
WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 18 AUGUST 2019
British Summer Time uploaded in London – 6-49 AM
Post No. 6894
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽பாக்யா 1-8-19 இதழில்அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஒன்பதாம் ஆண்டு பதிமூன்றாம்) கட்டுரை – அத்தியாயம் 429
நீங்கள் பேசினால் போதும், உங்கள் முகத்தை வரைந்து விடலாம்!

ச.நாகராஜன்
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியல் தரும் அதிசயங்களுக்கு முடிவே இல்லை. இப்போது புதிய ஒரு கண்டுபிடிப்புச் செய்தி! நீங்கள் பேசினால் போதும். ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உங்களின் முகத்தை வரைந்து விடும்!
ஆணா,பெண்ணா, எந்த பண்பாட்டு இனத்தைச் சேர்ந்தவர், வயது என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை முகம் காட்டி விடும்.
சிறிது நேரம் பேசினால் போதும். ஸ்பீச் 2 ஃபேஸ் (Speech2face) என்று பெயரிடப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் மனித மூளை எப்படிச் செயல்பட்டு சிந்திக்குமோ அதே போல சிந்தித்துச் செயல்படுகிறது. பல லட்சம் என்ற கணக்கில் கல்வி புகட்டும் வீடியோக்களின் மூலமாக இந்தக் கம்ப்யூட்டருக்கு விஞ்ஞானிகள் பயிற்சி தந்துள்ளனர்.இந்த வீடியோக்களில் இண்டர்நெட்டில் ஒரு லட்சம் பேர்கள் பேசுவது படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த தரவுகளின் மூலமாக கம்ப்யூட்டர் ஸ்பீச் 2 ஃபேஸ், குரல் நாண்களுக்கும் மனித முகத்தில் உள்ள சில அம்சங்களுக்கும் இடையேயான தொடர்பைக் கண்டுபிடித்து முகத்தை வரைந்து விடுகிறது என விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
arXiv என்ற அறிவியல் பத்திரிகையில் 23-5-19 இதழில் இந்த அதிசயச் செய்தி வெளியாகியுள்ளது.
மூளை அமைப்பானது பேச்சில் உள்ள சில குறியீட்டு அம்சங்களை உணர்ந்து கொண்டு பேசுவது ஆணா அல்லது பெண்ணா, அவரது வயது என்ன, அவர் எந்த பண்பாட்டு இனத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து தனது அறிக்கையை வழங்குகிறது.

