ஒருபேய்க் கதை! சொக்கா, சொக்கா சோறுண்டோ? (Post No.4652)

ஒருபேய்க் கதை! சொக்கா, சொக்கா சோறுண்டோ? சோழியன் வந்து கெடுத்தாண்டோ

 

Written by London Swaminathan 

 

Date: 23 JANUARY 2018

 

Time uploaded in London – 8-21 AM

 

Post No. 4652

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

இது ஒரு பேய்க் கதை; பழமொழிக் கதை

சொக்கா, சொக்கா சோறுண்டோ? சோழியன் வந்து கெடுத்தாண்டோ

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

‘திராவிட பூர்வகாலக் கதைகள்’ என்ற பெயரில் நடேச சாஸ்திரி என்பார் பழங் கதைகளைத் தொகுத்து 100 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டுள்ளார். அவை பழந்தமிழில் இருப்பதால் அவற்றைப் புதுக்கியும் சுருக்கியும் தருகிறேன்.

 

 

வீட்டில் விளக்கு ஏற்றுவது ஏன்?

ஒரு ஊரில் ஒரு குடியானவன். அவனுக்கு இரண்டு புதல்விகள்; ஒருவருக்கு உள்ளூரிலேயே திருமணம் முடிந்தது. மற்றொரு மகள், அயலூரிலுள்ள  ஒரு சோழியனுக்கு வாக்குப்பாட்டாள். காலம் உருண்டோடியது. கிழக் குடியானவன் இறந்தான்; மூத்த மகளின் கணவனும் இறந்தான். அவளது தங்கையோ அடுத்த ஊரில் கணவனுடன் சுகமாக வாழ்ந்து வந்தாள். மூத்த மகளுக்கு சந்ததியும் இல்லை. ஆகையால் வயிற்றுப் பிழைப்புக்காக நிலத்தில் விவசாய கூலி வேலை செய்து வந்தாள்.

தினமும் இரண்டு படி அரிசி சமைத்து உண்பாள்; அப்படியும் பசி தீராது. யாரிடமும் சொல்லவும் வெட்கம். ஆகையால் காரணத்தை அறியவில்லை.

 

ஒரு நாள் அயலூரிலுள்ள அவளுடைய தங்கை, தன்னுடைய அக்காளைப் பார்க்க சொந்த ஊருக்கு வந்தாள். அக்காளும் வயல் வெளி வேலைகளை முடித்துக் கொண்டு மாலையில் பொழுது சாயும் முன் வீட்டிற்கு வந்தாள். அன்று தனது தங்கையும் பார்க்க வந்திருக்கிறாளே என்று கருதி, இரண்டரைப் படி அரிசியை எடுத்தாள்.

 

தங்கை சொன்னாள்,

“முதலில் விளக்கேற்றிவிட்டு சமை; இருட்டில் சமைக்கக்கூடாது. மேலும் என் வீட்டில் நான் விளக்கு வெளிச்சத்தில்தான் சாப்பிடுவேன்” என்றாள்.

அடுத்ததாக, அவள் பகன்றாள்,

“இது என்ன இரண்டரைப் படி அரிசி; இதில் பத்துப் பன்னிரெண்டு பேர் சாப்பிடலாமே! உனக்கு என்ன பைத்தியாமா?”

 

இதற்கு அக்காள் மறு மொழி நுவன்றாள்,

“இதோ பார் நான் தினமும் இரண்டு படி அரிசியில் சோறாக்குவேன்; நீ வேறு வந்திருக்கிறாய்; அதற்காக கூடுதல் அரைப்படி சேர்த்தேன் . என்னிடம் விளக்கிற்கு எண்ணெய் வாங்கும் அளவுக்கு காசு பணம் கிடையாது. நான் பாட்டுக்குச் சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கி விடுவேன்.”

தங்கை சொன்னாள்,

“எனக்கு சோறு கூட வேண்டாம்; விளக்கு இல்லாமல் ஒரு நிமிடம் கூட இரவுப் பொழுதைக் கழிக்க மாட்டேன். பூச்சி, பொட்டு, பாம்பு வந்தால் என்ன செய்வத? முதலில் கொஞ்சம் அரிசியைக் கொடுத்து யாரிடமாவது எண்ணெய் வாங்கி வா” என்றாள்

 

அக்காளும் அரை மனதுடன் சென்று எண்ணெயுடன் திரும்பி வந்தால்; சாப்பிடத் துவங்கினர். கால் வாசி பானை சோறு கூடத் தீரவில்லை; இருவருக்கும் வயிறு நிறைந்தது.

