
Post No. 8710
Date uploaded in London – – –20 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
YOU ARE INVITED TO LISTEN TO OUR QUESTION AND ANSWERS ON HINDUISM (in tamil) AND WEEKLY ROUND OF HINDU EVENTS AROUND THE WORLD (in Tamil) VIA ZOOM OR FACEBOOK.COM/GNANAMAYAM
LIVE ON MONDAYS AT 14-00 HORS LONDON SUMMER TIME AND 18-30 IST. BUT YOU MAY SEE US 24 HOURS A DAY AT FACEBOOK.COM/GNANAYAMAYAM
14-9-2020 அன்று நடைபெற்ற facebook.com/gnanamayam கேள்வி-பதில் நிகழ்ச்சியில் ச.நாகராஜன் புனர்வசு பற்றிய கேள்விக்கு அளித்த பதில் இது. ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டன் நேரம் மதியம் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது. அன்பர்கள் தங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டுகிறோம்.
வணக்கம்!
சென்ற வாரம் திரு சீனிவாசன் அவர்கள் ராமனின் புனர்வசு நட்சத்திரம் பற்றிச் சொன்னார். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சில நட்சத்திரங்களே கடவுளின் பெயர்களாக வருகின்றன. அதில் ஒன்று புனர்வசு. இது பற்றி உங்கள் கருத்து என்ன? புனர்வசு பற்றி புராணக் கதைகள் உண்டா?
இதோ பதில்:-
27 நட்சத்திரங்களும் அபூர்வமான வரலாறுகளைக் கொண்டவை. வானத்தில் திகழும் இவை பற்றிய ஆச்சரியகரமான உண்மைகள் புராணங்களில் கதை வடிவமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
புனர்வசு 27 நட்சத்திரங்களில் 7வது நட்சத்திரமாகத் திகழ்கிறது.
புனர்வசு தேவதையானவள் மஞ்சள் நிறமுள்ளவள். ஸ்ருக், ஸ்ருவம், ஜபமாலை, கமண்டலம் ஆகியவற்றை நான்கு கரங்களில் தரித்திருப்பவள். அதிதி இந்த நட்சத்திரத்தின் அதி தேவதை.
ஸ்ரீராமருடைய நட்சத்திரம் என்பதால் இது விசேஷ பெருமையைப் பெறுகிறது.
புனர்வசுவின் நான்காம் பாதத்தில் ராமர் பிறந்ததால் அவர் ராசி கடக ராசியாக அமைகிறது.
புனரர்வசு என்பது புனர் மற்றும் வசு ஆகிய இரு சொற்களின் சேர்க்கையாகும்.
புனர் என்றால் மறுபடி திருப்பி வருவது. வசு என்பது ஒளி, செல்வம் உள்ளிட்ட அனைத்து நலன்களையும் குறிக்கிறது.
இந்த நட்சத்திர வடிவம் அம்புகள் அடங்கிய அம்பராவைக் கொண்டிருக்கிறது. இந்த அம்புகள் எல்லையற்ற ஆற்றல் கொண்டவை. யார் இதை உணர்ந்து ஆணயிடுகிறார்களோ அவர்களுக்கு இவை பலன் தரும்.
புராணத்திலே புனர்வசுவைப் பற்றி விளக்கமாகக் காண முடிகிறது. பிரம்மாவின் புதல்வர் மரீசி. அவரது புதல்வர் கஸ்யபர், அதாவது பிரம்மாவின் பேரர். தக்ஷ ப்ராஜாபதியின் மகளான அதிதியை கஸ்யபர் மணந்தார். அதிதி என்றால் எல்லையற்றவள் என்று பொருள். அளப்பரிய ஆற்றல் கொண்டவள் அதிதி. அதிதிக்கு ஸத்யம், தயாளம், பெருந்தன்மை, தூய்மை, அழகு, ராஜ கம்பீரம் உள்ளிட்ட பல குண நலன்கள் உண்டு. அதிதிக்கு 12 ஆதித்யர்கள் பிறந்தனர். இந்திரன், பாகன், வாயு, த்வ்ஷ்டா, வருணர், ஆர்யமான், பூஷா, மித்ரா, அக்னி, பர்ஜன்யா, விவஸ்வான், தினகர் ஆகியோர் இந்த 12 ஆதித்யர்கள்.

புனர்வசுவின் அதி தேவதையான அதிதியைப் பற்றி ஏராளமான புராணக் கதைகள் உண்டு. அதிதியின் 12 சகோதரிகள், அதிதிக்கு மஹாவிஷ்ணு வாமனனாகப் பிறந்தது, நரகாசுரன் அதிதியின் காதணிகளைத் திருடியது, புதனிடம் அதிதி சாபம் பெற்றது என இப்படி பல சம்பவங்களைப் புராணங்களிலும் ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களிலும் காணலாம்.
