புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 3 (Post No.3594)

Written by S NAGARAJAN

 

Date: 1 February 2017

 

Time uploaded in London:-  6-39 am

 

 

Post No.3594

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

13-1-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 3

ச.நாகராஜன்

t

“சுமார் நூறு கோடி கடற்பறவைகள் மற்றும் மிருகங்கள் பிளாஸ்டிக் பைகளினால் மடிந்து போகின்றன. பிளாஸ்டிக் பைகள் அவற்றின் குடலைச் சுற்றி இறுக்கவே அவை இறக்கின்றன”

                                                                 – அறிவியல் தகவல்

 

சுற்றுப்புறச்சூழல் மேம்பாட்டிற்காக முனைந்து பாடுபடும் இன்னும் சிலரைப் பார்ப்போம்.

 

 

மரீனா சில்வா

1958ஆம் ஆண்டு பிறந்த மரீனா சில்வா ஒரு அரசியல்வாதி. பிரேஸிலைச் சேர்ந்த இந்த பெண்மணி ரப்பரை எடுக்கும் ஒருவரின் மகளாகப் பிறந்து அமேஸான் காடுகளில் ரப்பரை எடுத்துக் கொண்டிருந்தவர். சட்டத்திற்கு விரோதமாக மரங்கள் அழிக்கப்படுவதைக் கண்கூடாகக் கண்டு மனம் நொந்து போன இவர் காடுகளைக் காக்க தீவிரமாக களத்தில் இறங்கினார். அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட இவர் பிரேஸில அமைச்சரானார். பல லட்சம் சதுரமைல் பரப்புள்ள காட்டு வளம் இவரால் காப்பாற்றப்பட்டது. காடுகளை அழிப்பவரை 75 சதவிகிதம் ஒழித்துக் கட்டினார். திடீரென்று 1500 கம்பெனிகளை ரெய்டு செய்து பத்து லட்சம் கியூபிக் அளவுள்ள சட்ட விரோதமாக வெட்டப்பட்ட ம்ரங்களைக் கைப்பற்றி அந்த நிறுவனங்களை சட்டத்தின் முன் நிறுத்தினார். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு நிற்கக் கூடிய வகையில் இவருக்கு நடுத்தர வர்க்கத்தினரின் ஆதரவு இருந்தது.

அனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்தால் தான் உலக வளம் காப்பாற்றபபட முடியும் என்ற கொள்கையை ஆணித்தரமாக உலகெங்கும் முழங்கி வரும் துணிச்சல்கார பெண்மணி இவர்.

 

ரெபக்கா ஹாஸ்கிங்

பிபிசியில் காமரா உமனாகப் பணியாற்றிய பெண்மனி ரெபக்கா ஹாஸ்கிங். ஹவாய்க்குப் படம் எடுக்கச் சென்ற போது அங்கு பிளாஸ்டிக் கழிவுகளைத் தின்று இறந்து போன மிருகங்களைக் கண்டு மனம் நொந்து பரிதாபப்பட்டார். விளைவு, பிளாஸ்டிக் பைகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. மாட்பரி என்ற சிறு நகரில் உள்ள வர்த்தகர்களிடம் சென்று பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதற்கு பதிலாக மாற்று வழியைக் கையாளுங்கள் என்று வேண்டினார். நல்ல ஆதரவு கிடைக்கவே பிரிட்டனில் பிளாஸ்டிக் இல்லாத முதல் நகரம் என்ற பெயரை 2007ஆம் ஆண்டு மாட்பரி எடுத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து பிரிட்டனில் இன்னும் 80 நகரங்கள் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்தன.

ஆண்டு தோறும் 400 கோடி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் பிரிட்டனை பிளாஸ்டிக் பை இல்லாத நாடாக மாற்றத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார் இந்த உத்வேகமூட்டும் பெண்மணி. ‘அரசாங்கத்தை எதிர்பார்க்காதீர்கள்; உங்களிடமிருந்து மாற்றத்தைத் தொடங்குங்கள்’ என்பது இவர் மக்கள் முன் வைக்கும் கோஷம்!

 

ஆப்ரே மேயர்

தென்னாப்பிரிக்க இசைக் கலைஞரான இவர் லண்டனில் வசிப்பவர். உலக நாடுகளை பணக்கார நாடு ஏழை நாடு என்று பிரிப்பதற்குப் பதிலாக சுற்றுப்புறச் சூழல் அடிப்படையில் வெப்ப மாறுதலை வைத்துப் பிரிக்க வேண்டும் என்கிறார் இவர். நச்சுப் புகையான கார்பன் டை ஆக்ஸைடை ஒரு நாடு எவ்வளவு வெளியேற்றுகிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்பது இவரது வாதம்.

