Written by London Swaminathan
Date:28 July 2016
Post No. 3016
Time uploaded in London :– 17-30
(Pictures are taken from various sources; thanks)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
எந்த ஊரும் எமது ஊரே; எல்லோரும் உறவினரே – என்று புறநானூற்றில் கனியன் பூங்குன்றன் செப்பினான். உலகமே ஒரு குடும்பம் = வசுதைவ குடும்பகம் – என்று சம்ஸ்கிருத புலவர்கள் இயம்பினர். ஆனால் இந்தக் கருத்து உலகம் முழுதும் பல மொழிகளில் உளது; செயல்முறையில் இதைப் பின்பற்றுவோரும் உளர்.
லண்டனில் தினமும் இலவசமாக விநியோகிக்கப்படும் METRO மெற்றோ பத்திரிகையில் ஒரு உருக்கமான உண்மைக் கதை இன்று வெளியாகியது. இதோ அந்த உண்மைச் சம்பவம்.
“1994 ஆம் ஆண்டு, ஏப்ரல் 30-ஆம்தேதி.
அதாவது 22 ஆண்டுகளுக்கு முன்னர், ஜோ கேம்ப்பெல் என்ற இளைஞர் கிழக்கு லண்டனில் ஒரு டெலிபோன் ‘பூத்’துக்குப் போனார். கீழே ஒரு பொட்டலம் கிடந்தது. யாரோ உருளைக் கிழங்கு வதக்கலை (சிப்ஸ்) போட்டுவிட்டனர் என்று அதை ஒதுக்கித் தள்ளியபோது அது பிறந்து இரண்டு மணி நேரமே ஆன குழந்தை என்பதை அறிந்தார். உடனே போலீசுக்குப் போன் செய்தார்.
அந்தக் குழந்தை ஒரு பெண் குழந்தை. இப்போது அவள் பெயர் கீரன் ஷேக்.
பெற்ற மனம் சும்மா இருக்குமா? அந்தக் குழந்தையைப் பொட்டலம் கட்டிப்போட்ட தாயும் சமாரிட்டன்ஸ் (Samaritans) என்னும் அமைப் புக்குப் போன் செய்து ஒரு குழந்தை ஒரு டெலிபோன் பூத்தில் இருக்கிறது என்று பகரவே எல்லோரும் உஷாராயினர்.
குழந்தையைப் பெற்ற தாயாருக்கு அந்தப் பெண்குழந்தை முறை தவறிய உறவால் பிறந்ததால் அப்பெண் குழந்தையை எறிந்துவிட்டார். அக்குழந்தை சமூகநலப் பிரிவின் (Social Services) பார்வையில் வளர்க்கப்பட்டது.
குழந்தையைக் காப்பாற்றிய, ஜோ கேம்ப்பெல்(Joe Campbell) ஆண்டுதோறும் அக்குழந்தைக்கு பரிசுப் பொருட்களையும், வாழ்த்து அட்டைகளையும் அனுப்பிவந்தார். சமூக நலப்பிரிவு அதை நிறுத்தும்படி அவருக்குக் கட்டளையிட்டது. காப்பாற்றிய ஜோ கேம்ப் பெல் கறுப்பின இளைஞர். இந்தப் பெண்ணோ ஆசிய நாட்டவருக்கும் வேறு கலப்பின மனிதருக்கும் பிறந்தவள். ஐந்து வயதுச் சிறுமியை சுவீகாரம்/ தத்து எடுக்க அவர் முன்வந்த போது அதையும் சோஷியல் சர்வீஸ் (சமூக நலப் பிரிவு) நிராகரித்துவிட்டது. காரணம் ஜோ, திருமணமாகாதவர்.
கடைசியாக ஒரே ஒரு முறை அந்தச் சிறுமியுடன் புகைப்படம் எடுக்க மட்டும் சமூக நல அதிகாரிகள் அனுமதி கொடுத்தனர். ஆனால் ஜோவுக்கோ அந்தச் சிறுமியை மறக்கவே முடியவில்லை. எப்போதும் அவர் மீதான அன்பு வளர்ந்தது. ஜோவுக்குக் கல்யாணம் ஆகி ஐந்து வயது முதல் 17 வயது வரையுள்ள ஐந்து குழந்தைகள் இப்போது உள்ளனர். அவர் தன் குழந்தைகளிடம் தான் ஒரு குழந்தையை மீட்ட கதையைச் சொல்லி உங்களுக்கு வளர்ப்பு சகோதரி ஒருவரும் உண்டு அவள் எங்கோ இருக்கிறாள் என்று இயம்புவார்.
திடீரென சில நாட்களுக்கு முன்னர் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஜோ, வேலை பார்க்கும் கூரியர் (Courier) கம்பெனியில் சக ஊழியர் ஒருவர், மெற்றோ பத்திரிக்கையில் வந்த ஒரு அறிவிப்பைக் காட்டினார். ஜோ அல்லது ஜான் என்ற ஒருவர் தன்னைக் காப்பாற்றியதாகவும், அவரைப் பார்க்கத் தான் ஏங்குவதாகவும் அந்த பெண்மணி கூறியிருந்தாள். முதலில் ஜோ அது தான் இல்லை என்றார். ஆனால் அப்பெண்ணின் படத்தைப் பார்த்தவுடன், மெற்றோ அலுவலகத்தைத் தொடர்புகொண்டார். இருவரும் சந்திக்க மெற்றோ தனது அலுவலகத்திலேயே இடம் கொடுத்தது. இப்போது அபெண்மணிக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது.
கீரன் ஷேக் சொன்னார்: ஜோ கேம்பெல் எனது ‘ஹீரோ’ (உதாரண புருஷர்). நாங்கள் இருவரும் கிழக்கு லண்டனில் பாரெஸ்ட் கேட் பகுதியில்தான் பல்லாண்டுகள் வசித்திருக்கிறோம். ஒருவரை ஒருவர் கட்டாயம் சந்தித்திருப்போம். ஆனால் அறிந்தும் அறியாதவராக நடந்து போயிருப்போம்..
ஜோ கேம்ப்பெல் கூறினார்: என் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான நாள் இந் நாள். இப்படி ஒரு நாள் அக்குழந்தையைச் சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்ல. என் மனைவி ஊர்சுலாவுக்கும் என் ஐந்து குழந்தைகளுக்கும் கீரன் ஷேக்கை அறிமுகப்படுத்தி வைப்பேன்.
(இந்த சம்பவத்தில் சில விஷயங்களை பத்திரிக்கை கூறாமல் விட்டதற்குக் காரணம், ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியங்கள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காகவே)
Xxx SUBHAM XX