தொல்காப்பியரும் வள்ளுவரும் பெண்களின் எதிரியா?

bankura in WBRiya,Raima,Moon

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1420; தேதி 19 நவம்பர், 2014.

இனம் போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம் போல வேறுபடும் — குறள் 822

பொருள்:– தம் இனத்தைச் சேர்ந்தவர் போல நடிப்பர்; ஆனால் உள்ளன்பு இராது. அத்தகையோர் நட்பு, பொது மகளிர் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறு படும்.

இதில் மகளிர் மனம் போல மாறுபடும் என்பதைப் பார்க்கையில் பெண்களின் சஞ்சல புத்தியைக் குறை கூறுவது போலத் தோன்றும். ஆயினும் பொது மகளிரைப் பற்றி சொல்கிறார் என்றவுடன் அந்த ஐயப்பாடு நீங்கிவிடும். எதையும் அது எங்கே, என்ன காரணத்துக்காக சொல்லப்பட்டது என்பதை காணல் வேண்டும்.

கூடா நட்பு என்னும் இதே அதிகாரத்தில் இன்னும் ஒரு குறளில் வள்ளுவர் கூறுவதையும் இங்கே குறிப்பிடுதல் பொருத்தம்:

_HY29BONALU-festival,s'bad, hindu

ராஜீவ் காந்தி படுகொலை

தொழுத கை உள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து— குறள் 827
பொருள்:- உள்ளுக்குள் பகை வைத்திருப்போர் வணங்குபோதும் கைக்குள்ளும் கொலைக் கருவி வைத்திருப்பர். அவர்கள் விடும் போலிக் கண்ணீரும் அத்தகையதே.

நமது காலத்திலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் செய்த படுகொலையையும் நாம் கண்டோம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை வணங்குவது போலக் குனிந்து வெடிகுண்டை வெடித்துப் படுகொலை புரிந்தவளும் ஒரு பெண்ணே. இதை மேற்கூறிய குறளில் கண்டோம்.

நாடக அரங்கில் படுகொலை

இதே போல நாடக அரங்கில் நடந்த ஒரு படுகொலையும் வரலாற்றில் உள்ளது. சுங்க வம்சத்து கடைசி அரசனான தேவபூதி மிகவும் மோசமான ,பலவீனமான ஒரு பேர்வழி. அவனை ஒரு அடிமைப் பெண், — படுக்கை அறையிலே கொலை செய்தாள். அவள், அவனது ராணி போல வேஷம் போட்டுக் கொண்டு படுக்கை அறைக்குள் சென்று அவனைக் கொன்றாள். அவளும் ஒரு பெண்தான்.

வரலாற்றில் இப்படிப் பெண்கள் மூலம் படுக்கை அறையில் நடந்த படுகொலைகள் பல உள. ஆக பெண்களிலும் “நீலாம்பரிகள்” உண்டு. ராமாயணத்தில் பெண் என்ற காரணத்தால் தாடகையைக் கொல்ல ராமன் மறுக்கிறான். அவள் பெண் அல்ல, பேய் என்கிறான் விசுவாமித்திரன். ஆகவே எந்த சூழ்நிலையில் யாரைச் சொல்கிறார் என்பதை அறிந்த பின்னரே ஒருவரைக் குறைகூறுதல் பொருந்தும்.

பெண்கள் மட்டுமே கொலை செய்தனர் என்பதும் உண்மையல்ல. ‘’மனதிலே கருப்பு வைத்து’’ – விபூதி பூசி வந்த — முத்த நாதன் என்பான் உடைக்குள் இருந்த வாளினை உருவி, மெய்ப்பொருள் நாயனாரைக் கொன்றதும், இந்திரா காந்தியை அவரது சீக்கிய மெய்க்காவலர்களே கொன்றதும் வரலாற்று உண்மைகள்.

Belur1mirror lady

தொல்காப்பியத்தில்…

தொல்காப்பியத்தில் முதல் சூத்திரம்:–
‘’எழுத்து எனப்படுப
அகரம் முதல் னகரம் இறுவாய்
முப்பஃது என்ப
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே’’

பொருள்:– தமிழ் எழுத்துக்கள் அ முதல் ன வரை முப்பது என்பர். மூன்று சார்பு எழுத்துக்களைச் சேர்க்காமல்.

இதற்கு உரை எழுதிய இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ‘’ன’’ — என்பதை கடைசியில் வைத்ததற்கு என்ன காரனம் என்று வியாக்கியானம் செய்கின்றனர். னகரம் வீடு பேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின் வைக்கப்பட்டது என்று எழுதியுள்ளனர்.

