Article No.2020
Written லண்டன் சுவாமிநாதன்
Swami_48@yahoo.com
Date : 26 July 2014
Time uploaded in London :7-16
ஷா தொடர்பான முதல் ஐந்து சுவையான சம்பவங்களை ஏற்கனவே வெளியிட்டேன்
6.இங்கிலாந்தை வெல்ல வந்தவன் நான்!
“ஐயா! ஷா அவர்களே, நீவீர் பிறந்த அயர்லாந்து நாட்டைவிட்டு இங்கிலாந்து தேசத்துக்குப் பிழைப்புத் தேடி வந்திருகிறீரே. அங்குள்ள ஜார்ஜ் மூர், யீட்ஸ் போன்ற மாபெரும் கவிஞர்கள் உமக்கு ஊற்றுணர்ச்சி தரவில் லையோ? – என்று லீலா மக்கார்த்தி என்பவர் கேட்டார்.
ஷா பதில் சொன்னார்:
“உம்மைக் கடவுள் காப்பாற்றட்டும்! ஈட்ஸ் என்பவருக்கு தந்தையாக இருக்குமளவுக்கு எனக்கு வயதாகிவிட்டது. ஜார்ஜ் மூருக்கோ அயர்லாந்து என்ன என்றே அப்போது தெரியாது. அவர் அப்போது பாரிஸில் ஓவியக் கலை பயின்று கொண்டிருந்தார். அவருக்கு அவரைப் பற்றியே தெரியாது. நீவிர் இன்று காட்டும் அயர்லாந்து அப்போது இல்லை. நான் ஐரிஷ் மலைகளில் உட்கார்ந்துகொண்டு காலம் தள்ள விரும்பவில்லை. ஏனெனில் இங்கிலாந்து, அயர்லாந்தை வசப்படுத்திக் கொண்டது. அங்கே ஒன்றும் இல்லாததால் இங்கிலாந்தை வெற்றி கொள்ளத் தீர்மானித்து இங்கே வந்தேன். இப்பொழுது உமக்கே தெரியும், நான் இங்கிலாந்தை வென்று விட்டேன் என்பது!
(இதை எழுதுகையில் ஷா புகழேணியின் உச்சிக்கே போய்விட்டார்).
Xxx
7.எனக்கு பணமே குறி!
ஷா எழுதிய நாடகங்களைத் திரைப்படமாக்குவதற்கு உரிமை கேட்டு, சாம் கோல்ட்வின் என்ற படத் தயாரிப்பாளர் நச்சரித்தார். ஷா கேட்ட பணம் கிடைக்க வில்லை. ஆகவே உரிமையை மறுத்துவிட்டார்.
அவர் சொன்னார்: “ஷா, இதோ பாருங்கள். நான் திரைப்படம் தயாரித்தால், உமது புகழ் உலகெங்கும் பரவும். கலைத் துறைக்கு நீர் சேவை செய்ததாக இருக்கட்டும். அல்லது உமது நாடகங்கள் யாருக்குத் தெரியப் போகின்றன?”
ஷா, உடனே, சொன்னார்: கோட்வின், “உமக்கு கலையே பிரதானம். எமக்கோ பணமே பிரதானம்”.
Xxx
- நானும் பி.பி.சி. தமிழோசையும்: பிக்மாலியன்
காப்ரியல் பாஸ்கல் என்ற பிரபல படத் தயாரிப்பாளர் ஹாலிவுட் சென்று ஒரு படம் தரித்தார். அது மட்டும் வெற்றி அடைந்தது. பின்னர் அவர் தொட்டது எதுவும் விளங்கவில்லை. பயங்ர ஏமாற்றம்.
லண்டனுக்குத் திரும்பிவந்தார். ஒரு நாள் நல்ல வெய்யில் அடித்தது. அவர் முன்னர் எப்போதும் ஷா அவர்களைச் சந்தித்ததே இல்லை. ஹாலிவுட் பிரபலங்கள் எல்லாம் முயன்றும், அவர்களுக்கு ஷா, படம் தயாரிக்கும் உரிமை தரவில்லை என்பதும் அவருக்குத் தெரியும்.
அட! கல்லை விட்டு எறிவோம், விழுந்தால் மாங்காய்; போனால் கல் தானே! என்று நினைத்துக் கொண்டு ஷாவின் வீட்டை நோக்கி நடந்தார்.
ஷாவிடம் பாஸ்கல் தன்னுடைய ஆசையைத் தெரிவித்தார். ஷா கேட்டார்:
“ஐயா, பாஸ்கல் அவர்களே, உம்மிடமுள்ள முதலீடு எவ்வளவு சொல்லும்”.
பாஸ்கல் சொன்னார்: “15 ஷில்லிங் 6 பென்னி வைத்திருக்கிறேன். ஆனல் ஒருவரிடம் ஒரு பவுண்ட் கடன் வாங்கி இருக்கிறேன்.
ஷாவுக்கு அந்த உண்மைவிளம்பியை மிகவும் பிடித்துப் போய்விட்டது. பையிலிருந்து ஒரு பவுண்ட் நாணயத்தை எடுத்து அவரிடம் கொடுத்தார். முதலில் போய்க் கடனைத் திருப்பித் தந்துவிடுங்கள். என்னுடைய நாடகத்தைப் படமாக்கும் உரிமையைத் தருகிறேன்.
