத்தை ஆண்ட மாமன்னனின் பெயர் பிம்பிசாரன். அவனுடைய மனைவியின் பெயர் மஹாராணி க்ஷேமா . அவள் அழகின் இலக்கணம். தங்கத்தில் வார்த்தெடுத்த பொற்சிலை. உலகம் வியக்கும் அழகி. சதா சர்வ காலமும் தன்  அழகை தானே கண்டு வியப்பாள் . ‘மேக்  அப்’ (Make up) சாதனங்களுடன்தான் நடப்பாள் ; தூங்குவாள் . அத்தகைய குணத்தை எப்படி மாற்றுவது என்று பிம்பிசாரன் தவித்தான்.

புத்தர் பிரானின் வழி நடந்தவன் பிம்பிசாரன். மகத  சாம்ராஜ்யத்தின் தலை நகரான ராஜக்ருஹத்தில் இருந்த ‘வேலு வனம்’ என்ற மிகப்பெரிய தோட்டத்தை புத்த சங்கத்துக்கு தானமாக அளித்தவன் . அந்த மாபெரும் அரசாங்க தோட்டத்தில் புத்தர் வந்து தங்கி அருளுரை ஆற்றிக்கொண்டிருந்தார் .

பிம்பிசாரனுக்கு ஒரு ஆசை .

அன்பே! ஆருயிரே! தேனே, மானே, கற்கண்டே ! நாம் இருவரும் இன்று புத்தர் பிரானைச் சந்தித்து நமஸ்கரித்து வருவோம் என்றான். அவள் மாட்டேன் என்று தலையை அசைத்தாள். அதற்கென்ன, உனக்கு எப்போது சவுகரியமோ அப்போது தோழிகளுடன் சென்று அவர் பாத கமலங்களைப் பூஜித்து வா என்றான் கெஞ்சலாக , கொஞ்சலாக !

மாட்டவே மாட்டேன் ! புத்தனும் வேண்டாம், பித்தனும் வேண்டாம் என்றாள் மஹாராணி க்ஷேமா.

அவள் மனதில் நிழல் ஆடிய விஷயம் பிம்பிசாரனுக்குப் புரிந்தது. ஸதா ஸர்வ காலமும் ‘மேக் அப்’ (Toiletries)  சாதனங்களுடன் உலா வரும் தன்னை புத்தர் உதாசீனப்படுத்திவிடுவாரோ  என்று அவள் அஞ்சுவது அவனுக்குத் தெரிந்தது.

PLAN – B

ஆகையால் பிளான் ஏ – க்குப் பதிலாக பிளான் -பி (Plan B) யை  அமல் படுத்தினான் .

தோழிமார்களைக் கூப்பிட்டு வேலு வனத்தின் புகழ் பாடுங்கள் ;அதன் இயற்கை அழகை விதந்து ஓதுங்கள். அவளை எப்படியாவது வேலு வனம் போகத் தூண்டி விடுங்கள் என்றான். அத்தனை தோழி மார்களும் வேலுவனத்தின் புகழை கோரஸ் (Chorus)  பாடினார்கள் . மன்னனின் பிளான் -பி ( Plan B) பலித்தது.

“அத்தான் ! நான் வேலு வனம் போக ஆவன செய்யுங்கள்” என்றாள் மாமன்னனிடம் .

அதற்கென்ன , கண்ணே!  இதோ 4 வெள்ளைக் குதிரைகள் பூட்டிய  தங்க ரதம் நிற்கிறது. உனக்குத் துணையாக ரத ,கஜ ,துரக, பதாதி நாற்படைகளும் வரும் ; அமைச்சர் பெருமக்களும் உடன் வந்து உபசரிப்பர் என்றார் .

மந்திரிமார்களுக்கு ரஹஸ்ய உத்தரவும் பிறப்பித்தார் . இன்று மாலை சூரியன் அஸ்தமிப்பதற்குள்  இவளை புத்தர் சந்நிதிக்கு அழைத்துச் சென்று விடுங்கள் ; பின்னர் அரண்மனைக்கு வாருங்கள் என்று.

தங்க ரதத்தில் தங்கச் சிலை பவனி வந்தாள் ; நாள் முழுதும் வேலு வனக் குயில்களுடன் பாடினாள் ; மயில்களுடன் ஆடினாள் ; கிளி, மான் ஆகியவற்றைக் கொஞ்சி விளையாடினாள்.

மாலை சூரியன் மலை வாயில் விழத் துவங்கினான் ; அவளும் அரண்மனைக்குப் போக ஆயத்தமானாள் ; தோழிமார்கள் ,” தலைவி போகும்போது புத்தர் பிரானை வேடிக்கை பார்த்துக் கொண்டே போவோமே” என்றனர். அவளோ வேண்டாம் ரொம்ப (Very tired)  ‘டயர்டாக’ இருக்கு. டைரக்ட்டாக (direct) வண்டியை அரணமனைக்கு விட்டு என்றாள் .

புத்தர் உருவாக்கிய பேரழகி !

மாமன்னரின் கட்டளையை மனதிற்கொண்ட மந்திரிமார்கள் நேரடியாக தங்க ரத்தத்தை வேலு வனத்துக்கு விட்டு புத்தர் பார்வையில் நிறுத்தினர். அரண்மனை வந்துவிட்டது என்று எண்ணி ரதத்தில் இருந்து இறங்கிய உலக மஹா அழகி ஒரு அரிய காட்சியைக் கண்டாள். புத்தர் பிரானுக்கு ஒரு உலகப் பேரழகி விசிறி வீசிக்  கொண்டிருந்தாள் ; ரம்பா , மேனகா, ஊர்வசி , திலோத்தமா , ரதி ஆகியோரின் ஓவியங்களைக் கண்டிருந்த அவளுக்கு ஒரே (Big confusion) ‘கன்பியூஷன்’ ; ஓவியம் எல்லாம் சேர்ந்து ஒட்டுமொத்தமாக உயிர்பெற்று வந்து விட்டனவோ என்று நினைத்தாள் ; தன்னுடைய  பொன் வண்ண உடலையும் நோட்டமிட்டாள் . புத்தர் பிரான் அருகில் நிற்கும் பேரழகியின் பக்கத்தில் நிற்கக்கூட  தனக்கு அருகதை இல்லை என்பதை உணர்ந்தாள் ; இப்படி எண்ண ஓட்டம் மனதில் ஆற்றுவெள்ளம் (stream of thoughts)  போல பிரவாஹித்த தருணத்தில் மேடையில் மேலும் ஒரு அற்புதம் நடந்தது ; அந்த உலக மஹா அழகி வயதாகி ‘மாமி’ (aunty) போல ஆனாள் ; கண்ணைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தாள்; அழகி ‘கிழவி’ ஆய் , ‘டமால்’ என்று கீழே விழுந்தாள் ; புத்தரின் உபன்யாசத்தை செவிமடுக்க வந்த கூட்டமோ இதைக் கொஞ்சமும் கவனியாது அவரது உபன்யாச ஆனந்தத்தில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தது . புத்தர் பிரான் தம்மபதத்தின் 347ஆவது ஸ்லோகத்தை திருவாய் மலர்ந்தருளி விளக்கிக் கொண்டிருந்தார்

“சிலந்தி வலை பின்னி அதற்குள்ளேயே அகப்பட்டுக்கொண்டு வளைய வருவது போல ஆசைவலை  பின்னி அகப்பட்டுக் கொள்கிறான் மனிதன்; எவன் ஒருவன் அந்த வலையைக் கிழித்துக்கொண்டு வருகிறானோ அவனே ஜனன- மரணச் சூழலிருந்து விடுபட்டு உயர்நிலையை அடைகிறான்” என்று உபதேசித்தார் ; மஹாராணியும் புத்தரின் பாத கமலங்களில் விழுந்து வணங்கிவிட்டு அரண்மனைக்கு விரைந்து ஏகினாள் .

