Written by London Swaminathan
Date: 2 September 2016
Time uploaded in London: 6-33 AM
Post No.3112
இந்தியாவின் இரு பெரும் புலவர்கள் ஒரே உவமையைப் பயன் படுத்துவதை ஒப்பிட்டுப் பார்க்கையில் இலக்கிய இன்பம் பொங்கும். நாம் கற்றதை நினைவில் வைத்துக்கொள்ளவும் உதவும்.
ஆண்மை இல்லாதவனை அலி அல்லது பேடி என்பர்; உடலில் குறை இருந்தாலும் சரி, மனதில் வீரமினமை இருந்தாலும் பேடி -தான்.
பேடித்தனத்தை அடையாதே (க்லைப்யம் மாஸ்மகம:– பகவத் கீதை 2-3) என்று அர்ஜுனனை கிருஷ்ணன் கண்டிப்பதையும் நாம் அறிவோம்.
பெண்ணாகவும் ஆணாகவும் விளங்கிய சிகண்டியுடன் சண்டை போட மறுத்து, உயிர் துறந்த மாபாரதப் பிதாமஹர் பீஷ்மரை நாம் அறிவோம்.
வள்ளுவனுக்கும், அவனுக்கு முன் வாழ்ந்த காளிதாசனுக்கும் மஹாபாரதக் கதை நினைவுக்கு வந்தது போலும்!
இதோ காளிதாசன் கவிதை:–
கதஸ்ரியம் வைரி வராபிபூதாம்
தசாம் சுதீனாமபிதோ ததானாம்
நாரீமவீராமிவ தாமவேக்ஷ்ய ச
வாடமந்த: கருணாபரோபூத்
–குமார சம்பவம் 13-36
இந்திரனின் தலைநகரான அமராவதிக்குள் குமாரன் (முருகன்) புகுந்தபோது அது பேடியை மணந்த அழகி போலப் பொலிவிழந்து காணப்பட்டது. உடனே முருகப்பெருமானுக்கு கருணை பிறந்தது.
வள்ளுவன் சொல்லுவான்:–
கல்லாதான் சொற்காமுறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற்றற்று — திருக்குறள் 402
அதாவது, படிக்காத ஒருவன் அறிஞர் சபையில் பேச முற்படுவது, இயல்பாகவே தனங்கள் இரண்டும் இல்லாத பெண் ஒருத்தி காம சுகம் அனுபவிக்க விரும்பியது போல் ஆகும்.
இதை விட பேடி என்ற சொல் லையே வேறு இரண்டு சொற்களிலும் காணலாம்:–
பகையகத்து பேடி கை வாள் ஒள்வாள் அவையகத்து
அஞ்சும் அவன் கற்ற நூல்– திருக்குறள் 727
சபையில் பேச அஞ்சும் ஒருவன், போர்க்களத்தில் பேடியின் கையில் கிடைத்த வாள் போன்றதே.
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை
வாளாண்மை போலக் கெடும்– திருக்குறள் 614
முயற்சி இல்லாத ஒருவன் பிறருக்கு உதவ முன் வருவது பேடியின் கையில் கிடைத்த வாள் போன்றதே (பயனற்றது).
நல்ல உவமை! வள்ளுவன் வாய்மொழி வளர்க! காளி புகழ் ஓங்குக!!
-Subam-
You must be logged in to post a comment.