

WRITTEN by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 30 April 2019
British Summer Time uploaded in London – 7-33 AM
Post No. 6325
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
சென்னையிலிருந்து வெளியாகும் தினசரியான மாலை மலர் பத்திரிகையில் 29-4-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
புவி வெப்பமயமாவதால் ஏற்படும் பெரும் அபாயம்!
ச.நாகராஜன்
உலகின் தட்பவெப்ப நிலை வெகு வேகமாக மாறி வருகிறது.புவி வெப்பமடைந்து வருகிறது. புவி வெப்பம் அடைவதால் பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருகின்றன; அவற்றின் உறைவிடங்கள் மறைகின்றன; சுற்றுப்புறச் சூழல் அமைப்புகள் பாதிக்கப்படுகின்றன.பூமியை எதிர்நோக்கியுள்ள அபாயங்களில் மிகப் பெரிய அபாயம் புவி வெப்பமாதலே (Global Warming) என்பதை விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் ஒரு மனதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
சமீபத்திய ஆய்வுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உஷ்ணம் அதிகரித்து வருவதையும் தட்பவெப்ப நிலையில் சீரற்ற மாறுபாடுகள் அதிகரிப்பதையும் அறிவிக்கின்றன. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 22 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் மிக அதிகமான வெப்பத்தை உலகம் கண்டிருக்கிறது. 2015,2016,2017,2018 ஆகிய நான்கு ஆண்டுகள் அதிக வெப்பமுள்ள ஆண்டுகள் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பசுமை வாய்வுகள் பற்றி ஆய்வு நடத்தும் வோர்ல்ட் மெடியோரோலாஜிகல் ஆர்கனைசேஷன் (World Meteorological Organisation – WMO) பசுமை வாயுக்களின் நச்சுப் புகை வெளியேற்றம் 2018இல் மிக அதிகம் என்று அறிவித்ததோடு 2019ஆம் ஆண்டிலும் உலக வெப்பம் கூடுதலாகவே இருக்கும் என்று கருத்துத் தெரிவித்துள்ளது.
புவி வெப்ப உயர்வானது இந்தியாவின் பருவநிலை மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை புதிய ஆய்வு ஒன்றின் முடிவு சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. வருகின்ற இருநூறு ஆண்டுகளுக்குக் கோடைகால பருவ நிலையில் இந்தப் பாதிப்பு தொடரக்கூடும் என்பதை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதி நவீன கணினி தொழில்நுட்பத்தின் மூலமாக பருவநிலை பற்றிய ஆய்வை மேற்கொண்ட ஐரோப்பிய விஞ்ஞானிகளின் குழு சராசரியாக இந்தியாவில் கோடைகாலத்தில் பெய்யும் மழையின் அளவில் இனி 40 முதல் 70 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புண்டு என்று தெரிவித்துள்ளது.
1870ஆம் ஆண்டிலிருந்து பெய்துள்ள மழை அளவை ஒப்பிட்டுப் பார்த்ததில் இப்படி மழை பெய்கின்ற வாய்ப்பும் குறைந்த அளவிலேயே உருவாகும் என்பதையும் ஆய்வு தெரிவித்துள்ளது.
தட்பவெப்ப நிலை மாறுபாட்டால் ஏற்படும் விளைவுகள் வாக்கர் சர்குலேஷன் (Walker Circulation) மூலமாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மேலை ஹிந்து மஹாசமுத்திரத்திற்கு உயர் அழுத்தப் பகுதிகளைக் கொண்டு வருவது எல் நினோ ஏற்படும் காலங்களில் மாறி அதனால் இந்தியாவில் பருவ மழை அளவு குறையும் நிலை ஏற்படும் என்பதைத் தெளிவாக ஆய்வு குறிப்பிடுகிறது. (எல் நினோ என்பது பருவநிலை சீரற்ற தன்மையைக் குறிக்கும் சொல்)
புவி வெப்பம் உயர்வதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று இந்தியாவில் நாளுக்கு நாள் வாகனங்கள் வெளிப்படுத்தும் நச்சுப் புகையே.