இசையை விட்டு விட்டு சுற்றுப்புறச் சூழல் ஆர்வலராக மாறிய இவர், 1990இலிருந்து வாழ்க்கை வாழ்வதற்கே பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து விட்டார். என்றாலும் தான் எடுத்துக் கொண்ட நல்ல பணியை விட்டு விடாமல் தொடர்கிறார்..

முதலில் இவர் கொள்கையை கண்டு கொள்ளாமல் விட்டு விட்ட பிரிட்டன் இப்போது இவரது கொள்கையை ஆதரிக்கிறது. பல நாடுகளும் நச்சுப்புகை வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து விட்டன.

இசையை எழுதுவதும் நச்சுப்புகையைத் தடுப்பதும் பல விஷயங்களில் ஒன்று தான் என்று கூறும் இவர் அதை அழகுற விளக்குகிறார். இசைக்கான நோட்ஸை பேப்பரில் எழுதிப் பார்த்தால் அது என்னவென்றே யாருக்கும் புரியாது. ஆனால் நோட்ஸின் படி இசையை இசைத்தாலோ அனவரும் சொக்கி விடுவர். அதே போல எவ்வளவு நச்சுப்புகையை எந்த நாடு வெளியிடுகிறது என்ற புள்ளி விவரத்தைப் பார்த்தால் ஒன்றும் புரியாது. ஆனால் நச்சுப் புகை கட்டுப்படுத்தப்பட்ட இடத்தில் வாழ ஆரம்பித்தால் அதன் சுகமே தனி. அப்போது தான் அதன் மஹிமையை உணர முடியும் என்கிறார் இவர்.

பிரபல வயலின் வித்வானான இவர் தினந்தோறும் வயலினை இசைப்பதை இன்றும் தொடர்கிறார். ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகளுக்குப் போவதைத் தான் விட்டு விட்டார்.

உலகத்தை மாற்ற இவ்வளவு காலம் ஆகும் என்று தெரியாமல் போயிற்றே என்று அங்கலாய்க்கிறார் இந்த இசைக் கலைஞர்.

 

ஜியா ஜாங்கே

நடிகரும் இயக்குநருமான ஜியா ஜாங்கே ஸ்டில் லைஃப் (Still Life) என்ற திரைப்படத்தை எடுத்து உலகப் புகழ் பெற்றார். வெனிஸில் 2006ஆம் ஆண்டு நடந்த விழாவில் இந்தப் படத்திற்காக கோல்டன் லயன் விருதினைப் பெற்றார். சீனாவில்  மூன்று அணைகள் கட்டப்பட்டதால் ஏற்பட்ட சுற்றுப்புறச் சூழல் கேட்டினைச் சித்தரிக்கிறது படம். ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டம் ஒன்றிற்காக கட்டப்பட்ட இந்த அணைகளால் லட்சக் கணக்கானோர் தாங்கள் வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தங்கள் துணையைத் தேடி அலைகின்றனர். நகரிலோ வெள்ளப் பெருக்கு. லஞ்சம், நில ஆக்கிரமிப்பு, வன்முறை ஆகிய எல்லாவற்றையும் காட்டும் இந்தப் படம் சீன நாட்டு சென்ஸாரிடம்  என்ன பாடுபடுமோ என்ற கவலை முதலில் இருந்தாலும் சென்ஸார் படத்தை அனுமதித்து விட்டது. சீனாவின் சுற்றுப்புறச் சூழல் கேட்டினை திரைப்படத்தில் அற்புதமாகச் சித்தரித்துக் காட்டிய சிறந்த படம் இது. இவரைப் பார்த்து உத்வேகம் கொண்ட இதர கலைஞர்களும் இப்போது சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டிற்காக சீனாவில் பாடுபட ஆரம்பித்து விட்டனர்.

 

இதே போல நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் புத்துலகைக் காண விழையும் வித்தகர்களாக இன்று திகழ்கின்றனர். நாம் தெரிந்து கொண்டது இங்கு சிலரைப் பற்றி மட்டுமே!

