ரிக் வேதத்தில் பூகம்பம்

f0c4a-earthquake

Compiled by London swaminathan

Article No.1870; Dated 17 May 2015.

Uploaded in London at 17-05

சங்கத் தமிழ் இலக்கியத்திலும் மணிமேகலையிலும் காணப்படும் “நிலம் பெயர்தல்” (பூகம்பம்) பற்றிய குறிப்புகளை முன்னர் ஒரு கட்டுரையில் கண்டோம். இது போல சம்ஸ்கிருத இலக்கியத்திலும் நிறைய பொதுவான குறிப்புகள் உள. சீதையை பூமாதேவி திரும்ப அழைத்தது ஒரு பூமி அதிர்ச்சியில் அவர் உயிரிழந்த சம்பவம் என்றும் ராவணன் கயிலை மலையை அசைத்தது மற்றொரு பூகம்பம் என்றும் ஒரு ஆய்வுக் கட்டுரையில் ( “Ravana trapped and Sita Devi died in Earth Quake” 22-1-2012) தந்தேன்.

ஆயினும் 1500 ஆண்டுகளுக்கு முன் வராஹமிகிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதாவில் 1.வால் நட்சத்திரம், 2.விண்கற்கள், 3.வானவில், 4.மூன்று சூரியன்கள் தோற்றம், 5.சந்திரக் கோட்டை, சூரியக் கோட்டை, 6.வானில் தோன்றும் வண்ண ஒளி ஆகிய ஒவ்வொன்று பற்றியும் தனித்தனி அத்தியாயங்கள் இருக்கின்றன. அவரோ இதை, “தான்” எழுதவில்லை என்றும், தனக்கு முன்னர் வாழ்ந்த இருபதுக்கும் மேலான அறிஞர் பெருமக்கள் செப்பியவற்றைத் தான் “சுருக்கி வரைவதாகவும்” பணிவுடன் எழுதியுள்ளார்.

உலகில் நாகரீக முன்னேற்றம் வாய்ந்த ஒரு நாட்டில்தான் இத்தகைய ஆய்வுகள் நடைபெற முடியும். பெர்Fயூம் செய்வது முதல் சோதிடம் வரை அவர் எழுதாத பொருளே இல்லை. அவருக்கு முன்னர் இப்படிப் பலரும் எழுதியது பாரதீய அறிவியல் பார்வையைப் பட்டெனக் காட்டும்.அவர் எழுதியது இன்று நூற்றுக்கு நூறு சரி என்று சொல்ல முடியாது. ஆயினும் அதிலுள்ள பல விஷயங்களை இன்றும் பயன்படுத்த முடியும். 25 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட வானவியல் நூல்கள் எல்லாம் இன்று லண்டனில் பழைய புத்தகக் கடைகளுக்குப் போய் விடுகின்றன. ஆயினும் வரலாற்று நோக்கில் பார்க்கையில் அவையும் தேவைப்படும். உலகில் வராஹமிகிரர் போல நூற்றுக் கணக்கான விஷயங்களை ஒரே நூலில் வேறு எவரும் தொகுத்திருப்பது அரிதிலும் அரிது!

50456-nepal-quake

ரிக்வேதத்தில் நில அதிர்வு

உலகில் முதல் முதல் பூகம்பம்/நில அதிர்ச்சி பற்றிய குறிப்பு ரிக்வேதத்தில் (2-12-2) காணப்படுகிறது. ஆதிகாலத்தில் மலைகளுக்கு இறக்கைகள் இருந்தன என்றும் அவை பறந்து வந்து தாக்கியதில் பல சேதங்கள் ஏற்பட்டதாகவும் புராணங்களிலும் , வால்மீகி ராமாயணத்திலும் (1-23-27), காளிதாசனின் குமார சம்பவத்திலும் (1-20) நேரடியாகவும் மறைமுகமாகவும் பல குறிப்புகள் வருகின்றன. இதற்கு எல்லாம் மூலக் கதை ரிக்வேதத்தில் இருக்கிறது.

