அடிமைக்கு அருளிய புத்தர்! (Post No.5330)

Written by S Nagarajan

Date: 17 August 2018

Time uploaded in London – 6-13 AM  (British Summer Time)

Post No. 5330

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

புத்த தரிசனம்

அடிமைக்கு அருளிய புத்தர்!

 

ச.நாகராஜன்

புத்தர் போன்ற பெரும் நிலையில் இருந்த ஒரு மகான் ஒரு ஏழை அடிமைக்கு அருளிய ஒரு சம்பவம் வரலாற்றுப் பிரசித்தி பெற்றதாகும்.

மழைக்காலத்தில் ஓரிடத்தில் சிறிது காலம் தங்குவது பெரியோர்களின் வழக்கம். அதன்படி புத்த பிரான் ஒரு சமயம் ஜேதவான மடாலயத்தில் தங்கி இருந்தார். மழைக்காலம் முடிந்த பிறகு அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானார்.

இதைக் கேள்விப்பட்ட கோசல மன்னன் அவரிடம் வந்து அவர் இன்னும் சிறிது காலம் அங்கேயே தங்கி இருந்து அருள் பாலிக்குமாறு வேண்டினான். அங்கிருந்த சங்கத் தலைவரான அனாத பிண்டிகாவும் புத்தரை அங்கேயே தங்கி இருக்குமாறு வேண்டினார். புத்தரின் சிஷ்யையான விசாகாவும் புத்தரைப் பணிவுடன் வேண்டி அவரை அங்கேயே தங்கி இருக்குமாறு வேண்டினார்.

ஆனால் புத்தர் அதற்கு இசையவில்லை. அவர் கிளம்ப ஆயத்தமானார்.

சங்கத் தலைவர் மனம் நொந்து தனது இருப்பிடம் ஏகினார். அவரிடம் பணியாளாக வேலை பார்த்த ஏழைப் பெண்மணியான புன்னா அவரைப் பார்த்து, “ஐயா, ஏன் உங்கள் முகம் இப்படி வாடி இருக்கிறது?” என்று கேட்டாள்.அதற்கு அவர்,”ஓ! புன்னா, நான் வருத்தப்படுவது உண்மை தான். ஏனெனில் புத்தர் இங்கிருந்து கிளம்பப் போகிறார். என்னால் முடிந்தவரையில் தடுத்துப் பார்த்தேன். என் முயற்சி வெற்றி பெறவில்லை” என்றார்.

உடனே புன்னா, “ஐயா! நான் புத்தரைப் போக விடாமல் தடுத்து நிறுத்துகிறேன்.அப்படி தடுத்து நிறுத்தினால் எனக்கு என்ன தருவீர்கள்?” என்று கேட்டாள்.

“நீ அப்படிச் செய்தாயானால், உன்னை எனது அடிமையாக இருப்பதிலிருந்து உடனடியாக விடுவிக்கிறேன்” என்றார் அவர்.

புன்னா நேரடியாக புத்தர் இருக்குமிடம் வந்து அவரைப் பணிந்து வணங்கினாள்.

“ஓ! மஹானே! போக வேண்டாம்.இங்கேயே இருங்கள்” என்று பணிவுடன் வேண்டினாள்.

புத்தர் புன்முறுவலுடன், நான் போகாததினால் உனக்கு என்ன நன்மை?” என்று கேட்டார்.

“ஐயன்மீர்! நான் ஒரு பெண்.நான் ஒரு அடிமை. நான் ஒரு பணியாள். நீங்கள் போகவில்லை என்றால் என் அடிமைத்தனத்திலிருந்து எனக்கு விடுதலை கிடைக்கும். எனக்கு விடுதலை கிடைத்தால் நீங்கள் கூறிய மூன்று அடைக்கலத்தைப் பெறுவேன். ஐந்து உபதேசங்களையும் எட்டு உபதேசங்களையும் கடைப்பிடிப்பேன்.அப்படிக் கடைப்பிடிப்பதன் மூலம் எனக்குப் பெறுதற்கரிய பேறு கிடைக்கும்” என்றாள் புன்னா.

புத்தர் யோசித்தார். அவரது தயை வெள்ளமெனப் பெருகியது. அவளுக்கு விடுதலை கிடைக்க வேண்டும், அத்துடன் அவள் அர்ஹந்த் என்ற உயரிய நிலையை அடைய வேண்டும் என்று விரும்பினார்.

புன்னாவிடம் அவர், “சரி! நான் இங்கேயே இருக்கிறேன்.” என்று அருளினார்.

இந்தச் செய்தியைக் கேட்ட சாவார்த்தி நகர மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.

கோசல மன்னன், சங்கத் தலைவர், விசாகா ஆகியோரும் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

மன்னனின் அழைப்பை ஏற்காதவர், சங்கத் தலைவராக இருந்த பணக்காரரின் வேண்டுகோளை மறுத்தவர், ஒரு சிஷ்யையின் வேண்டுகோளையும் மறுத்தவர் ஒரு ஏழை அடிமைப் பெண்ணின் வேண்டுகோளை ஏற்றது பெரிய சம்பவமாகக் கருதப்பட்டது – கருதப்படுகிறது – அன்றும், இன்றும்!

தான் சொன்னபடி புன்னாவை அடிமை நிலையிலிருந்து விடுவித்தார் சங்கத் தலைவர்.

புன்னா புத்தரின் உபதேசப்படி வாழ்ந்து உயரிய அர்ஹாந்த் என்னும் நிலையைப் பின்னால் அடைந்தார்.

புத்தரின் தயை எல்லையற்றது. அதை விளக்கும் ஏராளமான சம்பவங்களுள் முக்கியத்துவம் பெற்ற சம்பவம் இது.

***