மறு பிறப்பு உண்டா என்ன? – சரகர் தரும் பதில்!! (Post No 2901)

punarjanma 4

Article written by S.NAGARAJAN

 

Date: 17 June 2016

 

Post No. 2901

 

Time uploaded in London :–  5-42 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

திரு ஆர் சி ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாதம் தோறும் நெல்லையிலிருந்து தமிழில் வெளி வரும் மருத்துவ மாத இதழான ஹெல்த்கேர் இதழில் மே 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

ஆரோக்கிய ஆன்மீக இரகசியம்

 

மறு பிறப்பு உண்டா என்ன? – சரகர் தரும் பதில்!!

 

.நாகராஜன்

 punarjanma5

று பிறப்பு பற்றிய சந்தேகங்கள்

 

மறு பிறப்பு பற்றி ஏராளமான சந்தேகங்கள் இயல்பாகவே எழுகின்றன. புண்ணிய காரியங்களைச் செய், மறு உலகில் சந்தோஷமாக இருக்கலாம்; மறு பிறப்பில் நன்றாக வாழலாம் என்ற கொள்கை முன் வைக்கப்படும் போது அதற்கு என்ன ஆதாரம் என்ற கேள்வி எழுகிறது? கண்ணால் பார்ப்பதே மெய் என்று எடுத்துக் கொண்டால் மறு உலகத்தைக் கண்ணால் காண முடிவதில்லையே!எப்படி அதை நம்ப முடியும் என்ற கேள்வி எழுகிறது.

 

 

சாஸ்திரங்களை நம்புவோர் மறு பிறப்பு உண்டு என்று சொல்லும் போது அதை ஏற்காதவர்கள் அதற்கு என்ன ஆதாரம் என்கின்றனர்.

 

தாய் தந்தையே இந்தப் பிறவிக்குக் காரணம் என்றால் இந்தப் பிறவிக்குப் பின்னால் உள்ள பிறவிக்கு யார் காரணம்? இயற்கை தான் நம்மைப் படைக்கிறது என்று வைத்துக் கொண்டால் அப்போதும் கூட இன்னொரு பிறவிக்கு காரணம் எது?மதியே அனைத்திற்கும் காரணம் என்று வைத்துக் கொண்டாலும் மறு பிறப்பு கொள்கை அடிபட்டுப் போகிறது.

இப்படி அனைத்துக் கோணங்களையும் எடுத்துக் கொண்டு அலசி ஆராய்கிறார் சரகர்.

 

 

 

எல்லைக்குட்பட்ட புலன்களின் செயல்பாடுகள்

 

புத்திசாலியாக இருக்கும் ஒருவன் மறுபிறப்புக்கு மாறாகப் பேசப்படும் வாதங்களை ஏற்கக் கூடாது.ஏன்? ஏனெனில் புலனுக்கு உள்ளடங்கிய பார்வை ஒரு எல்லைக்கு உட்பட்டவை. ஆனால் அறிவோ – சாஸ்திரங்கள் மூலமாகப் பெறப்படுவது, ஊகம், தர்க்கம் மூலமாக அறிதல் ஆகியவை மூலமாகப் பெறப்படும் அறிவோ – எல்லையற்றது. அதன் மூலம் புலன்களுக்கு அப்பாற்பட்ட அனைத்தையும் பற்றிய சரியான பார்வையைப் பெற முடியும்.

 

இன்னொரு விஷயம். கண்ணால் பார்ப்பது மட்டுமே மெய்; புலன்களால் உணரப்படுவது மட்டுமே உண்மை என்று கூறுவது சரியான் ஒன்றல்ல. புலனுக்கு மீறிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. மிகுந்த தொலைவில் உள்ள ஒன்றை எப்படிப் பார்க்க முடியும்? தடைப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு பொருளைப் பார்ப்பது சாத்தியமா? எடுத்துக்காட்டாக சுவர் ஒன்றின்  பின்னால் இருக்கும் ஒரு பொருளை எப்படிப் பார்ப்பது? புலன்கள் கூர்மையின்றி இருந்தால் அப்போது அந்தப் புலன்கள் பார்க்க முடிபவை மட்டுமே தான் உண்மையா? புலன்கள் கூர்மையாக இருந்தாலும் மனம் ஒன்றில் ஈடுபடவில்லையெனில் எதிர்த்தாற் போல இருப்பதும் தெரிவதில்லை; காதில் ஒலி விழுந்தாலும் கவனம் இல்லையேல் அது கேட்பதில்லையே! ஒரே பொருள் போன்ற இரண்டு பொருள்களைக் கண்டால் மயக்கம் ஏற்படுகிறது. மிகச் சிறிய பொருளைக் காண முடிவதில்லை. நிழல் பட்டால் அப்போது எதிரில் இருப்பதும் மறைகிறது. ஆக இப்படி எவ்வளவோ விஷயங்கள் புலன்களை எல்லைக்குட்பட்டவை என்பதை நிரூபிக்கிறதே

 

 

பெற்றோர் தான் பிறப்புக்கு காரணம் என்றால் அது இரண்டு விதமாக ஏற்பட வேண்டும். ஒன்று  முழுமையாக அவர்கள் பிறப்புக்குரிய உயிரில் மாற வேண்டும். அப்படி என்றால் அவர்கள் புதிய உயிர் பிறந்தவுடன் மரிக்க வேண்டும். அப்படி ஏற்படவில்லை.

 

 

அடுத்து ஒரு பகுதி மட்டும் புதிய உயிரில் மாற் வேண்டும். அப்படி தாயோ தந்தையோ பகுதியைப் பிரித்துக் கொடுக்கவில்லை. அப்படி என்றால் வேறு எதோ ஒன்று புதிய உயிரின் படைப்பில் இருக்கிறது, இல்லையா?

பெற்றோர் மட்டுமே பிள்ளைகளின் பிறப்புக்குக் காரணம் என்றால், அவர்களின் மனமும், புத்தியும் பிள்ளைகளுக்கு மாற்றி விடப்படுகிறது என்றால் அப்படிப் பிள்ளை பிறந்தவுடனேயே அவர்களது மனம் புத்தி ஆகியவை இயங்காமல் நின்று விட வேண்டும்..ஆக, அதுவும் சரியல்ல.

