ஹிட்லரும் சோதிடரும், புத்திசாலி சோதிடர்

4x4hitlerstamps

Post No 1943

Date: 20 June 2015

Compiled by London swaminathan

Uploaded from London at 13-51

ஹிட்லர் ஒரு சோதிடப் பைத்தியம்; நிறைய ஆரூடம் சொல்லுவோர், குறி சொல்லுவோர், எதிர்காலம் உரைப்போர், ஜாதகம் பார்ப்போர் என்று பலரையும் அணுகி சோதிடம் கேட்பது வழக்கம். அதை வைத்து எழுந்த ஒரு ஜோக்:

ஒரு சோதிடர் ஹிட்லரைச் சந்தித்தார். நான் எப்போது சாவேன்? என்று கேட்டார்.

மிகவும் இக்கட்டான கேள்வி; சோதிடர் மிகவும் புத்திசாலி. மிகவும் யோசித்து விட்டு, பல கணக்குகளைப் போட்டுப் பார்த்துவிட்டு சொன்னார்:

நீங்கள் ஒரு யூதமத விடுமுறை நாளன்று இறப்பீர்கள் என்று.

ஹிட்லருக்கு மஹா கோபம்; அது சரி யூதர்களுக்குப் பல விடுமுறை நாட்கள் உண்டு; நான் எந்த நாளில் சாவேன்? நீங்கள் மறைக்கப் பார்க்கிறீர்கள்; உண்மையைச் சொல்லுங்கள் – என்று உரத்த குரலில் சொன்னார்.

சோதிடர் பதில்:

அன்பரே! நீங்கள் சாகும் நாள்தான் யூதர்களின் பெரிய விடுமுறை நாள்!!

(இந்த ஜோக்கைப் புரிந்து கொள்ள ஹிட்லர் – யூதர் மோதல் பற்றி அறிந்திருக்க வேண்டும்)

இதோ ஒரு உண்மைச் சம்பவம்:—–

kili-7

புத்திசாலி சோதிடர்

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு, பதினோராம் லூயி என்பவர் பிரான்ஸ் நாட்டை ஆண்டார். அவர் ஒரு சோதிடப் பிரியர். அவருடைய மனைவி மீது அலாதிப் பிரியம் அவருக்கு. ஒரு முறை மனைவியின் எதிர்காலம் பற்றிக் கேட்ட போது, ஒரு ஜோதிடர் அவர் சாகப் போகும் நாளைத் துல்லியமாகச் சொல்லிவிட்டார். அந்த நாளில் ராணி இறந்தும் போனார்.

ராஜா லூயிக்குச் சந்தேகம். ஒருவேளை, இந்த ஜோதிடன் வாய் வைத்த முகூர்த்தம்தான் என் மனைவியைக் கொன்றுவிட்டதோ; இந்தப் பயலுக்கு கரு நாக்கு போலும்; அவனை நன்றாகத் தண்டிப்போம் என்று கருதி ஜோதிடரை அரண்மனைக்கு அழைத்தார். ஆளை ஜன்னல் வழியாகத் தள்ளிவிட வேண்டும்; ஜோதிடர் செத்துத் தொலையட்டும் என்று திட்டம் போட்டிருந்தார்.

மஹாராணி இறந்தவுடன் திருப்பி ஒரு முறை மன்னன் அழைப்பதில் ஏதோ சூது இருக்கவேண்டுமென்று ஜோதிடரின் உள்ளுணர்வு உணர்த்தியது.

முக்காலமும், எக்காலமும் அறியும் ஜோதிடன் அவன். ஆகையால் ஜாக்கிரதையாக இருப்போம் என்ற எண்ணத்துடன் அரண்மனையில் நுழைந்தார்.

ராஜாவுக்கு அதற்குள் ஒரு நப்பாசை. நாம் இறக்கும் நாளையும் தெரிந்து கொள்வோம் என்று எண்ணி, “ ஜோதிடரே! நான் என்று சாவேன்? என்று கேட்டார்.

மன்னனுக்கு ஜோதிடத்தில் உள்ள ஆர்வம் குறையவில்லை என்பதை அறிந்த ஜோதிடர், மன்னர் மன்னவா! இதோ கணக்குப் போட்டுச் சொல்கிறேன் என்று அரை மணி நேரம் கணக்கெல்லாம் போட்டுவிட்டு,

“நான் செத்த மூன்றாவது நாள் தான் நீங்கள் சாவீர்கள்”— என்று மன்னரிடம் சொன்னார்.

அரசனுக்கு பயம் வந்துவிட்டது. ஜோதிடரைச் சாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணி அவருக்கு அபரிதமான செல்வத்தையும் வசதிகளையும் வாரி வழங்கி அவரை தினமும் பாதுகாப்பாக வைத்தார்!

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் – என்பது பழமொழி!!