Written by S NAGARAJAN
Date: 2 March 2017
Time uploaded in London:- 5-53 am
Post No.3682
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
24-2-2017 பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
அறிவு – ஆணுக்கு அதிகமா, பெண்ணுக்கு அதிகமா?
ச.நாகராஜன்
தமிழ் நாட்டுப் பெண்கள் அறிவில் சிறந்தவர்கள். அதிலும் கொங்கு நாட்டுப் பெண்க்ள் அறிவில் சிறந்திருப்பதோடு தாங்கள் சிறந்திருப்பதை தக்க விதமாக எடுத்துக் காட்டுவதிலும் சிறந்தவர்கள். எளிதில் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வி ஆணுக்கு அறிவு அதிகமா அல்லது பெண்ணுக்கு அதிகமா என்பது.
இதற்கு தக்க விதமாக விடையளித்த கொங்கு நாட்டுப் பூங்கோதையின் சரித்திரம் சுவையானது.
தக்கையிசை ராமாயணம் என்ற நூலை இயற்றிய சிறந்த கவிஞரான எம்பிரான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சங்ககிரியில் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி பூங்கோதை அறிவில் சிறந்தவர். கவி பாட வல்லவர். அடக்கத்திற்கும் பெயர் பெற்றவர்.
ஒரு நாள் கவிஞர் வெளியில் சென்றிருந்த போது அவ்ருடன் அளவளாவி மகிழ சில வித்துவான்கள் அவர் வீட்டிற்கு வந்தனர்.
பூங்கோதையார் அவர்களை வரவேற்று உபசரித்து கவிராயர் வெளியில் சென்றிருப்பதையும் சற்று நேரத்தில் வந்து விடுவார் என்பதையும் கூறினார்.
திண்ணையில் அமர்ந்த வித்துவான்கள் தங்களுக்குள் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.
அவர்களுள் ஒருவர் எவ்வளவு தான் கற்றாலும் ஆணுக்கு முன்னால் பெண்ணின் அறிவு குறைவு தான் என்ற தன் கருத்தை முன் வைத்தார். அதை அனைவரும் சந்தோஷமாக ஆதரித்து பெண்களை இழித்துச் பேச ஆரம்பித்தனர்.
வீட்டின் உள்ளேயிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த பூங்கோதையாரால் ஒரு அளவுக்கு மேல் பொறுக்க முடியவில்லை.
ஒரு சிறிய துண்டுச் சீட்டில் ஒரு பாடலை எழுதி ஒரு சிறுமி மூலம் புலவர்களிடம் அனுப்பினார். அந்தப் பாடல்:
அறிவில் இளைஞரே ஆண்மக்கள்; மாதர்
அறிவில் முதிஞரே ஆவர் – அறிகரியோ
தான் கொண்ட சூல் அறிவர் தத்தையர்; ஆண்மக்கள்
தான் கொண்ட சூல் அறியார் தான்
இதைப் படித்துப் பார்த்த புலவர்கள் திகைத்துப் போனார்கள். அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த கவிராயர் திரும்பி வந்தார். பேச முடியாமல் திகைத்திருந்த புலவர்களைப் பார்த்து என்ன விஷயம் என்று கேட்டு நடந்ததை அறிந்தார் எம்பிரான் கவிராயர்.
புலவர்கள் அவரது மனைவியார் எழுதிய பாடலை கவிராயரிடம் கொடுக்கவே அதைப் படித்துப் பார்த்துச் சிரித்த அவர் தன் மனைவியாரிடம் விளக்கம் கேட்டார்.
ஆண்மக்களை இழித்துக் கூறலாமா என்ற அவர் கேள்விக்கு அம்மையார், “நான் இழித்துக் கூறவில்லையே ஆண், பெண் இருவரும் அறிவைக் கொண்டிருந்தாலும் அறிவில் சிறந்தவ்ர்கள் பெண் மக்களே என்றல்லவா கூறி இருக்கிறேன். ஆன்மாவானது நீர்த்துளி வழியே பூமியில் சேர்ந்து உணவு வழியாக புருஷ கர்ப்பத்தில் தங்கி பின்னர் பெண்ணின் கருப்பையை அடைந்து கற்பமுற்றி சிசு பிறக்கிறது. இதை உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் போன்ற நூல்கள் விளக்கவில்லையா, என்ன? ஆகவே தங்கள் கர்ப்பதைத் தெரிந்து கொள்ளாத ஆண்களை விட அதை அறிந்திருக்கும் பெண்களே அறிவில் சிறந்தவர்கள் என்கிறேன்” என்றார்.