மன்னனும் எதிர்கொண்டழைத்து அன்பே! வேலு வனம் எப்படி இருந்தது ? “என்று வினவினார் ; அவளோ விடையிறுத்தாள் – புத்தரையும் கண்டேன் என்றாள் . “அட, அப்படியா ? நீ அதிர்ஷ்டசாலிதான்” என்றான் .

“உம்மைவிட நான் அதிர்ஷ்ட சாலி

கண்டேன் அவர் திருப்பாதம்!

கண்டறியாதன கண்டேன்!!”.

நீவிர் இதுவரை அறியாததையும் அறிந்தேன்;  எனக்கு இந்த அரண்மனை வாழ்வு வெறுத்துவிட்டது ; நன் புத்த பிக்ஷுணியாக விரும்புகிறேன் என்றாள் ; மன்னரும் நல்ல நாள் பார்த்து அவளைத் தங்கப் பல்லக்கில் வைத்து புத்த சங்கத்துக்கு அனுப்பினான்.

மஹாராணி க்ஷேமா வாழ்ந்த பிஹார் மண் அற்புத சக்தி வாய்ந்தது ; புத்தர் பிரான் உலாவும் முன்னரே ஜனக மாமன்னனையும் ஸீதா தேவியையும் கண்ட  பிரதேசம் அது. மைத்ரேயியும் கார்க்கி வாசக்கனவியும் அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சர்வதேச தத்துவ மகாநாட்டில் பங்கேற்று யாக்ஞ வாக்ய ரிஷியைக் கேள்வி கேட்ட நாடு அது. அப்பேற்பட்ட புனிதப் பெண்மணிகளுக்கு நிகராக க்ஷேமாவும் உயர்ந்ததால் வியப்பதற்கு ஒன்றுமிலை ; பிற் காலத்தில் புத்தமத சன்யாசினிகளின் புகழ் பாடிய தேரி கதாவில் க்ஷேமாவின் உபதேசமும் இடம் பெற்றுள்ளது. அவள் ச்ரவஸ்த்தி நகரில் முகாமிட்டிருந்த காலையில் குரு ஒருவரைக் காண தாகம் கொண்டு அலைந்த மன்னன் பிரசேனஜித் அவளிடம் வாதம் செய்து ஞானம் பெற்ற கதைகளும் உள .

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

(தம்மம் என்பது ‘தர்ம’ என்ற சொல்லின் கொச்சை வடிவம். புத்த மதத்தினரின் வேதப் புஸ்தகம் தம்மபதம் எனப்படும் ; இதில் புத்தரின் உபதேசங்கள் உள )

–subham–

புத்தர் பல் ரஹஸியங்கள் (Post No.5994)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 27 JANUARY 2019
GMT Time uploaded in London –10-47 am
Post No. 5994
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

–subham–

புத்தரின் எல்லையற்ற தேஜஸுடன் கூடிய அழகு! (Post No.5370)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 28 August 2018

 

Time uploaded in London – 5-15 AM (British Summer Time)

 

Post No. 5370

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

புத்தரின் எல்லையற்ற தேஜஸுடன் கூடிய அழகு!

 

ச.நாகராஜன்

 

புத்தரின் தேஜஸ் எல்லையற்ற ஒன்றாக இருந்தது. அத்துடன் அவர் முகத்தில் ஜொலித்த அழகு எல்லையற்ற ஒன்றாக இருந்ததால் அனைவரும் அவர் பால் ஈர்க்கப்பட்டனர்.

 

வக்கலி என்று ஒரு இளைஞன் ஒரு நாள் புத்தரைப் பார்த்தான். அவ்வளவு தான்! அவர் தோற்றத்தாலும் அழகாலும் அவன் ஈர்க்கப்பட்டான். அவரையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான். அதைத் தவிர அவனுக்கு வேறெதுவும் வேண்டியிருக்கவில்லை.

 

அவரது உபதேசங்களோ அல்லது நிர்வாண நிலையை எய்துவதோ அவன் குறிக்கோளாக இல்லை.

சும்மா, புத்தரைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு தான் அவன் ஆசை!

 

புத்தர் போகும் இடமெல்லாம் அவனும் கூடவே தொடர்ந்து போனான். தூரத்தில் இருந்து கொண்டு அவரைப் பார்த்துக் கொண்டே இருப்பான்.

 

இதைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருந்த புத்தர், ஒரு நாள் அவனை அருகில் அழைத்தார்.

“வக்கலி, வக்கலி! இது என்ன? போ! போய் விடு! இந்த அழுக்கான உடலைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பதால் என்ன பயன்?” என்று கூறிய புத்தர் அவனை அங்கிருந்து போகச் சொன்னார்.

 

இப்படி விரட்டப்பட்ட பின்னர் தான் அவன் புத்தரின் ஆன்மீக உபதேசங்களைக் கவனிக்கத் தொடங்கினான்.

நாளடைவில் உபதேசங்களைப் பின்பற்றி அவன் அர்ஹந்த் என்ற உயரிய நிலையை அடைந்தான்.

 

*

குரு தேசத்தில் மாகந்தி என்று ஒரு பிராம்மணன் வாழ்ந்து வந்தா. அவனது மனைவி பெயரும் மாகந்தி தான். பெண் பெயருர்ம் மாகந்தி தான். பெண்ணின் மாமாவின் பெயரும் மாகந்தி தான்.

 

எல்லையற்ற பேரழகு கொண்ட அவளுக்கு ஈடான மாப்பிள்ளை கிடைக்கவில்லை.

 

ஆகவே பிராம்மண மாகந்தி அப்படி ஒரு பேரழகனைத் தேடிக் கொண்டிருந்தார்.

 

அவளது அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட பல பிரபுக்களின் குடும்பங்கள் அவளை எப்படியாவது தங்கள் இல்லங்களைச் சேர்ந்த ஒருவனுக்கு மணம் முடிக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்தனர்.

 

ஆனால் பிராம்மணரோ அவர்களை, எனது மகளுக்கேற்றவன் நீ இல்லை” என்று வந்தவரை எல்லாம் விரட்டிக் கொண்டிருந்தார்.

 

ஒரு நாள் புத்தர் உலகின் போக்கைத் தன் தியானத்தின் மூலம் கவனித்துக் கொண்டிருந்தார். அவருக்கு பிராமணன் மாகந்தியும்  அவது மனைவியும் உயர் நிலையை அடையத் தகுதி உடையவர்கள் என்பது தெரிந்தது.

 

தனது பிக்ஷா பாத்திரத்துடன் அவர் மாகந்தி இல்லம் ஏகினார்.

மாகந்தி அக்னிக்குக் கொடுக்க வேண்டிய ஆஹுதியை தன் இல்லத்தின் முன் செய்து கொண்டிருந்தார்.

அவர் புத்தரைப் பார்த்தார். பிரமித்தார்.

புத்தரின் உடலில் உள்ள சிறப்பான 32 அங்க அடையாளங்களைக்  கண்டு அவர் வியப்பின் உச்சிக்கே சென்றார். அத்துடன் புத்தரின் உடலில் இருந்த எண்பது அங்க லக்ஷணங்களையும் கண்டு அவர் பிரமித்தார்.