 

 

ஒரு பிறப்பு ஏற்படும் போது ஐந்து அடிப்படை பூதங்களும் ஆத்மாவும் இணைகிறது; பின்னர் பிரிகிறது. ஆத்மா முடிவற்ற ஒன்று.

 

 punarjanma 6

உலகம் தற்செயலாக ஏற்பட்ட ஒன்றா?

 

உலகம் தற்செயலாக ஏற்பட்ட ஒன்று என்ற வாதமும் சரியில்லை.  ஏனெனில் இப்படிச் சொல்பவருக்கு எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை; ஆராய வேண்டிய அவசியமும் இல்லை. அது அது தன் பாட்டிற்கு ஏற்படுகிறது என்றால் மேலே பேசுவதற்கு ஒன்றுமே இல்லை!

 

 

அறிவால் ஆய்ந்து பார்!

ஆகவே புத்திசாலியாக இருக்கும் ஒருவன் தன் அறிவைக் கொண்டு ஆராய வேண்டும்.

எந்த ஒன்றும் இரண்டே இரண்டுக்குள் தான் அடங்கியிருக்கிறது.

ஒன்று அது உண்மையாக இருக்க வேண்டும் அல்லது பொய்யாக இருக்க வேண்டும்.

 

 

ஒரு விஷயம் உண்மையா அல்லது பொய்யா என்பதைக் கண்டுபிடிக்க நான்கு வழிகள் உள்ளன.

  • ஆன்றோர் அல்லது ரிஷிகள் கூற்று
  • நேரடிப் பார்வை (புலனறிவு)
  • ஊகம்
  • தர்க்கம் மூலமாக அறிவது

ரஜஸ், தமஸ் ஆகிய இரண்டையும் கடந்து நிகழ் காலம் எதிர் காலம், இறந்த காலம் ஆகிய மூன்று காலங்களையும் பார்க்க வல்ல்வர்கள் ஆப்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களிடம் பொய்யே இருக்க முடியாது. ஆக அவர்கள் கூறுவதை நம்பலாம்.

 

punarajanma3

ப்ரத்யக்ஷ பிரமாணம் என்பது ஒரு எல்லைக்குட்பட்டது.

ஊகம் என்பதோ மூன்று வகைகளைக் கொண்டது. நிகழ்காலம், இறந்தகாலம் எதிர்காலம் ஆகியவற்றுடன் அது தொடர்பு கொண்டது. புகை மூலம் தீ இருப்பது தெரிகிறது. குழந்தை பிறப்பதன் மூலம் பாலியல் சேர்க்கை உணரப்படுகிறது. இவை இரண்டும் நிகழ்காலம் இறந்தகாலம் ஆகியவற்றிற்கான உதாரணங்கள்.ஒரு மரத்தின் விதையை விதைக்கும் போது அது எந்த மரமாக வளரும் என்பதை ஊகிக்க முடிகிறது. இது எதிர்காலத்திற்கான விளக்கம்.

 

 

தர்க்கம் மூலமாக அறிவதைப் பல உதாரணங்களால் விளங்கிக் கொள்ளலாம். நிலத்தைப் பண்படுத்தி உழுது. விதை விதைத்து பருவ காலத்தில் மழையும் பெய்தால் விளைச்சல் நன்கு ஏற்படும்.ஆணும் பெண்ணும் பருவ காலத்தில் இணைந்தால் கரு உருப்பெறும். நிகழ்காலம் இறந்த காலம் எதிர்காலம் ஆகிய மூன்றிற்கும் பொருந்தும் ஒன்றைப் பலவேறு காரணிகளால் புத்தி பார்த்து அறிவது யுக்தி எனப்படும்.

இது மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கும் தர்மம் (புண்ய காரியங்கள்), அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்) ஆகிய மூன்றைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.

ஆகவே இந்த அடிப்படையில் மறுபிறப்பு பற்றி ஆராய வேண்டும்.

 

punarjanma1

 

மறுபிறப்பு உண்மையே என்பதற்கான காரணங்கள்

ஒரு வித ஆசையும் அற்ற பெரும் ரிஷிகள் கூறுவது உண்மை. அவர்கள் காரண காரிய தொடர்பு பற்றி ஆய்ந்து மறு பிறப்பு உள்ளது என்கின்றனர்.

 

 

இரண்டாவதாக பிறக்கும் குழந்தைகளில் பிறக்கும் போதே ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. நிறம், எடை, வடிவம், அழகு,புத்தி, மனம், குரல் இப்படி எல்லாவற்றிலும் தனித் தனி வேறுபாடு இருக்கிறது. ஒரு குழந்தை ராஜ குமாரனாகப் பிறக்கிறது. இன்னொன்றோ பிச்சைக்காரனாகப் பிறக்கிறது.

ஒன்று பிறந்தவுடன் இறக்கிறது. இன்னொன்றோ நூறு வயது வ்ரை வாழ்கிறது. தாய்ப் பாலைக் குடிப்பது, அழுவது, சிரிப்பது ஆகிய எல்லாவற்றிலும் கூட ஒரு குழந்தை போல இன்னொரு குழந்தை இருப்பதில்லை.

 

 

இந்த ஜன்மத்தில் செய்யும் நல்ல அல்லது கெட்ட வினைகளுக்கேற்ப அடுத்த பிறவி அமைகிறது என்பதை ஊகித்து அறியலாம்.

 

தர்க்கப் படியாகப் பார்த்தாலும் மறு பிறப்பு சரியே. கர்த்தா, காரணம் ஆகியவற்றிற்கேற்ப செயல்கள் அமைகின்றன. விதையின்றி மரமில்லை.

 

ஆகவே மேற்கூறிய அனைத்தையும் நன்கு ஆராய்ந்து பார்த்தால் மறு பிறப்பு உண்டு என்பது நன்கு புரியும்.

ஒரு புத்திசாலி நாத்திக வாதத்தால் மயங்க மாட்டான். அவன் நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்து நல்லதையே பெற முயல்வான்.