உயிர்கள் பிறத்தலைப் பற்றி பிரம்மசூத்திரம் மூன்றாம் அத்தியாயம் முதல் பாதம் முதல் சூத்திரத்திற்கு நீலகண்ட சிவாசாரிய சுவாமிகள் அருளிய விளக்கவுரையையும் சிவஞான போதம் இரண்டாம் சூத்திரத்தில் உள்ள விளக்கவுரையையும் பூங்கோதை வீட்டின் உள்ளிருந்தபடியே நன்கு விளக்கினார்.
மேல் உலகம் சென்ற ஒரு உயிரானது, பூமிக்குத் திரும்பும் போது முறையே துறக்கம், மேக மண்டலம், நிலம், தந்தை, தாய் ஆகிய ஐந்து இடத்துப் புகுந்து வருவதை தியானித்தலே பஞ்சாக்கினி வித்தை என்று அறநூல்கள் கூறுகின்றன.
சொர்க்கம் சென்ற ஆன்மா, மேகத்தை அடைந்து மழைத்துளி மூலம் நிலைத்தை அடைந்து உணவுப் பொருளாய் புருஷ தேகத்தை அடைந்து பின்னர் இந்திரிய மயமாக பெண்ணின் கருப்பையை அடைந்து சிசுவாகப் பிறக்கிறது. புருஷ கர்ப்பத்தில் இரண்டு மாதம் தங்கி இருப்பதை ஆண்கள் அறிவதில்லை. ஆனால் கருவுற்ற உடனேயே பெண் மக்கள் அதை அறிந்து போற்றிப் பாதுகாத்து குழந்தையைப் பிரசவிக்கின்றனர்.
அறிவில் சிறந்தவர் ஆணா, பெண்ணா? பெண்ணே தான் என்று அடித்துக் கூறினார் பூங்கோதையார்.
விக்கித்துப் போன புலவர்கள் அதை ஒப்புக் கொண்டனர்.
விஷயம் கொங்கு மண்டலம் வழியே தமிழகமெங்கும் பரவியது. அனைவரும் பூங்கோதையாரைப் பாராட்டி மகிழ்ந்தனர். தாய்க்குலத்தின் மகிழ்ச்சியைச் சொல்லவும் வேண்டுமோ!
இந்த் சிக்கலான கேள்விக்கு சரியான பதிலை அளித்த அறிவில் சிறந்த பெண்மணியான பூங்கோதையைப் பெற்ற மணியான பூமி கொங்கு மண்டலமே என்று கொங்கு மண்டல சதகத்தில் கார்மேகக் கவிஞர் பாடியுள்ளார்.
கொங்கு மண்டல சதகத்தில் 45வது பாடலாக மலர்ந்துள்ள பாடலைப் பார்ப்போம்:
குறுமுனி நேர் தமிழ் ஆழி உண் வாணர் குழாம் வியப்ப
அறிவில் இளைஞரே ஆண் மக்கள் என்ன அறுதியிட்ட
சிறிய விடைச்சி எம்பெருமான் மனைவி சிறந்து வளர்
மறுவறு சங்ககிரி சேர்வது கொங்கு மண்டலமே
பொருள்: தமிழ்க் கடலை உண்ட அகத்திய முனி போன்ற பல புலவர்கள் வியக்குமாறு, அறிவில் இளைஞர் ஆண் மக்களே என்று முடிவு கூறிய எம்பெருமான் கவிராயரது மனையாட்டியார் வாழும் சங்க கிரியும் கொங்கு மண்டலமே!
****
You must be logged in to post a comment.