ஆராய்ச்சிக் கட்டுரையாளர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1158; தேதி:- 8 ஜூலை 2014.
இந்துமதம் ஒரு சமுத்திரம். அதில் கலக்கும் நதிகள் நாம, ரூப, தேயங்ளை இழந்து ஒன்றாகி அதில் கலந்து விடும். புத்த மதம், சமண, சீக்கிய மதங்கள் ஆகியன இந்து மதத்தின் கிளைகள். அதாவது மறு பிறப்பு, பாவம், புண்ணியம், கர்மவினை முதலிய பல கொள்கைகளில் ஒன்றுபட்டு நிற்பவை. ஆகையால் முதலில் இருந்த நிலை மாறி மீண்டும் இந்துக்களின் எல்லா சடங்குகளையும் செய்துவருவதை இன்றும் காணலாம். இந்துமதத்தில் பெரிதும் போற்றப்படும் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் புத்தரும் ஒருவர். அதாவது இந்துவாகப் பிறந்து, புத்த மதத்தை ஸ்தாபித்துவிட்டு மீண்டும் இந்துமதத்தில் ஒடுங்கிவிட்டவர். இது எப்படி, எப்போது, ஏன் நிகழ்ந்தது? என்பதே என் ஆவுக் கட்டுரையின் நோக்கம்.
புத்தர், இந்துமதத்தில் உள்ள எல்லாக் கொள்கைகளயும் ஏற்றுக் கொண்டவர். ஆனால் யாக யக்ஞங்களில் உயிர்ப்பலி கொடுப்பதை எதிர்த்தவர். அர்த்தமே இல்லாமல் வெறும் சடங்கு போல உயிர்வதை நிகழ்ந்தபோது எதிர்த்துக் குரல் கொடுத்தவர். ஆனால் அந்த மதம் பிறந்த இந்தியத் திருநாட்டிலும், பரவிய நாடுகளிலும் அவர் கொள்கை தோற்றுப்போனது. எல்லோரும் பாம்பு, மான் மாமிசம், தேள் எல்லாவற்றையும் விரும்பிச் சாப்பிடுவதை டெலிவிஷனில் பார்க்கிறோம்; பத்திரிக்கைகளில் படிக்கிறோம். புத்த பிட்சுக்கள், அரசியலில் கொடி பிடித்து ஆட்டம் போடுவதையும் படிக்கிறோம்.
விஷ்ணுவின் 24 அவதாரங்கள்
எவ்வெப்பொழுது எல்லாம் விஷ்ணு தனது பக்தரின் குறை தீர்க்க பூமிக்கு இறங்கி வந்தாரோ அவ்வப்பொழுது எல்லாம் அவதாரம் என்று கணக்கு– அவதாரம் என்றால் — “இறங்கி வருதல்”— என்று பொருள்.
பாகவதத்தில் 22 அவதாரங்களைச் சொல்லிவிட்டு ஆங்காங்கே வேறு பல அவதாரங்களும் காட்டப் படுகின்றன. சீக்கிய மதத்தின் குரு கோவிந்த சிங் எழுதிய தசம கிரந்தத்தில் 24 அவதாரங்கள் கூறப்படுகின்றன. ஆனால் இந்தப் பட்டியலுக்கும் பாகவதப் புராணப் பட்டியலுக்கும் சில வேறு பாடுகள் உண்டு. பாகவதப் பட்டியலில் புத்தரும் விஷ்ணுவின் ஒரு அவதாரமாகச் சேர்க்கப்பட்டதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏனெனில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சொல்வது போல “ இந்துமதத்தில் உள்ள சில கருத்துக்களை சரியான கண்ணோட்டத்தில் காட்ட வந்தவர் புத்தர். அவர் எதையும் அழிக்க வரவில்லை. பூரண நிலையை தோற்றுவிக்க வந்தவர்” என்பது மிகவும் சரி. புத்தருக்கு முன்னால், மஹாவீரர், அவருக்கு முந்திய தீர்த்தங்கரர்கள் ஆகியோரும் புரட்சிகர கருத்துக்களைத் தெரிவித்தனர்.