 

“இவரை விட ஒரு பெரிய மஹா புருஷர் இந்த உலகத்தில் மனிதப் பிறவியில் இருக்க முடியாது. இவரே எனது பெண்ணுக்கு ஏற்ற கணவர்” என்று  சிந்தித்து அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.

 

“ஓ! மஹானே! எனக்கு ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு ஏற்ற கணவன் இதுவரை கிடைக்கவில்லை என்பதால் அவளை எனது பாதுகாப்பில் என் இல்லத்திலேயே வைத்திருக்கிறேன். ஆனால் உங்களை இங்கு பார்த்தவுடன் நீங்களே அவளுக்கு ஏற்றவர் என்று கண்டு கொண்டேன். அவளை உங்களுக்கே இப்போதே மண முடிக்க நான் தயார். சற்றுப் பொறுங்கள். அவளை அழைத்து வருகிறேன்” என்றார் மாகந்தி.

புத்தர் இதை ஏற்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை. அவர் பேசாமலிருந்தார்.

மாகந்தி வீட்டிற்குள் ஓடி தன் மனைவியிடம், “ ஓ! அதிர்ஷ்டசாலிப் பெண்ணே! உன் பெண்ணுக்குத் தகுந்த மாப்பிள்ளையை இதோ இப்போது தான் கண்டேன். அவர் வாசலில் நின்று கொண்டிருக்கிறார். அவரைச் சற்றுக் காத்திருக்குமாறு கூறி இருக்கிறேன். நீ உன் பெண்ணை அலங்கரித்து அழைத்து வா” என்றார்.

 

மனைவி பெண்ணை அலங்கரிக்க மனைவியையும் பெண்ணையும் மாகந்தி வெளியே அழைத்து வந்தார்.

நடந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தார் செய்தியைப் பரவ விட காட்டுத் தீ போல செய்தி பரவி நகரமே அங்கு குழுமியது.

 

“அங்கம், மகதம், காசி, கோசலம், வஜ்ஜி, மல்லா போன்ற இடங்களிலிலிருந்தெல்லாம் எத்தனை செல்வந்தர்கள் இங்கு வந்து நின்றிருக்கின்றனர்! அவர்களை எல்லாம், “ நீங்கள் என் பெண்ணுக்கு ஏற்றவர்கள் இல்லை” என்று துரத்தி அடித்த இவர் இப்போது யாரைக் கண்டு இப்படி மாப்பிள்ளை ஆக்கப் போகிறார்” என்று பேசிக் கொண்ட மக்கள் திரள் பிராமணர் வீடு முன் குழுமியது.

 

ஆனால் புத்தர் எந்த இடத்தில் நின்று கொண்டிருந்தாரோ அங்கு இல்லை. அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றிருந்தார்.

 

அவரது காலடித் தடங்கள் அவர் சென்ற பாதையைக் காட்டின. தன் மனைவி மகளுடன் புத்தர் இருக்குமிடம் சென்று அவரைப் பார்த்த மாகந்தி, “ ஓ!மஹானே! இதோ என் புதல்வி! இவளை ஏற்றுக் கொள்வீராக!” என்று வேண்டினார்.

புத்தர் பேச ஆரம்பித்தார்:

“ ஓ! பிராமணரே! ஜனன மரணச் சுழலிலிருந்து விடுபட நான் கபிலவாஸ்து அரசைத் துறந்தேன். யசோதரா போன்ற ராணியைத் துறந்தேன். ராகுல் போன்ற மகனையும் துறந்தேன். அரசாளும் அதிகாரத்தையும் விரும்பவில்லை. நாற்பதினாயிரம் அழகிய பணிப்பெண்கள் கூப்பிட்ட குரலுக்கு ஏவல் செய்பவர்கள் – அவர்களையும் விட்டு விட்டு நள்ளிரவில் அரண்மனையை விட்டு வெளியேறிய நான் திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். மரணதேவனாகிய மாரன் என்னை ஆறு வருடங்கள் இடைவிடாமல் பின் தொடர்ந்து அலுத்துப் போய் என்னை விட்டான். போதி மரத்தின் அடியில் அமர்ந்து  ஞானத்தை அடைந்தேன். மாரனின் புதல்விகள் மூன்று பேரும் தன் தந்தையை அலைய விட்டதற்காகப் பழி தீர்க்க என்னிடம் வந்தனர்.  ஆரத்தி, ரதி, ராகா என்ற அந்த மூவரிடம் அனிக்கா (நிலையற்ற தன்மை) துக்கம்,அனத்தா ( ஆன்மா இல்லாமை) ஆகிய மூவரையும் அனுப்பினேன்.புலனின்பத்தின் உச்ச கட்ட இடமான ஆறாம் சொர்க்கத்திலிருந்து இறங்கிய அவர்களிடமே எனக்கு புலனின்பம் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றவில்லை. அப்படிப்பட்ட எனக்கு அசுத்தம் நிரம்பிய குடம் போன்ற உன் பெண்ணிடமா மனம் செல்லும்?”

 

புத்தரின் இந்தப் பேச்சைக் கேட்டு மக்கள் வியந்தனர்; மாகந்தியின் குடும்பமும் வியந்தது.

 

அனைவரும் அவரைப் பணிந்து வணங்கினர். மாகந்திக்கும் அங்கு குழுமியிருந்த மக்கள் அனைவருக்கும் புத்தர் தன் உபதேசத்தை நல்கி அருளினார்.

 

புத்தரின் உடலும் அழகு; மனமும் அழகு என்பதை அவர் உடலிலிருந்து வெளிப்படும் ஜோதி காட்டியது!

இப்படிப்பட்ட அங்க லக்ஷணங்களைக் கொண்ட ஒரு அழகிய மகானை உலகம் கண்டதில்லை என்கிறது புத்த மத வரலாற்று ஏடுகள்!

***

 

அடிமைக்கு அருளிய புத்தர்! (Post No.5330)

Written by S Nagarajan

Date: 17 August 2018

Time uploaded in London – 6-13 AM  (British Summer Time)

Post No. 5330

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

புத்த தரிசனம்

அடிமைக்கு அருளிய புத்தர்!

 

ச.நாகராஜன்

புத்தர் போன்ற பெரும் நிலையில் இருந்த ஒரு மகான் ஒரு ஏழை அடிமைக்கு அருளிய ஒரு சம்பவம் வரலாற்றுப் பிரசித்தி பெற்றதாகும்.

மழைக்காலத்தில் ஓரிடத்தில் சிறிது காலம் தங்குவது பெரியோர்களின் வழக்கம். அதன்படி புத்த பிரான் ஒரு சமயம் ஜேதவான மடாலயத்தில் தங்கி இருந்தார். மழைக்காலம் முடிந்த பிறகு அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானார்.

இதைக் கேள்விப்பட்ட கோசல மன்னன் அவரிடம் வந்து அவர் இன்னும் சிறிது காலம் அங்கேயே தங்கி இருந்து அருள் பாலிக்குமாறு வேண்டினான். அங்கிருந்த சங்கத் தலைவரான அனாத பிண்டிகாவும் புத்தரை அங்கேயே தங்கி இருக்குமாறு வேண்டினார். புத்தரின் சிஷ்யையான விசாகாவும் புத்தரைப் பணிவுடன் வேண்டி அவரை அங்கேயே தங்கி இருக்குமாறு வேண்டினார்.

ஆனால் புத்தர் அதற்கு இசையவில்லை. அவர் கிளம்ப ஆயத்தமானார்.