 

ஆக சரகரின் இந்த விரிவான விளக்கம் மறு பிறப்பு பற்றிய தெளிவை நமக்கு ஏற்படுத்துகிறது, இல்லையா?!

************.

 

மறு பிறப்பு பற்றி பிரமுகர்கள் நம்பிக்கை!

napoleon

Written  by  S NAGARAJAN

Date: 3 November 2015

Post No:2296

Time uploaded in London :–  8-11 am

(Thanks  for the pictures) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

அறிவியல் துளிகள் தொடர்

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் 30-10-2015 இதழில் வெளி வந்த கட்டுரை இது. இந்தத் தொடர் நாலரை ஆண்டுகளுக்கும் மேலாக வெளி வருகிறது.

மறு பிறப்பு பற்றிய சிந்தனையாளர்கள், கவிஞர்கள், தளகர்த்தர்களின் நம்பிக்கை!

 

.நாகராஜன்

வருந்தாதே. நீ இழப்பது இன்னொரு உருவத்தில் வந்து விடும்!” – ரூமி

உலகின் தலை சிறந்த தளகர்த்தர்கள், சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகள் உள்ளிட்ட ஏராளமானோர் மறுபிறப்பின் மீது அபாரமான நம்பிக்கை கொண்டவர்கள்.

 

நெப்போலியன் தன் படையை வழி நடத்திச் செல்லும் போது படை நடுவில் ஆவேசத்துடன் குதிரையின் மீது எழுந்து நின்று இரு கைகளையும் உயர்த்திநான் சார்லி மாக்னே நான் சார்லி மாக்னேஎன்று உரக்கக் கூவுவானாம். (மாவீரனான சார்லிமாக்னே மேற்கு ஐரோப்பா முழுவதையும் ஒன்று படுத்தியவன். நெப்போலியனுக்கு பல நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்தவன்). நெப்போலியனின் ஆவேசத்தைப் பார்க்கும் அவன் படைவீரர்கள் உக்கிரத்துடன் போரிடுவார்களாம்!

 

 

அடுத்து அமெரிக்க ராணுவ தளபதியான திறமைவாய்ந்த ஜார்ஜ் பேட்டன் சரித்திரத்தில் தனக்கென தனியிடம் பிடித்தவர். இரண்டாம் உலகப் போரில் அவரது சாகஸ செயல்கள் பற்றிய ஏராளமான திரைப்படங்கள் வந்துள்ளன. பேட்டன் என்ற படம் தலையாயது. பேட்டன் தனது ஆறு முந்தைய ஜென்மங்களை வரிசையாகக் கூறுவாராம். நெப்போலியனின் படையில் தான் பணி புரிந்து போர்க்களத்தில் போரில் உயிர் துறந்ததை அவர் கூறியதுண்டு. நேரம் வாய்க்கும் போதெல்லாம் தனது மறுபிறப்பு நம்பிக்கையை அவர் வலியுறுத்திக் கூறுவார்.

 

 dante

இத்தாலிய கவிஞனான தாந்தேக்கு மறுபிறப்பில் நம்பிக்கை உண்டு. கவிஞர்கள் டென்னிஸன். ப்ரௌனிங், கிரேக்க சிந்தனையாளர்கள் சாக்ரடீஸ், ப்ளேடோ ஆகியோரும் மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டவர்களே. லியனார்டோ டா வின்ஸி, வால்டேர், வாக்னர், ஹென்றி ஃபோர்ட், எடிஸன், எமர்ஸன், ரஸ்கின், பெஞ்ஜமின் ஃப்ராங்க்ளின் ஆகியோரும் இதில் தங்களின் நம்பிக்கையை வெளிப்படையாகத் தெரிவித்தவர்கள்.

 

 

எட்கர் கேஸ் 3000 மறுபிறப்பு கேஸ்களை சுட்டிக் காட்டி இருப்பது உலக பிரசித்தமான தொகுப்பு நூலானது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வேறொரு நாட்டில் இறந்து போய் அடக்கம் செய்யப்பட்ட ஒருவரின் கல்லறையைச் சரிபார்ப்பது வரை இவரது முன் ஜென்ம கேஸ்கள் பலராலும் தீவிரமாக ஆராயப்பட்டு சரிதான் என்று கண்டுபிடிக்கப்பட்டன.

 

தியாஸபி இயக்கம் எனப்படும் பிரம்மஞான சபை இயக்கம் தீவிரமாக இயங்கத் தொடங்கியவுடன் மேடம் ப்ளாவட்ஸ்கி, அன்னிபெஸன்ட் ஆகியோர் மறுபிறப்பிற்கான காரணங்களை விரிவாக விளக்கி உலகெங்கும் பேசினர். அன்னிபெஸண்ட் எழுதியரீ இன்கார்னேஷன்என்ற 96 பக்கம் கொண்ட சிறு நூலில் மறுபிறப்பிற்கான ஆட்சேபங்களாக ஐந்தையும் அது உண்டு என்பதற்கு 14 காரணங்களையும் தெளிவாக விளக்குகிறார். நூறு குருடர்களின் ஆயிரம் வார்த்தைகளை விட நேரில் பார்த்து ஒன்றை விளக்கும் பார்வையுள்ளவனின் ஒரு வார்த்தை பொருள் பொதிந்தது என்று அவர் ஆணித்தரமாகக் கூறுகிறார்.

 Adolf_Hitler_42_Pfennig_stamp

ஹிட்லரின் ஆராய்ச்சிகள் எப்போதுமே சற்று ஆழமானவையாகவும் விசித்திரமானவையாகவும் இருக்கும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் அமெரிக்க விஞ்ஞானிகள் ஐவர் அடங்கிய குழு ஒன்று 1946ஆம் ஆண்டு ஹிட்லர் என்னென்ன ஆராய்ச்சிகளைச் செய்தார் என்பதை அறிவதற்காக ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழுவின் தலைவர் விஞ்ஞானி டாக்டர் ராபர்ட் டி லஸ்டிக் (Dr Robert T Lustig). இவர் எலக்ட்ரோ பயாலஜியில் பெரும் நிபுணர். இவர் ஜெர்மனி சென்று ஹிட்லர் செய்த ஆய்வுகளைக் கண்டு பிரமித்துப் போனார். அவற்றில் முக்கியமான சுவையான ஆய்வு ஃப்ராங்க்பர்ட்டில் உள்ள கெய்ஸர் வில்ஹெல்ம் இன்ஸ்டிடியூட் டைரக்டரான டாக்டர் பி ராஜேஸ்வ்ஸ்கி (Dr B Rajewski) செய்த ஆராய்ச்சிகளே.