சேனாவரையர் எழுதிய உரையிலும், “அறிவு முதலாயினவற்றான் ஆண்மகன் சிறந்தமை யின் ஆடூஉவறிச் சொல் முற்கூறப்பட்டது என்பர். தொல்காப்பியருக்கு முன்னரே தமிழ் மொழி எழுத்துக்கள் அ-வில் துவங்கி ன-வில் முடிந்திருக்கலாம். ஆயினும் அவர் நூல்தான் நமக்குக் கிடைத்த தமிழ் நூல்களில் மிகப் பழையது என்பதால் மூன்று உரையாசிரியர்களும் தங்களுடைய அல்லது அவர்களது காலத்தினுடைய ‘’ஆண் ஆதிக்கக் கொள்கையை’’ தொல்காப்பியர் மேல் போட்டுவிட்டனர்!! அதாவது ன-கரம் ஆண்பால் பெயர்களில் வருவதால் அது உயர்வான எழுத்து என்றும் அதனால்தான் அதைத் தமிழ் மொழியின் கடைசி எழுத்தாக வைத்துச் சிறப்பித்தார் தொல்காப்பியர் என்றும் பொருள்படும்படி எழுதிவிட்டனர்.

இது போலவே மனு எழுதிய ஒரு ஸ்லோகத்தையும் காட்டி மனு பெண்களின் எதிரி என்பர் வெளிநாட்டினர் — ஆனால் மனுவோ பெண்களுக்கு மகத்தான ஆதரவு கொடுத்தவர் — “எந்த இடத்தில் பெண்கள் பூஜிக்கப்பட வில்லையோ அந்தக் குடும்பம் வேரொடு அழியும் என்றும், பெண்கள் விடும் கண்ணீர் குடும்பத்தையே துடைத்து ஒழித்துவிடும்” என்றும் சொல்லி இருக்கிறார். பெண்கள் வாழ்க என்ற எனது கட்டுரையில் முழு விவரம் காண்க. அது மட்டுமல்ல. பெண்களுக்கு கணவனும் சகோதரர்களும் நகைகளையும் புத்தாடைகளையும் வாங்கிக் கொடுத்து எப்போதும் அவர்களை மகிழ்ச்சிக் கடலில் மிதக்கவிட வேண்டும் என்றும் எழுதி வைத்திருக்கிறார்– (கேட்பது பெண்கள் குணம், வாங்கிக் கொடுப்பது ஆண்கள் கடமை என்ற எனது கட்டுரையில் மேல் விவரம் காண்க) ஆக உரைகாரர்களையோ வெளிநாட்டு ‘’அறிஞர்’’ களையோ நம்பி அர்த்தத்தை அனர்த்தம் ஆக்கி விடக்கூடாது.

026maruthi

பகவத் கீதையிலும், ஆதி சங்கரரின் விவேக சூடாமணியிலும் ஆண்களுக்குச் சார்பான ஸ்லோகங்கள் இருப்பது உண்மையே. ஆனால் அவர்கள். தாய் என்ற நிலையில் இருக்கும் பெண்களுக்கு கடவுளுக்கும் மேலான இடத்தைக் கொடுத்துப் பாடி இருக்கின்றனர்.

மனைவி என்ற நிலையில் உள்ள பெண்களுக்கு சிவ பெருமான் போல 50—50 கொடுக்கின்றனர். உடலில் பாதி மட்டுமல்ல- உரிமையிலும் அர்த்த நாரீ என்ற முறையில் ‘’சஹ தர்மசாரினி’’ என்பர்.

இழி தொழில் செய்யும் பெண்கள் மீதே அவர்கள் வசைமாரி பொழிந்தனர்.
தனித்தனியாக எடுத்துப் பார்க்கையில் கம்பன், பட்டினத்தார், அருணகிரி நாதர் ஆகியோர் பெண்களின் எதிரிகள் போலக் காட்சிதருவர்.!

இதோ சில கம்பன் பாடல்கள்:

‘’அன்னவள் உரைத்தலோடும் ஐயனும் அறிதற்கொவ்வா
நன்னுதல் மகளிர் சிந்தை’’

‘’மன்றலங் கோதை மாதர் மனம் என போயிற்றம்மா’’

வருமுலை விலைக்கென மதித்தனர் வழங்கும்
தெரிவையர் மனமெனக் கறங்கெனத் திரிந்தான்’’ – கம்ப ராமாயணம்.

afrohairstylecmpetion-5

வரைவின் மகளிர் என்ற அதிகாரம் முழுதும் வள்ளுவனும் பெண்களைச் சாடுகிறான்.
இது போல ஷேக்ஸ்பியர் உள்பட எந்த நாட்டு இலக்கியத்திலும் காணலாம்.
ஆக, எப்பொருள் யார் வாய்க் கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருள் கண்டு தெளிக.
பாரதியின் சொற்களுடன் முடிக்கிறேன்:–
பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா!
பெண்கள் வெல்கவென்று கூத்திடுவோமடா!
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;
கலி அழிப்பது பெண்களின் அறமடா!
கைகள் கோத்து களித்து நின்றாடுவோம்
துன்பம் தீர்வது பெண்மையினாலடா!

-சுபம்-

Pictures are taken from various sites; not related to the article;thanks.