சங்கத் தலைவர் மனம் நொந்து தனது இருப்பிடம் ஏகினார். அவரிடம் பணியாளாக வேலை பார்த்த ஏழைப் பெண்மணியான புன்னா அவரைப் பார்த்து, “ஐயா, ஏன் உங்கள் முகம் இப்படி வாடி இருக்கிறது?” என்று கேட்டாள்.அதற்கு அவர்,”ஓ! புன்னா, நான் வருத்தப்படுவது உண்மை தான். ஏனெனில் புத்தர் இங்கிருந்து கிளம்பப் போகிறார். என்னால் முடிந்தவரையில் தடுத்துப் பார்த்தேன். என் முயற்சி வெற்றி பெறவில்லை” என்றார்.

உடனே புன்னா, “ஐயா! நான் புத்தரைப் போக விடாமல் தடுத்து நிறுத்துகிறேன்.அப்படி தடுத்து நிறுத்தினால் எனக்கு என்ன தருவீர்கள்?” என்று கேட்டாள்.

“நீ அப்படிச் செய்தாயானால், உன்னை எனது அடிமையாக இருப்பதிலிருந்து உடனடியாக விடுவிக்கிறேன்” என்றார் அவர்.

புன்னா நேரடியாக புத்தர் இருக்குமிடம் வந்து அவரைப் பணிந்து வணங்கினாள்.

“ஓ! மஹானே! போக வேண்டாம்.இங்கேயே இருங்கள்” என்று பணிவுடன் வேண்டினாள்.

புத்தர் புன்முறுவலுடன், நான் போகாததினால் உனக்கு என்ன நன்மை?” என்று கேட்டார்.

“ஐயன்மீர்! நான் ஒரு பெண்.நான் ஒரு அடிமை. நான் ஒரு பணியாள். நீங்கள் போகவில்லை என்றால் என் அடிமைத்தனத்திலிருந்து எனக்கு விடுதலை கிடைக்கும். எனக்கு விடுதலை கிடைத்தால் நீங்கள் கூறிய மூன்று அடைக்கலத்தைப் பெறுவேன். ஐந்து உபதேசங்களையும் எட்டு உபதேசங்களையும் கடைப்பிடிப்பேன்.அப்படிக் கடைப்பிடிப்பதன் மூலம் எனக்குப் பெறுதற்கரிய பேறு கிடைக்கும்” என்றாள் புன்னா.

புத்தர் யோசித்தார். அவரது தயை வெள்ளமெனப் பெருகியது. அவளுக்கு விடுதலை கிடைக்க வேண்டும், அத்துடன் அவள் அர்ஹந்த் என்ற உயரிய நிலையை அடைய வேண்டும் என்று விரும்பினார்.

புன்னாவிடம் அவர், “சரி! நான் இங்கேயே இருக்கிறேன்.” என்று அருளினார்.

இந்தச் செய்தியைக் கேட்ட சாவார்த்தி நகர மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.

கோசல மன்னன், சங்கத் தலைவர், விசாகா ஆகியோரும் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

மன்னனின் அழைப்பை ஏற்காதவர், சங்கத் தலைவராக இருந்த பணக்காரரின் வேண்டுகோளை மறுத்தவர், ஒரு சிஷ்யையின் வேண்டுகோளையும் மறுத்தவர் ஒரு ஏழை அடிமைப் பெண்ணின் வேண்டுகோளை ஏற்றது பெரிய சம்பவமாகக் கருதப்பட்டது – கருதப்படுகிறது – அன்றும், இன்றும்!

தான் சொன்னபடி புன்னாவை அடிமை நிலையிலிருந்து விடுவித்தார் சங்கத் தலைவர்.

புன்னா புத்தரின் உபதேசப்படி வாழ்ந்து உயரிய அர்ஹாந்த் என்னும் நிலையைப் பின்னால் அடைந்தார்.

புத்தரின் தயை எல்லையற்றது. அதை விளக்கும் ஏராளமான சம்பவங்களுள் முக்கியத்துவம் பெற்ற சம்பவம் இது.

***

 

எல்லையற்ற கருணை வெள்ளம் புத்தர் (Post No.5219)

Written by S NAGARAJAN

 

Date: 15 JULY 2018

 

Time uploaded in London –   8-33 AM (British Summer Time)

 

Post No. 5219

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

புத்த தரிசனம்

எல்லையற்ற கருணை வெள்ளம் புத்தர்

ச.நாகராஜன்

அற்புதமான புத்த சரித்திரம் அவரது எல்லையற்ற கருணை வெள்ளம் கரை புரண்டு ஓடுவதைக் காண்பிக்கிறது. புத்த ஜோதியைத் தரிசித்த யாவரும் பரிசுத்தமாயினர்;ஜோதிக்குள் ஐக்கியமாயினர்.

இங்கு சில நிகழ்வுகளை புத்த சரித்திரத்திலிருந்து பார்க்கலாம்.

அங்குலிமாலா என்ற கொள்ளைக்காரன் அந்த நாளில் வாழ்ந்து வந்தான். அவனை நினைத்தாலே அனைவரும் பயப்படுவர். 999 பேரைக் கொன்று அவர்களின் விரல்களை அறுத்து அதை மாலையாகத் தொடுத்து அணிந்து கொண்டவன் அவன். இரக்கமின்றி எதிரில் வருபவரைக் கொன்று குவித்த கொலைகாரன். ஆகவே அவன் பெயரைச் சொன்னாலே அனைவரும் நடுங்குவர்.

ஒருநாள் புத்தர் தன் சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியைப் பார்த்த மக்கள் அவர் அருகில் சென்று அந்த வழியில் போகவேண்டாம் என்றும் அது நேரடியாக அங்குலிமாலாவின் இருப்பிடத்திற்குக் கொண்டு சேர்த்து விடும் என்றும் எச்சரித்தனர்.

அமைதியாக அதைக் கேட்டுக் கொண்ட புத்தர் தன் வழியிலே செல்லலானார்.

அங்குலிமாலா ஆயிரமாவது நபருக்காகக் காத்திருந்தான். எதிரிலே புத்தர் வருவதைக் கண்ட அவன், “என்ன, என்னைக் கண்டு பயமில்லையா! ஆயிரமாவது ஆளான உன்னை என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?” என்று கர்ஜித்தான்.

அமைதியாக புத்தர் அவனை நோக்கிப் புன்முறுவலுடன் முன்னேறினார்.

அச்சமின்றி தன் எதிரில் வரும் ஜோதி வெள்ளத்தைக் கண்டு அவன் பிரமித்தான். அவர் விரலை அறுக்க முயன்றாலும் அவனால் முடியவில்லை. அவர் பாதத்தில் வீழ்ந்தான்.

அந்தக் கணமே கொள்ளைக்காரன் அங்குலிமாலா மறைய, புதிய புத்த சீடனான அங்குலிமாலா உருவானானான். அவன் புதிய பெயரையும் பெற்றான்.

பத்து வருடங்கள் கழிந்தன. புத்தர் ஒருநாள் அவனை அழைத்து, “ நீ தகுதி பெற்றவனாகி விட்டாய்! சென்று தர்ம பிரச்சாரம் செய்” என்று கட்டளையிட்டார்.

 

ஆனால் மக்கள் அங்குலிமாலாவைக் கற்களைக் கொண்டு அடித்தனர். ஆனால் அங்குலிமாலா புன்சிரிப்புடன் அவர்களை எதிர்கொண்டான். அவர்கள் ஆச்சரியப்பட்டனர். எதனால் இந்த மாற்றம்?

