பெண்கள் மட்டுமே ஆண்ட அதிசய நாடு!

jhansi

Research Article No.1744; Date:- 23  March, 2015

Written by London swaminathan

Uploaded at London time  காலை 9-40

பாட்டிமார்களிடம் பழங்கதைகள் கேட்டவர்களுக்கும் பழைய கால சிறுவர் கதைப் புத்தகங்கள், பத்திரிக்கைகள் (அம்புலிமாமா, கண்ணன், கோகுலம்) ஆகியன படித்தவர்களுக்கும் மிகவும் பிரபலமான வாசகம் “56 தேச ராஜாக்கள்”. அதாவது பட்டபிஷேகம், ராஜா வீட்டுக் கல்யாணம், ஸ்வயம்வரம் எதுவானாலும் அக்காலத்தில் 56 தேச ராஜாக்களும் வந்திருந்ததாகச் சொல்லி கதையைத் துவக்குவர். இந்தியா இப்பொழுது மாநிலங்களாகவும் யூனியன் பிரதேசங்களாகவும் எப்படிப் பிரிக்கப்பட்டதோ அப்படியே அக்காலத்தில் 56 தேசங்களாகப் பிரிக்கட்டிருந்தது.

ஒரு சக்ரவர்த்தி வந்து, பல தேசங்களை வென்று, தமது பேரரசுக்குள் சேர்த்திருந் தாலும் அந்நாட்டு ராஜாக்கள் கப்பம் கட்டி விட்டு தனது ராஜா பதவியைத் தக்க வைத்துக் கொள்வார். 56 தேசங்களின் பட்டியல் அபிதான சிந்தாமணி போன்ற கலைக் களஞ்சியங்களில் உள்ளது.

மஹாபாரதத்தில் குறைந்து 29 நாடுகளின் பெயர்கள் வருகின்றன. புத்தர் காலத்தில் 16 பெரிய பிரிவுகள் (மஹாஜனபத) இருந்தன. தமிழ் நாட்டில் சேர, சோழ, பாண்டியருக்கும் கீழே பல சிறிய அரசர்கள் இருந்ததுபோல பல சிற்றரசர் நாடுகளும் இருந்தன.

Rani-Lakshmi-Bai

லெட்சுமி பாய்

வராஹமிகிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதா என்ற நூலிலும், வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்ரத்திலும் ஸ்த்ரீ ராஜ்யம் என்று ஒரு நாட்டைக் குறிப்பிடுகின்றனர். இது ஒரு வியப்பான விஷயமாகும். அதவது பெண்கள் ராஜ்யம் என்று பெயர். கிரேக்க நாட்டில் இப்படி ஒரு கதை உண்டு. ஆனால் அங்கே அவர்களை நல்லபடி சித்தரிக்கவில்லை. நமது நாட்டில் பெண்கள் போர்ப் பயிற்சி பற்றி புகழ்ச்சியாகவே சொல்லியுள்ளனர். நம் நாட்டுக்கு வந்த, அல்லது நம் நாட்டைப் பற்றிக் கேள்விப்பட்ட கிரேக்க ஆசிரியர்கள் நம் வீராங்கனைகளைப் புகழ்ந்து எழுதியுள்ளனர்.

கி.பி.600 வாக்கில் இந்நட்டுக்கு வந்த சீன யாத்ரீகன் யுவாங் சுவாங்கும் பெண்கள் நாடு இருப்பது பற்றி எழுதியுள்ளார்.

மெகஸ்தனீஸ் எழுதிய இண்டிகா என்னும் நூலில் பாண்டிய நாட்டில் ஒரு ராணி ஆள்வதாக எழுதியுள்ளார். ஒருவேளை இது அன்னை மீனாட்சியைக் குறிப்பதாக இருக்கும் என்று அறிஞர்கள் கூறுவர்.

மௌர்ய சந்திரகுப்தன் பல்லக்கைச் சுற்றி பெண் வீராங்கணைகள் செல்லும் காட்சியை வேறு ஒரு கிரேக்க ஆசிரியர் எழுதி வைத்துள்ளார். ராமாயணக் கதைக்கு உயிரே கைகேயி பெற்ற இரண்டு வரங்கள் தான் என்பதை நாம் அறிவோம். யுத்த களத்தில் கைகேயி திறம்பட தேரைச் செலுத்தி தசரதனுக்குக்கு வெற்றி தேடித் தந்த செய்தியையும் நாம் அறிவோம்.

chennamma

கௌடில்யர் அர்த்தசாஸ்திர நூலிலும் பெண்கள் படை பற்றி எழுதியுள்ளார். ஆக, 2300 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்கள் போர்ப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது கைகேயி யுத்த்களத்தில் தசரதனுக்கு சாரதியாக (டிரைவர்) போய் இருக்கமாட்டாள்.

