சந்திரனை முதலில் படமாக வரைந்தவர்! (Post No.6131)

Written by S.Nagarajan


swami_48@yahoo.com


Date: 28 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 5-16 am


Post No. 6131

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பாக்யா 22-2-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு ஐம்பத்தி ஒன்றாம் கட்டுரை – அத்தியாயம் 415.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽

.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽அறிவியல் துளிகள் அத்தியாயம் 415

(எட்டாம் ஆண்டு ஐம்பத்தி ஒன்றாம் கட்டுரை)

 சந்திரனை முதலில் படமாக வரைந்தவர்!

ச.நாகராஜன்

சந்திரனை முதன் முதலில் படமாக வரைந்தவர் (பழைய கால) போலந்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஹெவெலியஸ் (Hevelius) ஆவார். துறைமுக நகரமான டாரிஸ்கில் (Gdarisk) அவர் 1611ஆம் ஆண்டு பிறந்தார். (பிறப்பு 28,ஜனவரி, 1611 மறைவு 28, ஜனவரி, 1687)அந்தக் காலத்தில் அந்த நகரின் பெயர் டான்ஜிக்(Danzig).

ஹெவெலியஸின் தந்தை  குடும்பத் தொழிலான வியாபாரத்தில் அவர் ஈடுபட வேண்டும் என விரும்பினார். லெய்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கப் போன அவர் திரும்பி ஊருக்கு வந்தவுடன் வியாபாரத்தில் ஈடுபட்டார். பின்னர் கவுன்ஸிலரானார்; பிறகு மேயரானார்.

பீட்டர் க்ருஜெர் என்ற அவரது ஆசிரியர் அவருக்கு வானவியலில் ஈடுபாட்டை உருவாக்கவே வானில் உள்ள அனைத்து நட்சத்திரங்களையும் கிரகங்களையும் தினமும் பார்க்க ஆரம்பித்தார். மரணப்படுக்கையில் இருந்த போது க்ருஜெர்  ஹெவெலியஸிடம் அவரது வாழ்க்கையை வானவியல் ஆய்வில் அர்ப்பணிக்க வேண்டும் என்று உருக்கமாக வேண்டினார்.

இதனால் உத்வேகம் பெற்ற அவர், தனக்குச் சொந்தமாக அடுத்தடுத்து இருந்த மூன்று வீடுகளின் மாடியில் ஒரு பெரிய வானாய்வுக்கூடத்தை (ஆப்ஸர்வேடரி) நிறுவினார். வணிகத்தில் கொழித்த செல்வத்தை வானவியல் ஆய்வில் அவர் கொட்டினார். ‘நட்சத்திர ஆய்வுக் கூடம்’ என்று அவரது ஆப்ஸர்வேடரி புகழை அடைந்து ஐரோப்பா முழுவதும் பிரபலமானது. பிரபல வானவியல் விஞ்ஞானியான எட்மண்ட் ஹாலி உள்ளிட்ட அனைவரும் அவரது ஆய்வுக்கூடத்திற்கு வந்து மகிழ்ந்தனர். நெடுந்தூரத்திலிருந்தெல்லாம் பலரும் அவரது வானவியல் கூடத்திற்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.

எதையாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என்று எண்ணிய ஹெவெலியஸ் சந்திரனை ஆராய ஆரம்பித்தார். அப்போது கடல் பயணத்தையே பெரிதும் நம்பி இருந்த ஐரோப்பிய நாடுகள் கடலின் லாங்கிட்யூட் எனப்படும் தீர்க்கரேகையை எப்படி நிர்ணயிப்பது என்று தவித்துக் கொண்டிருந்தன; அதற்கு சந்திரனை ஆராய்வது ஒன்றே வழி என்று அவை நம்பின. சந்திர கிரகணத்தின் போது மாலுமிகள் சந்திரனின் நிழல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 3.03 மணிக்கு விழும் போது பாரிஸில் அது 3.33க்கு விழுவதைப் பார்த்து தீர்க்கரேகையைக் கணக்கிட்டனர்.என்றாலும் இன்னும் துல்லியமாக தீர்க்கரேகையை நிர்ணயிக்க முடியும் என அனைவரும் நம்பினர். ஓடுகின்ற கப்பலில் பெரிய டெலஸ்கோப்பை வைத்து கணக்கிடுவதும் எளிதான காரியமாக இல்லை.

