மரங்களைப் பாதுகாப்போம்; பேப்பரைத் தவிர்ப்போம்! (Post No.7793)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7793

Date uploaded in London – – 7 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் அலைவரிசை ‘A’யில் காலைமலர் நிகழ்ச்சியில் தினமும் காலை 6.55க்கு 1-3-2020 முதல் 10-3-2020 முடிய ஒலிபரப்பப்பட்ட பத்து சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு உரைகளில் ஆறாவது உரை

(6-3-2020 அன்று ஒலிபரப்பானது)

மரங்களைப் பாதுகாப்போம்; பேப்பரைத் தவிர்ப்போம்!

நவீன உலகில் ஜனத்தொகை அதிகரிப்பதனால் காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு அந்த இடங்கள் வீடுகளாகவும், வர்த்தக நிலையங்களாகவும், தொழிற்சாலைகளாகவும் மாற்றப்பட்டு வருவது வருந்தத்தக்கது.

அமெரிக்காவில் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 699 மரங்கள் என்ற விகிதாசார நிலை இருக்கும் போது இந்தியாவில் ஒவ்வொரு இந்தியருக்கும் 28 மரங்கள் மட்டுமே இருக்கும் விகிதாசார நிலை நிலவுகிறது.

ரஷியா 69834 கோடி மரங்களைக் கொண்டு உலக மர வளத்தில் முதலிடத்தைப் பிடிக்கும் போது, கனடா 36120 கோடி மரங்களையும், பிரேஸில் 33816 கோடி மரங்களையும் அமெரிக்கா 22286 கோடி மரங்களையும் சீனா 17753 கோடி மரங்களையும் கொண்டிருக்கிறது. இந்தியாவோ 3518 கோடி மரங்களை மட்டுமே கொண்டிருக்கிறது.

இந்த நிலையை மாற்றி நமது பழம் பெரும் நிலையை அடைய ஒவ்வொருவரும் முதலில் மரத்தை வெட்டி அழிக்காமல் இருக்க உறுதி பூண வேண்டும். அடுத்து மரங்களை நடும் பணியில் ஈடுபட வேண்டும்.

இன்னொரு முயற்சியாக பேப்பர் பயன்பாட்டை முடிந்த அளவில் குறைக்க வேண்டும்.

ஒவ்வொரு பேப்பரிலும் நாம் எழுதி அதைக் கழிவாகத் தூக்கி எறியும் போது இந்தப் பேப்பரை உருவாக்க அழிக்கப்பட்ட மரத்திற்கு நானும் ஒரு காரணம் என்பதை எண்ண வேண்டும்.

முடிந்த அளவில் மின்னணு சாதனங்களில் நாம் படிக்கும் புத்தகங்களைப் படிக்கலாம்.

பேப்பர் நாப்கின்களை (Paper Napkins) பயன்படுத்துவதை அறவே நிறுத்தி விட்டு துணியினால் ஆன நாப்கின்களைப் பயன்படுத்தலாம்.

பேப்பர் பைகளைத் தவிர்த்து துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த முனைப்புடன் ஈடுபடலாம்.

நிகழ்நிலை வர்த்தகம் எனப்படும் Online Trading மூலமாக பேப்பர் பயன்பாட்டை அறவே நீக்கலாம். இதனால் வீட்டில் பேப்பர் ஆவணங்கள் சேர்வது தவிர்க்கப்படும், நிறுவனங்களும் இதனால் பயனடைந்து வர்த்தகப் பொருள்களில் தள்ளுபடி விலைகளைத் தர முன்வரக்கூடும், கழிவுகள் சேர்வது குறையும், இயற்கை பாதுகாக்கப்படும்.

பங்குதாரர்களுக்கு அனுப்பவேண்டிய நிறுவனங்களின் ஆண்டறிக்கை இப்போது பேப்பரில் அடிக்கப்படுவது தவிர்க்கப்பட்டு மின்னணு உருவில் அனுப்பப்படுவது போன்ற ஏராளமான நல்ல மாற்றங்களை வரவேற்று அவற்றை ஆதரித்து அவற்றை ஏற்றுக் கொள்வது நமது கடமையாகும்.

ஒவ்வொரு பேப்பரின் பயன்பாடும் தவிர்க்கப்படும் போதும் ஒரு மரத்தைப் பாதுகாத்த மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் ஒருவர் இருக்க முடியும்.

சிறிய விஷயம் என்றாலும் அரிய பயனைத் தருகிறதில்லையா, இது!

Script by S.Nagarajan (ச.நாகராஜன்)

tags — மரங்கள் , பாதுகாப்பு ,பேப்பர்