 

 

தங்கை சொன்னாள், “பார்த்தாயா? நான் சொன்னேன்; நீ கேட்கவில்லை; இவ்வளவு சோறு மிச்சம்”

 

அக்காள் சொன்னாள்,

“இதோ பார், எனக்கே புரியவில்லை; தினமும் இரண்டு படி சோறு வடித்தும் என் வயிறு காயும்; இன்று என்னவோ கொஞ்சம் சாப்பிட்ட உடனே பசி போய்விட்டது; எல்லாம் நீ வந்த முஹூர்த்தம் போலும்” என்றாள்

அப்போது திடீரென்று ஒரு சப்தம்

 

சொக்கா சொக்கா சோறுண்டோ?

சோழியன் வந்து கெடுத்தாண்டோ

 

வா நாம் போவோம்– என்று.

 

உடனே அக்காள் கேட்டாள்,

‘ஏய், யார் அங்கே? யார் சொக்கன்?’

 

அப்போது ஒரு குரல் ஒலித்தது,

“நான் தான் சொக்கன்; நான் ஒரு பேய்; நானூம் எனது நண்பனான பேயும் விளக்கில்லாத வீட்டுக்குப் போய் சாப்பிடுவோம். இதனால் அந்த வீட்டில் அதிகமாக சமைப்பார்கள்; இன்று ஒரு சோழியன் அயலூரில் வந்து கெடுத்துவிட்டாள் என்று என் நட்புப் பேயிடம் செப்பினேன். நாங்கள் இருவரும் வேறு வீட்டுக்குப் போய் விடுகிறோம்”.

 

இதக் கேட்ட அக்காளுக்கும் தங்கைக்கும் ஒரே ஆச்சர்யம், அதிசயம்!

 

அன்று முதல் அவள் அக்காள், வீட்டில் விளக்கு ஏற்றாமல் சமைப்பது இல்லை; எல்லோரும் சாப்பிடும் அளவு சோறுண்ட பின் அவள் வயிறும் நிறைந்தது; வாழ்வும் சிறந்தது.

 

இதுதான் சொக்கா சொக்கா சோறுண்டோ?

சோழியன் வந்து கெடுத்தாண்டோ

பழமொழியின் பின்னாலுள்ள கதை.

வாழ்க தமிழ்! 20, 000 பழமொழிகளுக்கும் கதையோ காரணமோ, அனுபவ அறிவோ உண்டு. எனது கட்டுரைகளைப் படித்து அறிக.

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

சுபம்

பிரிட்டிஷ் பார்லிமெண்டில் 2 குட்டிக் கதைகள்! (Post No.3393)

Written by London swaminathan

 

Date: 27 November 2016

 

Time uploaded in London: 7-00 AM

 

Post No.3393

 

Pictures are taken by Mr Prabhakar Kaza and Mr Aditya Kaza; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

I have already posted it in English

 

பிரிட்டிஷ் பார்லிமெண்ட் கட்டிடத்திற்குள் கமிட்டீ ரூம் எண்.12-ல் புதன் கிழமை 23-11-2016 அன்று இந்தியன் போரம் ஆன் பிரிட்டிஷ் மீடியா (INDIAN FORUM ON BRITISH MEDIA) என்ற அமைப்பின் கீழ் ஒரு கூட்டம் நடந்தது. சுமார் 100 பேர் வந்திருந்தனர்.

 

எதற்காக இந்தக் கூட்டம்?

பிரிட்டிஷ் சமத்துவ சட்டத்தில் (Equality Act 2010) வேற்றுமை ஏற்படுத்தக் கூடிய அம்சங்களில் “ஜாதி” (CASTE) என்ற சொல்லையும் சேர்க்க வேண்டும் என்று சொல்லி கிறிஸ்தவ மற்றும் தலித் அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. நான் சேர்க்கக்கூடாது என்ற தரப்பில் பேசினேன். அப்போது இரண்டு கதைகள் சொன்னேன். பிரிட்டிஷ் எம்.பி. பாப் பிளாக்மேன் முதலானோர் நான் சொன்ன 2 குட்டிக் கதைகளையும் ரசித்துக் கேட்டனர்.