 

 

ராஜேஸ்வ்ஸ்கி மூளை, நரம்பு மண்டலம் மூலமாக செய்திகளை அனுப்புகிறது என்ற பாரம்பரிய கொள்கையை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு, ரேடியோ ஒலிபரப்பு போல நேரடியாக செய்திகள் மூளையிலிருந்து உடல் அங்கங்களுக்கு அனுப்பப்படுகின்றன என்றார். இதற்கான சோதனைச்சாலை ஆதாரங்களையும் அவர் வைத்திருந்தார். இந்த முடிவுகள் வியக்கத்தக்க ஸ்தூல சரீரம், சூக்கும சரீரம் பற்றிய தீர்க்கமான உண்மைகளைத் தந்திருக்கும். ஆனால் உலக யுத்த முடிவில் அரைகுறையாக கைவிடப்பட்ட ஹிட்லரின் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சிகளுள் இதுவும் ஒன்றானது.

 

ஹிந்து மத யோகிகளை எடுத்துக் கொண்டால் பல ஆயிரம் பக்கம் மறு ஜென்மத்திற்கென்றே ஒதுக்க வேண்டும். அமெரிக்காவை மிகவும் கவர்ந்த யோகாதா சத் சங்கத்தை நிறுவிய பரமஹம்ஸ யோகானந்தா தனதுஆயோபயாக்ராபி ஆஃப் யோகி’ (Autobiography of a Yogi) நூலில் தரும் சம்பவம் சுவையானது.

 

அவருக்குத் தெரிந்த ஒரு பையன் சீக்கிரமாகவே இறக்கப் போகிறான் என அவருக்குத் தெரிந்து விட்டது. அந்தப் பையன் பெயர் காசி. அவன் யோகானந்தரிடம் நான் அடுத்த பிறவி எடுக்கும் போது எங்கு பிறந்திருந்தாலும் என்னைக் கண்டுபிடித்து ஆன்மீகப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற வாக்குறுதியை வாங்கிக் கொண்டான்சில நாட்கள் கழித்து பொல்லாத விதிப்படி அவனது மரணம் சம்பவித்தது. சில காலம் சென்ற பின்னர், யோக முறை மூலம் ஆவி உலகில் சஞ்சரித்த யோகானந்தர், காசி மறு பிறவி அடைந்து விட்டானா என்று பார்த்தார். அவரது உள்ளுணர்வு அவன் சீக்கிரமே பிறக்கப் போகிறான் என்று கூறியது.

 yogananda

 

ஆனால் எங்குஎப்போது பிறக்கப் போகிறான்?

ஒரு நாள் யோகானந்தர் கல்கத்தா தெரு ஒன்றின் வழியே சென்று கொண்டிருந்தார். திடீரென்று அவரது உணர்வில்நான் காசி, இங்கு இருக்கிறேன்என்று தெளிவான குரல் ஒலித்தது.

 

காந்தத்தினால் ஈர்க்கப்பட்ட இரும்பு போல தன் சகாக்களுடன் ஒரு குறிப்பிட்ட வீட்டினுள் நுழைந்தார் யோகானந்தர். அந்த வீட்டு எஜமானிக்கு பிரசவ சமயம். யோகானந்தர் காசி பிறக்கும் இடம் இது தான் என நிச்சயித்தார். வீட்டு எஜமானன், எஜமானியிடம் உங்களுக்குப் பிறக்கப் போவது ஆண் குழந்தை என்று ஆரம்பித்து அங்க அடையாளங்களைத் தெளிவாகச் சொன்னார். அவன் ஆன்மீகப் பாதையில் நாட்டம் கொண்டு அதில் செல்வான் என்பதையும் கூறி விட்டுச் சென்றார். அதன் படியே நடந்தது. பிறந்த குழந்தை காசியின் மறு தோற்றம் போல இருக்க, சில காலம் சென்ற பிறகு அவன் உலக வாழ்க்கையைத் துறந்து துறவியானான்.

 

 

இது போன்ற சம்பவங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன. புனரபி ஜனனம் புனரபி மரணம் (மீளவும் பிறப்பு மீளவும் இறப்பு) என்ற ஆதி சங்கரின் வாக்கும் நவீன விஞ்ஞானிகளின் வாக்கும் ஒத்துப் போகும் நாட்களில் நாம் வாழ்கிறோம்.

மனிதப் பிறவியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என வாழ்க்கையில் சில நிமிடங்களேனும் சிந்திக்க வைக்க விஞ்ஞானிகளின் ஆய்வுகள் பெரும் தூண்டுகோலாக விளங்குகின்றன!

 

 Benjamin-Franklin

அறிவியல் அறிஞர் வாழ்வில்

அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒருவரும் சிறந்த ராஜ தந்திரியும் விஞ்ஞானியும் மாபெரும் கண்டுபிடிப்பாளருமான பெஞ்ஜமின் ஃப்ராங்க்ளின் (1706-1790) மறுபிறப்பில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். 84 ஆண்டுகள் வாழ்ந்த இவர் தனது 22ஆம் வயதிலேயே தனது கல்லறையில் பொறிக்க வேண்டிய வாசகத்தை இப்படி எழுதி வைத்தார்:

 

The Body of B. Franklin, Printer                                                 

Like the Cover of an old book                                                         

Its contents worn out,                                                            

And Stripped of its Lettering and Gilding,                                           

Lies here, Food for Worms,                                                              

But the Work shall not be wholly lost:                                                     

  For it will, as he believed,                                                            

Appear once more                                                               

In a new and more elegant Edition                                                           

Corrected by the Author

 

 

இதன் சுருக்கமான பொருள் இது தான்: பிரிண்டர் பெஞ்சமின் ஃப்ராக்ளினின் உடல் பழைய புத்தகத்தின் அட்டை போல உள்ளடக்கம் தேய்ந்து, எழுத்துகள் உரிக்கப்பட்டு மெருகு தேய்ந்து புழுக்களுக்கு உணவாக இங்கே இருக்கிறது. ஆனால் அது முழுவதுமாக தொலைந்து போகாது; ஏனெனில் அவர் நம்புவது போலவே அது மீண்டும் தோன்றும்அதை எழுதியவரால் சரி செய்யப்பட்டு ஒரு புதிய இன்னும் அதிக எழிலுடன் கூடிய பதிப்பாகத் தோன்றும்.