பாஸ்கலுக்கு மிக்க மகிழ்ச்சி. பிக்மாலியன் படத்தைத் தயாரித்தார். அது மிகவும் பெரிய வெற்றி அடைந்தது.
(எனக்கும் பெர்னார்ட் ஷா நாடகங்களுக்கும் தொடர்பு உண்டு. லண்டனில் பி.பி.சி. தமிழோசையில் தமிழ் ப்ரட்யூசராக வேலை பார்த்த போது நடிகை ராதிகாவுடன் பிக்மாலியன் (மை fஏய்ர் லேடி) நாடகத்தின் தமிழ் வடிவத்தில் நடித்தேன். அது பி.பி.சி. ரேடியோவில் ஒலிபரப்பாகி வெற்றி அடைந்தது. அதில் எனக்கு முக்கிய வேடம்; பேராசிரியர் ஹிக்கின்ஸ்.
அது மட்டுமல்ல. பி.பிசி. அனுமதி பெற்று, ஷாவின் செயி ன் ட் ஜோன் நாடகத்தையும் மொழிபெயர்த்தேன். ஆனால் அது நாடகமாக நடிக்கப் படாததால் ஒலிபரப்பாகவில்லை)
Xxx
9.சின்னப் பையனுக்கும் ஷா உதவி!
வயதான காலத்தில் ஷா, தென் ஆப்பிரிக்காவுக்கு விஜயம் செய்தார். ஒரு நீச்சல் குளதில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தார். அங்கே குறும்பு செய்யும் பையன்கள் சிலர் வந்தனர். அதில் மிகவும் சிறியவனை அழைத்து, ஷாவைக் காட்டி, “அதோ பார், ஒரு கிழவன் நீச்சல் அடிக்கிறான். அவன் தலையை நீரில் அமுக்கும் துணிச்சல் உனக்கு உண்டாடா?” என்று உசுப்பிவிட்டனர். அவன் “என்னால் முடியும் , அப்படிச் செய்தால் என்ன தருவீர்கள்?” என்று கேட்க ஒரு ஷில்லிங் தருவதாக எல்லோரும் கூறினர்.
ஒரு ஷில்லிங் பந்தய பணம் கிடைக்கப்போகிறது என்ற ஆசையில் ஷாவை நோக்கி நீச்சல் அடித்தான்.
ஷா, அவனை ஒரு பார்வை பார்த்தார். அவனுக்கு உடல் எல்லாம் நடுங்கத் துவங்கியது.
அவனருகில் சென்று, ஷா என்ன விஷயம் என்று கேட்டார். அவன் உண்மையை ஒப்புக் கொண்டான். ஷாவுக்கு அந்தப் பையனிடத்தில் இரக்கம் ஏற்பட்டது. கொஞ்சம் பொறு; மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்கிறேன். என்னை தண்ணீருக்குள் ஒரு அமுக்கு அமுக்கு – என்றார். அவனும் அப்படியே செய்தான். ஒரு ஷில்லிங் பெற்றான். அவன் தோழர்களுக்கு இது தெரியாது.
Xxx
10.நான் எழுதியதெல்லாம் (நான்ஸென்ஸ்)
ஷா எழுதிய ஒரு நாடகம் “ஆர்ம்ஸ் அண்ட் மான்”. அதன் துவக்க விழாவுக்கு ஷா வந்தார். இறுதியில் அவரை மேடைக்கு அழைத்தனர். அவர் மேடையில் தோன்றி எல்லோருக்கும் சிரம் தாழ்த்தி வணக்கம் சொன்னார். ஒரே ஆரவாரம், பாராட்டுகள்.
திடீரென்று பால்கனியில் (உப்பரிகை) இருந்து ஒருவர் கூச்சல் போட்டார்:- ஹே, ஷா. வா, வா, முன்னுக்கு வா! நீ எழுதியதெல்லாம் சுத்த அபத்தம் (நான்சென்ஸ்) என்பது உனக்கே தெரியுமே.
இதைக் கேட்ட ஷா, புன்சிரிப்புடன் சொன்னார்:
நீங்கள் சொல்லுவதை நான் அப்படியே வழிமொழிகிறேன். ஆனால் இவ்வளவு பெரிய கூட்டத்தில் நானும் நீங்களும் மட்டுமே இப்படி நினைக்கிறோம். மற்றவர்கள் எல்லோரும் நமக்கு எதிர்த் திசையில் நிற்கிறார்களே! நாம் எம்மாத்திரம்? – என்றார்.
((அதாவது,ஷாவின் எழுத்துகள் நான்சென்ஸ் என்று சொல்பவர் இருவர் மட்டும்மே. மற்ற அனைவரும் ஷாவின் ஆதரவாளர்கள்!!))
(தமிழ்நாட்டின் பெர்னார்ட் ஷா – துக்ளக் சோ ராமசாமி என்றால் மிகையாகாது. அவர் எழுதிய ‘முகமது பின் துக்ளக் நாடகத்தை’ நினைவுபடுத்துகிறது மேற்கூறிய சம்பவம்)
–சுபம்–