வளி மண்டலத்தைக் கார்பன் டை ஆக்ஸைடும் கார்பன் மானாக்ஸைடும் தாக்கி பல்வேறு விபரீதங்களை ஏற்படுத்துவதை நாம் அனைவரும் அறிவோம். இதற்குக் காரணம் இந்த நச்சுப் புகைகளை வெளியேற்றும் வாகனங்களே. ஆகவே வாகனங்களுக்கே உரிய நச்சுப்புகை கட்டுப்பாடு விதிகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே இதைத் தடுக்க முடியும்.
தொல்படிம எரிபொருள்களான நிலக்கரி, பெட்ரோல் உள்ளிட்டவை எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் போது அது காற்றை மாசுபடுத்துகிறது. சூரிய கிரணங்களை மேகங்கள் சூரியனிலிருந்து பிரதிபலிக்க வைத்து அவை விண்வெளியை அடையச் செய்கின்றன. இது ஒரு அசாதாரண விளைவை ஏற்படுத்துகிறது. இது க்ளோபல் டிம்மிங் (Global Dimming) என்ற சொற்றொடரால் குறிப்பிடப்படுகிறது. இந்த க்ளோபல் டிம்மிங்கின் விளைவாக குறைந்த வெப்பமும் ஆற்றலும் பூமியை அடைகிறது. முதலில் இது நலம் பயக்கும் ஒன்றாகத் தோன்றினாலும் இதுவே ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளிலும் எண்பதுகளிலும் எதியோப்பியாவில் ஏற்பட்ட பஞ்சத்திற்குக் காரணம் என கண்டறியப்பட்டது. ஏனெனில் வட துருவத்தில் உள்ள பெருங்கடல்கள் மழையை உருவாக்கும் வண்ணம் உரிய வெப்பத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆகவே இந்தப் பஞ்சங்களினால் லட்சக்கணக்கில் அங்கு மக்கள் மடிந்தனர்.
க்ளோபல் டிம்மிங்கிற்குக் காரணமாக அமையும் கார்பன் டை ஆக்ஸைடு போன்ற நச்சுப் புகை வளி மண்டலத்தில் கலப்பதைத் தடுப்பதே இதற்குச் சரியான தீர்வாக அமையும்.
க்ளோபல் டிம்மிங்கைத் தடுப்பதன் மூலம் தட்பவெப்ப நிலை சீரடைந்து புவி வெப்பமயமாதல் தடுக்கப்படும். மக்களின் ஆரோக்கியம் மேம்படும்.
புவியை வெப்பமயமாக்கும் கார்பன் தரும் சவாலைச் சமாளிக்க இன்னொரு வழி உண்டு.
ஒளிச்சேர்க்கை எனப்படும் போட்டோ சிந்தஸிஸ் (Photo Synthesis) மூலமாகவே ஆக்ஸிஜன் அதிகம் உள்ள பூமியின் வளி மண்டலம் அமைந்துள்ளது. ஆனால் அற்புதமான இந்த வளிமண்டலத்தை நச்சுப் புகையை அதிகம் கக்குவதன் மூலமாக மாசு படுத்துகிறோம். மரங்கள் இயற்கையாகவே கார்பனை உறிஞ்சி ‘இயற்கைச் சமநிலையை’ ஏற்படுத்தினாலும் கூட செயற்கையாக மனிதன் வெளிப்படுத்தும் கார்பன் இந்தச் சமநிலையை சீர்குலைக்கும் அளவு அதிகமாக இருக்கிறது.

கார்பன் அளவை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை ஆராய பன்னாட்டு விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு குழுவை ஐரோப்பிய கமிஷன் அமைத்துள்ளது. இந்தக் குழு ஆப்பிரிக்காவில் வளரும் இரோகோ (IROKO) என்ற ஒரு மரம் மைக்ரோப்ஸ் (Microbes) எனப்படும் சில நுண்ணியிர்களுடன் இணைந்து கார்பன் டை ஆக்ஸைடு கொண்டுள்ள புகையை சுண்ணாம்பாக மாற்றுகிறது என்பதை நன்கு ஆய்ந்து கண்டுபிடித்துள்ளது.
புவி வெப்பமாதல் எனப்படும் குளோபல் வார்மிங் (Global Warming) அபாயத்தால் உலகெங்கும் உள்ள காடுகள் தாங்கள் மண்ணில் சேமித்து வைத்திருக்கும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியிட்டு வரும் இன்றைய சூழ்நிலையில் இது தக்க ஒரு மாற்றாக அமையும் என்பது நல்ல செய்தி.