வேதத்தில் அவதாரங்கள்
அவதாரக் கொள்கை உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்திலேயே உள்ளது. ‘’ஓங்கி உலகளந்த உத்தமன்’’ வாமனன் பற்றிய குறிப்பு ரிக் வேதத்தில் இருக்கிறது. மூவடிகளால் தாவிய துதியை சாயனர் என்னும் உரைச் சக்ரவர்த்தி ‘வாமன அவதாரம்’ என்றே சொல்கிறார். வராக, மச்ச, கூர்மம் போன்ற வேறு அவதாரங்கள் சதபத பிராமணத்திலும் தைத்திரீய சம்ஹிதையிலும் வந்துவிடுகின்றன.
உலகில் எல்லாப் பழைய கலாசாரங்களிலும் காணப்படும் பிரளயம் பற்றிய கதை இந்தியாவில் இருந்தே உலகம் முழுதும் சென்றது. ஏனெனில் இந்தியக் கதைகளில் மட்டுமே முழு விவரங்களும் உள்ளன. மேலும் இந்திய புராணங்கள் அந்தக் கதை இந்திய மண்ணிலேயே நிகழ்ந்ததாகத் தெளிவாகக் குறிப்பிடும். ஏனையவை ஈரெட்டாகப் பேசுகின்றன. ரிக் வேதத்தில் குறிப்பிடப் படும் மனு, மத்ஸ்ய சம்மட ஆகியன மறைமுகமாக மத்ஸ்யாவதார கதையைச் சொல்வதாக நான் கருதுகிறேன்.
1200 ஆம் ஆண்டு வாக்கில் வாழ்ந்த ஜெயதேவர் எழுதிய அஷ்டபதி எல்லா சம்ப்ரதாய பஜனைகளிலும் பாடப்படும் பாடல்கள் ஆகும் — (நாங்கள் லண்டனில் மாதம்தோறும் நடத்தும் சம்பிரதாய பஜனையில் அஷ்டபதி பாடுகிறோம்) — அதில் பத்து அவதாரங்களையும் பட்டியலிடும் பாடலும் புத்தரைக் குறிப்பிடும் பாடலும் உண்டு. அவர் பாடல் எழுதிய காலத்தில் புத்தமதம் உயிருக்கு ஊசல் ஆடிக் கொண்டிருந்தது. அவருடைய அஷ்டபதி பாடல், புத்தமதத்துக்கு இந்தியாவில் இறுதி மணி அடித்தது. அத்தோடு புத்தர் இந்துமதத்தில் கலந்து ஜீரணிக்கப்பட்டார்.
புத்தமதம் ‘திருடிய’ கொள்கை
அவதாரக் கொள்கை வேத, இதிஹாச, புராணத்தில் இருந்தது. அதை புத்த மதத்தினர் பயன்படுத்தினர். இந்துமத, பஞ்சதந்திரக் கதைகளை எல்லாம் எடுத்து அவை அனைத்தும் போதிசத்வரின் (புத்தரின்) பூர்வஜன்மம் என்று சொல்லி கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் கதைகள் எட்டுக் கட்டினர். சுமார் 600 கதைகள் ‘’ஜாதகக் கதைகள்’’ என்ற தொகுப்பாக வெளிவந்தது. அவர்கள் என்ன செய்தார்களோ அதையே இந்துக்கள் பாகவத புராணத்தில் திருப்பிச் செய்தனர்!!! புத்தரே எங்கள் அவதாரம்தான் என்று ஒரு போடு போட்டனர். பௌத்த மதத்தின் கதை முடிந்து போனது!!