 

இறுதி வரை அவருக்கு மறுபிறப்பு பற்றிய ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது.

*********

மறுபிறப்பு உண்மையா ?- பகுதி 3

Picture is taken from another website.Thanks.

This article is the third part on Rebirth written by S NAGARAJAN

புனர்ஜென்ம உண்மைகள்! – 3

(அறிவியல், ஆன்மீக நோக்கில மறுபிறப்பு இரகசியங்கள்!)

 

தேவியின் பாதஸ்மரணை தரும் பலன்!

பதினெட்டு புராணங்களும் அத்தோடு பதினெட்டு உப புராணங்களும் தரும் புனர்ஜென்மக் கதைகள் மற்றும் சம்பவங்கள் சுவாரஸ்யமானவை.

எடுத்துக்காட்டாக தேவி பாகவதம் பதினொன்றாம் ஸ்கந்தம் பதினெட்டாம் அத்தியாயத்தில் விவரிக்கும் பிரக்த்ரதன் கதையைச் சொல்லலாம்.

பொதியமலையில் ஒர் சக்கிரவாக பக்ஷ¢ இருந்தது. அது பறந்தவாறே சென்று முக்தியை நல்கும் காசியை அடைந்தது.அங்கு அன்னபூரணி ஸ்தானத்தை விட்டு நீங்காது தினமும் பிரதக்ஷ¢ணமாகப் பறந்து கொண்டே இருந்தது.இந்தப் புண்ணியத்தால் இறப்பிற்குப் பின்னர் சுவர்க்கத்தை அடைந்து தேவரூபத்தோடு இரண்டு கற்பகாலம் வரை பல போகங்களை அனுபவித்துப் பின்னர் பிரகத்ரதன் என்ற பெயருடன் ஒரு க்ஷத்திரிய குலத்தில் பிறந்தது.அரசனாக விளங்கிய பிரகத்ரதன் சத்யவாதி. யாகங்களைச் செய்பவன்.ஜிதேந்திரியன். மூன்று காலங்களையும் அறியும் சக்தி கொண்டவன்.முன் ஜென்மம் தெரிந்தவன்.அவன் புகழ் எங்கும் பரவியது.

அவன் பூர்வ ஜென்ம ஞாபகத்தைக் கொண்டிருப்பவன் என்பதைக் கேள்விப்பட்டு முனிவர்கள் உட்பட்ட பலரும் அவனிடம் வந்தனர். அவர்கள் அவனை நோக்க,¢ ‘இப்படி திரிகால ஞானமும் பூர்வ ஜென்ம உணர்ச்சியும் உனக்கு எந்தப் புண்ணியத்தால்  வந்தது’ என்று ஆவலுடன் கேட்டனர்.

அவனோ,”பூர்வ ஜென்மத்தில் நான் சக்கரவாக பக்ஷ¢யாக இருந்தேன்.புண்ணியவசத்தால் ஞானமில்லாமலேயே அன்னபூரணியை தினம் வலம் வந்தேன்.அதனால் சுவர்க்கமடைந்து இரண்டு கற்பகாலம் சகல போகமும் அனுபவித்துப் பின் பூமியில் இந்த சரீரம் அடையப் பெற்று திரிகாலஞானமும் பூர்வஜென்ம உணர்ச்சியும் பெற்றவனாக இருக்கிறேன். ஜகதம்பிகையின் பாதஸ்மரணையின் பலத்தை யார் அறிவார்கள்! இதை நினைத்த மாத்திரத்தில் என் கண்களிலிருந்து ஆனந்த பாஷ்பம் பொங்குகிறது” என்று  கூறித் தேவியைத் தொழுவதால் ஏற்படும் பலன்களை விளக்கினான்!

அனுமனே ருத்ரன்

ஆனந்த ராமாயணம் தரும் ஒரு அற்புதச் செய்தி அனும, ராம பக்தர்களையும் சிவ பக்தர்களையும் ஆனந்தத்தில் ஆழ்த்தும்! ஏகாதச (பதினோரு) ருத்திரர்களே குரங்குகளாக ஜனனம் எடுத்த செய்தி தான் அது! அசுரர்களின் அழிவுக்காக விஷ்ணுவுக்கு சகாயம் செய்ய வீரபத்திரன் சுக்கிரனாகவும்,சம்பு நலனாகவும்,கிரீஸன் நீலனாகவும்,மஹாயஸன் சுஷேணனாகவும்,அஜைகபாதன் ஜாம்பவானாகவும்,அஹிர்புத்னன் அங்கதனாகவும், பினாகதாரி  ததிவக்ரனாகவும்,யுதாஜித்து தாரகனாகவும்,ஸ்தானு தாலகனாகவும்,பர்க்கன் மைந்தனாகவும்,ருத்திரன் அனுமானாகவும் பிறந்தார்கள். ஆக அனுமனை வணங்கினால் சிவனுக்கு பிரீதி; விஷ்ணுவுக்கும் பிரீதி, அனுமனுக்கும் கூட பிரீதி!

 

காசியப ரிஷியே தசரதன்!

அத்யாத்ம ராமாயணம் பாலகாண்டம் இரண்டாவது சர்க்கத்தில் (23-26 சுலோகங்களில்) பிரம்மாவிடம் விஷ்ணு கூறுவதாக  தசரதனின் முன் ஜென்மத்தை எடுத்துரைக்கிறது!