அமில மண்ணில் இந்த மரங்கள் நடப்பட்டால் மண்ணில் காணப்படும் கால்சியத்துடன் கார்பன் டை ஆக்ஸைடைச் சேர்த்து ஒரு குறிப்பிட்ட கனிமத்தை இரோகோ மரங்கள் உருவாக்குகின்றன. இதன் மூலம் கார்பன் டை ஆக்ஸைடு நச்சுப்புகையினால் மாசுபடுத்தப்படும் வளி மண்டலம் சுத்தம் செய்யப்படுகிறது. சில வகை பாக்டீரியாக்களுடனும் காளான்களுடனும் இது உரிய முறையில் சேர்க்கப்பட்டால் இந்த மரம் உருவாக்கும் கனிமம் சுண்ணாம்பாக மாறுகிறது. பொலிவியா, ஹைதி, இந்தியா ஆகிய நாடுகளில் இப்போது கார்பன் சவாலைச் சமாளிக்க இந்த இரோகோ மரங்களை நட்டு சோதனை செய்யும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மரம் தொழிலகத் திட்டங்களுக்குப் பயன்படுவதோடு இதனால் உருவாகும் சுண்ணாம்பின் மூலம் ஒரு ‘பயோ சிமெண்டை’ உருவாக்கவும் இப்போது அறிவியல் ரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பயோ சிமெண்ட் கட்டிடக் கலையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தும்.
இரோகோ மரத்தை ஆப்பிரிக்காவின் தேக்கு மரம் என்று ஆப்பிரிக்கர்கள் கூறுகின்றனர். அத்தோடு அதை வெட்டி வீட்டு உபயோகத்திற்காக அனாவசியமாகப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவருக்கு துரதிர்ஷ்டம் வந்து சேரும் என்பது அவர்களின் நம்பிக்கை.
இது போன்ற மரங்களை இனம் கண்டும் பயோ சிமெண்ட் போன்றவற்றை உருவாக்கியும் கார்பன் சவாலைச் சமாளிக்க புது விதமாக நவீன அறிவியல் முனைந்திருப்பது உலக மக்கள் அனைவரும் வரவேற்கும் ஒரு நல்ல செய்தி அல்லவா!
வாகனக் கழிவாக வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன் மானாக்ஸைடு ஒரு நச்சு வாயு. சிகரட் புகைக்கும் போதும், மண்ணெண்ணெய் அடுப்புகளிலிருந்தும் கூட இந்த நச்சு வாயு வெளிப்படுகிறது.

அபாயகரமான இந்த வாயு சுவாசத்தின் போது உள்ளே சென்றால் தலைவலி, கிறுகிறுப்பு, தடுமாற்றம், நினைவாற்றல் இழப்பு, வாந்தி எடுத்தல், சுவாசிப்பதில் சிரமம்,மார்பு வலி, நினைவற்று கோமாவில் இருத்தல் போன்ற அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆகவே சுற்றுப்புறத்திற்குக் கேடு விளைவிக்கும் வாகனப் புகை வெளியேற்றத்தைத் தடுப்பதும், வீட்டிலும் வெளியிலும் புகை பிடிப்பதால் ஏற்படும் கார்பன் மானாக்ஸைடு வெளியேற்றத்தைத் தடுப்பதும் வளி மண்டலத்தைச் சுத்தமாக்க உதவும் வழிகளாகும்.
கார், மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களைக் குறைவாகப் பயன்படுத்துவோம். ஆரோக்கியமான சுற்றுப்புறச் சூழலுக்கும், இல்லச் சூழலுக்கும் எதிரியான கார்பன்மானாக்ஸைடு நச்சுப் புகையைத் தவிர்ப்போம்; வாழ்வை வளமாக்குவோம்!
உலக மக்களை பயமுறுத்தும் இன்றைய உடனடி அபாயம் புவி வெப்பமயமாதல் தான்! ஆகவே அதைத் தடுப்பதே நமது உடனடி கடமை ஆகும். முயற்சிப்போம்; வெல்வோம்!
************************