“நடுங்கிக் கொண்டிருந்த பூமியை நிலைப் படுத்தியவன் அவன். கொந்தளித்த மலைகளை நிலைப் படுத்தினான்.

அந்தரத்தை அளந்து, ஆகாசத்தைத் தாங்கியவன் அவன், மனிதர்களே! அவன் தான் இந்திரன்” – ரிக் 2-12-2

என்று கிருத்சமடர் என்னும் புலவர் குடும்பத்தினர் பாடிய வேத கால துதிகள் சொல்லும்.

இந்தியாவில் வரலாற்றுச் சின்னங்கள் கிடைக்காமைக்கு வட இந்தியாவில் ஏற்பட்ட பூகம்பங்களும் ஒரு காரணமாகும். மாபெரும் நதிகளை திசைமாறிச் செல்ல வைத்து பல நகரங்களை அழித்துவிட்டது. மக்களை இடம் பெயரவைத்து நகரங்களைப் பாழடைய வைத்தது. குஜராத்திலும், நேபாளத்திலும், பீஹாரிலும் நடந்த பூகம்பங்கள் என்ன விளைவுகளை ஏற்படுத்தியன என்பதை நாமே நேரில் கண்டோம்.

நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது?

பூமியின் மேல் ஓடு (கண்டங்கள்)  உட்கார்ந்து கொண்டிருக்கும் அடிப்பகுதிகள் (Tectonic Plates) நகருகையில், ஒன்றுடன் ஒன்று மோதுகையில் பூமி அதிர்ச்சி ஏற்படுகிறது. இமய மலை போன்றவை இப்படி மோதியபோது நீருக்கடியில் இருந்து எழுந்தன.

ஆனால் வராஹமிகிரர் கூறும் காரணங்கள் விநோதமானவை. இவை அவரால் “தொகுக்கப்பட்டவை”:

1.சிலர் கடலில் உள்ள ராட்சதப் பிராணிகள், நில அதிர்ச்சியை உண்டாக்குவதாகக் கருதுகின்றனர். கர்க போன்றோர், பூமியைத் தாங்கி நிற்கும் அஷ்ட திக்கஜங்கள் (எட்டு யானைகள்) பூ பாரத்தைச் சுமக்க முடியாமல் களைப்படையும் தருணத்தில் நில அதிர்வு ஏற்படும் என்பர்.

(இதில் கொஞ்சம் விஞ்ஞான உண்மை உண்டு. பெரிய நீர்த்தேக்கன்கள் கட்டுகையில் அந்தப் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. மேலும் “எட்டு யானைகள்” என்பன உண்மையான யானைகள் அல்ல. எண் திசைகளையே குறிக்கும்; களைப்பு என்பதும் வேறு பல பொருளைத் தரும்)

2.வசிஷ்டர் போன்றோர் வான மண்டலத்தில் ஏற்படும் காற்று மோதல்கள், கீழே இறங்கும் போது இது ஏற்படுகிறது என்பர் (உண்மையில் பூகம்பம் ஏற்பட்ட பின்னர் புகை மண்டலம் எழும்பி வானின் வரை செல்லும்). விருத்த கர்க போன்றோர் கண்ணுக்குப் புலனாகாத சக்தியால் ஏற்படும் என்பர். (இது ஓரளவு உண்மை. எவ்வளவோ மிக நுண்ணிய கருவிகள் இருந்தும், இன்று வரை பூகம்பத்தை முன்னரே உணர்ந்து அறிவிக்க முடியவில்லை!)