உத்வேகமூட்டும் இவர்களைப் பின்பற்றி நாமும் ஒரு சிறு செயலைச் செய்தால் கூட உலகம் புத்துணர்ச்சியுடன் கூடிய புத்துலகமாக மாறும்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில .. ..

 

ஸ்வாண்டி அகஸ்ட் அர்ஹேனியஸ் (Svante August Arrhenius)   ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி.தோற்றம் (19-2-1859 மறைவு 2-10-1927) பூமியில் உயிரினம் ஏற்பட்டதற்குக் காரணம் அயல் கிரகங்களிலிருந்து வந்த உயிரினத்தாலேயே என்று ஆயிரத்தி தொள்ளாயிரமாவது ஆண்டிலேயே முதன் முதலில் அவர் கூறினார். அதை இதர விஞ்ஞானிகள் ஏற்கவில்லை. ஆனால் இதே கருத்தை ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் பிரபல பிரிட்டிஷ் விண் இயற்பியல் விஞ்ஞானியான ஃப்ரெட் ஹாயிலும் கூறிய பின்னர் இந்தக் கருத்தின் மீது அனைவருக்கும் ஒரு மதிப்பு ஏற்பட்டு விட்டது.

 அர்ஹேனியஸிற்கு ஏராளமான விஷயங்களில் ஆர்வமும் ந்ல்ல அறிவும் உண்டு. பூமி வெப்பமயமாதல் என்ற கருத்தை சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே 1905ஆம் ஆண்டில் முதலில் சொன்ன அவர், கார்பன் டை ஆக்ஸைடே இதற்குக் காரணமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

1903ஆம் ஆண்டு இரசாயனத்திற்கான நோப்ல பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. முதல் உலக மகா யுத்தத்தின் போது ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். சாமர்த்தியமாக பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அர்ஹேனியஸ் விடுவித்தார்.

1901 லிருந்து 1927ஆம் ஆண்டு  முடிய இயற்பியல் மற்றும் இரசாயனம் ஆகிய துறைகளில் நோபல் பரிசு பெறத் தகுதியானோரைத் தேர்ந்தெடுப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். பல் துறை விற்பன்னர் என்ற பெயரைப் பெற்ற பெரிய விஞ்ஞானி இவர்.

**********

 

 

புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 2

 

   லியனார்டோ டிகாப்ரியோ

 

Written by S NAGARAJAN

 

Date: 16 January 2017

 

Time uploaded in London:-  6-34 am

 

 

Post No.3548

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

 

6-1-2017 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

 

 புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 2

by ச.நாகராஜன்

t

“உலகெங்கும் சுற்றி வரும் நான் பார்ப்பது, மக்கள் மத்திய கிழக்கில் மட்டும் தான் நீராதாரம் இல்லை என்று நினைக்கிறார்கள் என்பதைத் தான். அவர்கள் நினைப்பது முற்றிலும் தவறு. உண்மை என்னவெனில் உலகெங்குமே நீர் பிரச்சினை இருக்கிறது – கோஃபி அனான்

 

 

லியனார்டோ டிகாப்ரியோ

 

டைட்டானிக் படத்தில் நடித்த பிரபல நடிகர் லியனார்டோ டிகாப்ரியோவை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. இப்போது அவர் சுற்றுப்புறச் சூழலின் காவலராக மாறி இருப்பதால் இன்னும் ஏராளமானோரைக் கவர்ந்திருக்கிறார்.

துருவக் கரடிகளையும், பனிப்பாறைகளையும் அழிந்து விடாமல் காக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சியை உலகெங்கும் ஊட்டிவ் வருகிறார். அவர் எடுத்த டாகுமெண்டரி படமான ‘தி லெவந்த் ஹவர் (The 11th Hour) என்ற படம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

‘தி பீச்’ என்ற திரைப்படத்தை எடுக்கும் போது தாய்லாந்து கடற்கரை ஒன்றில் படக் குழுவினர் தங்களின் காட்சிகள் காமரா வியூவிற்கு பொருந்தி வர வேண்டும் என்பதற்காக ஏராளமான பனைமரங்கள் தற்காலிகமாக நட்டனர். கடற்கரை  மணற்பகுதி மாற்றி அமைக்கப்பட்டது. இதைக் கண்ட மக்களும் ஊடகங்களும் படக் குழுவினரை கடுமையாக விமரிசிக்கவே, மனம் நொந்து போன டிகாப்ரியோ சுற்றுப்புறச் சூழலின் ஆர்வலராக மாறி விட்டார்.

