
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8107
Date uploaded in London – – – 5 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
கொங்குமண்டல சதகம் பாடல் 99
கொங்கு வேளிர் இயற்றிய பெருங்கதை!
ச.நாகராஜன்
கொங்கு வேளிர் இயற்றிய காவியம் பெருங்கதை ஆகும்.
வச்ச தேசத்து அரசனான உதயணன் சரித்திரத்தை இந்தக் காவியம் விரித்துரைக்கிறது.
குணாத்யர் இயற்றிய ப்ருஹத் கதா இந்தக் காவியத்திற்கு மூலமாக அமைகிறது. (இது பற்றிய கட்டுரை எண் : 7965 வெளியான தேதி : 13-5-2020)

உதயணனின் தாய் கருவுற்று இருக்கையில் சரபம் என்னும் ஒரு பறவை அவளை அரண்மனையிலிருந்து தூக்கிச் செல்கிறது. விபுசாலம் என்ற இடத்தில் போடப்பட்ட அவளுக்கு உதயணன் பிறக்கிறான்.
உதயணனின் வீரச் செயல்களும் அவன் அரசனாகி பல பெண்களை மணம் செய்த வரலாறையும் பின்னர் அவன் துறவு பூண்டதையும் இந்தக் காவியம் 5 காண்டங்களில் கூறுகிறது.
அகவல் பாவில் அமைந்த காவியம் இது.
ஐந்து காண்டங்களின் விவரங்கள்
- உஞ்சைக் காண்டம் (58 பகுப்பினைக் கொண்டது) 2. இலாவாண காண்டம் (20 பகுப்பினைக் கொண்டது) 3. மகத காண்டம் (27 பகுப்பினைக் கொண்டது) 4. வத்தவ காண்டம் (17 பகுப்பினைக் கொண்டது) 5. நரவாண காண்டம் (9 பகுப்பினைக் கொண்டது)
நூலின் சில பகுதிகள் கிடைக்கவில்லை. ஆறாவது காண்டமான துறவுக் காண்டம் முழுதுமாகக் கிடைக்கவில்லை. இதை அரும்பாடு பட்டு மஹாமஹோபாத்யாய உ.வே.சுவாமிநாதையர் (பிறப்பு 19-2-1855 மறைவு 28-4-1942) 1924ஆம் ஆண்டு பதிப்பித்தார்.
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் இந்த நூலைப் பற்றிப் புகழ்ந்து கூறியுள்ளார்.
இதற்கு கொங்குவேள் மாக்கதை, உதயணன் கதை என்ற வேறு பெயர்களும் உண்டு.
பிற்காலத்தில் பலரும் இந்த நூலின் பகுதிகளை மேற்கோளாகக் காட்டியதிலிருந்தே இதன் சிறப்பு நன்கு புலனாகிறது.
இப்படிப்பட்ட கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை அரங்கேறியதும் கொங்கு மண்டலமே என இதனைப் புகழ்ந்து கொங்குமண்டல சதகம் 99வது பாடல் புகழ்ந்து கூறுகிறது.

பாடல் இதோ:
நீதப் புகழுத யேந்திரன் காதை நிகழ்த்துதற்குக்
கோதற்ற மங்கையின் மூன்று பிறப்புற்றா கொள்கையன்றி
மேதக்க சொற்சங்கத் தார்வெள்க வேகொங்கு வேளடிமை
மாதைக் கொண்டுத்தாஞ் சொன்னது வுங்கொங்கு மண்டலமே
பெருங்கதையில் வரும் ஒரு பகுதி இது:-
தல முத லூழியிற் றானவர் தருக்கறப்
புலம்க ளாளர் புரிநரப் பாயிரம்
வலிபெறத் தொடுத்த வாக்கமை பேரியாழ்ச்
செலவுமுறை யெல்லாஞ் செல்வகையிற் றெரிந்து
மற்றை யாழுங் கற்றுமுறை பிழையான்
பண்ணுந் திறனுந் திண்ணிதிற் சிவணி
வகைகயக் காணத்து தகைநய நவின்று
நாரத கீதக் கேள்வி நுனித்து
பரந்தவந் நூற்கும் விருந்தின னன்றித்
தண்கோ சம்பி தன்னக ராதலிற்
கண்போற் காதலர்க் காணிய வருவோன்
கார்வழி முழக்கி நீர்நசைக் கெழுந்த
யானைப் பேரினத் திடைப்பட் டயலதோர்
கான வேங்கைக் கவர்சினை யேறி
யச்சமெய்தி யெத்திசை மருங்கினு நோக்கினன்
- உதயணன் கதை – வத்தவகாண்டம் – யாழ் பெற்றது
***


ஆங்காங்கு கிடைக்கும் ஓலைச் சுவடிகளை ஆராய்ந்து அரும்பெரும் பழைய தமிழ்நூல்களை வெளியிட்டு வந்த உ.வே.சாமிநாதையர் அவர்களுக்கு ஆரம்பமும் முடிவும் இல்லாத ஒரு நூலின் சுவடி கிடைத்தது. அது தான் கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை. பெரும் உழைப்புடன் தயாரித்த பிரதியை ராவ்பகதூர் கனகசபை பிள்ளை என்பவர் தனது சொற்பொழிவுக்கு வேண்டும் என்று கேட்க ஐயர் அதைக் கொடுத்து உதவினார். ஆனால் எதிர்பாராத விதமாக பிள்ளை அவர்கள் இறக்கவே பெருங்கதை பிரதி திரும்பி வந்து சேரவில்லை. மீண்டும் கிடைத்த சுவடிகளை ஆராய்ந்து பெருங்கதையை ஐயர் அவர்கள் 18-2-1924 அன்று பதிப்பித்தார்.
ஐயர் அவர்களின் ‘என் சரித்திரம்’ தமிழன்பர்கள் படிக்க வேண்டிய ஒரு நூல்!
www.projectmadurai.org இல் இதைப் படிக்கலாம். (இரு பாகங்கள்)
tags — கொங்கு வேளிர், பெருங்கதை
***
You must be logged in to post a comment.