 

நண்பர்களே,

ஜாதி பற்றி நமது பிள்ளைகளுக்குத் தெரியும். ஆனால் ஜாதியின் பேரில் வேற்றுமை காட்டுவது பற்றி அவர்கள் ஏதுமறியார். தூய பால் குடித்துக் கொண்டிருக்கும் நமது பிள்ளைகளின் பாலில் ஜாதி வேற்றுமை என்ற விஷத்தைக் கலந்து விடாதீர்கள். இந்தக் கூட்டத்துக்கு வருவதற்கு முன் நான் ஒரு குட்டி சர்வே (Mini Survey)  நடத்தினேன். லண்டனிலுள்ள எல்லா இளைஞர்களும் ஜாதி வேற்றுமை இந்த நாட்டில் இல்லை என்று சொன்னார்கள். ஒரு வேளை லண்டனுக்கு வெளியே அப்படி ஒரு பிரச்சனை சிறிய அளவில் இருந்தாலும் அதைத் தீர்க்க பல வழிகள் உள்ளன. ஒன்றும் அறியா த நமது அப்பாவி இளைஞர்கள் ஜாதி வேற்றுமையை அறியார். வருங்கால சந்ததியில் இந்தப் பிரச்சினை இந்த நாட்டில் இருக்காது.

 

செருப்பு கண்டுபிடித்த கதை!

உங்களில் பெரும்பாலோருக்கு இக்கதை தெரியுமாதலால் விரிவாகச் சொல்ல மாட்டேன். மிகச் சுருக்கமாக சொல்கிறேன்:-

ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான்.

அவன் மகனின் காலில் முள் குத்தி ரத்தம் குபுகுபு என்று வந்தது.

எல்லா மருத்துவர்களும் வந்து அவனைக் குணப்படுத்தினர்.

ராஜாவுக்கு அப்படியும் கவலை விடவில்லை.

தண்டோரா போட்டான்:

நாட்டு மக்களே! இதனால் சகலமானவர்களுக்கும் நமது மாட்சிமை தாங்கிய மன்னர் அறிவிப்பது யாதெனில்,

இனி, மன்னன் மகன் காலில் முள் தைக்காமல் இருக்க யோசனை சொல்லுவோருக்கு 1000 பொற்காசுகள் அளித்து மன்னன் கவுரவிப்பார்.

 

ஒரு அறிஞர் சொன்னார்:

மன்னர், மன்னவா!

நாடு முழுவதும் கம்பளம் விரித்து காலில் முள் தைக்காமல் செய்வோம்.

மற்றொரு அறிஞர் சொன்னார்:

ராஜாதி ராஜனே!

நாட்டு மக்களுக்கு உத்தரவிடுங்கள்; முள் செடிகள் அனைத்தையும் அகற்றி விடுவார்கள்.

புத்திசாலி மந்திரி எழுந்து சொன்னார்:

மன்னா, இது எல்லாவற்றையும் செய்தால் நமது கஜானா காலியாகிவிடும். எல்லோரும் காலணி (செருப்பு) அணியலாம்.

 

காலணியா? அப்படியானல் என்ன?

 

உடனே அமைச்சர் பெருமான் தான் கண்டுபிடித்த தோல் செருப்பைக் காட்டினார். அன்று முதல் உலக மக்கள் செருப்பு அணியக் கற்றுக்கொண்டார்கள்!

பெரிய பிரச்சனைக்கு சின்ன தீர்வு!

நண்பர்களே!

நம் எல்லோருக்கும் கடவுள் பிரச்சினைகளைக் கொடுத்திருக்கிறான். ஆனால் அதற்கான தீர்வையும் கொடுத்து இருக்கிறான். அதைக் கண்டுபிடித்து எளிய வழியில் தீர்க்கலாம். ஜாதி என்ற சொல்லை சேர்த்து அது பற்றி அறியாத இளம் உள்ளங்களை மாசு படுத்தாமல் அறிவு ஒளி, விழிப்புணர்ச்சியைப் பரப்பி இப்பிரச்சினையை இல்லாமல் செய்வதே புத்திசாலித்தனம் . நாம் எல்லோரும் காலணி போன்ற அறிவு அணியை அணிந்தால் எளிய வழியில் பிரச்சினை தீரும்.