பெண்கள் நாடு எங்கே இருந்தது?

இது இருந்த இடம் பற்றி நாம் ஊகிக்கவே முடிகிறது. கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் இது வடமேற்கு இந்தியாவில் இருந்ததாக வராஹமிகிரர் எழுதியுள்ளார். இது இமயமலை சட்லெJ நதிப் பிரதேசம் என்று யுவாங் சுவாங் சொல்கிறார். பிரம்மபுத்ரா நதிக்கு வடகே இமய மலையில் இருந்ததாக டே என்பவர் குறிப்பிடுவதால் இது குமாவூன், கார்வால் பகுதியாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. கிழக்கு திபெத்தில், நுவாங் என்ற மலைஜாதி மக்களிடையே பிஞ்சு என்ற ராணி ஒருத்தி இருந்ததாகவும் அவரைத் தொடர்ந்து அந்நாட்டில் பெண்களே ஆட்சி புரிந்ததாகவும் ஆட்கின்ஸன் என்பவர் எழுதுகிறார். வாத்ஸ்யாயனரின் காமசூத்ரத்துக்கு உரை எழுதிய யசோதரர் என்பவர் இது வங்க தேசத்துக்கு மேற்கே இருந்த நாடு என்பார். ஆக இமய மலைப் பகுதியில் இது இருந்தது உறுதியாகிறது.

Anushka-Rudramadevi

ராணி ருத்ரமா தேவி

வராஹமிகிரர் 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த நாடுகளின் பட்டியலைத் தருகிறார். ( ஆங்கிலக் கட்டுரையில் முழு விவரம் காண்க). ஒரு குறிப்பிட்ட ஜாதி, இன மக்கள் குழுவின் பெயரில்தான் நாடுகள் பெயர் இடப்பட்டன. காம்போஜர்கள் பெரும்பாலும் வாழ்ந்த பகுதியை காம்போஜர் என்றனர். ஆனால் இவர்களே காலப் போக்கில் பல இடங்களுக்குச் சென்று காலனிகளை அமைத்தபோது அதையும் காம்போஜம் என்றனர். இதனால் ஒரே பெயர் மேலும் சில இடங்களில் கானப்படும். சிலநேரங்களில் மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து சென்றுவிட்டால், பூகோளப் படத்தில் அந்த நாட்டின் பெயரே வேறு இடத்தில் இருக்கும். அதாவது எல்லைகள் மாறிக் கொண்டே இருக்கும்.

RD parade rehearsal

அபிதான சிந்தாமணி போன்ற கலைக் களஞ்சியங்களில் தமிழ் நாட்டுக்கு வெளியேதான் திராவிடம் என்ற நாடு காட்டப்பட்டுள்ளது. சேர, சோழ, பாண்டிய நாடுகளின் பெயர்களுக்குப் பின்னர், திராவிடம் என்ற நாடும் உள்ளதால் தமிழ் நாட்டுக்கு வடக்கேயிருந்த பகுதியை அப்படி அழைத்தனர் என்பது தெரிகிறது. திராவிட பாஷைகளுக்கு எல்லாம் தமிழே தலைமை என்பதால் பின்னர் அது தமிழுக்கும் உரித்தானது.

திராவிட = த்ரமிள = தமிழ் என்று ஆனதாகவும் தமிழ்= த்ரமிள- த்ராவிட என்று ஆனதாகவும் வாதிப்போர் தங்கள் கொள்கைக்க்கு ஏற்றவாறு இதை மாற்றிக் கொள்வர். திராவிட என்பது வெள்ளைக்கார்கள் பயன்படுத்திய இனப் பெயராக இல்லாமல், தெற்கு என்ற திசைப் பெயராகவே முற்காலத்தில் விளங்கிற்று.

புலி மூஞ்சி, குதிரை மூஞ்சி, மூன்று கண் மனிதர்கள்!

வராஹமிகிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதாவில் 14-ஆவது அத்தியாயத்தில் திசை வாரியாக நாடுகளைக் குறிப்பிடுகிறார். இதில் உள்ள சில சுவையான செய்திகளை மட்டும் காண்போம்.

மிலேச்சர்கள் பற்றி இவர் இரண்டு இடங்களில் குறிப்பிடுவார். இது அங்கே யவனர்களைக் குறித்த சொல் ஆகும். அல்பெரூனி காலத்தில் இது அராபியர்களைக் குறித்தது. தமிழிலும் இதே கதை என்பதை எனது முந்தைய கட்டுரையில் தந்துள்ளேன்.

புலி முக மனிதர்கள், குதிரை முக மனிதர்கள், பாம்புக் கழுத்து மனிதர்கள், நீண்ட கழுத்து மனிதர்கள், நாய் முக மனிதர்கள், கோரைப் பல் மனிதர்கள், சப்பை மூக்கு மனிதர்கள், தழை உடை மனிதர்கள், சபரர்கள், நிஷாதர்கள், உயர்ந்த கழுத்து மனிதர்கள், தாடிவாலாக்கள், முடி நிறைந்த தேகம் உடையோர், முக்கண்ணர்கள், ஒற்றைக் காலர்கள் என்று பலவகையான மக்கள் இனங்களையும் அவர்கள் ஆளுமிடங்களையும் குறிப்பிடுகிறார். இவை எல்லாம் ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள். ஒவ்வொரு இனமக்களும் தங்களை அடையாளம் காட்ட ஒவ்வொரு சின்னத்தைப் பச்சைக் குத்திக் கொண்டனர். அதனால் அவர்கள் அப்பெயர்களில் அழைக்கப்பட்டனர். சிக்கிம், பூடான் போன்ற நாடுகளில் இன்றும் கூட முகமூடி அணிந்து நடனம் ஆடுவர். பூதம் போல முகமூடிகளை அணிவதால் அந்நாட்டுக்கு பூதஸ்தான் (பூட்டான்) என்று பெயர். இது போன்ற வழக்கங்கள் அக்காலத்தில் பெருவாரியாக இருந்திருக்க வேண்டும்.

indian women

ராமாயணத்தில் வரும் குரங்குகள் (ஹனுமார்), கரடிகள் (ஜாம்பவான்), கழுகுகள் (ஜடாயு) ஆகியவர்கள் மிருகங்கள் அல்ல. அவர்கள் உடலில் வரைந்த ஒவியங்கள் (பச்சைக் குத்தல்) அல்லது அவர்கள் சில நேரங்களில் அணியும் முகமூடிகளைப் பொருத்து அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடிவிட்டதால், அனுமார் என்றால், குரங்குகள் என்பது போலக் கதை சொல்லத் துவங்கிவிட்டனர்.

பத்து தலை ராவணன் என்றால், பத்து தலைகள் என்பது பொருளல்ல. ஒருவனுக்குப் பத்து திசைகளிலும் பார்த்து, எதிரிகளை வெல்லும் திறமை இருந்தால் இப்படி அழைப்பர். தசரதன் என்றால் அவனுக்கு பத்து தேர்கள் மட்டுமே இருந்தன என்பது பொருளல்ல. அவன் பத்து திசைகளிலும் உள்ள எதிரிகளை தேரில் சென்று, ஒடுக்கியவன் என்பது பொருள். உலகில் எல்லோருக்கும் எட்டு திசைகள் மட்டுமே தெரியும். இந்துக்களுக்கு மட்டும் பத்து திசைகள். அதாவது தசரதன், ராவணன் போன்ற வீரர்கள் மேல் உலகம், கீழ் (பாதாள) உலகம் உள்பட எல்லா இடங்களிலும் ஆட்சிச் சக்கரத்தைப் பரப்பினார்கள்.

ஆக பழங்கால இலக்கியங்களில் உள்ள முக்கண் மக்கள். ஒற்றைக் கால் மக்கள், புலி-நாய்-குதிரை முக மக்கள் என்பனவற்றை ஆராய்வது பலனளிக்கும் முயற்சியாகும்.

brooklyn museum

நியூயார்க் ப்ரூக்ளின் மியூசிய சிலை

வாழ்க வராஹமிகிரர்! படிக்க பிருஹத் சம்ஹிதா!!!