 

படங்களில் நடித்து புகழ் ஏற ஏற சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதிலும் அவர் ஆர்வமாக இருப்பதைக் கண்ட மக்கள் அதற்காகவும் இவரைப் புகழ ஆரம்பித்தனர்.  டிஸ்கவரி சானலுக்காக சுற்றுப்புறச் சூழல் படம் ஒன்றையும் இவர் தயாரித்து நல்ல பெயர் பெற்றார்.

 

ஜெங்க்ராங் ஷி (Zhengrong Shi)

   சீன விஞ்ஞானியான இவர்  சோலார் செல் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியைப் பெற்றார். சன் டெக் பவர் என்ற கம்பெனியை நிறுவி உலகின் பெரும் பணக்காரராக ஆகி விட்டார். சோலார் பேனல்கள் எனப்படும் சூரிய சக்தியைச் சேமிக்கும் தகடுகளைத் தயாரித்து பெருமளவில் விறக ஆரம்பிக்கவே 600 கோடி டாலர் என்ற அளவில் வர்த்தகம் பெருகியது. நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்ட முதல் சீனக் கம்பெனியின் உரிமையாளர் என்ற புகழும் இவரை வந்தடைந்தது. ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு எளிய விவசாயியின் மகனாகப் பிறந்த இவர் ஏழ்மையால் வாடி வருந்தியவ்ர். 2001இல் கஷ்டப்பட்டு தனது நிறுவனத்தை நிறுவ அது இன்று உலகின் மிகப் பெரிய சுற்றுப்புறச் சூழல்  காக்கும் நிறுவனமாக ஆகி விட்டது. ஷாங்காயில் மட்டும் ஒரு லட்சம் சோலார் பேனல்களை நிறுவ இவர் திட்டமிட்டார். அதனால் இந்த தொழில்நுட்பத்தில் முதலிடத்தை வகித்து வந்த ஜப்பானையே திணற அடித்தார்.

 

ராஜேந்திர சிங்

ராஜஸ்தானில் சுகாதார மையங்களை நிறுவலாம் என்று ஆர்வத்துடன்  சென்றார் ராஜேந்திர சிங் என்பவர். அங்குள்ள கோபாலபுரம் என்ற இடத்தை அடைந்தவர் அதிர்ச்சி அடைந்தார். அங்குள்ள மக்கள் நீரின்றித் தவித்து ஊரை விட்டே ஓடிக் கொண்டிருந்தனர்.  முதலில் அவர்களுக்குத் தேவை நீராதாரம் என்பதை உணர்ந்த அவர், பாலைவனமாக இருந்த அந்தப் பகுதி மக்கள் மழை நீரை நம்பியே இருப்பதை உணர்ந்தார். ஆனால் மழையோ பெய்யவே பெய்யாது. என்ன செய்வது என்று யோசித்தார்.

 

பாரம்பரிய முறையில் ராஜஸ்தானில் அமைக்கப்பட்டு வந்த நீர் சேகரிப்பு அணைகளை அவர்கள் சமீப காலத்தில் அமைப்பதே இல்லை என்பதை அவர் கண்டார். ஜோஹாத் என்று அழைக்கப்பட்டு வந்த அந்த சிறு சிறு அணைகளைக் கட்டினால் என்ன என்று யோசித்த அவர் கோபாலபுரத்தில் இருந்த பழைய ஜோஹாத் ஒன்றைத் தோண்டினார்.

 

என்ன ஆச்சரியம்! ஏழு மாதங்கள் கழித்து அதில் நிறைய நீர் சேர்ந்திருந்தது. ஐந்து அடிக்கு தண்ணீர்! அதிர்ஷ்டவசமாக மழை வேறு  பெய்யவே அணை விளிம்பு வரை நீர் தளும்பியது. கிராம மக்களுக்கு ஒரே உற்சாகம். வெளியே சென்றவர்கள் செய்தி கேட்டு ஊருக்குத் திரும்பினர். இரண்டாவது ஜோஹாத் அமைக்கப்பட்டது அதுவும் வெற்றியானது. இப்படி பல ஜோஹாத்கள் அமைக்கப்பட்டன. நிலத்தடி நீர் மட்டம் 6.7 மீட்டரிலிருந்து 14 மீட்டராக உயர்ந்தது.