அங்குலிமாலா கூறினான்: “ நான் முன்பு செய்த கொடுமைகள் அவர்களுக்குக் கோபத்தை உருவாக்கியது உண்மை தான். ஆனால் அதை விட அதிக கோபம் இப்போது அவர்கள் என்னைக் கல்லைக் கொண்டு எறியும் போதும் நான் பேசாமல் இருப்பதால் அதிகம் ஏற்படும். என் உள்ளார்ந்த அமைதியை அவர்கள் உணர்வர். அந்த அற்புதமான தெய்வீக ஞானத்தைப் பெற அவர்கள் தாமாகவே முன் வருவர்.”

உண்மை! அதிசயிக்கத் தக்க மாற்றத்தைக் காண்பித்த கொள்ளைக்காரன் இப்போது புத்த பிக்ஷுவாக மாறியதைக் கண்டு வியந்த மக்கள் இப்போது அவன் கூறும் தர்மோபதேசத்தைக் கேட்கத் தயாராயினர்.

ஆம்ரபாலி என்று பெரும்பாலோரால் அறியப்படும் அம்பாபாலிகா வைசாலி நாட்டின் பேரழகி. சம்ஸ்கிருதத்தில் ஆம்ரம் என்றால் மாமரத்தைக் குறிக்கும். பாலி இலையைக் குறிக்கும். அவள் அரசின் மாந்தோப்பில் கண்டெடுக்கப்பட்டதால் அவளுக்குப் பெயர் ஆம்ரபாலி ஆயிற்று.

அவளை அடைய பெரும் பிரபுக்களும் செல்வந்தர்களும் விரும்பினர். இதை விரும்பாத வைசாலி மன்னன் இதைத் தடுக்க ஒரே வழி அவளை அரசவை நடனமங்கை ஆக்குவது தான் என்ற முடிவுக்கு வந்து அவளை அரசவை நடன மங்கை ஆக்கினான். ஆனால் அடுத்த நாட்டு அரசனான பிம்பசாரன் அவளுக்கு இணையான இன்னொரு அழகியைத் தனது நாட்டில் அரசவை நடனமங்கையாக அறிவிக்க முடியாமல் தவித்தான். ஆகவே போரை மேற்கொண்டு வைசாலியை ஜெயித்து அவளை மணந்தான். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்.

ஒருமுறை ஆம்ரபாலி புத்தருக்கு பிக்ஷை அளிக்க விரும்பினாள். அதே தினத்தில் லிச்சாவி மன்னனும் புத்தரை விருந்துக்கு – பிக்ஷைக்கு – அழைத்தான்.

ஆனால் மன்னனின் கோபத்தையும் மீறி ஆம்ரபாலி இல்லத்திற்கு புத்தர் விருந்தை ஏற்க ஏகினார். அங்கு அவளுக்கு புத்த தர்மத்தை உபதேசித்தார்.

எல்லையற்ற கருணைவெள்ளமான புத்த தரிசனத்தை அம்பாபாலிகா பெற்றாள். உடனே மாறினாள். அவளும் அவளது மகன் விமல் கொண்டனனும் புத்தமதம் தழுவினர்.

ஒருமுறை அங்குட்டராபா பட்டிணத்தில் ஆபனா நகருக்கு புத்தர் தன் 1250 சீடர்களுடன் விஜயம் செய்தார். 1250 பேரும் ஒருவர் பின் ஒருவராக ஒரே வரிசையில் புத்தரின் பின் சென்றதை மக்கள் வியப்புடன் பார்த்தனர். வீதி வழியே அவர்கள் செல்ல மக்கள் வீதியின் இருபுறமும் திரளாக நின்று அவர்களை வரவேற்று வணங்கினர்.

கேனியா என்று ஒரு பிராமணர் புத்தரின் அருகில் சென்று அவரை வணங்கி அவரிடம் தனது இல்லம் வந்து பிக்ஷையை ஏற்குமாறு கூறினார்.புத்தர் மறுத்து விட்டார்.

 

“பெரிய குழுவுடன் நான் வந்திருக்கிறேன். அனைவருக்கும் உணவு சமைப்பது என்றால் அது பெருத்த சிரமத்தை உருவாக்கும். வர இயலாது” என்றார் புத்தர்.

கேனியா மூன்று முறை அழைத்தார். அதற்குப் பின்னர் புத்தர் அவர் அழைப்பை ஏற்றார்.

1250 பேருக்கு உணவைச் சமைப்பதில் ஏற்படும் கஷ்டமும், அவர்களுக்குப் பரிமாறுவதில் உள்ள சிரமத்தையும் உலகாயத ரீதியாக அறிந்ததால் புத்தர் அதை மறுத்தார். மூன்று முறை அழைத்தவுடன் மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்.

மறுநாள் தகுந்த குழுக்களை அமைத்து 1250 பேருக்கும் கேனியா விருந்தளித்தார்.

விருந்துக்குப் பின்னர் புத்தர் தர்மோபதேசத்தைச் செய்தார்.

அனைவரும் பயனடைந்தனர்.

புத்தர் போதி மரத்தடியில் ஞானத்தை அடைந்த பின்னர், முதலாவதாக தான் மதித்து கௌரவிக்க வேண்டிய குரு யாராவது தனக்கு இருக்கிறாரா என்பதைத்தான் கண்டுபிடிக்க முயன்றார். தனக்கு இணையான ஒரு நபரையே அவரால் கண்டு பிடிக்க முடியாமல் போனது. ஆகவே குருவைக் கண்டு பிடிக்கும் பிரச்சினை இன்னும் சிக்கலானது. அப்படி ஒரு குரு இல்லை என்பதை அவர் உணர்ந்தார்.

ந மே ஆசார்ய அத்தி சதிஸா மேன நவீஜ்ஜா இதி (எனக்கு ஒரு குரு இல்லை; என்னை ஒத்த இன்னொருவரும் இல்லை)

ஆகவே தான் புத்தர் தனது தர்மத்தையே  தனது குருவாகக் கொண்டார்.

அந்த தர்மத்தை அஹிம்சா வழியில் அனைவருக்கும் உபதேசித்தார்.

அவரது கருணைவெள்ளம் கரை புரண்டு ஓட அதில் நனைந்து மக்கள் மகிழ்ந்தனர்.

 

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

 

***

 

 

மஹாராஜா புக்குசாதியின் ஆசை! (Post No.4601)

((எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால்தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால்எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக் கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்நீயே கவனித்துக்கொள்!))

 

 

 

Date: 10 JANUARY 2018

 

Time uploaded in London- 6-51 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4601

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

புத்த சரிதம்

 

மஹாராஜா புக்குசாதியின் ஆசை!

 

ச.நாகராஜன்

Buddha in Bangladesh; picture sent by Lalitha Malar Maniam

ராஜக்ருஹத்தின் மஹாராஜா பிம்பசாரனுக்கும், தக்ஷசீல மன்னனான மஹாராஜா புக்குசாதிக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது.

 

இரு நாடுகளுக்கும் இடையே நல்ல வர்த்தக உறவு ஆரம்பித்து, மேம்பட்டது.

 

பிம்பசாரன் அந்த நாட்டு வணிகர்கள் மூலமாக தன் நண்பனுக்கு பல பரிசுப் பொருள்களை அனுப்பினான். அந்தப் பரிசுப் பொருள்களுடன் கூடவே ஒரு கடிதமும் சென்றது.

கடிதம் தங்கத் தகட்டில் எழுதப்பட்டிருந்தது.

“அன்பு நண்பரே!, எனது நாட்டில் மூன்று ரத்தினங்கள் உள்ளன. புத்தம், தர்மம், சங்கம்!”

