புத்தி கூர்மை: பலே! பலே! ரபலே!!! (Post No.3090)

gargantua-252683

Written by London Swaminathan

 

Date: 25  August 2016

 

Time uploaded in London: 8-06 AM

 

Post No.3090

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர் பிரான்ஸ்வா ரபலே. அவர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் மறுமலர்ச்சி காலத்தில் வாழ்ந்தார். கிறிஸ்தவ மத போதகராகவும், அங்கத எழுத்தாளராகவும், நகைச்சுவை எழுத்தாளராகவும், கிரேக்க மொழி அறிஞராகவும் திகழ்ந்தவர். அவர் எழுதிய ‘கார்காங்டுவா’ என்ற நூல் பிரெஞ்சு அரசியலையும் வாழ்க்கை முறையையும் கிண்டல், கேலி செய்யும் புகழ்மிகு புத்தகம் ஆகும்.

 

ஒரு முறை அவர் தெற்கு பிரான்ஸில் ஓரிடத்தில் பணமே இல்லாமல் மாட்டிக்கொண்டார். தலைநகரான பாரீசுக்குத் திரும்பிவருவதற்கு அவர் கையில் தம்பிடிக் காசு (பைசா கூட) இல்லை.

 

அந்தக் கிராமத்திலுள்ள ஒரு சத்திரத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்தார். அதை நடத்தும் பெண்மணியிடம் தான் முக்கிய விஷயங்களை எழுதவிருப்பதால் தனக்கு ஒரு எழுத்தர் தேவை என்றார்.

அப்பெண்ணும், அதற்கென்ன? என் மகன் கெட்டிக்காரன்; 12 வயது என்றாலும் அச்சுப்பொறித்தாற் போல எழுதிக் கொடுப்பான். அவனை சம்பளத்துக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பிவைத்தார்.

 

பையனும் வந்தான். ரபலே பேசினார்: டே! பையா! மிக முக்கியமான ஒரு காரியத்தைச் செய்யப்போகி றேன். ஆகையால் கவனமாகக் கேட்டு எழுது என்று சொல்லி துவங்கினார்; முதலில் எழுது:

 

ராஜாவுக்கான விஷம்

இதையும் எழுது

மஹாராணிக்கான விஷம்

ஆர்லியன்ஸ் நகர பிரபுவுக்கான விஷம்

 

இதையெல்லாம் கொட்டை எழுத்தில் எழுது. ஏனென்றா ல் இவை எல்லாம் டப்பா மீது ஒட்டும் அடையாள வில்லை என்றார்.

Gargantua_GF

பையனுக்கு பயம்! இருந்தாலும் அச்சுப்பொறித்தாற் போல, மாக்கோலம் போல எழுதினான்.

 

இதற்கிடையில் ரபலேயோ ஒரு பெட்டியிலிருந்த சாம்பலைச் சுரண்டினார். அதைத் தன் மூக்குப்பொடி டப்பிக்குள் போட்டுக் குலுக்கினார். முகத்தை மிகவும் கடுமையாக வைத்துக் கொண்டு காகிதத்தில் போட்டார்.

 

இதைப் பார்த்த எழுத்தருக்கு — 12 வயது பாலகனுக்கு — மேல் மூச்சூ கீழ் மூச்சு வாங்கியது. அலறி புடைத்துக்கொண்டு மாடியிலிருந்து இறங்கி அம்மா, அம்மா! இவன் ஒரு கொலைகாரன்,  ராஜா ராணியை விஷம் வைத்துக் கொள்ள விஷம் தயாரித்துக் கொண்டிருக்கிறான் என்று எல்லாவற்றை யும் சொல்லி முடித்தான்.

 

உடனே அப்  பெண் போலீசுக்கு ஆள் அனுப்பினாள்; அவர்களும் விரைந்தோடி வந்து ஆளை க் கையும் களவுமாகப் பிடித்து,

யாரடா நீ, அயோக்கியா? என்றனர்.

 

பிரபல ரபலேயை அவர்களுக்குத் தெரியவில்லை. அவரும் பதில் சொல்லாமல் பேந்தப் பேந்த முழித்தார். ஆளை அலாக்காகத் தூக்கி ஒரே கட்டாக கட்டி வண்டியில் பாரீசுக்குக் கொண்டு சென்றனர். போலீசுக்கு மிகவும் பெருமிதம். பிரான்ஸு நாட்டின் ராஜத்  துரோகியைக் கண்டுபிடித்து  விட்டோ ம்; நமக்குப் பரிசு கிடைக்கும்; இவனுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று கணக்குப் போட்டனர்.

rabelais 1

பாரீஸ் நகரத்துக்கு வந்து சேர்ந்தவுடன் அவசரமாக மன்னர் தலைமையில் நீதிமன்றம் கூடியது. மன்னருக்கோ ரபலேயைப் பார்த்தவுடன் அதிர்ச்சி! திகைப்பு! ரபலே நடந்தவற்றை அப்படியே விவரித்தார். மன் னரும் புன்சிரிப்புடன் ரபலேயை விடுவித்தார்.

 

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் ! கத்தியை விட பேனா வலிமை வாய்ந்தது அல்லவா!