 

பாலைவனமாக இருந்த கிராமம் பசுமை நிறைந்ததாக மாறியது. ராஜேந்திர சிங்கை  ‘ராஜஸ்தானின் மழை மனிதன்’ என்ற செல்லப் பெயரால் அனைவரும் அழைக்க ஆரம்பித்தனர்.

 

செய்தி பரவவே இதே போலவே 8600 ஜோஹாத்கள் அமைக்கப்பட்டன. ஆயிரம் கிராமங்களில் நீர் சேகரிக்கப்பட்டது. ராஜஸ்தான் கிராமங்களுக்கு உயிர் ஊட்டிய அவரை அனைவரும் போற்றினர்.

 

தண்ணீர் அறுவடை செய்து வறண்ட பாலைவனம் போன்ற பகுதியையும் நீருள்ள பிரதேசமாக மாற்றிய் ராஜேந்திர சிங் அனைவருக்கும் உத்வேகமூட்டும் ஒரு சுற்றுப்புறச் சூழல் ஆர்வலராக நன்கு மதிக்கப்படுகிறார்.

 

இன்னும் சிலரை அடுத்துப் பார்ப்போம்.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில .. ..

 

பிரிட்டனைச் சேர்ந்த பெண்மணியான காத்லீன் லான்ஸ்டேல் (Kathleen Lonsdale) இரசாயன இயலில் பெரிய விஞ்ஞானி. இவர் ஒரு க்வேக்கர். க்வேக்கர் என்ற இயக்கம் கிறிஸ்தவ மத சார்புடையது. இந்த இயக்கத்தில் இணைந்தவர்கள் போரை விரும்பாத சமாதான விரும்பிகள். இவர்கள் எந்த விதமான வன்முறையையும் ஆதரிக்க மாட்டார்கள். அஹிம்சாவாதிகள்.

கிறிஸ்டல்கள் பற்றிய ஆய்வில் பல அபாரமான கண்டுபிடிப்புகளைக் கண்டவர் காத்லீன்.

 

 

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் அரசு அனைவரையும் ராணுவத்திலும் ராணுவத்திற்கு ஆதரவான சிவில் சர்வீஸிலும் சேருமாறு அழைப்பு விடுத்தது. அனைவரும் ராணுவத்தில் சேர தங்கள் பெயர்களைப் பதிவு செய்தனர்.

ஆனால் காத்லீன் தனது பெயரைப் பதிவு செய்ய மறுத்து விட்டார்.

 

இதனால் வெகுண்ட அரசு இவரைச் சிறையில் அடைத்தது.

ஒரு மாதம் சிறையில் கழித்தார் இவர்.

 

போர் முடிந்த பிறகு தன் பணியைத் தொடரலானார் காத்லீன்.  அப்போது இங்கிலாந்தின்  ராயல் சொஸைடி பெண் விஞ்ஞானிகளையும் அதில் சேர அனுமதித்தது.

இவரும் இன்னொரு பெண்மணியான மார்ஜரி ஸ்டெபென்ஸனும் அதில் சேர்ந்தனர். ராயல் சொஸைடியில் சேர்ந்த முதல் இரு பெண்மணிகள் என்ற புகழையும் பெற்றனர்.

 

போரை விரும்பாத பெண் விஞ்ஞானி என்ற புகழைப் பெற்றவர் காத்லீன்!

*********

 

புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 1 (Post No3518)

Picture of Paul Watson

 

Written by S NAGARAJAN

 

Date: 6 January 2017

 

Time uploaded in London:-  6-21 AM

 

 

Post No.3518

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

30-12-2016 தேதியிட்ட பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் பகுதியில் 309ஆம் அத்தியாயமாக வெளியிடப்பட்ட கட்டுரை

 

 புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 1

ச.நாகராஜன்

t

“நீரும், காற்றும் மிகவும் இன்றியமையாத இரண்டு செல்வங்கள். அவற்றைச் சார்ந்தே உயிரினங்கள் இருக்கின்றன. அவை இப்போது உலகின் மிகப் பெரிய குப்பைத் தொட்டிகளாக மாறி விட்டன!” – ஜாக்கஸ் வெஸ் காஸ்டோ

 

 

நாளுக்கு நாள் மோசமாகி வரும் உலகின் சுற்றுப்புறச் சூழ்நிலை பற்றி, ஐ,நாவின் உலக சுகாதார நிறுவனம் அவ்வப்பொழுது தன் கவலையைத் தெரிவித்து வருகிறது.