விஷ்ணு பிரம்மாவிடம், “பூர்வம் காசியப ரிஷி நம்மைப் புத்திரனாகப் பெற வேண்டித் தவம் செய்ய, நாமும் அவ்வாறே அவருக்குப் புதல்வனாகும் வரத்தைத் தந்தோம்.இப்போது அவரோ பூலோகத்தில் தசரதனாகப் பிறந்திருக்கிறார்.அவருக்கு மகனாக கௌஸல்யா தேவி கர்ப்பத்தில் நாம் அவதரிப்போம்” என்று கூறுகிறார்!

பிரம்ம புராணம் சுபத்ரை மற்றும் கௌசிகனின் முற்பிறவியை எடுத்துக் கூறுகிறது என்று ஆரம்பித்துப் பட்டியலிட ஆரம்பித்தால் புராண முற்பிறவி சம்பவங்கள் ஒரு பெரிய தொகுப்பு நூல் ஆகி ஏராளமான மர்மங்களை அவிழ்க்கும் முற்பிறவிக் களஞ்சியம் ஆகி விடும்! கர்மங்களின் விசித்திரச் சங்கிலித் தொடர்பு பற்றித் தெரிந்து கொண்டு பிரமிப்பின் உச்சிக்குச் சென்று விடுவோம்! எத்தனை கோடி மனிதர்களுக்குத் தான் எத்தனை கர்மங்கள்! அவர்களுக்குத் தான் கர்மபலனுக்கேற்ப எத்தனை கோடானு கோடி ஜென்மங்கள்! கோடானு கோடி சூப்பர் மெகா கம்ப்யூட்டர்கள் கூட இந்தக் கணக்கைத் துல்லியமாகப் போட முடியுமா, என்ன!

 

நான்கு முகம் இல்லாத பிரம்மா!

பாரதம் வியாஸருக்குத் தரும் செல்லப் பெயர் கூட ஒரு முற்பிறவித் தொடரின் காரணமாகத் தான் என்றால் வியப்பு மேலிடுகிறது, இல்லையா!

பகவானான வியாஸர் நான்கு முகம் இல்லாத பிரம்மா, இரண்டு கரங்கள் உள்ள விஷ்ணு, நெற்றிக் கண் இல்லாத சிவன்! என்று கீழ்க்கண்ட சுலோகத்தில் போற்றப்படுகிறார்:

அசதுர்வதநோ பிரம்மா; த்விபாஹ¤ரப ரோஹரி I

அபால லோ சநச் சம்பு: பகவான் பாத நாராயண: II

நான்கு முகமில்லாத பிரம்மாவாக அவர் படைப்புத் தொழிலில் ஈடுபட்ட சம்பவத்தை மஹாபாரத அநுசாஸன பர்வத்தில் காணலாம்.

அவசரமாக ஓடும் ஒரு புழுவைப் பார்த்த வியாஸர், ‘ஏன் இப்படி அவசரமாக ஓடுகிறாய்’ என்று கேட்கிறார். ‘எதிர் வரும் பார வண்டி என் மீது ஏறி என்னை அழிக்காமல் இருக்க ஓடுகிறேன்’, என்றது புழு! ‘உயிர் போனால் போகட்டுமே உடலில் என்ன சுகம்’ என்று கேட்ட வியாஸரிடம் அது, தான் முற்பிறவியில் மனிதனாக இருந்ததாகவும் செய்த பாவத்தால் புழுவாக ஆனதாகவும் செய்த புண்ணியத்தால் வியாஸருடன் பேசும் பாக்கியம் கிடைத்ததாகவும் கூறுகிறது. ‘உனக்கு முற்பிறவி பற்றிய அறிவு எப்படி உண்டானது’ என்று வியாஸர் கேட்க, ‘கிழவியான என் தாயாரைக் காப்பாற்றினேன், ஒரு ஏழை அந்தணருக்கு பூஜை செய்தேன்,ஒரு விருந்தாளியின் பசியை அகற்றிச் சந்தோஷப் படுத்தினேன் ஆதலால் எனக்கு இந்த அபூர்வ அறிவு உண்டாயிற்று’ என்று பதில் சொன்னது. இதனால் மகிழ்ச்சி அடைந்த வியாஸர் அதற்கு முள்ளம்பன்றி, உடும்பு, காட்டுப்பன்றி, மான்,பறவை, ஏழைப் பணியாளன், வணிகன். க்ஷத்திரியன், அரசன் என பல பிறவிகளை படிப்படியாகத் தந்தார். ஒவ்வொரு பிறவியிலும் அது வியாஸரை வணங்கியதால் இப்படி ஏற்றம் பெற்றது. இறுதியில் ஒரு வேதியராகப் பிறந்து புண்ய கருமங்களைச் செய்து அந்தப் புழு முக்தி பெற்றது!

இப்படிபிரம்மாவுக்குப் போட்டியாக ஒரு படைப்புத் தொழிலைச் செய்து ஒரு புழுவை முக்தி அடையச் செய்ததால் அவர் நான்கு முகம் இல்லாத பிரம்மா என்று போற்றப்படுகிறார். ஆனால், அறத்தின் மூலம் உயர் பிறவி பெற்று முக்தி அடையலாம் என்பதே  கதை சொல்லும் உண்மை ஆகும்.