இந்தச் சூழ்நிலையில் தான் ஹெவெலியஸ்  வீட்டுக் கூரை  மீது அமர்ந்து தனது டெலஸ்கோப் மூலம் சந்திரனை தினமும் ஆராய ஆரம்பித்தார்.தினமும் தான் பார்த்ததை படமாக வரைந்தார். தாமிரத்தில் அதை அப்படியே பொறித்தார். சில படங்களை பாரிஸில் இருந்த பிரபல வானவியல் நிபுணரான பீட்டர் கஸெண்டிக்கு (Petr Gassendi) அனுப்பினார்.

அவற்றைப் பார்த்துப் பிரமித்துப் போன கஸெண்டி, “உங்களுக்கு தீர்க்கமான கண்கள் இருக்கின்றன” என்று எழுதி அவரைப் பாராட்டி ஆய்வைத் தொடருமாறு வேண்டினார்.

ஐந்து வருடங்கள் இப்படி  தினமும் ஆராய்ந்து கடின உழைப்பின் மூலமாக சந்திரனின் படத்தை முழுதுமாக அவர் வரைந்து முடித்தார். அதை ஒரு புத்தக வடிவிலும் – Selenographia sive Lunae descriptio என்ற பெயரில் – வெளியிட்டார்.  இந்தப் புத்தகத்தில் 40 தாமிர பிளேட்டுகள் உள்ளன. இது அபூர்வமான ஒரு நூலாக கருதப்பட்டது.

சந்திரனுடன் நில்லாமல் சனி, செவ்வாய்,குரு உள்ளிட்ட கிரகங்களையும் அவர் ஆராய்ந்தார். அத்துடன் புதிதாக நான்கு வால் நட்சத்திரங்களையும் கண்டுபிடித்தார்.

அவர் அந்தக் காலத்தில் சந்திரனில் உள்ள பல பகுதிகளுக்கும் கொடுத்த பெயர்களை – அவை சற்று சிக்கலாக இருக்கின்றன என்று சொல்லி, பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்கள் மாற்றினர்.

இப்படி ரிச்சியோலி என்பவர் மாற்றிய பெயரான டிரான்க்விலிடி கடல் (The Sea of Tranquility)என்ற பகுதியில் தான் 1969ஆம் ஆண்டு அமெரிக்க விண்கலமான அபல்லோ 11 இறங்கியது.

முதலில் சந்திர படத்தை உருவாக்கியவர் என்ற பெயருடன் மட்டும் ஹெவெலியஸின் புகழ்  நிலைத்திருக்க ரிச்சியோலி வைத்த பெயர்களே இப்போது புழக்கத்தில் இருக்கிறது.

ஹெவெலியஸின் இறுதி நாட்கள் சோகமாகக் கழிந்தன. இதற்கான காரணம் அவரது வானியல் கூடத்தில் நேர்ந்த தீவிபத்து தான். 1679ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி அவரது வானியல் ஆய்வுக் கூடத்தில்  ஏற்பட்ட தீ விபத்தினால் அவரது அனைத்து குறிப்புகளும் நூல்களும், கருவிகளும் எரிந்து சாம்பலாயின. இந்த அதிர்ச்சியை அவரால் தாங்கவே முடியவில்லை. உடல் நலம் நலிய ஆரம்பித்தது; மனமும் சோகத்தால் வெதும்பியது; 1687ஆம் ஆண்டு அவரது 76ஆம் பிறந்த நாளில் அவர் மறைந்தார்.