 

கடிதத்தின் வாசகத்தைப் படித்த புக்குசாதிக்கு அதைப் பற்றி அறிய ஆவல் மிகுந்தது.

 

புத்தரைப் பற்றியும் தர்மத்தைப் பற்றியும் சங்கத்தைப் பற்றியும் நன்கு அறிந்து கொண்டான்.

 

புத்தம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

தர்மம் சரணம் கச்சாமி

புத்தரை மானசீகமாகச் சரணடைந்தான்!

 

Picture by Puvana Sarma

எப்படியாவது வாழ்நாளில் ஒரு முறையாவது புத்த தரிசனத்தை அடைய வேண்டுமென்று அடங்காத ஆவல் ஏற்பட்டது அவனுக்கு.

இளவரசன் சித்தார்த்தன் எப்படி ராஜ்யம், பட்டம் ஆகியவற்றைத் துறந்தானோ அதே வழியைக் கடைப்பிடிக்க எண்ணிய அவன், தன்  மகுடத்துடன் அனைத்தையும் துறந்தான். மஞ்சள் ஆடையை அணிந்தான்.

 

நேராக ராஜக்ருஹம் நோக்கிக் கிளம்பினான்.

அவனது உற்றாரும் சுற்றமும், மக்களும் அழுது புலம்பினர்.

ஆனால் புக்குசாதி தன் பயணத்தைத் தொடர்ந்தான். அவன் பின்னால் பலரும் கூடவே வரலாயினர்.

 

சில நாட்களில் 192 யோஜனை தூரத்தைக் கடந்து ராஜக்ருஹத்தை வந்து அடைந்தான்.

புத்தர் எங்கிருக்கிறார் என்று கேட்டான்.

அங்கிருந்த மக்களோ, புத்தர் 45 யோஜனை தூரத்தில் உள்ள சாவட்டி என்னும் இடத்தில் இருப்பதாகக் கூறினர்.

 

அன்றிரவே அந்த இடத்தை அடைவது சாத்தியமில்லை என்பதால் இரவைக் கழிக்க ஏதேனும் இடம் இருக்கிறதா என்று கேட்டான்.

ஒரு குயவனின் குடிசை இருப்பதாகத் தெரிய வந்தது.

குயவனின் அனுமதியைப் பெற்று அவன் அங்கு தங்கினான்.

 

அங்கோ சாவட்டியில் புத்தர் அன்றைய தினத்தில் தன் கருணையை அனுக்ரஹிக்க சத்பாத்திரமான ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தார்.

 

தக்ஷசீல மன்னனான புக்குசாதி தன் அரசையும் சுக போகங்களையும் துறந்து தன்னப் பார்ப்பதற்காக நெடுந்தொலைவு கடந்து வந்துள்ளான் என்பதை அவர் அறிந்தார்.

மறு நாள் காலை அவன் ஒரு விபத்தில் இறக்கப் போவதையும் அவர் அறிந்தார்.

 

என்ன செய்வது? கருணை உள்ளம் ஒரு முடிவுக்கு வந்தது.

சாவட்டியிலிருந்து கிளம்பிய புத்தர் நேராக ராஜக்ருஹத்தை நோக்கி விரைந்து அதை அடைந்தார்.

 

புக்குசாதி தங்கியிருந்த குயவனின் குடிசையை அணுகினார்.

குயவனின் தான் அங்கு தங்க முடியுமா என்று  கேட்டார்.

குயவன் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றான்.

குடிசைக்குள் நுழைந்த புத்தர் புழுதி நிறைந்த குடிசையின் தரையைப் பார்த்தார்.

Picture from Deccan Herald; Budhdha Gaya/Bodhgaya

அதே தரையில் தான் புக்குசாதி அமர்ந்திருந்தான்.

அவரும் அமர்ந்தார்.

 

இப்போது அந்த புழுதித் தரையில் இரண்டு பெரும் சாம்ராஜ்யங்களைத் துறந்த மன்னர்கள் அமரிந்திருந்தனர்.

சித்தார்த்தனாக இருந்து புத்தராக ஆனவர். இன்னொருவர் தக்ஷசீல மன்னன் புக்குசாதி.

 

இருவரும் நெடுதூரம் நடந்திருந்தனர். இருவருக்கும் களைப்பு;

இருவரும் பேச ஆரம்பித்தனர். அர்த்தமுள்ள உரையாடல் ஒன்று ஆரம்பித்தது.

 

புத்தர்: நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?

புக்குசாதி : நான் புக்குசாதி. தக்ஷசீல மன்னன்.

புத்தர்: மஞ்சள் ஆடை அணிந்திருக்கிறீர்கள்! யாரிடம் துறவறம் பெற்றீர்கள்? ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள்?

 

புக்குசாதி: எனது நண்பர் மஹாராஜா பிம்பசாரன் ஒரு தங்கத் தகட்டில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் இந்த ராஜ்யத்தில் மூன்று ரத்தினங்கள் இருப்பதாகவும் அவை புத்தம், தம்மம், சங்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதைக் கேட்டவுடன் என் ராஜ்யத்தை நான் துறந்தேன். ஒரு கடையிலிருந்து இந்த துவராடையை வாங்கி அணிந்தேன். புத்தரைத் தேடி இங்கு வந்தேன். அவரோ சாவட்டியில் இருப்பதாக அறிகிறேன். இரவு நேரமாகி விட்டது. ஆகவே இங்கு தங்கி இருக்கிறேன். நாளை காலை அவரைத் தரிசிப்பேன்.

 

புத்தர்: அவரை இதற்கு முன்னர் பார்த்திருக்கிறீர்களா?

புக்குசாதி: இல்லை

புத்தர்: அவரைப் பார்த்தால் அவர் தான் புத்தர் என்பதை நீங்கள் உணர முடியுமா?

புக்குசாதி: முடியாது.

அவ்வளவு தான். உரையாடல் முடிந்தது.

 

Picture from Singapore; posted by Puvana Sarma

இருவரும் மௌனமாயினர்.

புலர்காலைப் பொழுது மலர்ந்தது.

புத்தர் புக்குசாதிக்கு உபதேசித்தார்.

அப்போது தான் புக்குசாதிக்குத் தெரிய வந்தது, முதல் நாள் இரவு தன்னுடன் உரையாடிய மகான் புத்தரே தான் என்று!

எல்லையற்ற ஆனந்தம் கொண்ட அவன், புத்தரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினான் முந்திய  இரவு அவரை ‘ஆயுஷ்மத்’ என்று அழைத்தமைக்காக! ஆயுஷ்மத் என்றால் நண்பன் என்று பொருள்.

 

தனக்கு உரிய முறையில் சங்கத்தில் சேர்க்குமாறு அவன் வேண்டினான்.

புத்தரும்  கருணையுடன் அவ்னிடம், ஒரு துவராடையையும் ஒரு பிக்ஷா கலயத்தையும் கொண்டு வரப் பணித்தார்.

புக்குசாதி வெளியில் சென்று குப்பைக் குவியல் ஒன்றில் துவராடை ஒன்றைத் தேடலானான்.

 

 

அநத சமயத்தில் புத்தர் ஜேடவனம் என்ற மடாலயத்திற்குச் சென்றிருந்தார்.

 

குப்பைத் தொட்டியில் துவராடையையும் கலயத்தையும் அவன் எடுக்கும் போது காளை ஒன்று தன் இரு கொம்புகளால் அவனைக் கூர்மையாகக் குத்தியது.

 

அதே இடத்தில் உடனே அவன் மரணமடைந்தான்.