3.பராசரர் போன்ற முனிவர்கள் கூறும் காரணம்: முன் காலத்தில் மலைகள் பறந்து வந்து பூமியில் மோதின. பூமா தேவி, படைப்புக் கடவுளான பிரம்மாவிடம் அழுதுகொண்டே முறையிட்டாள்: என்னை அசலம் (நிலை பெயராத) என்பர். ஆனால் நானோ பறந்து வரும் மலைகளால் தாக்கப்பட்டு நிலகுலைந்து நிற்கிறேன் என்று காண்ணீர் சிந்தவே, மலைகளின் சிறகுகளை வெட்ட இந்திரனுக்கு உத்தரவிட்டார் பிரம்மா. இந்திரனும் வஜ்ராயுதத்தால் அவற்றின் இறக்கைகளை வெட்டினான்.

4.கிரகணங்களாலும், ஒரு நாளின் சிறு பொழுதுகளுக்கு உரிய தெய்வங்களாலும் நில அதிர்வு ஏற்படுவதாகச் சிலர் கருதுவர்.

5.இதற்குப் பின் வராஹ மிகிரர் 27 நட்சத்திரங்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து பூகம்பத்துகான சோதிட காரணங்களை விளக்குகிறார்.

6.எந்த நட்சத்திரத்தில் நில அதிர்வு ஏற்படுகிறதோ அந்த நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்ய வேணும் என்றும் விளக்குகிறார்.

மேற்கூறியவற்றில் விஞ்ஞான உண்மைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் “அடிக்கடி ஏற்படும் நில அதிர்வுகள்”  – என்ற சொற்றொடர்கள், அவர்கள் நீண்ட நெடுங்காலத்துக்குப் பூமியைக் கவனித்து வந்ததைக் காட்டுகிறது. இதுபற்றி அவர்கள் புத்தகம் புத்தகமாக எழுதியதும் அவர்களுடைய ஆர்வத்தைக் காட்டுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன் பூகம்பம் பற்றி வேறு எந்த நாகரீகத்திலும் இவ்வளவு விதமான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

வராஹமிகிரர் எழுதிய பல புத்தகங்களைப் புரிந்து கொள்ள நல்ல சம்ஸ்கிருத அறிவு வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், அரபு நாட்டிலிருந்து இதை ஆராய வந்த ஆல்பிருனிக்கு இருந்த மொழி அறிவும் ஆர்வமும் கூட நமக்கு இல்லாதது வெட்கப்பட வேண்டிய விஷயம். நானும் ஆங்கில மொழி பெயர்ப்பை அடிப்படையாக வைத்துத் தான் எழுதுகிறேன். அதில் பல வகையான விளக்கங்கள் இருப்பதையும் தான், ஒரு குறிப்பிட்ட கருத்தை ஏற்பதாகவும் மொழி பெயர்ப்பாளர்கள் எழுதுவர். அவர் எழுதிய கருத்தைத் தான் நாம் ஏற்க வேண்டும் என்பதில்லை. ஆனால் சம்ஸ்கிருத மொழி அறிவு இல்லாதவரை அவர்கள் சொல்லுவதே வேத வாக்கு!

(புதைக்கப்பட்ட ஒரு குழந்தையின் நெஞ்சில் ஒரு பானை ஓடு இருந்ததை அக்குழந்தையின் விளையாட்டுச் சாமான் என்று தொல்பொருட் துறை அறிஞர்கள் எழுதினர். ஆனால் ஈமச் சடங்குகளில் பயன்படுத்தும் “கபல” என்ற பானை ஓடு அது என்று வேதம் தெரிந்த அறிஞர்கள் சொன்னார்கள். இது போல “செவன் சிஸ்டர்ஸ்” என்பது ஒரு பறவை வகை என்பதை தவே என்னும் பறவை இயல் அறிஞர் கண்டு பிடித்தார். வேதத்தை மொழி பெயர்த்த வெள்ளைக் காரர்கள் இதை “ஏழு பெண்கள்” என்று மொழி பெயர்த்தனர். உள்ளூர் கலாசாரம் தெரியாமல் “ஆராய்ச்சி” செய்யும் அறிஞர்கள் இப்படித் தத்துப்பித்து என்று உளறுவார்கள். வள்ளுவன் சொன்னது போல ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’!)