இழந்ததைப் பெறுவது, பிரிந்த கணவன் மனைவி திருப்பி ஒன்று சேர்வது, தூர தேசங்களில் பயணம் செய்தவர் திரும்பி வருவது இவை எல்லாம் புனர்வசு நட்சத்திரம் தரும் பலன்களாகும்.
ராமரின் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் ஒரு முறை பார்த்தால் இந்த நட்சத்திரத்தின் பலன்கள் நன்கு தெரியவரும்.
ஒரு முறை கேட்டால் மட்டும் போதாது, மறுமுறை கேட்டால் அடைய முடியும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது புனர்வசு. எல்லையற்ற தன்மையையும் -limitless abundance – இது குறிக்கிறது.
மேலை நாட்டு வான சாஸ்திரத்தில் கேஸ்டர் மற்றும் போலக்ஸ் இந்த நட்சத்திரத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.கேஸ்டர் ஒன்றை இழக்கச் செய்யும்; போலக்ஸ் அதை மீட்டுத் தரும்.
விஷ்ணுசஹஸ்ரநாமத்தில் 150வது நாமமாக வருவது புனர்வஸு என்ற நாமம்.
இதற்கு பாஷ்யம் அருளி இருக்கும் ஆதி சங்கரர் திருப்பித் திருப்பி உடல்களில் க்ஷேத்ரக்ஞனாக உறைபவர் விஷ்ணு என்று கூறி அருளுகிறார்.
பராசர பட்டரோ தனது பாஷ்யத்தில் மற்ற மூர்த்திகளிலும் தேவதைகளிலும் அந்தராத்மாவாக உறைபவர் விஷ்ணு என அர்த்தம் விளக்குகிறார்.
இதற்கு அடுத்து வரும் நாமம் உபேந்திரன் என்பதாகும். புனர்வஸு ராமாவதாரத்தையும் உபேந்திர என்னும் நாமம் கிருஷ்ணாவதாரத்தையும் குறிக்கிறது.
புனர்வசுவின் பெருமை எல்லையற்றது, அனைத்தையும் அளிக்க வல்லது, வேண்டியதை உடனே என்பதைக் காண்பிக்க புனர்வசு நட்சத்திரத்தில் ஜனித்த காமதேனுவைக் குறிப்பிடலாம்.
புனர்வசுவில் பிறந்த பெரும் மகான் பகவான் ரமண மஹரிஷி ஆவார். அப்பர் திருவாதிரைப் பதிகத்தைப் பாடி அருளியது போல, ரமண மஹரிஷியின் அணுக்கத் தொண்டரான முருகனார் ‘புனர்வசு வண்ணம்’ என்ற ஒரு பதிகத்தைப் பாடியுள்ளார்.
ஆயுர்வேதத்தை அருளிய புனர்வசு ஆத்ரேயா அக்னிவேசதந்த்ரா என்ற நூலை இயற்றிய அக்னிதேவரின் குரு ஆவார்.
புனர்வசு நட்சத்திரத்தை வானில் எப்படிக் கண்டு வணங்கலாம்? ஓரியன் கூட்டத்திற்கு வடகிழக்காக வட வானத்தில் உயரத்தில் இரு நட்சத்திரங்களைக் காணலாம். இவற்றில் கிழக்காக ஒளிர்வது போலக்ஸ் (Polux) என்னும் நட்சத்திரம். அதற்கு சற்று வடமேற்காக உள்ளது காஸ்டர் (Castor) நட்சத்திரம். இந்த இரட்டை நட்சத்திரங்களே புனர்வசு கூட்டமாகும். இதே ஓரியன் கூட்டத்தில் ப்ராசியன், சிரியஸ் ஆகிய நட்சத்திரங்களும் உண்டு. இவை பிரமிக்க வைக்கும் சுவையான தகவல்களைத் தருபவை; பூமியில் மனித நாகரிகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை.
புனர்வசு நட்சத்திரத்திற்கு இன்னும் ஒரு பெருமை உண்டு.
இந்த நட்சத்திரம் எந்தக் கிழமை, திதியில் வந்தாலும் அதற்கு மரண யோகம் இல்லை!
இப்படி புனர்வசுவின் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் வாழ்க்கையில் நம்பிக்கையைத் தரும் நட்சத்திரம் புனர் வசு. இழந்தது கிடைக்கும்; எல்லையற்ற ஆற்றல் மிக்க பாணங்களை எடுத்து அவற்றை விடுத்து வெற்றி பெறலாம். மீண்டும் மறு ஒளியைத் தரும் புனர்வசுவைப் போற்றுவோம்; வணங்குவோம்! ஒளி பெறுவோம்! உயர்வோம்!
அடுத்து இன்னும் ஒரு நிகழ்ச்சியில் உங்களைச் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்.
—subham—-
tags -புனர்வசு, நட்சத்திரம், மஹிமை,