 

எனக்கு முன் பேசிய தலித் ஆதரவாளர்கள் ஏதோ பெரியபிரச்சினை இருப்பதாக அனல் கக்க பேசினார்கள். இதை ஆங்கிலத்தில் பூதத்தை உருவாக்கி சண்டை போடுவது Creating a phantom and fighting with it என்று சொல்லுவர். ஏன் இல்லாத பிரச்சினைகளை விசிறிவிட்டுப் பெரிதாக்கப் பார்க்கிறீர்கள்?

 

கிருஷ்ணனை மிரட்டிய பேய்க் கதை

இதோ இந்த பேய்க்கதையைக் கேளுங்கள். மிகச் சுருக்கமாகச் சொல்லுவேன்:

 

பஞ்ச பாண்டவர்கள் காட்டில் வசித்தனர். அவர்களது கூடாரத்தைக் காவல் காக்கும் பொறுப்பு கிருஷ்ணனுக்கும் சாத்யகிக்கும் வந்தது. இந்துக்கள் இரவு நேரத்தை 4 ஜாமங்களாகப் பிரித்து வைத்துள்ளனர். சாத்யகி சொன்னான்:

கிருஷ்ணா! முதல் ஜாமம் நான் காவல் காப்பேன், இரண்டாம் ஜாமமும் நா லாம் ஜாமமும் உன்னுடைய முறை.

 

கண்ணனும் சரியென்று தலை அசைத்தான்.

 

முதல் ஜாமம்; கூடாரத்துக்கு வெளியே சாத்யகி நின்றான். மரத்திலிருந்து ஒரு பேய் (பிரம்ம ராக்ஷசன்) குதித்தான். கடுகு அளவுதான். ஆனால் சத்தமோ இடி முழக்கம் சாத்யகியைக் கேலி செய்து சண்டைக்குச் சீண்டினான்; சாத்யகி அவனைக் காலால் நசுக்க முயன்றபோது அது கால் பந்து (Foot Ball) அளவுக்கு பெருகியது. சாத்யகி ஒரு உதை விட்டவுடன் அது பெரிய பூசனிக்காய் (Pumpkin) அளவுக்கு உருவெடுத்தது . அதை ஓங்கி அடித்தவுடன் அது சாத்யகியையும் விடப் பெரிதாகி ஒரே அடியில் சாத்யகியை விழுத்தாட்டியது. சாத்யகி மயக்கம் அடைந்தவுடன், பேய் மரத்துக்கு மேல் ஏறிவிட்டது.

 

முதல் ஜாமம் முடிந்தவுடன் தப்பித்தோம், பிழைத்தோம் என்று சாத்யகி ஓடிப்போய்,

கிருஷ்ணா! உன் முறை; வெளியே போய்க் காவலுக்கு நில் என்றான்.

 

கிருஷ்ணன் வெளியே நின்றான். பிரம்ம ராக்ஷஸ் பேய் மரத்திலிருந்து குதித்தது; கடுகளவே இருந்த அந்த உருவம் கன்னா பின்னா என்று சத்தம் போட்டுக் கிருஷ்ணனைச் சண்டைக்கு அழைத்தது. கிருஷ்ணன அதைப் பார்த்து

அட; ஆணழகா!  உன்னைப் போல அழகான ஒரு உருவத்தை நான் கண்டதேயில்லை; பக்கத்தில் வா என்று அழைத்து தட்டிக் கொடுத்தான். அது கூனிக் குறுகி சிறியதானது. அதைத் தட்டிக் கொடுத்துப் பாராரட்டப் பாராட்ட, அது மிகமிகச் சிறியதாகி மறைந்தே போனது.

மூன்றாம் ஜாமம்; சாத்யகி வந்தான்; பழைய கதைதான்— அடி, குத்து மயக்கம்.

நாலாம் ஜாமம் கண்ணன் வந்தான்; பழைய கதைதான்; பாராட்டு சீராட்டு; பேயின் மறைவு.

 

காலையில் கிருஷ்ணனுன் சாத்யகியும் சந்தித்தனர்.

சாத்யகி: கண்ணா, நேற்று இரவு எப்படி இருந்தது?

கண்ணன்: சுகம் சுகமே. அருமையாகக் கழித்தேன்.

 

(எல்லாம் அறிந்த கண்ண பரமாத்வுக்கு தெரியாதது என்ன?)

 

சாத்யகி வெட்கப்பட்டுக் கொண்டே தனக்கு ஏற்பட்ட அவமானம் அடி, குத்து, உதை, மயக்கம் எல்லாவற்றையும் சொல்லி,

உன்னை அந்தப் பேய் ஒன்றுமே செய்யவில்லையா? என்று கேட்டான்.