 

காந்திஜி டால்ஸ்டாய்க்கு எழுதிய கடிதம்

இனி நவீன யுகத்தில் நம் சம காலத்தில் வாழ்ந்த காந்திஜி புனர்ஜென்மம் பற்றிக் கொண்டிருந்த கொள்கைகளைப் பார்ப்போம். மகாத்மா காந்திஜி லியோ டால்ஸ்டாயின் கொள்கைகளினால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். அதனால் அவருடன் கடிதத் தொடர்பு அவருக்கு இருந்தது. ‘ஒரு ஹிந்துவுக்குக் கடிதம்’ என்ற டால்ஸ்டாயின் கட்டுரையை அவர் பிரசுரிக்க விரும்பினார்.ஆனால் அந்தக் கட்டுரையில் ஒரு பாராவில் புனர்ஜென்மத்தை மறுத்து டால்ஸ்டாய் கருத்துத் தெரிவித்திருந்தார். 1909 அக்டோபர் முதல் தேதியிட்ட கடிதத்தில் டால்ஸ்டாய்க்கு அவர் எழுதிய கடிதத்தில் புனர்ஜென்மத்திற்கு எதிரான கருத்தைத் தெரிவிக்கும் அந்த பாராவை நீக்கி வெளியிட அனுமதி கேட்டார். புனர்ஜென்மம் என்பது லட்சக்கணக்கான இந்திய சீன மக்களால் நம்பப்படும் கொள்கை என்றும் அது “அனுபவத்தின் அடிப்படையிலானது” (With many, one might almost say, it is a matter of experience) என்றும் விளக்கிய காந்திஜி தென்னாப்பிரிக்காவில் டிரான்ஸ்வால் சிறையில் நொந்து வாடுவோருக்கு புனர்ஜென்மக் கொள்கை ஆறுதல் அளிக்கும் ஒன்று என்று எழுதினார். காந்திஜியின் வேண்டுகோளை ஏற்ற டால்ஸ்டாய் அதை நீக்கி வெளியிடத் தன் அனுமதியைத் தந்தார். உடனே காந்திஜி அவருக்கு நன்றி தெரிவித்து 11-10-1909 தேதியிட்ட கடிதம் ஒன்றை அனுப்பினார். புனர்ஜென்மக் கொள்கை சத்யாக்ரகப் போராட்டத்திற்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதையும் கர்மா கொள்கை மூலமே தேசத்தை எழுப்பி விட முடியும் என்பதையும் நன்கு அறிந்திருந்த மகாத்மா கர்மாவிற்கு ஏற்ற பலன் என்ற  அறவழிக் கொள்கையின் அடிப்படையில் தேசத்தை புனர் நிர்மாணம் செய்தார்.

இனி காந்திஜியே 1935ம் ஆண்டு ஒரு கமிஷன் அமைத்து ஆராய்ந்த சாந்திதேவியின் (பிறப்பு 11-12-1926 மறைவு 27-12-1987) புனர்ஜென்ம சம்பவத்தைப் பார்ப்போம். புனர்ஜென்மத்தை ஆராய்ந்த விஞ்ஞானி ஐயான் ஸ்டீவன்ஸனும் சாந்திதேவியை அவர் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னால் 1986ல் தன் ஆய்வுக்காகச் சந்தித்ததும் குறிப்பிடத் தகுந்தது.

மறுபிறப்பு உண்மையா ?- பகுதி 2

The picture is taken from another Hindu website. Thanks.

புனர் ஜென்ம உண்மைகள்! – 2

(அறிவியல், ஆன்மீக நோக்கில் மறுபிறப்பு இரகசியங்கள்!)

எழுதியவர் எஸ். நாகராஜன்

25 லட்சம் வார்த்தைகளில் ஒரு அற்புத இதிஹாஸம்!

ஒரு லட்சம் சுலோகங்களில் சுமார் இருபத்தைந்து லட்சம் பொருள் பொதிந்த வார்த்தைகளைக் கொண்டு உலகின் தலையாய பெரிய இலக்கியமாகத் திகழும் மஹாபாரதம் மறுபிறப்பு பற்றிய அனைத்து உண்மைகளையும் விரிவாகவும் அழகாகவும் கூறும் பெரிய இதிஹாஸமாகும்.

கீதையே என் ஹ்ருதயம்

இதன் உயிர்நாடியான பகவத்கீதை (அர்ஜுனா!கீதை என் ஹ்ருதயம்!கீதையே நான் விரும்பும் சாரம் – மஹாபாரதத்தில் கிருஷ்ணர் கூறுவது) தெளிவாக மறுபிறப்பு உண்மையை விளக்குகிறது.

“அர்ஜுனா!எனக்கு எத்தனையோ ஜென்மங்கள் கழிந்து விட்டன.உனக்கும் அப்படியே!அந்த ஜன்மங்கள் அனைத்தையும் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்” (பஹீனி மே வ்யதீதாநி ஜன்மானி தவ சார்ஜுனI தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தபII -கீதை அத்4 சுலோகம் 5)

புண்ணியம் செய்தவர்கள் “விசாலமான அந்த ஸ்வர்க்க லோகத்தை அனுபவித்து புண்ணியம் கரைந்து போன பிறகு மனித உலகுக்கே திரும்பி விடுகிறார்கள்.ஆகவே வைதீக தர்மங்களைக் கடைப்பிடித்து , கோரிக்கைகளை வேண்டுபவர்கள் ஜனன மரண சுழலைத் தான் அடைவார்கள்” என்றும் கிருஷ்ணர் கீதையில்(9ம் அத்தியாயம் 21ம் சுலோகம்) உறுதிப் படுத்துகிறார்.

இந்த தத்துவத்தின் அடிப்படையில் மஹாபாரதத்தில் வரும் ஜீவனுள்ள அனைத்து பாத்திரங்களின் பூர்வ ஜென்மங்களைப் பற்றிய சரித்திரங்களைப் படிக்கும் போது வியப்பும் பிரமிப்பும் மேலிடுகிறது.

ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவரான அனுமன் த்வாபர யுகத்திலும் இருந்து பீமனைச் சந்தித்து ஆசி கூறுகிறான். ராமராக அவதரித்த விஷ்ணு மீண்டும் கிருஷ்ணராக அவதரிக்கிறார்.

மஹாபாரத நிகழ்வு நடக்கப் போகிறது; ஆகவே அனைத்து தேவர்களும் அவரவருக்கு உரிய இடங்களில் பிறந்து விடுங்கள் என்று கட்டளையிடப்படுவதை ஆதிபர்வம் விளக்குகிறது!

