ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் பயன்கள் (Post No.7131)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 24 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 6-45 AM
Post No. 7131

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

மாலைமலர் 21-10-2019 நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை

அனைத்து நலன்களையும் அருளும் ருத்ராட்ச ரகசியம்!

ச.நாகராஜன்

ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் பயன்கள்

உலகில் அனைத்து நலன்களையும் பெறும் பல வழிகளில் ருத்ராட்சம் அணிவது மிகவும் முக்கியமான பயன் தரும் ஒரு வழியாகும். இதன் இரகசியங்களை அறிதல் வளமான வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகும்.

இறையருள் பெற ஏற்றது,

சகல தோஷங்களையும் போக்க வல்லது

பெரும் செல்வம் சேர்க்கச் செய்வது

ஆரோக்கியத்தையும் நல்ல புத்தியையும் அருள்வது

சிறந்த ஞானம் ஏற்பட வழி வகுப்பது

நவ சக்திகள் நம்மிடம் உருவாக வைப்பது

சுப காரியங்களைத் தடையின்றி நிறைவேற்றி வைப்பது

காம தேவனின் அருள் சித்திப்பது

என இப்படி மனித வாழ்வில் ஒருவன் எதை எதைப் பெற விரும்புகிறானோ அதைப் பெற வைப்பது ருத்ராட்சமே. இதை அணிவது என்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு பழக்கம் என்பது குறிப்பிடத் தகுந்தது.

புராண வரலாறு

ருத்ராட்சம் தோன்றியது பற்றி நமது புராணங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன.

தேவி பாகவதம் கூறும் வரலாறு இது:

ஒரு காலத்தில் திரிபுரன் என்னும் அசுரன் திருமால் பிரமன் உள்ளிட்ட அனைவராலும் ஜயிக்க முடியாதபடி இருந்து அனைவரையும் துன்பப்படுத்தி வந்தான்.

அக்கினி போலச் சுடர் விட்டு எரிப்பதாயும், சகல தேவ சொரூபமாயும் உள்ள அகோரம் என்னும் திவ்ய அஸ்திரத்தைப் பற்றி சிவபிரான் பல்லாயிரம் வருடம் சிந்தித்திருந்து கண் விழித்தார். அவரது அஸ்திரத்தால் அசுரன் அழிந்தான்.

அப்போது அவரது மூன்று கண்களிலிலிருந்தும் நீர்த்துளிகள் கீழே விழுந்தன. அதிலிருந்து ருத்ராட்ச மரங்கள் உண்டாயின. அவரது ஆணையின் பொருட்டு அந்த மரங்களிலிருந்து முப்பத்தெட்டு பேதமாயுள்ள ருத்ராட்சங்கள் தோன்றின. வலக்கண்ணாகிய சூரிய நேத்திரத்திலிருந்து தோன்றிய பன்னிரெண்டு பேதங்கள் கபில நிறமாயின.

இடக்கண்ணாகிய  சந்திர நேத்திரத்திலிருந்து தோன்றிய பதினாறு பேதங்கள் வெண்ணிறமாயின.

அக்னி நேத்திரத்திலிருந்து தோன்றிய பத்து பேதங்கள் கறுப்பு நிறமாயின.

ருத்ராட்சம் என்றால் ருத்ரனின் கண்கள் எனப் பொருள். (அக்ஷம் – கண்கள்)

ருத்ராட்சம் கிடைக்கும் இடங்கள்

சிவ பிரானின் அருளால் இப்படித் தோன்றிய அபூர்வமான ருத்ராட்ச மரங்கள் வடக்கே இமயமலைப் பகுதிகளிலும், நேபாளத்திலும், திபெத்திலும், மலேசியா மற்றும் கிழக்கு ஆசியப் பகுதிகளிலும் நெடிது வளர்கின்றன. சுமார் 75 அடி உயரம் வரை இந்த மரங்கள் வளர்வது ஒரு அபூர்வக் காட்சி. ருத்ராட்ச மரங்களிலிலிருந்து உருவாகும் ருத்ராட்சக் கொட்டைகள் பனாரஸ் உள்ளிட்ட இடங்களில் சுத்தமானதாகக் கிடைக்கின்றன.

ருத்ராட்ச மரத்தின் அறிவியல் பெயர் எலாயோ கார்பஸ் கானிட்ரூஸ் (Elecocarpous Ganitrus ) என்பதாகும்.