எல்லாம் அறிந்த கண்ணன் புனன்னகைத்துச் சொன்னான்:

அப்பனே, சாத்யகி! பிரச்சினை ஒன்று வந்தால் அதை எதிர்த்தால் அது பெரிதாகும்; அதை எதிர்க்காமல் தட்டிக் கொடுத்தால் பிரச்சினை மறைந்துவிடும். உனக்கு விழுந்த அடி,  குத்து, உதை எல்லாவற்றையும் நான் அறிவேன் என்று சொல்லி சிரித்தான்.

 

நண்பர்களே!

 

நாம் இந்த ஜாதிப் பிரச்சினையை சாத்யகி போலப் பெரிதாக்க வேண்டுமா? கண்ணன் போல சிறிதாக்கி மறையச் செய்ய வேண்டுமா? தயவு செய்து சிந்தியுங்கள்.

மக்களுக்கு அறிவுபுகட்டி விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே சாலச் சிறந்தது.

ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் (OXFORD ENGLISH DICTIONARY) பறையன் PARIAH என்ற தமிழ் சொல் இருக்கிறது அதை அகற்ற நான் போராடியதைச் சொல்கிறேன். கேளுங்கள்……………..

 

தொடரும்………………………..

 

பெண் என்றால் பேயும்…………………

Chennai

Compiled by London swaminathan

Date : 1 செப்டம்பர்  2015

Post No. 2113

Time uploaded in London: காலை 8-45

Swami_48@yahoo.com

பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது பழமொழி. ஆனால் பெண் என்றால் பேயும் அஞ்சும் – என்ற ஒரு பேய்க் கதையைக் கேளுங்கள். இது நமது கிராமப்புற மக்கள் சொல்லும் கதை. மனைவியை அடிக்கும் கணவன் பற்றியே படித்துப் பழக்கப் பட்டுவிட்டோம். ஆனால் கணவர்களைக் கொடுமைப்படுத்தும் மனைவிமார்களும் உண்டு. வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு கணவர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்!

ஒரு ஊரில் ஒரு பிராமணன் இருந்தான். அவன் மனைவி அந்தப் பிராமணனை தினமும் அடிப்பாள். கிட்டத்தட்ட அது ஒரு தினசரி பூஜை போல ஆய்விட்டது அந்தப் பெண்மணிக்கு. இதற்கு அவரது வறுமையும் ஒரு காரணம். வெளியே போய்ச் சம்பாதித்து வாரும் என்று சொல்லி அடிப்பாள். கொஞ்சம் காலம் கழித்து அவருக்கு அலுத்துப் போகவே, “அன்பே! ஆருயிரே! அடுத்த ஊரில் இருந்து எனக்கு பூஜைக்கு அழைப்பு வந்துள்ளது. அங்கு போனால் நல்ல வரும்படி வரும் என்று சொல்லிவிட்டுப் புறப்பாட்டார்.

அவளோ, ஐயய்யோ, இனி நான் யாரை தினமும் அடிப்பேன்? யார் எனக்கு அரிசி,மளிகை சாமான்கள் வாங்க காசு கொடுப்பார்கள்? என்றாள். அவர் சொன்னார், “ கவலையே படாதே. அதோ, சாலையின் ஓரத்தில் புளிய மரம் இருக்கிறதல்லவா? அதனிடம் எல்லாம் சொல்லிவிட்டேன். தினனும் அதைப் போய் அடி”, என்றார்.

அவரும் புறப்பட்டார்; அவளும் தினசரி யாருக்கும் தெரியாமல் புளியமரத்தை அடித்தாள். ஆனால் பணமே கிடைக்கவில்லை. அந்தப் புளிய மரத்தில் ஒரு பேய் வசித்துவந்தது. அது இந்தப் பெண்மணியின் அடி தாங்காமல் கஷ்டப்பட்டுவந்தது.