நம்முடைய அடுத்த தலைமுறைக்கு நல்ல காற்றையும் நல்ல நீரையும் தர மாட்டோம் என்பதோடு பல உயிரினங்களை அழித்த பாவத்திற்கும் நாம் ஆளாவோம் என்பதை உணர வேண்டிய கடைசி கட்டத்திற்கு நாம் வந்து விட்டோம்,

 

 

    அந்த அளவிற்கு கார்பன் நச்சுப் புகை வளி மண்டலத்தைச் சூழ்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் டீஸல் வாகனங்கள். ஃபாஸில் ஃப்யூயல் எனப்படும் படிம எரிபொருள்களால் ஓடும் வாகனங்கள் நாம் உயிர் வாழத் தகுதியற்ற நச்சுச் சூழ்நிலையை உருவாக்கி விட்டன,

 

 

     இந்த நிலையில் சில உத்வேகமுள்ள உத்தமர்கள் தங்கள் தலைப் பொறுப்பாக சூழ்நிலையைப் பாதுகாக்க விழைந்துள்ளனர்.

 

புத்துலகம் படைக்க விழையும் இவர்களைப் பற்றி அறிந்து கொள்வதோடு அவர்களுடன் இணைந்து நாமும் நம்மாலான பணிகளைச் செய்தால் உலகை நல்ல விதமாகக் காத்த நல்லவர்களின்  பட்டியலில் நாமும் இணைவோம்,
சில நல்லவர்களின் உத்வேக மூட்டும் பணிகளைப் பார்ப்போம்:

 

 

அமோரி லோவின்ஸ்

 

 

கார்,லாரி போன்ற வாகனங்கள் டீஸலை உபயோகிக்காத ஒரு உலகத்தைப் பற்றிக் கனவு காணும் அமோரி லோவின்ஸ் ஒரு இயற்பியல் விஞ்ஞானி. இவருக்கு வயது 70. அமெரிக்கரான இவரை பிரபல டைம் பத்திரிகை 2009ஆம் ஆண்டு உலகின் செல்வாக்குள்ள நூறு பேர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது!

 

    “மின்சார பவர் ஸ்டேஷன்கள் வேண்டாம். கட்டிடங்களும் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களும் உருவாக்கும் ஆற்றலே தொழிற்சாலைகளை நடத்தப் போதுமானதாக இருக்கும். மின்சாரத்தை உருவாக்காத எந்த ஒரு வீட்டையும் காண முடியாது. கார்பன் நச்சுப்புகையே வெளியேறாது.

தொழிற்சாலைகள் கழிவாக எதையும் வெளியேற்றாது.”

 

 

     இப்படியெல்லாம அதிரடியாகச் சொல்லும் லோவின்ஸ் அதற்கான தனது திட்டத்தையும் விவரிக்கிறார்.

 

ஹைப்பர் கார் என்ற இவரது திட்டத்தின் படி உருவாக்கப்படும் கார்கள் கார்பன் ஃபைபர் ஹைப்ரிட் பெட்ரோலையும் மின்சக்தியையும் கொண்டு கார்களை இயக்கும். இதனால் கார்பன் புகை வெளிவராத சூழ்நிலை உருவாகும்.

 

 

     இந்தக் காரை கவனமாக ஓட்டுவதன் மூலம் இரு மடங்கு திறனைப் பெறலாம். காரின் எடையை மிகவும் குறைத்து விட்டு அதில் பயோ எரிபொருளையும் பயன்படுத்தினால், ரீ சார்ஜ் செய்து கொள்ளக் கூடிய பாட்டரிகளையும் பொருத்தி எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் மின்சக்தியை சார்ஜ் செய்து கொண்டால் இன்னும் அதிக லாபத்துடன் வண்டியை இயக்கலாம் என்கிறார் அவர்.

 

 

   அவரது அறிவுரையை ஏற்று டொயோடா நிறுவனம் புது வித கார்களை வடிவமைத்து வருகிறது. அமெரிக்க ராணுவத்தின் ஏராளமான வாகனங்களுக்கு பல லட்சம் டாலர்களை செலவழிக்கும் பெண்டகனும் கூட அவரை அழைத்து ஆலோசனை கேட்டு அதன் படி நடந்து வருகிறது.

 

காப்டன் பால் வாட்ஸன்.