இன்று உலகில் 38 வகை ருத்ராட்சங்களில் 21 வகைகள்  கிடைக்கின்றன.

ருத்ராட்ச வகைகளும், அவை தரும் பலன்களும்

ருத்ராட்ச பழங்கள் அல்லது விதைகள் சுத்தப்படுத்தப்பட்டு நடுவில் உள்ள துவாரம் வழியே நூலால் இணைக்கப்பட்டு மாலையாக்கி அணிவது சாதாரணமாக நடைமுறையில் உள்ள ஒரு மரபாகும். ருத்ராட்சங்களின் பகுதிகளை முகம் என்று அழைக்கிறோம்.

ஒரு முகத்திலிருந்து 21 முகம் வரை உள்ள ருத்ராட்சங்கள் கிடைக்கின்றன என்ற போதிலும் சில வகைகள் கிடைப்பது அரிது.

ஒரு முகத்திலிருந்து 14 முகம் வரை உள்ள ருத்ராட்சங்களை அணிவதால் ஏற்படும் அரிய பலன்களை ருத்ராட்ச ஜாபால உபநிடதம் விளக்குகிறது.

சிவ புராணமும் தேவி பாகவதமும் சில விளக்கங்களை அளிக்கின்றன.

அவற்றைத் தொகுத்துப் பார்ப்போம்:

ஒரு முகம் : இந்திரிய நலம் பெற்று பர தத்துவத்தில் லயிப்பர்.

இது சிவ சொரூபம்.

இரண்டு முகம் : அர்த்த நாரீஸ்வர சொரூபம். இதை அணிபவரிடம் அர்த்த நாரீஸ்வரரின் அருள் இருக்கும். புத்தி பூர்வமாகவும் புத்தியற்று செய்ததுமான பாவங்கள் அனைத்தையும் போக்கும்.

மூன்று முகம் : மூன்று அக்னிகளின் சொரூபம். இதை அணிந்தால் அக்னி தேவனின் அருள் கிடைக்கும். ஸ்த்ரீ ஹத்தியை ஒரு நொடியில் போக்கும்.

நான்கு முகம் : பிரம்மாவின் வடிவம். இதை அணிவதால் பிரம்ம பிரீதி ஏற்படும். நரனைக்  கொன்ற பாவம் போக்கும்.

ஐந்து முகம் : பஞ்ச பிரம்ம சொரூபம். பிரம்மஹத்தி பாவத்தையும் போக்க வல்லது.

ஆறு முகம் : முருகனை அதி தேவதையாகக் கொண்டது. இதை அணிவதால் பெரும் செல்வமும், சிறந்த ஆரோக்கியமும் ஏற்படும். நல்ல புத்தி, சிறந்த ஞானம், சம்பத்து, தூய்மை ஆகியவற்றிற்கு இடமானது. புத்திமான் இதை அணிய வேண்டும். விநாயகர் முதலிய தெய்வங்களும் அருள் புரிவர் என அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஏழு முகம் : சப்த மாதாக்களை அதி தெய்வமாகக் கொண்டது. இதைத் தரிப்பதால் செல்வ வளம், உடல் நலம் சிறந்த ஞானம் ஏற்படும்.

எட்டு முகம் : எட்டு மாத்ருகா தேவிகளின் உறைவிடம். இதை அணிபவர்கள் ஸத்தியவாதிகளாவர். அஷ்ட மாதாக்களின் அருளையும் அஷ்ட வசுக்களின் பிரியத்தையும் கங்காதேவியின் அருளையும் பெறுவர்.

நவ முகம் : நவ சக்திகளின் உறைவிடம். இதை அணிவதால் நவ சக்திகளின் அருள் ஏற்படும்.

தச முகம் : யமனை அதி தேவதையாகக் கொண்டது. இதை அணிவதால் நவ கிரக தசைகளின் சாந்தி ஏற்படும்.

பதினொரு முகம் : ஏகாதச ருத்ரர்களை அதி தேவதையாகக் கொண்டது. எப்போதும் சௌபாக்கியத்தை வளர்க்கும்.

பன்னிரெண்டு முகம் : மஹா விஷ்ணு சொரூபம். 12  ஆதித்யர்களையும் தன்னுள் கொண்டது.

பதிமூன்று முகம் : விரும்பிய சுப சித்திகளை அருள்வது. இதை அணிவதால் காம தேவனின் அருள் ஏற்படும்.