இந்த கம்ப்யூட்டர் நுண்ணறிவு இன்னும் முழுமையானதாக ஆகி விடவில்லை என்பதால் சாதாரணமாக ஒரு முகம் எப்படி இருக்கும் என்பதையே சுட்டிக் காட்டுகிறது. தனிப்பட்ட ஒவ்வொருவரின் முகத்தையும் சுட்டிக் காட்ட இன்னும் அதிக காலம் ஆகலாம்.
ஏற்கனவே நடைபெற்ற ஏராளமான சோதனைகளில் நுண்ணறிவு இப்படி முகம் காட்டும் வல்லமை படைத்தது என்பதை அற்புதமாக நிரூபித்துள்ளது.
Alogrithm எனப்படும் விதிமுறை சில கோளாறுகளையும் கொண்டுள்ளது. உதாரணமாக ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் சீன மொழியைப் பேசும் போது அது ஆசியாவைச் சேர்ந்தவரின் முகத் தோற்றத்தைத் தருகிறது. ஆனால் அவரே இன்னொரு வீடியோவில் ஆங்கில மொழியைப் பேசினால் அது வெள்ளைக்காரரின் முகத்தோற்றத்தைக் காண்பிக்கிறது.
உலக மக்களின் ஜனத்தொகையோ 750 கோடி. ஆனால் கம்ப்யூட்டர் அறிந்து கொண்ட அறிவோ ஒரு லட்சம் வீடியோக்கள் மூலமாகத் தான். ஆகவே இது 750 கோடி பேரையும் துல்லியமாகக் கணிக்காததை புரிந்து கொள்ள முடிகிறது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இப்படி செயற்கை நுண்ணறிவின் இந்தச் செயல்பாட்டைக் கண்டு விஞ்ஞானிகள் ஆரவாரிக்கையில் இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங் செயற்கை நுண்ணறிவு ஒரு காலத்தில் மனித இனத்தையே அழித்து விடும் என்று கடுமையாக எச்சரித்ததையும் இங்கு நினைவு கூர வேண்டும்.
செயற்கை நுண்ணறிவிற்கு ஆதரவாகப் பேசுவோரோ அதன் சில அபூர்வ உபயோகங்களை சுட்டிக் காட்டுகின்றனர்.
உலகில் எத்தனை மிருகங்கள் உள்ளன, அவை எங்கெங்கு உள்ளன என்பதை விஞ்ஞானிகள் அறிய முடியாமல் தவித்தனர். சாடலைட்டுகளும் ஜிபிஎஸ் சாதனங்களும் இதைக் கண்டுபிடிக்க போதுமான அளவில் இல்லை. இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பெர்ஜெர் உல்ப் (Bergr Wolf), AI – செயற்கை நுண்ணறிவின் – மூலமாக ஒரு வழிமுறையைக் கண்டுபிடித்தார். மிருகங்களின் பிரத்யேகமான தடங்களை வைத்து அது இருக்கும் இடம், அவற்றின் எண்ணிக்கை, ஆணா, பெண்ணா உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், ஏ-ஐ தந்து விட்டது!
2015இல் மேற்கொண்ட ஒரு பிரம்மாண்டமான போட்டோ பிடிக்கும் இயக்கத்தின் மூலமாக ஆப்பிரிக்க சிங்கங்கள் கென்யாவில் ஏராளமான குட்டி வரிக்குதிரைகளைக் கொல்வது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றைக் காப்பாற்றும் திட்டம் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. செயற்கை நுண்ணறிவு மூலமாக வெறும் போட்டோக்களை வைத்தே மிருகங்கள் செல்லும் பாதை, அவற்றின் எண்ணிக்கை இப்போது அறியப்படுகிறது!
ஸெப்ஸிஸ் () எனப்படும் இரத்த நச்சுப்பாட்டை ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டால் அதனால் பாதிக்கப்பட்ட நோயாளியைக் காப்பாற்றி விட முடியும். ஆனால் இதை அறிவதற்கு இப்போது ஏஐ உதவுகிறது. இதனால் பல்வேறு கொடிய வியாதிகள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் பல நோயாளிகள் பிழைக்கின்றனர். ஏஐ மருத்துவத்தில் இன்று ஒரு பெரும் புரட்சியையே செய்து வருகிறது!
வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர் நேரிடும் காலங்களில் விபத்தில் சிக்கியுள்ளோரை மீட்பது என்பது சுலபமாக காரியம் இல்லை. ட்ரோன்கள் போன்ற நவீன் சாதனங்கள் கூட இடிபாடுகளைச் சிக்கிக் கொண்டவர்களைப் பற்றிச் சரியாகக் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஆனால் ஏஐ இரண்டே இரண்டு மணி நேரத்தில் இடிபாடுகளின் அடியில் சிக்கி இருப்பவர்களைச் சுட்டிக் காட்டி விடுகிறது. உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு அவர்கள் காப்பாற்றப் படுகின்றனர்.
‘கம்ப்யூட்டர் அட்டாக்’ எனப்படும் கணினியின் மீதான தாக்குதல்கள் இப்போது அதிகமாகி வருகின்றன. பல்வேறு புரொகிராம்களில் தவறுகள் ஏற்படுகின்றன; பல மென்பொருள்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதை எப்படி அறிவது? கணினி நிபுணர்கள் மிகவும் கஷ்டப்படும் இந்தக் காலத்தில் ஏஐ அவர்களுக்கு உதவியாக செயல்பட ஆரம்பித்து விட்டது. பதினைந்தே நிமிடங்களில் தவறுகளை இனம் கண்டு உரிய அறிவுரைகளை இப்போது ஏஐ தருகிறது!இதனால் க்ரிப்டோ செக்யூரிடி (Crypto Security – கம்ப்யூட்டர் பாதுகாப்பு) உறுதிப்படுத்தப்பட்டு விட்டது!
பக்கவாத நோயால் தாக்குண்டவர்களுக்கு உணர்ச்சி போய் விடுகிறது. ஏஐ மூலம் அவர்களின் தொடு உணர்ச்சி மீட்கப்பட்டிருக்கிறது.
இப்படி பல அதிசய செயல்பாடுகளுக்கு செயற்கை நுண்ணறிவே காரணம் என்பதால் அதன் ஆக்கபூர்வமான வழிமுறைகளுக்கு உலகெங்கும் மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. இனி உலகம் செயற்கை நுண்ணறிவு மயம் தான்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
ராபர்ட் வில்ஹெம் புன்சென் (Robert Wilhem Bunsen (1811-1899)) ஜெர்மனியைச் சேர்ந்த இரசாயன இயல் விஞ்ஞானி. கேஸ் பர்னரைக் கண்டுபிடித்ததால் அவரை கௌரவிக்கும் விதமாக அதற்கு புன்சென் பர்னர் என்றே பெயரிடப்பட்டது. அவர் தனது கண்டுபிடிப்புகளுக்கு பேடண்ட் – காப்புரிமை எடுக்க விரும்பவே இல்லை. விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி பணக்காரர் ஆகக் கூடாது என்பது அவரது கொள்கை.
தனது இளமைக் காலத்தில் அவர் மலையேறுவதை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டு ஆர்வத்துடன் அதில் ஈடுபட்டிருந்தார். ஆனால் வயதாகி விட்ட காலத்தில் அவரால் இளமைத்துடிப்புடன் முன்பு ஏறியது போல ஏற முடியவில்லை. இதற்கு அவர் ஒரு வழியைக் கண்டுபிடித்தார். தனது சக தோழர்களுடன் ஒரு சிகரத்தை நிர்ணயிப்பார். மலைச் சிகரத்திற்கு ஏறும் வழியின் ஆரம்பத்தில் நல்ல நிழல் தரும் ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்து தன் சகாக்களை அங்கு வருமாறு அழைப்பார்.
நிழலில் நல்ல ஓய்வான இடத்தில் அமர்வார், ஒரு சிகாரைப் பற்ற வைப்பார். தனது கைக்குட்டையில் ஒரு துளையை சிகாரால் போடுவார். அந்த கைக்குட்டையை முகத்தில் மூடி பூச்சிகள் தன்னைக் கடிக்காதவாறு பாதுகாப்பு செய்து கொள்வார். பின்னர் தான் போட்ட துளையில் சிகாரை சொருகி அதன் மூலம் புகை பிடிக்க ஆரம்பிப்பார். மலை ஏறிவிட்டு அவரது சகாக்கள் திரும்பும் வரை அங்கேயே நன்கு ஓய்வெடுப்பார்; அவர்கள் வந்தவுடன் மலையேறி முடிந்து விட்டது போன்ற ஒரு மகிழ்ச்சியுடன் அவர்களுடன் திரும்புவார். வயதானாலும் பழைய பொழுதுபோக்கை அவர் இந்தவிதமாக விடவில்லை!

***
