
Post No. 9130
Date uploaded in London – –11 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மஹாபாரதம்
யமன் கூறிய உபதேசம் : பெற்றோருக்குப் பணிவிடை செய்!
ச.நாகராஜன்

மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் ஏராளமான கதைகளையும் அந்தக் கதைகள் சொல்லும் நீதியையும் காணலாம். தர்ம சம்பந்தமான தனது கேள்விகளை தர்ம புத்திரர் கேட்க பீஷ்மர் ஒவ்வொன்றுக்கும் ஆணித்தரமான விடைகளைக் கூறுகிறார்.
அதில் கௌதமருக்கும் யமனுக்கும் நடந்த இந்த உரையாடல் – சம்வாதம் – ஒரு அரிய உண்மையைத் தருகிறது. (இதை சாந்தி பர்வம் 129ஆம் அத்தியாயத்தில் காணலாம்).
பாரியாத்திரம் என்னும் மலையில் கௌதமருக்கு பெரியதோர் ஆஸ்ரமம் இருந்தது. தனது பாவங்களை தவத்தால் எரித்த கௌதமர் அங்கு வசித்து வந்தார். அறுபதினாயிரம் வருடங்கள் அவர் தவம் செய்தார்.
ஒரு நாள் அவரிடம் லோகபாலனான யமதர்மன் வந்தான்.
தனது தவ வலிமையால் வந்தவனை யமன் என்று பிரம்ம ரிஷியான கௌதமர் அறிந்து கொண்டார். கைகட்டி வணக்கத்துடன் அவனிடம் அவர் சென்றார்.
யமன் அவரை நமஸ்கரித்து, “தர்மனான நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டான்.
கௌதமர் யமனை நோக்கி, “ ஒருவன் எதைச் செய்து தாய் தந்தையரிடத்துக் கடனில்லாதிருக்கும் தன்மையை அடைவான்? அடைய முடியாத புண்யலோகங்களையும் ஒருவன் எப்படி அடைய முடியும்?” என்று கேட்டார்.
இதற்கு பதிலை யமன் கூறலானான் : “எப்பொழுதும் தவமும் பரிசுத்தியும் உள்ளவனும், சத்தியத்திலும் தர்மத்திலும் விருப்பமுள்ளவனுமாய் இருந்து கொண்டு ஒவ்வொரு நாளும் தாய் தந்தையரின் பூஜையை நேராகச் செய்து வர வேண்டும். நிறைந்த தக்ஷிணை கொடுத்து பல அஸ்வமேத யாகங்களைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அப்படிச் செய்பவன் ஆச்சரியமாக காணப்படும் உலகங்களை அவன் அடைவான்”.
யமனின் இந்த வார்த்தைகளால் தாய் தந்தையரை உரிய முறையில் வணங்கி அவர்களைப் பாதுகாக்கும் ஒருவன் அவர்கள் புத்திரர்களுக்குச் செய்த செயல்களுக்கான கடனைத் திருப்பிச் செய்தவன் ஆகிறான் என்பது தெரிகிறது.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது அவ்வையார் வாக்கு,
மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ என்பது வேத வாக்கு.
இதையே யமனும் தனது வார்த்தைகளால் கௌதமருக்கு உறுதி செய்தான்.

***

tags- பெற்றோர, பணிவிடை, யமன், உபதேசம்