பதினான்கு முகம் : ருத்ர நேத்திரத்திலிருந்து தோன்றியது. எல்லா வியாதிகளையும் போக்கி எப்போதும் ஆரோக்கியத்தை நிலை நிறுத்தும்.

 நட்சத்திரங்களுக்கு உரிய ருத்ராட்ச வகைகள்

இனி 27 நட்சத்திரங்களுக்கான அதி தேவதையையும் அணிய வேண்டிய ருத்ராட்சத்தையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அந்தப் பட்டியல் வருமாறு:-

நட்சத்திரம் அதி தேவதை அணிய வேண்டிய ருத்ராட்சம்

அசுவனி     கேது          நவமுகம்

பரணி        சுக்ரன்         ஷண்முகம்

கார்த்திகை   சூர்யன்         ஏக முகம், த்வாதச முகம்

ரோஹிணி    சந்திரன்       இரண்டு முகம்

மிருகசீரிஷம்  செவ்வாய்     மூன்று முகம்

திருவாதிரை     ராகு        எட்டு முகம்

புனர்பூசம்      ப்ருஹஸ்பதி  ஐந்து முகம்

பூசம்           சனி          சப்த முகம்

ஆயில்யம்      புதன்           நான்கு முகம்

மகம்           கேது         நவ முகம்

பூரம்           சுக்ரன்        ஷண்முகம்

உத்தரம்        சூர்யன்        ஏக முகம், த்வாதச முகம்

ஹஸ்தம்      சந்திரன்        இரண்டு முகம்

சித்திரை       செவ்வாய்    மூன்று முகம்

சுவாதி          ராகு        எட்டு முகம்

விசாகம்       ப்ருஹஸ்பதி    ஐந்து முகம்

அனுஷம்       சனி           சப்த முகம்

கேட்டை       புதன்           நான்கு முகம்

மூலம்         கேது            நவ முகம்

பூராடம்        சுக்ரன்          ஷண்முகம்

உத்தராடம்      சூரியன்       ஏக முகம், த்வாதச முகம்

திருவோணம்    சந்திரன்        இரண்டு முகம்

அவிட்டம்        செவ்வாய்     மூன்று முகம்

சதயம்           ராகு          எட்டு முகம்

பூரட்டாதி       ப்ருஹஸ்பதி      ஐந்து முகம்

உத்தரட்டாதி     சனி            சப்த முகம்

ரேவதி           புதன்           சதுர் முகம்

ஜன்மராசிக்கு உரிய ருத்ராட்சங்கள்

ஜன்ம ராசியை வைத்தும் ருத்ராட்ச வகைகளைத் தேர்ந்தெடுத்து அணியலாம். அந்தப் பட்டியல் வருமாறு :

ஜன்ம ராசி      ராசி அதிபதி      அணிய வேண்டிய ருத்ராட்சம்

மேஷம், விருச்சிகம்    செவ்வாய்      மூன்று முகம்

ரிஷபம், துலாம்        சுக்ரன்          ஷண்முகம்

மிதுனம், கன்னி         புதன்           நான்கு முகம்

கடகம்                  சந்திரன்        இரண்டு முகம்

சிம்மம்      சூரியன்          ஏகமுகம் அல்லது த்வாதச முகம்

தனுசு, மீனம்        ப்ருஹஸ்பதி         ஐந்து முகம்

மகரம், கும்பம்    சனி              சப்த முகம்

ருத்ராட்சங்களை எப்படி அணிவது

ருத்ராட்சங்களை அதற்குரிய பட்டு நூலில்  இணைத்து அணிவது மரபு. பித்தளையிலும், வெள்ளியிலும், தங்கத்திலும் இணைத்து அணிவது அவரவர் வசதியைப் பொறுத்தது.

முதலில் அணியும் போது ருத்ராட்சங்களை கங்கை ஜலம் அல்லது பசும்பாலில் அல்லது கோமூத்திரத்தில் நனைத்து அணிதல் வேண்டும்.

சுத்தமான நிலையில் அணிவது நல்ல பயனைத் தரும்.