 

கடலில் வாழும் உயிரினங்களைக் காக்கும் காப்பாளராகத் தன்னைத் தானே நியமித்துக் கொண்ட காப்டன் பால் வாட்ஸன் ஒரு அதிரடி வீரர். 66 வயதாகும் இவர் நேரடியாக களத்தில் இறங்குபவர். தனக்கே சொந்தமான இரண்டு கப்பல்களை உலகின் பெருங்கடல்களில் உலவ விட்டு திருட்டுத்தனமாக திமிங்கிலம் சுறாமீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களைக் கொல்பவர்கள் மீது நேரடித் தாக்குதல் நடத்துகிறார்,

இதனால்  மிரண்டு போன பல உலக நாடுகள் இவரைக் கடல் தீவிரவாதி என்று திட்டுகின்றன. ஆனால் கடல் பற்றிய விதிகளை நன்கு அறிந்த இவர், அநியாயத்திற்கு எதிராகத்தானே நான் செயல்படுகிறேன் என்கிறார்.

 

 

    ஈக்வடார் நாடு இவரைத் தனது அதிகாரபூர்வமான கடல் காப்பாளராக அறிவித்துள்ளது. ஆகவே கடல் வாழ் உயிரினங்களை அநியாயமாகக் கொல்வோரையும் கடலை மாசுபடுத்துவோரையும் இவர் கைது செய்கிறார். உலகின் கடல் வளத்தையும் சுற்றுப்புறத்தையும் பாதுகாக்க சுற்றுப் புறக் காவல் படை என்று ஒரு படை தனியாக வேண்டும் என்பது இவரது வேண்டுகோள்.

 

 

    இவர் காக்கும் கடல் வாழ் அரிய உயிரினங்களின் எண்ணிக்கை ஒரு வருடத்தில்  மட்டும்  ஒரு லட்சத்தையும் தாண்டுகிறது. இவரை சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் பெரிதும் மதித்து நேசிக்கின்றனர்.

 

 

குறிப்பிடத் தகுந்த இன்னும் சிலரையும் அடுத்துப் பார்ப்போம்..

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில .. ..

 

அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி.யான வில்லியம் ப்ராட்ஃபோர்ட் ஷாக்லி (William Bradford Shockley) ஜங்ஷன் டிரான்ஸிஸ்டரைக் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசை 1956ஆம் ஆண்டு பண்டீன் மற்றும் ப்ராட்டெய்ன் ஆகிய விஞ்ஞானிகளோடு இணைந்து பெற்றுக் கொண்டவர். அவருக்கு கறுப்பர் பற்றிய விசித்திரமான கொள்கைகள் உண்டு.

 

 

   கறுப்பு அமெரிக்கர்கள் மரபணு ரீதியாகவே தாழ்த்தப்பட்டவர்கள் என்று அவர் கருதினார். அவர்களின் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்தாவிடில் மொத்த அமெரிக்காவின் அறிவு கூர்மையே சேதமாகி விடும் என்று சொல்லத் தொடங்கினார். இதனால் ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் அனைவரின் வெறுப்புக்கும் எதிர்ப்புக்கும் ஆளானார்.ஆனால் அவர் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

 

 

     அவரை எதிர்த்து ஆங்காங்கே கூட்டங்கள் நடந்தன. அவரை வழி மறித்து எதிர்ப்பைத் தெரிவிப்பதும் தொடர்ந்தன. ஆனால் இதற்குக் கூட அவர் அசரவில்லை.

 

 

    ஒரு நாள் அவரை எதிர்த்து கோஷம் போட்டவர்களின் மைக் செட்டுடன் இணைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் வேலை செய்யவில்லை. என்ன செய்வதென்று அவர்கள் திகைப்பில் ஆழ்ந்தனர்.

     ஷாக்லியோ நேராக அந்த ஒலிபெருக்கிகளின் அருகே சென்று அதை ரிப்பேர் செய்ய ஆரம்பித்து கச்சிதமாக அதைச் சரி செய்து விட்டார்.\

 

 

    ஷாக்லியின் இந்த ஷாக் ட்ரீட்மெண்டைக் கண்டு அவர்கள் அதிர்ந்து போயினர்.ஆனால் அவரோ தன் வழியில் வழக்கம் போலச் சென்றார்.

 

     கொள்கை மாறுபட்டிருந்தாலும் உதவி செய்வது என்பது ஒருவரின் கடமை என்பதை அந்த விஞ்ஞானி நிரூபித்துக் காட்டி விட்டார்.

*******.