ஏற்கனவே புத்தரின் உபதேசத்தால் அனாகாமி என்ற உயரிய நிலையை அடைந்த அவன் திரும்பி வராத ஒரு உயரிய நிலையைப் பெற்றிருந்தான்.

 

அவிஹா ப்ரம்ம உலகத்திற்குச் சென்ற அவன் அர்ஹாந்த் என்ற அற்புதமான நிலையை அடைந்து விட்டான்.

 

நடந்ததை எல்லாம் கேட்ட மஹாராஜா பிம்பசாரன் புக்குசாதியின் உடலை எடுத்து தக்க மரியாதைகள் செய்து தகனம் செய்தான்.

அவனது அஸ்தியைச் சேர்த்து ஒரு நினைவிடத்தை அமைத்தான்.

 

புத்தரின் எல்லையற்ற கருணை எப்படி இறக்கப் போகும் விதியுடைய ஒருவ்னையும் சென்று சேரும் என்பதற்கு புக்குசாதியின் வாழ்க்கை நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

தன்னை அண்டி வந்த எவரையும் புத்தர் கைவிட்டதே இல்லை!

***

புத்தரும் பிராமணர்களும்: இரண்டு சுவையான சம்பவங்கள்! (Post No.3949)

Written by London Swaminathan

 

Date: 28 May 2017

 

Time uploaded in London: 11-07 am 

 

Post No. 3949

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

புத்தர் பற்றி வெள்ளைக்காரர்கள் எழுதியதை அப்படியே நம்பிவிடக்கூடாது. அவர் ஏதோ இந்து மதத்துக்கு எதிராகப் புரட்சிக்கொடி தூக்கியதாகவும் பிராமணர்களை எதிர்த்ததாகவும் வெளிநாட்டுக்காரர்கள்

எழுதியதை நம்பி இங்குள்ள திராவிட பக்தர்களும் புத்தர் படத்தை தனது வீட்டில் மாட்டி வைத்திரு ப்பர். அவர்களுக்கு புத்தர் ‘தம்ம பத’த்தில் என்ன சொன்னார் என்று தெரியாது பாவம்! அதாவது அறியாத ஜீவன்கள்; சுக்கான் உடைந்த கப்பல்கள்; வழி தெரியாமல் திணறும் அந்தகர்கள்.

 

என்னுடைய பல திராவிட நண்பர்கள் இன்னும் திருக்குறளையே படித்ததில்லை. படித்த பிறகு அதன் கருத்துகளை வேறு ஜீரணம் செய்யவேண்டும்; பின்னர் அதில் ஒரு திருக்குறளையவது பின்பற்ற வேண்டும்! நடக்குமா?

 

புத்தமதத்தினரின் வேதப் புத்தகமான தம்ம பதத்தில் 423 ஸ்லோகங்கள் உண்டு. அதில் கடைசி அத்தியாயம் ‘பிராமணர்’ என்ற தலைப்பிட்ட 26-ஆவது அத்தியாயமாகும். அதில் 41 ஸ்லோகங்கள் இருக்கின்றன. அதாவது அந்தப் புத்தகத்தில் பத்தில் ஒரு பகுதி. அவ்வளவு முக்கியத்துவம் பிராமணர்களுக்கு!

அசோகனும் தனது கல்வெட்டுகளில் முதலில் பிராமணர்களைக் குறிப்பிட்டுவிட்டே மற்ற வகுப்பினரைக் குறிப்பிடுவான்; அவ்வளவு பய பக்தி.

 

எப்படி தமிழ் வேதமான திருக்குறள் இருக்கும் வரை இந்துமதம் அழியாதோ, அப்படி தம்மபதம் உள்ளவரை இந்துமதம் அழியாது. ஏனெனில் இரண்டு நூல்களிலும் இந்துமதக் கருத்துகள் அப்படியே உள்ளன. ஆயினும் வள்ளுவனும் புத்தனும் வெறும் சடங்குகளையும், யாகத்தில் உயிர்ப் பலியையும் எதிர்த்தது உண்மையே. அவர்கள் இருவரும் உலக மக்கள் எல்லோரும் ‘வெஜிட்டேரியன்ஸ்’ – சாக பட்சிணிகள்– ஆக வேண்டும் என்று எதிர்பார்த்தனர். அது என்றுமே நடவாத காரியம். இது இந்துக்களுக்குத் தெரியும். ஆனால் மனிதன் உயர்நிலையை அடைய ஒவ்வொருவரும் மாமிசத்தை தவிர்த்தே ஆக வேண்டும். மாமிசமுண்ணாததால் மட்டும் உயர்நிலையை அடைந்து விடமுடியாது.

 

தம்மபதத்தில் பிராமணர் பற்றிய அதிகாரத்தில் யார் பிராமணன் என்று விவரிக்கிறார். அதற்கு முன்னரும் 6, 7 இடங்களில் பிராமணர் பற்றிச் சொல்கிறார்.

 

“ஒரு பிராமணனும் முனிவனும் கடந்த கால பாவங்களில் இருந்து விடுபட்டவர்களாவர்; அவன் தனது தந்தை தாயைக் கொன்று இருந்தாலும், இரண்டு நியாயமான அரசர்க ளைக்கொன்று இருந்தாலும். ஒரு நாட்டையே சீரழித்திருந்தாலும், மனிதர்களின் மாணிக்கம் போன்றோரைக் கொன்று இருந்தாலும் அவர்கள் தூயவர்களே (தம்மபதம் 294, 295)

 

ஏன் இப்படிச் சொன்னார்? ஒரு முனிவனும், ஒரு பிராமணனும் சொல், செயல், சிந்தனையில் (திரிகரண சுத்தி) ஒன்றுபட்டுவிட்டால் பின்னர் அவர்கள் பூலோக தேவர்கள் ஆவர்.

 

வள்ளுவனும் புத்தனும் சொன்ன எல்லா கருத்துகளும் ஏற்கனவே உள்ள கருத்துகள்தான். ஆனால் அவைகளைச் சுருக்கமாக, ஆழமாக, அழுத்தமாக, மக்கள் பேசும் மொழிகளில் (பாலி, தமிழ்) சொன்னதும் அவைகளை அவர்கள் தன் வாழ்நாளில் பின்பற்றிக் காட்டியதுமே அவர்களுடைய நூல்களை வேதங்கள் அளவுக்கு உயர்த்தின.

 

தம்மபத நூலுக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அதில் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த தத்துவ அறிஞர் டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய உரையில் வரும் இரண்டு சம்பவங்களைக் காண்போம்:-

 

முதல் சம்பவம்

 

ஒரு பிராமணர் யாக யக்ஞாதிகளை முடித்துவிட்டு அவற்றின் பிரசாதத்தைக் கொண்டு வந்தார். புத்தரிடம் வந்தவுடன் அவைகள் என்னவென்று கேட்டார். அவை யாகத்தின் மிச்சம், மீதி என்று அறிந்தவுடன் புத்தர்  சொன்னார்:-

“ஓய், பிராமணரே! யாகத் தீயில் குச்சிகளை (சமித்து) வைப்பதன் மூலம் நீவீர் தூய்மையாகிவிட்டதாக எண்ண வேண்டாம். இதெல்லாம் மேம்போக்கானவை. நான் என்னுள்ளே உறைந்துகிடகும் அகத் தீயை எழுப்புகிறேன். அந்த ஞானத் தீ எப்போதும் எரிந்து கொண்டிருக்கும். இந்த வேள்வியில் என்னுடைய நாக்குதான் யாகக் கரண்டி; என்னுடைய இருதயம்தான் (உள்ளம்தான்) யாக குண்டம்” என்றார் புத்தர்.