புஷ்ய நட்சத்திரமும் வியாழக்கிழமையும் கூடிய நாளில் இதை அணிந்தால் அதிகப் பலனைப் பெறலாம் என அற நூல்கள் கூறுகின்றன. (வருடத்திற்கு இந்த அமைப்பு இரு தடவை வரலாம்)

பெண்களும் ருத்ராட்சத்தை அணியலாம். சிவ புராணத்தில் சிவன் பார்வதியிடம் , “அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்களும்,பெண்களும் இதை அணியலாம்” என்று கூறி அருள்கிறார் (சிவ புராணம் அத்தியாயம் 25, சுலோகம் 47)

எங்கு வாங்குவது, எப்படி வாங்குவது

நல்ல விஷயம் தெரிந்த, உங்கள் நலனில் அக்கறையுள்ள நண்பர் அல்லது நிபுணர் மூலம் வாங்குவதே சிறந்தது.

ஏக முகம் கிடைப்பது அரிது. பஞ்ச முகம் சுலபமாகக் கிடைக்கும்.

அரிதாகக் கிடைக்கும் ஏக முகம் லட்ச ரூபாய் என்று சொல்லும் போது பஞ்ச முகம் இரண்டு அல்லது மூன்று ரூபாய்க்குக் கூடக் கிடைக்கும். சில ருத்ராட்சங்களின் விலை இருபது லட்சம் என்று சொல்லும் போது மலைக்க வேண்டி இருக்கும்.

108 மணிகள் அல்லது 54 மணிகளைச் சேர்த்து மாலையாக அணிவது பொதுவாக அனைவரும் கடைப்பிடிக்கும் மரபாகும்.

எப்படி சோதிப்பது?

ருத்ராட்சம் வாங்குவதில் சுலபமாக ஏமாற்றப்படலாம்.

ஆகவே நல்ல ருத்ராட்சமா எனச் சோதித்து உறுதியான பின்னரே வாங்கி அணிய வேண்டும். இல்லையேல் பயன் இருக்காது.

ருத்ராட்சம் நல்ல தரமானதா என்பதை எப்படி அறிவது?

முதலில் பார்வையால் சோதனையிட வேண்டும். ருத்ராட்சம் அனைத்தும் ஒரே போல ஒரு வித வேறுபாடுமின்றி இருந்தால் அது மோல்டிங் எனப்படும் அச்சில் வார்க்கப்பட்ட செயற்கை மணிகள்- சிந்தடிக் – என்பதைச் சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம். இயற்கை ருத்ராட்சங்கள் நிச்சயம் சிறிது வேறுபாட்டுடன் துளைகளுடன் இருக்கும்.

அடுத்து அதன் ஸ்பெஸிபிக் கிராவிடி எனப்படும் அடர்த்தி எண் அல்லது ஒப்படர்த்தி 1.1 முதல் 1.6 வரை இருக்கலாம்.

தாமிரக் காசுகளின் இடையே மிகவும் தரமான ருத்ராட்ச மணியை வைத்தால் அது சுழலும்.

இன்னும் ஒரு எளிய வழி – ருத்ராட்சத்தை நீரில் போட்டால் நல்ல ருத்ராட்சம் மூழ்கும். போலிகள் மிதக்கும்.

அறிவியல் வியக்கும் ருத்ராட்சம்

ஆயுர்வேதத்தில் மூட்டுவலி உள்ளிட்ட பல வியாதிகளுக்கு ருத்ராட்சப் பயன்பாடு அறிவுறுத்தப்படுகிறது. வல்லார் ஒருவர் வழியே இதைக் கேட்டு அறியலாம்.

காசி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சுபாஷ் ராய் என்பவர் ருத்ராட்சத்தை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தினார்.

 நவீன சாதனங்களை வைத்து ஆராய்ந்ததில் அவர் ருத்ராட்ச மணிகளின் பல அபூர்வ உண்மைகளைக் கண்டு பிரமித்தார். ருத்ராட்சம் உடலில் படும் போது டை எலக்ட்ரிக் பொருளாகப் பயன்பட்டு  வெவ்வேறு முகங்கள் உடைய ருத்ராட்ச மணிகள் வெவ்வேறு கபாசிடர்களாக இயங்கிப் பல்வேறு பயன்களைத் தருவதை அவர் கண்டார்; உலகிற்கு அறிவித்தார்.

ஆக அறிவியலும் வியக்கும் மணி ருத்ராட்ச மணி.

மணிகளிலேயே சிறந்த மணி ருத்ராட்ச மணி என நமது சாஸ்திரங்கள் உரத்த குரலில் அறிவிக்கின்றன.

பயன்படுத்துவோம்; பலன் பெறுவோம்!

***