Wife Beating Husband

பத்து நாட்களுக்குப் பின்னர்  கணவர் திரும்பிவந்தவுடன், “வாருங்கள் இந்தப் புளிய மரத்தைத்தானே அடிக்கச் சொன்னீர்; அது பணமே தரவில்லை” என்று சொல்லி அந்த மரத்தைக் காட்டினாள். அவர் சொன்னார், நீ வீட்டுக்குப் போ. நான் இரண்டு அடி கொடுத்து விசாரிக்கிறேன் – என்று சொல்லி மனைவியை அனுப்பிவைத்தார். இவர் அடிக்கப் போகிறேன் என்று சொன்னவுடன் அந்தப் பேயே வெளியே வநு, ஏ பிராமணா! நான் பத்து நாட்களுக்கே உன் மனைவியின் அடியைத் தாங்க முடியவில்லை. நீ தினமும் அடிபடுவது எனக்குத் தெரியும். எப்படித் தாங்கினாய்?  உன்னைக் காப்பாற்ற ஒரு வழி வைத்துள்ளேன். நான் மஹாராணியைப் போய்ப் பிடித்துக் கொள்கிறேன். உடனே மஹாராஜா பெரிய பெரிய மந்திரவாதிகளை அழைத்து பேய் ஓட்ட முயற்சி செய்வார். நான் போகவே மாட்டேன். நீ வந்த பின்னர் ஓடிப் போய்விடுகிறேன். உனக்கு நிறைய சன்மானம் கிடைக்கும்; நீ சுகமாக வாழ். ஆனால் ஒரு எச்சரிக்கை! நான் வேறு யாரையாவது பிடிக்கும்போது நீ உதவி செய்ய மீண்டும் வராதே; எச்சரிக்கை! – என்று பேய் சொன்னது.

பிராமணனுக்கு மிகவும் சந்தோஷம். பேய், அரசன் மனைவியைப் பிடித்துக் கொள்ளவே அரசன் தண்டோரா போட்டு நாட்டின் மிகப் பெரிய மந்திரவாதிகளை அழைத்தான். பலனே இல்லை. உடனே இந்தப் பிராமணன் போய், என்னிடமுள்ள மந்திர சக்த்தியை வைத்து ஓட்டுகிறேன் என்று சொன்னார். அரசனும் சம்ம்மதித்தான். பிராமணனைப் பார்த்தவுடன் பேய் ஓட்டம் பிடித்தது. அரசன், அந்தப் பிராமணனுக்கு பெரிய பரிசுகள் கொடுத்து அனுப்பினான்.

பிராமணன் மனைவிக்கு ரொம்ப சந்தோஷம். அந்தப் பேய் இப்பொழுது மந்திரியின் மனைவியைப் பிடித்துக்கொண்டது. அரசன், வேறு யாரையும் அழைக்காமல் , பிராமணனை அழைத்துவர ஆள் அனுப்பினான். மனைவிக்கு மேலும் பொருள் கிடைக்கும் என்று ஆசை. உடனே பிராமணனைப் பார்த்து, ஓய்! போய்வாரும் என்று கெஞ்சினாள். அவரும் ராஜா சொல்லைத் தட்ட முடியாதே என்று எண்ணி, அங்கே போனார். உடனே அந்தப் பேய், ஏ, பிராமணா! வேறு யாரைப் பிடித்தாலும் வரக்கூடாது என்று சொன்னேனே! உனக்கு எவ்வளவு ஆசை? ஏன் வந்தாய்? என்று கேட்டது.

அதற்கு அந்தப் பிராமணன் சொன்னான், “ எனக்கும் வரப் பிடிக்கவில்லை. என் மனைவி தான் அனுப்பி வைத்தாள் என்றான். அதைக்கேட்டவுடன் பேய்க்கு உடம்பெல்லாம் நடுங்கியது. மனைவியா? அவள் இப்பொழுது எங்கே இருக்கிறாள்? என்று கேட்டது. அவனும், நான் புறப்பட்டபோது அவளும் புறப்பட்டாள். மெதுவாக நடந்தாள். இப்பொழுது இந்த வீட்டு வாசலுக்கு வந்திருக்கவேண்டும் – என்றான். அதைக் கேட்டவுடன், முன்னர் வாங்கிய அடிகள் நினைவுக்கு வரவே, பேய் ஓட்டம்பிடித்தது!

இந்த முறை மன்னனும் மந்திரியும் நிறைய பணமுடிப்புகள், அதோடு சேவகர்களின் பாதுகாப்பு எல்லாம் கொடுத்து பிராமணனை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். அப்புறம் அவன் மனைவி அந்தப் பிராமணனை அடிக்கவேயில்லை.

-இது ஒரு நாட்டுப்புற கதை