 

பிராமணர்கள் செய்த யாக யக்ஞங்கள் காலப்போக்கில் பொருளற்றுப் போய் வெறும் சடங்குகள் ஆனதால் புத்தர் இப்படிப் புகன்றார். ஆனால் புத்தருக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்த பிருஹத் ஆரண்யக, முண்டக உபநிஷத்துகளிலேயே இக்கருத்து உள்ளது. புத்தரோ வள்ளுவரோ புதிதாக ஒன்றும் சொல்லவில்லை

 

இரண்டாவது சம்பவம்

ஒருமுறை புத்தர், அம்பலதிகா என்னும் இடத்திலுள்ள பொது மண்டபத்துக்குள் வந்தார். அப்பொழுது  அவர்கள், புத்தர் மீது குற்றச் சாட்டுகளை சுமத்திவிட்டு வெளியேறிய, ஒரு பிராமணன் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். புத்தர் சொன்னார்,

 

 

” என்னைப் பற்றியோ, நான் போதிக்கும் விஷயங்கள் பற்றியோ, புத்த பிட்சுக்கள் பற்றியோ யாராவது குறைகூறினால் ஏன் கோபப்படுகிறீர்கள்? இப்படிக் கோபப்பட்டால் உங்களால் ஆன்மீக  முன்னேற்றம் காண முடியாது. மேலும் ஏனையோர் சொல்வது சரியா தவறா என்று பகுத்துணரும் சக்தியையும் இழந்து விடுவீர்கள்” என்று எச்சரித்தார்.

 

புத்தரின் வெற்றிக்கு இதுதான் காரணம். அவர் கோபப்பட்டதாக ஒரு சம்பவமும் இல்லை. மற்றவர்களைக் குறைகூறியதாகவும் ஒரு சம்பவமும் இல்லை. காலப்போக்கில் அவரது பிரதம சீடர்களாக ஆனவர்களும் பிராமணர்களே!

தான் சொல்லும் கருத்துகளை, அவர்  பின்பற்றினால், பின்னர் அவருடைய உபதேசங்களுக்கு மந்திர சக்தி வந்துவிடும்.

ராமகிருஷ்ண பரமஹம்சர்,  சுவாமி விவேகாநந்தர், ரமண மகரிஷி, காஞ்சிப் பெரியவர் ஆகிய பெரியோர் வாழ்விலிருந்து இவற்றை அறியலாம்.

 

–சுபம்–

பிக்ஷுவே, அப்போது என்ன செய்வாய்? (Post No. 2509)

IMG_9409 (2)

Written by S Nagarajan

 

Date: 5 February 2016

 

Post No. 2509

 

Time uploaded in London :–  7-45 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

ச.நாகராஜன்

 

 

புத்தரிடம் புன்னா என்ற பிக்ஷு வந்தார். புத்த தர்மத்தை உலகெங்கும் பரவச் செய்ய வேண்டும் என்ற ஆவலுடன் வந்த அவரை புத்தர் கனிவுடன் பார்த்தார்.

 

தனக்கான தியான முறை ஒன்றை கருணை கூர்ந்து அருள வேண்டும் என்று அவர் புத்தரிடம் விண்ணப்பித்தார்.

புத்தரும் அவருக்குரிய தியான முறை ஒன்றை உபதேசித்து அருளினார்.

 

பின்னர் புன்னாவை நோக்கிய புத்தர், “எந்த ஊருக்குப் போகப் போகிறாய்?” என்று கேட்டார்.

“சுநபராந்தா என்று ஒரு மாவட்டம் இருக்கிறது. அங்கு சென்று தர்ம பிரச்சாரம் செய்யப் போகிறேன்” என்றார் புன்னா.

புத்தர்:-“புன்னா! சுநபராந்தாவில் உள்ள மக்கள் சற்று கடுமையானவர்கள்.அவர்கள் உன் பேச்சைக் கேட்க மாட்டார்கள். உன்னைக் கண்டபடி திட்டப் போகிறார்கள். அப்போது நீ என்ன செய்வாய்?”

 

புன்னா:- “ஆஹா! இவர்கள் எவ்வளவு நல்லவர்கள். திட்டத்தானே செய்கிறார்கள். என்னை அடிக்கவில்லையே என்று நினைத்துக் கொள்வேன்.”

 

புத்தர்: “நல்லது.அவர்கள் உன்னை அடித்து விட்டாகள் என்றால், அப்போது நீ என்ன செய்வாய்?”ர்

புன்னா: “ஆஹா! இவர்கள் கல்லை எடுத்து என்னை அடிக்கவில்லை. கையாலே தானே இரண்டு தட்டு தட்டுகிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன்.”

 

புத்தர்:” அப்பனே! அவர்கள் கல்லை எடுத்து வீசி அடித்தால், அப்போது நீ என்ன செய்வாய்?”

 

புன்னா: “ நல்ல வேளை! இவர்கள் கல்லைத் தானே வீசி எறிகிறார்கள். கழி கொண்டு தாக்கவில்லையே என்று நினைத்துக் கொள்வேன்.”

 

புத்தர்: “அப்பனே, புன்னா! ஒருவேளை அவர்கள் கம்பால் உன்னைத் தாக்கினார்கள் என்றால் அப்போது நீ என்ன செய்வாய்?”

 

புன்னா: “நல்லவேளையாக இவர்கள் கம்பு கொண்டு தான் அடிக்கிறார்கள். கொலைகாரக் கத்தியால் தாக்கவில்லையே என்று எண்ணுவேன்”

 

புத்தர்: “ஒருவேளை அவர்கள் கத்தியை எடுத்து உன்னைக் குத்தி விட்டால், அப்போது நீ என்ன செய்வாய்?”

 

புன்னா: “ஆஹா! இவர்கள் கத்தியினால் குத்தத் தானே செய்தார்கள். என் உயிருக்கு ஆபத்து ஒன்றும் விளைவிக்கவில்லையே என நினைப்பேன்.”

IMG_9410 (2)

புத்தர்: “புன்னா! ஒருவேளை அவர்கள் கத்தியினால் குத்தி உன் உயிருக்கே ஆபத்து விளைவித்து விட்டால், அப்போது நீ என்ன செய்வாய்?”

 

புன்னா:”ஏராளமான பிக்ஷுக்கள் தங்கள் உடலின் மீது அதிருப்தி கொண்டு, வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து, கத்தி ஒன்று கிடைக்காதா என்று ஏங்குகிறார்கள்.ஆனால் எனக்கோ எந்தவித சிரமுமின்றி ஒரு கத்தி கிடைத்து உயிர் போகவுள்ளதே என்று நினைப்பேன்.”

 

புத்தர்: “நல்லது, மிகவும் நன்று, புன்னா! நீ சுநபராந்தாவில நன்கு பணி ஆற்ற முடியும்.உன்னிடம் பொறுமையும் எளிமையும் இருக்கிறது. உனக்கு காலம் மிகவும் நன்றாக இருக்கிறது

 

நீ நினைத்தபடி தர்ம பிரச்சாரம் செய்யக் கிளம்பு”

 

புத்தர் கருணையுடன் புன்னாவை ஆசீர்வதித்தார்.

 

புன்னா சுநபராந்தா நோக்கி புத்தரின் ஆசியுடன் பயணமானார்!

 

புத்தரின் போதனை: அஹிம்சையும், பொறுமையும், எளிமையும் நேர்மையும் தர்ம பிரச்சாரம் செய்பவர்களுக்கு இன்றியமையாத குணங்கள்.

*********