24 அவதாரங்கள்
பாகவத புராணம் என்பது குப்தர் காலத்தில் –(3,4 ஆம் நூற்றாண்டு) –இப்போதைய வடிவை எட்டியது. அதில் உள்ள அவதாரப் பட்டியல்:
1.பிரம்மாவின் மானஸ புத்திரர் நால்வர் 2.வராக 3.நாரத 4.நர நாராயன 5.கபில 6.தத்தாத்ரேய 7. யக்ஞா 8.ரிஷப (இவர் 24 சமண தீர்த்தங்கரர்களில் ஒருவராக இருக்கக்கூடும்) 9.ப்ருது 10.மத்ஸ்ய 11.கூர்ம 12.தன்வந்திரி, 13.மோஹினி, 14.நரசிம்ம 15.வாமன 16.பரசுராம 17.ராம 18.வேதவியாச 19.கிருஷ்ண 20.பலராம 21.புத்த 22.கல்கி (இனிமேல் வரப் போகும் அவதாரம் கல்கி).
இதுதவிர ஹம்ச (அன்னம்) ஹயக்ரீவ (குதிரை முக) முதலிய அவதாரங்களும் காணப்படும்.
தசம கிரந்த (குருகோவிந்தர்) பட்டியலில், பிரம்மா, ருத்ரர், சூரியர், சந்திரர், மனு, சேஷசாயி, ஜலந்தர முதலிய புதுமுகங்கள் காணப்படுவர். வேறு சில பழைய அவதாரங்கள் விடுபட்டு இருக்கும்.
புத்தர் மதித்த ஹிந்துமதம்
தனது மதம் ஆயிரம் ஆண்டுகள் வரை இருக்கும் என்று புத்தர் முதலில் நினைத்தார். ஆனால் அவரது பிரதம சீடன் ஆனந்தன், புத்த பிட்சுணிகளாக பெண்களையும் சேர்க்க வேண்டும் என்று அடம்பிடித்தவுடன், “ஐயய்யோ என் மதம் 500 ஆண்டு மட்டுமே இருக்கும்” என்று வருத்தப்பட்டார் (காண்க தத்துவப் பேராசிரியர், இந்திய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய தம்மபத முன்னுரை ). ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகர் யுவாங் சுவாங் எழுதிய யாத்திரைக் குறிப்புகள், தமிழ்நாட்டை ஆண்ட மாபெரும் பல்லவ மன்னன் மஹேந்திர பல்லவன் எழுதிய மத்தவிலாசப் பிரஹசன நாடகம் ஆகியவற்றில் புத்தமதம் சீரழிந்த காட்சிகளைக் காணலாம். நிற்க.
புத்தரும் அவர் வழி வந்த அசோகனும் பிராமணர்களைக்கு அடுத்தபடியகவே எப்போதும் சிரமணர்களைக் குறிப்பிட்டனர். புத்தர் இந்திரனையும் பிராமணர்களையும் புகழ்கிறார் (காண்க எனது முந்தைய கட்டுரை: பரிமேலழகர் உரையில் தவறு). தம்மபதத்தில் ஒரு அத்தியாயமே பிராமணர்களுக்கு ஒதுக்கி இருக்கிறார். ஆக, புத்தர் இந்துமதத்தை ‘’மிதிக்க’’ வந்தவர் என்று வெள்ளைக்காரன் எழுதியது எல்லாம் தவறு. அவர் இந்துமதத்தை ‘’மதிக்க’’ எழுந்தவர். அவரது போதனைகள் அனைத்தும் அற்புதமானவை. பின்னால் வந்த ஒழுக்கமற்ற சீடர்கள் அம்மதம் வீழ்ச்சியுறக் காரணம் ஆயினர். அவர் சம்ஸ்கிருதத்தைக் கைவிட்டு பாலி மொழியில் பேசியது பெரிய தவறு என்று சுவாமி விவேகாநந்தர் கூறியிருப்பதை முன் ஒரு கட்டுரையில் தந்துவிட்டேன். (சுருக்கமாகச் சொன்னால் வருடம்தோறும் ஆயிரக் கணக்கான ‘’திருடர்கள்’’ கருப்பு வேட்டி கட்டி ஐயப்பன் வேஷம் போடும் நிலையை, பழங்கால புத்தமத சீடர்களுக்கு ஒப்பிடலாம். இது எல்லா ஐயப்ப பக்தர்களையும் குறிப்பது ஆகாது!!!)
–சுபம்–
You must be logged in to post a comment.