சந்திரனைப் பற்றி நிறைய அறிய விரும்பும் சந்திர ஆர்வலர்கள் கடினமாக உழைத்து சந்திரனை முதலில் தீர்க்கமாக ஆராய்ந்த ஹெவெலியஸைப் போற்றுவதில் ஆச்சரியம் இல்லை!

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

போலந்தில் பெண்கள் டாப்லெஸ்-ஆக வெளியில் போவது சட்டப்படி குற்றம்.அமெரிக்காவிலோ சில மாகாணங்களில் போகலாம்; சில இடங்களில் போக முடியாது. உலகின் பல நாடுகளிலும் இப்படி டாப்லெஸ் ஆக பெண்கள் வெளியில் செல்வது சட்டப்படி குற்றமாகும்.

போலந்தைச் சேர்ந்த மானிடவியல் விஞ்ஞானிகள் அக்னியஸ்கா எம். ஜெலஜ்னியவிஸ் மற்றும் போகுஸ்லா (Anthropologists – Agnieszzka M.Zelazniewicz and Boguslaw) ஆகிய இருவரும் இணைந்து  பெண்களின் மார்பகங்களின் கவர்ச்சி பற்றி பெரிய ஆய்வை மேற்கொண்டனர்.

 தங்களது ஆய்வின் முடிவில் பெரிய மார்பகங்கள் ஆண்களைக் கவர்கின்றன என்று அவர்கள் கண்டனர். இதற்கு அவர்கள் பெரிய மார்பகங்களை உடையவர்கள், குழந்தைகளைப் பெறும் சக்தியை உடையவர்கள் என்று ஆண்கள் நம்புவதே காரணம் என்கின்றனர்.

மார்பகத்தில் குழந்தை பிறப்பதில்லை என்றாலும் குறைந்த வெயிஸ்ட் டு ஹிப் (Waist to Hip) விகிதமும் பெரிய மார்பகங்களும் குழந்தை பெறுவதற்கான சக்தியைத் தரும் ஹார்மோன்களைச் சுரக்கிறது என்பது முக்கிய காரணம். அத்துடன் பெரிய மார்பகங்கள் நல்ல தரமான மரபணுவைத் (genetic quality) தருகிறது.

என்றாலும் கூட ஆய்வு, பெரிய மார்பகங்களைப் முற்றிலுமாகக் கொண்டாடவில்லை. ஆண்களுக்கு ப்ரா சைஸில் பிடித்தது சிறிதான A மற்றும் B-ஐ விட C மற்றும் D தானாம்! பெரிய சைஸான E-யையும் கூட ஆண்கள் விரும்புவதில்லையாம்.

பெரிய மார்பகங்களைக் கொண்டவர்கள் பாலுறவில் இச்சை கொண்டவர்களாம். சிறிய மார்பகங்களைக் கொண்டவர்கள் அறநெறி ஆர்வம் கொண்டவர்கள்; ஒழுக்கத்தில் உறுதியாக இருப்பவர்கள், எளியவர்கள், தகுதி வாய்ந்த, ஆர்வம் நிரம்பிய, அறிவு கூர்மை உடையவர்கள்! (moral,modest,competent,ambitious and intelligent). இப்படிச் சொல்கிறது ஆய்வு.

இதே ரீதியில் இன்னும் பல விஞ்ஞானிகளும் இதைப் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் முடிவு எப்படி இருக்கப் போகிறது என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

இதற்கிடையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியர்,போட்டோகிராபர், வீடியோகிராபர் என்று பல பரிமாணங்களைக் கொண்டு தைரியமாக டாப்-லெஸ் ஆக வலம் வரும் ஹாலி வான் வோஸ்ட் (Holly Van Voast) நியூயார்க் போலீஸ் பல வித காரணங்களைச் சொல்லி தன்னைப் பல முறை கைது செய்ததை எதிர்த்து வழக்கு போட்டு ஜெயித்து விட்டார். அவருக்குக் கிடைத்த நஷ்ட ஈட்டுத் தொகை 77000 டாலர்கள் (சுமார் 53,90,000 ரூபாய்கள்)!

***