நளாயனியே திரௌபதி

நளாயனியே தனது பெண் திரௌபதியாகப் பிறந்திருக்கிறாள் என்பதை வியாஸர் சொல்லக் கேட்டு ஆச்சரியமடைந்த துருபதன் அவளது ஜனனத்திற்கான காரணத்தை வினவ அவளது முன் ஜென்ம வரலாற்றை வியாஸர் விரிவாக விளக்குகிறார்.(ஆதிபர்வம்-213ம் அத்தியாயம்) அருவருப்பான உருவமும் கிழவரும் வியாதியால் பீடிக்கப்பட்டவருமான மௌத்கல்யர் என்ற  மஹாமுனிவருக்கு மனைவியாக வாய்த்த நளாயனி காம போகங்களில் திளைத்து வாழும் போது ஒருநாள் அதில் சலித்துப் போன மௌத்கல்யர் வைராக்கியமடைந்து பிரம்ம தியானத்தில் ஈடுபடத் தொடங்கினார்.அப்போது நளாயனியை அவர் விடவே நளாயனி பூமியில் விழுந்தாள்.தான் இது வரை அனுபவித்த போகங்களில் திருப்தியுறாதவளாயிருப்பதை நளாயனி தெரிவிக்கவே மௌத்கல்யர் துருபதனின் புத்திரியாக நீ இருப்பாய். அப்போது ஐந்து கணவர்கள் உனக்கு இருப்பார்கள். அழகான உருவம் உடைய அவர்களுடன் நீ வெகு காலம் இன்பத்தை அடைவாய் என்று கூறுகிறார், பிறகு அவள் சங்கரரை நோக்கித் தவம் புரியவே அவர் நேரில் தோன்றி நீ ஐந்து கணவர்களை அடுத்த ஜென்மத்தில் அடைவாய் என் ஆசீர்வதித்து வரம் கொடுக்கிறார். ஏன் ஐந்து கணவர்கள் என்று திகைப்புடன் நளாயனி வினவ,” நீ ஐந்து முறை ‘பதியைக் கொடும்’ என்று கேட்டாய்!ஆகவே உனக்கு ஐந்து கணவர்கள் அமைவார்கள்” என்று மஹேஸ்வரர் பதில் அருளுகிறார். நளாயனியைப் பற்றி மஹாபாரதம் விவரிக்கையில் நள-தமயந்தியின் புத்திரியே அவள் என்ற ஒரு சுவையான செய்தியையும் அது தருகிறது.

ஹிரண்யகசிபுவே சிசுபாலன்

ஆதி பர்வத்தில் மிக விவரமாகக் கூறப்படும் புனர்ஜென்ம விவரங்கள் ஆச்சரியம் தருபவை.

ஹிரண்யகசிபுவே சிசுபாலனாகப் பிறக்கிறான். விப்ரசித்தி என்ற அசுரனே ஜராசந்தனாகப் பிறக்கிறான். ப்ரஹ்லாதனுக்குத் தம்பியாக இருந்த ஸம்ஹ்லாதன்  சல்லியனாகவும், இன்னொரு தம்பியாகிய அநுஹ்லாதன் த்ருஷ்டகேதுவாகவும் பிறக்கின்றனர்.அஜகன் என்பவன் ஸால்வனாகப் பிறக்கிறான்.

பீஷ்மரே அஷ்டவஸ¤க்களில் கடைசி வஸ¤

அஷ்டவஸ¤க்கள்  வஸிஷ்டருடைய சாபத்தாலும் இந்திரனுடைய கட்டளையினாலும் சந்தனு ராஜாவுக்கு கங்கா தேவியிடம் புத்ரர்களாக ஜனித்தனர்.அவர்களில் கடைசி வஸ¤வே பீஷ்மர்!ருத்ரர்களுடைய கூட்டத்திலிருந்து வந்தவர் கிருபாசாரியர்.துவாபர யுகமே வந்து பிறந்து சகுனியாக ஆனது!ஸப்த மருத்துகளின் பட்சத்திலிருந்து கிருஷ்ணனது நெருங்கிய தோழனான சாத்யகி பிறந்தான்.விராட ராஜாவும் ஸப்த மருத்துக்களிலிருந்து தோன்றியவனே

பாண்டவர்களின் ஜனனம் அனைவரும் அறிந்ததே!ஹம்ஸன் என்ற பெயர் பெற்ற கந்தர்வ ராஜனே திருதராஷ்டிரனாகப் பிறந்தான்.அவனது தாயார் செய்த குற்றத்தினால் ரிஷியின் சாபத்திற்கு ஆளாகிக் குருடனாக அவன் பிறக்க வேண்டி நேர்ந்தது.பாண்டு ஸப்த மருத்துக்களின் கூட்டத்திலிருந்து ஜனித்தவன்.கலியின் அம்சம் கெட்ட எண்ணமுடைய துரியோதன ராஜாவாக பூமியில் ஜனித்தது. மிக நீண்ட பட்டியலான இந்த புனர்ஜென்ம விவரங்களை ஆதிபர்வம் அறுபத்தெட்டாம் அத்தியாயம் விவரிக்கிறது. பரந்த நூல் நெடுகிலும் நாம் காணும் புனர்ஜென்ம விவரங்களைத் தனி நூலாகவே ஆக்கிவிடலாம்!

இவை எல்லாம் ஹிந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளின் ஒன்றான மறு பிறப்புக் கொள்கையை வலியுறுத்தி அன்றறிவாம் என்னாது அறம் செய்க என்ற கட்டளையைப் போதித்துக் கொண்டே வருகிறது.

காந்திஜி போற்றிய புனர்ஜென்மக் கொள்கை

இதனாலெல்லாம் கவரப்பட்டுத் தான் மஹாத்மா காந்தி உள்ளிட்ட பெரும் தலைவர்கள் மஹாபாரதத்தைப் போற்றியதோடு சுதந்திரம் பெற இந்த அடிப்படைக் கோட்பாட்டைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

இது தவிர பதினெட்டு புராணங்களும் தரும் புனர்ஜென்மக் கதைகள் நம்மை இன்னும் பிரமிப்பில் ஆழ்த்தும்.அவற்றையும் மஹாத்மா காந்தி டால்ஸ்டாய்க்கு இது பற்றி கடிதம் எழுத நேரிட்ட சம்பவத்தையும் இனி பார்ப்போம்!

************************